Friday, December 9, 2022
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகாவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை

காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை

-

“முன்னொரு காலத்தில் வீரமான மன்னன் ஒருவன் இருந்தான். அவன் சோட்டா காசியை ஆண்டு வந்தான். அவனது மனைவி மிகவும் பக்தியானவள். அவர்கள் தினமும் குளித்து காயத்திரி மந்திரம் ஜெபிப்பார்கள். இருவருமாக சிவலிங்க பூசை செய்வார்கள். சோட்டா காசி நாடே சுபிட்சமாக விளங்கியது. நாட்டு மக்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் வண்ணம் ஒரு நாள் குஜராத்தின் சுல்தான் கான், சோட்டா காசி மேல் படையெடுத்தான்.

sati
கணவன் இறந்தாள் மனைவி தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற பார்ப்பன நியதிக்கு பழங்குடியினரிடம் மதிப்பு உள்ளதா?

கோயிலை இடித்தும், மிருகங்களைக் கொன்றும், குழந்தைகளைக் கொன்றும் வெறியாட்டம் போட்டான் கான். தனது ராஜ்ஜியத்தைக் காக்க உறுதி பூண்ட சோட்டா காசியின் மன்னன், தனது வீரர்களோடு போர்க்களம் விரைந்தான். போர் நடந்து கொண்டிருக்கும் போது சோட்டா காசியின் கொடி தாழ்ந்து விட்டால் தான் உயிர் துறந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சென்றான்.

பல நாட்களாக போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அரண்மனையில் இருந்து மகாராணியார் போர்க்களத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது சோட்டா காசியின் கொடி விழுந்தது. உடனே தனது தோழியர்கள் மற்றும் பணிப் பெண்களை அழைத்த மகாராணியார், ‘எதிரி வென்று விட்டான். எந்த நேரமும் இங்கே வந்து விடவும் கூடும். இங்கே உள்ள பெண்கள் தங்களது கணவன்மார்களின் கௌரவத்தையும், தேசத்தின் கௌரவத்தையும் காக்க உடனே தீக்குளியுங்கள்’ என உத்தரவிட்டாள்.

உடனடியாக மரக்கட்டைகள் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டது. எரியும் நெருப்பில் நெய்யும் மற்ற பூசைப் பொருட்களும் இடப்பட்டன. நெருப்பு நன்றாக வளர்ந்த போது மகாராணியார் அதில் பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து பணிப்பெண்களும் தோழியர்களும் பாய்ந்து உயிரைத் தியாகம் செய்தனர்.

அன்று மாலை மகாராஜா போர்க்களத்திலிருந்து திரும்பிய போது தான் விசயமே புரிந்தது. உண்மையில் போரில் சோட்டாகாசியின் மகாராஜா தான் வென்றிருக்கிறார் – வீரன் ஒருவன் தவறான கொடியைத் தாழ்த்தியிருக்கிறான். ஆனாலும் தனது தாய் நாட்டுக்காக தீக்குளித்து இறந்த மகாராணியின் தியாகத்திற்கு சிவபெருமான் மனமிறங்கி ஒவ்வொரு பூர்ண அம்மாவாசைக்கும் சோட்டா காசிக்கு விஜயம் செய்யும் வரத்தை அளித்துள்ளார். இன்று வரை ஒவ்வொரு பூர்ண அம்மாவாசைக்கும் மகாராணியார், யார் கண்களுக்கும் தெரியாமல் சோட்டா காசிக்கு வந்து செல்கிறார்…..”

north-east-rss
நார்த் ஈஸ்ட் டுடே – மே 2016 இதழ்

மயிலாப்பூர் அய்யராத்துக் குழந்தை ஒப்பிக்கும் மேற்படி அம்புலிமாமா பாணி கட்டுக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்த பபிதா என்கிற அந்தச் சிறுமி வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த போடோ பழங்குடி இனப் பெண்.

