privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திதேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க - வின் வதைமுகாம் திட்டம் !

தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !

வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் சவடால்கள் தோற்றுப் போன நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க

-

“உங்களிடம் 1971-ம் ஆண்டுக்கு முந்தைய பிறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும். அல்லது 1971-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் அப்பா, அல்லது தாத்தாவுக்கு அத்தகைய தகுதி இருக்க வேண்டும். இது இல்லாதவர்கள் அல்லது இப்படி ஆதாரம் காட்ட முடியாதவர்கள் எல்லோரும் அன்னியர்கள்.”

ஜூலை மாத இறுதியில் அரசு வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், அஸ்ஸாமில் வசிக்கும் சுமார் 3.3 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். அரசின் கூற்றுப்படி இவர்கள் அனைவரும் தங்களது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கத் தவறியுள்ளனர் அல்லது “வந்தேறிகள்”.

அசாம் மாநிலத்தில் 40 லட்சம் உழைக்கும் மக்களை சட்டவிரோத குடியேறிகளாக நிறுத்தியிருப்பது பா.ஜ.க-வின் நாடு தழுவிய அரசின் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி. ஆதார், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உழைக்கும் மக்களை பிரித்து தேசவெறி, இனவெறியை தூண்டி விடுகிறது இந்த பாசிச கும்பல்.

இவ்வாறு இந்திய அரசால் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வரும் அசாமில் தேசிய வெறியை தூண்டி விடும் பணியை பா.ஜ.க கும்பல் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. பன்முகத்தன்மை என்பது பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் அகண்ட பாரதக் கனவுக்கு தடையாக இருக்கிறது.

பெரும்பாலும் மலைவாழ் இனக்குழு சமூகங்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய சமவெளி பகுதி வங்காளம் ஆகும். வங்காளத்திலிருந்து உழைக்கும் மக்களும், வியாபாரிகளும் வேலை வாய்ப்புகள் தேடியும், வணிக ஆதாயங்களுக்காகவும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. வங்காளம் 1947-ல் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் பகுதியானது, 1971-ல் அது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனிநாடாக ஆனது. இதைத் தொடர்ந்து அன்னியர்களின் வருகையால் அசாமிய மொழியும், கலாச்சாரமும் அழிக்கப்படுகின்றன என்ற போராட்டம் தொடங்கியது.

1950-களில் இருந்தே அசாமில் குடியேறியுள்ள வெளியூர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்துள்ளது. அதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முறை கொண்டு வரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகளோ இந்த குடியேற்ற பிரச்சனைக்கு மதச்சாயம் பூச ஆரம்பித்தன. அதன்படி வங்கதேச முஸ்லீம்களின் குடியேற்றத்தால் அசாமின் இந்து கலாச்சாரம் அச்சுறுத்தப்படுவதாக பீதியை கிளப்பினர். 1971-க்குப் பிறகு இது தொடர்பாக நடைபெற்ற கலவரங்களில் 2000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள். 2016-ல் அசாமில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பித்து அன்னியர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டது.

மோடி இந்தியாவின் ராஜபக்சே

உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வெறியை தூண்டி விடுவது ஆர்.எஸ்.எஸ் அரசியலின் அடிநாதம். குஜராத்தில் 2002-ல் படுகொலைகள், மும்பையில் கலவரம், காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை, நாடு முழுவதும் மதக் கலவரங்கள் என்ற வரிசையில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் இசுலாமியர்களை தனிமைப்படுத்தி துன்புறுத்துவது ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச திட்டத்தின் ஒரு பகுதி.

அதன்படி இப்போதைய தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் யூதர்களை தனிமைப்படுத்தி, அடையாள முத்திரை குத்தி, தனி முகாம்களில் அடைத்து, கொன்று குவித்தது போன்ற கொடூர திட்டத்துக்கான அச்சாரம். இலங்கையில் ஈழத் தமிழர்கள் தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில் போலீசால் துன்புறுத்தப்படுவது இன்றுவரை தொடர்கிறது. 1972-ல் உருவாக்கப்பட்ட அந்த திட்டத்தின் இறுதி விளைவாக முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், முள் வேலி முகாம்களில் வதைக்கப்பட்டதும் சமகாலத்தில் நாம் கண்ட வரலாறு.

‘வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கோடிக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக இடம் பெயர்கிறார்கள். அவர்களால்தான் அசாமின் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகள் பறி போகின்றன.’ என்று நச்சு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் செய்து வருகிறது பா.ஜ.க. இந்த நாடு தழுவிய வெறுப்பு அரசியலின் உள்ளூர் வடிவமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான ‘வந்தேறி’ குரல்கள் ஒலித்து வருகின்றன.

மேற்கு வங்கத்திலும் இது போன்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தெலுங்கானாவில் அன்னியர்களை அடையாளம் காண வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர் பா.ஜ.க-வினர். தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் லோத், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் வங்கதேசத்தவர்களும் ரொஹிங்கியாக்களும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் குடியேற்ற பிரச்சனையை முஸ்லீம் விரோத ஒடுக்குமுறையாக மாற்றுவதை மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தில் இசுலாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் குடியேறும்போது அவர்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

ரோஹிங்கிய அகதிகள் (கோப்புப் படம்)

அதாவது, பாகிஸ்தானிலிருந்தோ வங்க தேசத்திலிருந்தோ சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர் இந்துவாக இருந்தால் ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவருக்கு குடியுரிமை கொடுத்துவிடும். இந்த சட்டத்தில் முஸ்லீம்கள் மட்டும் கவனமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் சரி, பொருளாதார தேவைகளுக்காக இந்தியாவுக்குள் இடம் பெயரும் கோடிக்கணக்கான வங்கதேச முஸ்லீம்களுக்கும் இது பொருந்தாது.

இத்தகைய குறுகிய தேசிய வெறி திட்டங்களை தொழிலாளி வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. உழைக்கும் மக்களை இடம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளுவதே முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குதான். நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். கோடிக்கணக்கான இந்தி பேசும் தொழிலாளர்கள் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து கூலி வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின் இடம் பெயர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் அனைத்து சவடால்களும் தோற்றுப் போய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்ட நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க கும்பல். இதனை முறியடிக்கும் பொறுப்பு பாட்டாளி வர்க்கத்துக்கே இருக்கிறது.

பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைக்க முதலாளிகள் இன, சாதி, மத அடையாளங்களை பயன்படுத்தினாலும், தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தூக்கிப் பிடிக்கிறது. அனைத்து தொழிலாளர்களும் சுதந்திரமாக இடம் பெயரும் உரிமையையும், குடியேறும் இடத்தில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற வேண்டும் என்று கோருகிறது. இதற்காக சமரசமின்றி போராடவும் செய்கிறது.

– செல்வன்
புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018
நன்றி : new-democrats.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க