நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

53
13

பாசிசக் கொலைகாரன் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தெரிவு செயப்பட்டிருக்கிறார். தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுவதை விட, சதித்தனமான காய் நகர்த்தல்கள், மிரட்டல்கள், நிர்ப்பந்தங்கள் மூலம் தன்னைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையை உருவாக்கி, தன் சொந்தக் கட்சியினரைப் பணிய வைத்திருக்கிறார் என்று கூறுவதே பொருத்தமானது.ஊதிப் பெருக்கப்படும் மோடி

1980-களின் பிற்பகுதியில் பாரதிய ஜனதா தனது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு, அதற்கு “ராமனின் தயவு” தேவைப்பட்டது. 1998-99-இல் பதவிக்கு வருவதற்கு 17 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் தயவு தேவைப்பட்டது. அன்று கூட்டணியின் பலத்தால் 25.6% வாக்குகளையும்  182 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க.வின் வாக்கு எண்ணிக்கை 2009-இல் 18.8 சதவீதமாகவும், நாடாளுமன்ற எண்ணிக்கை 116 ஆகவும் வீழ்ச்சியடைந்தன.

தற்போது கூட்டணியில் இருப்பவர்கள் சிவசேனாவும், அகாலி தளமும் மட்டுமே. பாரதிய ஜனதா தனது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு இனி ராமன் பயன்பட மாட்டான் என்பதும் கல்லின் மேல் எழுத்தாகி விட்டது. கூட்டணியும் இல்லை, இராமனும் இல்லை. மன்மோகன் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை அறுவடை செய்து கொள்வதற்கு, இந்த அரசுக்கு மாற்றான மீட்பனாக மோடியை முன்நிறுத்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

2002 படுகொலை தொடர்பான வழக்குகளில் மோடியின் அமைச்சர் கோத்னானி உள்ளிட்டோர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்த போதும், மோடியால் அரங்கேற்றப்பட்ட போலி மோதல் கொலைகளுக்காக 32 போலீசு அதிகாரிகள் சிறையில் இருந்த போதும், மோடியின் மீது குற்றவழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைகஸ் கியூரி, வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் கருத்து தெரிவித்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்த போதும், இஷ்ரத் ஜகான் கொலை வழக்கினை முடக்குவதற்கும், சம்பந்தப்பட்டவர்களை விலை பேசுவதற்கும் மோடியின் தனி உதவியாளர், அமைச்சர்கள், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ள போதும், இத்தனையும் தாண்டி தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றவாளி, தன்னை இந்த தேசத்தின் மீட்பனென்று பிரகடனப்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது?

முஸ்லிம் படுகொலை குறித்த குற்றவுணர்வின்றி மீண்டும் மீண்டும் குஜராத் மோடியைத் தேர்ந்தெடுத்தது. அம்மாநிலத்தின் இந்துப் பெரும்பான்மையினர் இந்துத்துவக் கருத்தியலுக்கு அடிமையாக்கப்பட்டிருப்பது அதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. எனினும், அது மட்டுமே காரணமல்ல. தன்னுடைய கொலைக்குற்றத்தை நியாயப்படுத்துவதற்கு இந்துத்துவக் கருத்தியலை மட்டுமே நம்பி இருப்பது போதுமானதல்ல என்பதுடன், பொருத்தமானதும் அல்ல என்று புரிந்து கொண்ட மோடி, முஸ்லிம் படுகொலை குறித்த விமரிசனங்களை “குஜராத்துடைய கவுரவத்தின் மீதான தாக்குதல் என்றும், குஜராத் சாதித்திருக்கும் வளர்ச்சியின் மீதான தாக்குதல்” என்றும் திசை திருப்பினார்.03-modi-02

இப்போது இந்த விமரிசனங்களுக்கு மோடி மட்டுமே பதில் சோல்லிக் கொண்டிருக்கும் நிலை மாறி விட்டது; மாற்றியமைக்கப்பட்டு விட்டது. 90-களில் பாபர் மசூதிதான் ராம ஜென்மபூமி என்ற கருத்துக்காக ஒரு சராசரி இந்து எப்படி முட்டாள்தனமாகவும், மூர்க்கமாகவும் வாதாடினானோ, அதைப்போலவே, இன்று “மோடியே மீட்பன்” என்ற கருத்துக்காக இந்து நடுத்தர வர்க்கம் வாதாடுகிறது. ஆவியெழுப்புதல் கூட்டத்தில் ஆராதனைக்கு ஆட்பட்டவர்களைப் போலவும், ஐ.பி.எல். ஆட்ட மைதானத்தின் ரசிகர்களைப் போலவும் மோடி பக்தர்கள் அலறுகிறார்கள்.

இந்த மோடி பக்தர்கள் அல்லது இரசிகர்களை ஆட்டுவிக்கும் கருத்து “வளர்ச்சி”. தன்னுடைய கொலை முகத்தை மறைத்துக் கொள்வதற்கு மோடி அணிந்திருக்கும் முகமூடிதான் “வளர்ச்சி”.

“குற்றத்துக்கான தண்டனை என்ன?” என்ற கேள்விக்கு, “வளர்ச்சி” என்பதை பதிலாகத் தருகின்ற இதே அயோக்கியத்தனத்தைத்தான் நாம் ராஜபக்சேவிடமும் பார்க்கிறோம். 2009 தமிழினப் படுகொலைக் குற்றம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் ராஜபக்சேயிடமிருந்து வருகின்ற பதில், பொருளாதார மேம்பாடு, புதிய சாலைகள், ரயில் பாதைகள், புதிய வீடுகள் போன்றவைதான். இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளாமல், இனப்படுகொலைக் குற்றத்துக்கு நீதி கேட்பவர்களை தேசத்துரோகியாகவும், இலங்கையின் கவுரவம் மற்றும் இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுப்பவர்களாகவும் சித்திரிக்கிறார் ராஜபக்சே.

பெரும்பான்மையின் பிரதிநிதியான தாங்கள், பெருந்தன்மையுடன் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரின் நலனையும் கணக்கில் கொண்டு திட்டம் தீட்டி செயல்படுவதாகவும், தங்களது பெருந்தன்மையை அங்கீகரிக்காமல், கடந்த கால விசயங்களையே மீண்டும் மீண்டும் கிளறுபவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள் என்று மோடியும் இராஜபக்சேவும் கூறுகிறார்கள்.

03-modi-03அது மட்டுமல்ல,” சிறுபான்மை என்ற சொல்லே நமது அகராதியில் இனி கிடையாது. இந்த நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தார் போன்ற சிறுபான்மையினர் யாரும் கிடையாது. இந்த தேசத்தை நேசிப்பவர்கள், நேசிக்க மறுப்பவர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே உண்டு” என்கிறார் ராஜபக்சே. இந்தியர்கள் அனைவருக்கும் சம உரிமை என்பதுதான் தனது கொள்கையென்றும், சிறுபான்மையினருக்கான சலுகைகள், மொழி வழி மாநிலங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பவையெல்லாம் இந்தியாவைப் பிளவு படுத்தும் அரசியல் என்றும் (திருச்சி பொதுக்கூட்டத்தில்) பிரகடனம் செகிறார் மோடி.

இதன்பட, இந்து, இந்தி, இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஏற்காதவர்கள், அதாவது, சாதிய – இன – மத – வர்க்க – பாலின ஏற்றத்தாழ்வுகளை இயல்பானவை என்று ஒப்புக் கொள்ளாதவர்கள் தேசவிரோதிகள் ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.

மோடி கூறுகின்ற வளர்ச்சி யாருக்கானது என்பதை, உழைக்கும் வர்க்கம் அல்லது ஒடுக்கப்பட்ட சாதி என்ற முறையிலோ, இனம் அல்லது சிறுபான்மை மதம் என்ற முறையிலோ கேள்வி கேட்டால், அவ்வாறு கேள்வி எழுப்புவதை தேசவிரோத நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் சித்தரிக்கிறது. வளர்ச்சி எனும் சித்தாந்த போதைக்கு ஆட்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கமோ, இவ்வாறு கேள்வி எழுப்புபவர்களை பத்தாம்பசலிகளாகவும் திறமைக்குப் பதிலாக சலுகையைக் கோருகின்ற புல்லுருவிகளாகவும் கருதுகிறது.

எனவேதான் குஜராத் படுகொலைக்காக மோடி தண்டிக்கப்பட வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கை, மோடியைப் பிரதமராக விடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியாகவோ, தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரான முட்டுக்கட்டையாகவோ, முஸ்லிம்களைத் தாஜா செயும் இன்னொரு சலுகையாகவோ, இசுலாமிய பயங்கரவாதத்துக்கான ஆதரவாகவோ மோடி ரசிகர்களுக்குத் தோன்றுகிறது.

இன்று மோடியை முன்நிறுத்துகின்ற இந்தியத் தரகு முதலாளி வர்க்கமாக இருக்கட்டும், மோடியைத் தீவிரமாக ஆதரிக்கின்ற மேட்டுக்குடி வர்க்கத்தினர் மற்றும் ஊடகத்தினராகட்டும் அல்லது இதயம் இருக்க வேண்டிய இடத்தில் வயிற்றைப் பெற்றிருக்கும் தனியார்மயத்துக்குப் பிறந்த நடுத்தர வர்க்க அடிமைகளாகட்டும் இவர்கள் பலரது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் முதலாளித்துவமும் இந்துத்துவமும் இரண்டறக் கலந்துதான் நிலவுகின்றன.  இதன் காரணமாகத்தான் வளர்ச்சி என்ற சொல்லை இவர்கள் உச்சரிக்கும்போது, அது ஒரு சித்தாந்தத்துக்குரிய வீரியத்தைப் பெற்றுவிடுகிறது.

ஒழுக்கம், நீதி, அறம் ஆகியவற்றுக்குப் பொருந்தியதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்று வாயளவில் சொல்லிக் கொள்கின்ற பாசாங்கு கூட இவர்களிடம் இல்லை. தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியையோ, நாட்டின் வளர்ச்சியையோ எந்த வழி சாதித்துக் கொடுக்கிறதோ அந்த வழி நீதியானது என்பதே இவர்களது அறக்கோட்பாடு.

இங்ஙனம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதன் விளைவாக ஏற்படும் வெற்றி தோல்விகளையும் ஆட்டத்தின் விதியாக ஒப்புக்கொண்டு அடங்கிப் போகச் சொல்லுகின்ற முதலாளித்துவ சித்தாந்தமும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை இயல்பானதாக எடுத்துக்கொண்டு மனப்பூர்வமாக இசைந்து வாழச் சொல்லுகின்ற பார்ப்பனிய இந்துத்துவக் கொள்கையும் இரண்டறக் கலந்து விடுகின்றன.03-modi-04

“வளர்ச்சி – சிறந்த அரசாளுமை” என்ற இந்த மந்திரச் சோற்றொடர்கள் “மோடி மஸ்தானின்” சொந்தக் கண்டுபிடிப்புகளல்ல. இவை உலக வங்கியிடமிருந்து உருவப்பட்டவை. தனியார்மய –  தாராளமயக் கொள்கைகள் தம்மளவில் உன்னதமானவை, மாற்றீடு செய்ய முடியாதவையென்றும், அக்கொள்கைகளை ஊழலின்றியும் திறமையாகவும் அமல்படுத்தும் ஆற்றல் பெற்ற தலைவர்களோ அரசோ பல நாடுகளில் இல்லாமலிருப்பதுதான் வறுமைக்கும், வேலையின்மைக்கும் பிற சமூக பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் உலக வங்கி கடை விரித்து வரும் புளுகுமூட்டை.

பத்தாண்டுகளுக்கு முன் இதே கருத்தின் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கங்கள் மன்மோகன் சிங்கை மீட்பனாகச் சித்தரித்தன. சிறந்த நிர்வாகி, பொருளாதார வல்லுநர், கறை படியாத கரம் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட மன்மோகன், தனியார்மயக் கொள்கைகள் தோற்றுவித்த பாதிப்புகளின் காரணமாகவும், அடுக்கடுக்கான ஊழல்கள் காரணமாகவும் இப்போது மக்கள் மத்தியில் மதிப்பிழந்து விட்டார். ஆளும் வர்க்கங்களிடமும் மதிப்பிழந்து விட்டார்.03-modi-05

பண்டைக் காலத்தில் சத்திரியன் என்ற பிறப்புச் சான்றிதழ் வழங்கி மன்னனாக பட்டம் சூட்டிவிடும் அதிகாரத்தைப் பெற்றிருந்த பார்ப்பானின் இடத்தில், இன்று கார்ப்பரேட் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் இருக்கின்றன. தாங்கள் விரும்புகின்ற வேகத்தில் தனியார்மய- தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் “அரசியல் உறுதி” அவரிடம் இல்லை என்பதால் மன்மோகனை அட்டைப்படத்தில் போட்டு “லாயக்கில்லாதவர்” (Under Performer) என்று எழுதி விட்டது அமெரிக்காவின் “டைம்” வார ஏடு. அதே “டைம்” ஏடு மோடி படத்தைப் போட்டு “மோடி என்றால் காரியத்தில் உறுதி” என்று கொண்டாடியிருக்கிறது.

எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை உறுதியாக அமல்படுத்தக்கூடிய ஒரு வலிமையான பாசிஸ்டையே ஆளும் வர்க்கங்கள்  இப்போது எதிர்பார்க்கின்றன. 2002-இல் ஈவிரக்கமற்ற முஸ்லிம் படுகொலையை தொலைக்காட்சி காமிராக்களுக்கு முன்பே நடத்திவிட்டு, அந்தப் படுகொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பது உலகத்துக்கே தெரிந்த பின்னரும், மோடியின் அமைச்சர்களும், போலீசு உயரதிகாரிகளும் சிறையிலிடப்பட்ட பின்னரும், ஒரு வார்த்தை வருத்தம் கூட தெரிவிக்காமல் மோடி காட்டிவரும் உறுதி, ஆளும் வர்க்கங்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகள், வழிமுறைகள், உரிமங்கள், பல்வேறு இலாகாக்களின் ஒப்புதல்கள் போன்ற தொந்திரவுகளை மட்டுமல்ல, தன்னுடைய அமைச்சரவை என்ற தொந்திரவையும் கூட முற்றாக அப்புறப்படுத்தி விட்டு, மோடி என்ற சர்வாதிகாரியின் கண்ணசைவு மட்டும் போதும் என்ற ஒற்றைச் சாளர முறையில் முதலாளிகளின் கோரிக்கைகள் குஜராத்தில் நிறைவேற்றப்படும் வேகம் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, 2900 கோடி ரூபாய் முதல் போட்ட டாடாவுக்கு சுமார் 30,000 கோடி ரூபாக்கு சலுகைகளை வாரி வழங்கியதாகட்டும், மாருதி தொழிலாளர் போராட்டத்தை நாடே அனுதாபத்துடன் ஆதரித்தபோதும், சுசுகி முதலாளியின் மீது அனுதாபம் கொண்டு ஜப்பானுக்கே நேரில் சென்று, மாருதி நிறுவனத்தை குஜராத்துக்கு இழுத்து வந்ததாக இருக்கட்டும், நிர்மா, அதானி, மித்தல், அம்பானி போன்ற பல முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிலம், மானியங்கள், கடன்கள், வரி விலக்குகள் ஆகியவற்றை வாரி வழங்கியதாக இருக்கட்டும்  இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திலும் முதலாளி வர்க்கத்தின் நலனைத் தனது சோந்த நலனாகவே உணர்ந்து   செயல்பட்ட  மோடியின் துணிச்சல் அவர்களைப் பெரிதும் ஈர்த்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் “எகனாமிக் டைம்ஸ்” நாளேடு நடத்திய சர்வேயில் இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களில் 74 பேர் மோடி பிரதமராக வர வேண்டுமென விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படி முதலாளி வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு நபர் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் வளர்ச்சியைக் காட்ட முடியுமா என்ற சிறிய சந்தேகம் கூட மோடி பக்தர்களுக்கு எழுவதில்லை. கம்யூனிச எதிர்ப்பு என்ற ஊறுகாப் பானைக்குள் ஆண்டுக் கணக்காக ஊறப்போட்டு வளர்க்கப்பட்ட அமெரிக்க மக்களே, “முதலாளித்துவம் ஒழிக” என்று உலக முதலாளித்துவத்தின் கருவறையான வால் ஸ்ட்ரீட்டில் முழங்கிவரும் இந்தக் காலத்திலும் கூட, முதலாளிகளால் ஆதரிக்கப்படுவதை மதிப்புக்குரியதாகவும், கூடுதல் தகுதியாகவும் கருதுகிறார்கள் மோடி பக்தர்கள்.

சொல்லிக் கொள்ளப்படும் குஜராத்தின் வளர்ச்சி என்பதே ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்கும் அரசாங்கப் புள்ளிவிவரங்களையும், ஆதாரங்களையும் முன்வைத்தாலும் அத்தகைய உண்மை விவரங்கள் இவர்கள் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

வரலாற்று விவரங்கள், தொல்லியல் ஆவுகளை வைத்துக்கொண்டு ராமன் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்று முதலில் வாதாடுவது, அதனை அறிவியல் பூர்வமாக நிலைநாட்ட முடியாத போது, மறுத்து வாதிடுபவர்கள் மீது களங்கம் கற்பிப்பது, அதுவும் முடியாத போது, “எங்கள் மத நம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது” என்று தமது முட்டாள்தனத்தை தெனாவெட்டாகப் பிரகடனம் செய்வது என்ற வழிமுறைகளைத்தான் அத்வானி முதல் அடிமட்டத் தொண்டன் வரையிலான அனைவரும் அன்று அயோத்தி விவகாரத்தில் செய்தார்கள்.

அதையேதான் மோடி விவகாரத்திலும் செய்கிறார்கள். இணைய வெளியிலும், ஊடகத் துறையிலும் இவர்களால் ஏவி விடப்பட்டிருக்கும் அறிவுத்துறைக் காலாட்படை முன் எப்போதும் இல்லாத தைரியத்துடன் பார்ப்பன பாசிசக் கருத்துகளை நஞ்சாக கக்குகிறது. ஒரு கோயபல்சின் இடத்தில் இப்போது பல இலட்சம் கோயபல்சு குஞ்சுகள்!

பல்லாயிரக்கணக்கான மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த ஒரு கிரிமினல், தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும், தனது பிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளை அரங்கேற்றிய ஒரு வஞ்சகன், தான் அதிகார ஏணியில் மேலேறுவதற்காகத் தனது கூட்டாளிகளைக் காவு கொடுக்கவும் தயங்காத ஒரு கயவன், “நானே உங்களது மீட்பன்” என்று முழங்குகிறான்.

பாசிசத்தின் தலையை நசுக்கிக் கொல்ல விரும்புகிறவர்கள் நாட்களைத் தள்ளிப் போடவியலாது. இந்தக் கணமே களத்தில் இறங்க வேண்டும்.

சூரியன்
________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

________________________________

சந்தா