கணவன் இறந்தால் மனைவி தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற பார்ப்பன நியதிக்கு பழங்குடியினரிடம் மதிப்பு உள்ளதா? யார் அவர்களுக்கு இந்த பார்ப்பனப் புரட்டுகளைச் சொல்லிக் கொடுக்கின்றனர்? அப்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

வடகிழக்கு மாநிலங்களில் – குறிப்பாக அசாம் மாநிலத்தில் – வசிக்கும் போடோக்களின் மதம் பார்ப்பனிய இந்து மதத்திற்கு நேர் விரோதமானது. பதோவராய் என்கிற தலைமைக் கடவுளும் அவரால் உண்டாக்கப்பட்டது என்று போடோக்கள் நம்பும் காற்று, சூரியன், பூமி, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பதோயிசம் தான் போடோக்களின் மதம். இயற்கையையும் காட்டையும் காட்டில் வாழும் பல மிருகங்களையும் வழிபடும் பதோயிசத்தில் பார்ப்பனிய தந்தைவழிச் சமூக விழுமியங்களுக்கு இடமில்லை.

அசாம் மண்ணின் மைந்தர்களான போடோக்களோடு அம்மாநில தேயிலைத் தோட்டங்களுக்கு தினக் கூலிகளாக இழுத்து வரப்பட்ட சந்தால் மற்றும் முண்டா பழங்குடியினத்தவரை மோத விட்டது இந்திய ஆளும் வர்க்கம். இந்தியாவின் பிற பகுதியில் பழங்குடியினராக பட்டியிலிடப்பட்ட சந்தால்களுக்கும் முண்டாக்களுக்கு அசாம் மாநிலத்தில் அந்த தகுதியை வழங்க மறுத்த இந்திய அரசு, போடோக்களுக்கு வழங்கியதன் மூலம் இச்சமூகங்களுக்கு இடையில் இருந்த சில்லறை உரசல்களுக்கு ஒரு அடிப்படையை வழங்கியது.

இதற்கிடையே பர்மா மற்றும் வங்கதேசத்திலிருந்து இசுலாமியர்கள் பிழைப்புத் தேடி அகதிகளாக அசாமில் தஞ்சம் புகுந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் கலவரத்தைத் தூண்டி அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில கடந்த மூன்று பத்தாண்டுகளாக ஈடுபட்டு வந்தது இந்துமதவெறிக் கும்பல். மத்திய மற்றும் வட இந்திய மாநிலங்களைப் போன்ற வலைப்பின்னல் இல்லாத நிலையில் பிற சாதி இந்துக்களோடு பழங்குடியினரையும் இணைத்த ஒரு ஐக்கிய அணியை ஏற்படுத்தி அதற்கு பொது எதிரிகளாக இசுலாமியர்களை முன்னிறுத்திக் காட்டுவதன் மூலம் வட கிழக்கில் ஒரு குஜராத்தை உண்டாக்கும் முயற்சியை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

BJP
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி கௌகாத்தியில் விளையாடிய போது ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என கோஷமிட்டுள்ளனர்

இந்திய அரசின் தொடர் முயற்சியால் பழங்குடியின மக்கள் தங்களுக்குள் அணிபிரிந்து மோதிக் கொண்டிருந்தனர். இந்த மோதலுக்குள்ளே புகுந்த இந்துமதவெறியர்கள், அனைத்து பிரிவினரையும் ‘இந்துக்களாக’ ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டது. அந்த வகையில் போடோக்கள் சிவனை வழிபடும் சைவர்கள் எனவும், சந்தால்களும் முண்டாக்களும் வைணவர்கள் எனவும் கற்பித்து அதற்குத் தோதான புராணப் புரட்டுகளை இட்டுக்கட்டியது.

இந்துத்துவ கும்பலின் பெண்கள் பிரிவான ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, வனவாசி கல்யாண் ஆஷ்ரம், வித்யா பாரதி, சேவா பாரதி, வன பந்து பரிக்சத் உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்கள் அசாமில் குவிந்து வேலை பார்க்கத் துவங்கினர். பார்ப்பனிய இந்துக் கலாச்சாரத்துக்கு வெளியே இருந்த பழங்குடியினரை உள்ளே இழுப்பதோடு, வடகிழக்கில் தமக்கென புதிய ஆதரவுத் தளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்கு அடித்தளமாக குழந்தைகளை குறிவைத்து மூளைச்சலவை செய்வதற்காக ஆயிரக்கணக்கான ஓராசிரியர் பள்ளிகளைத் தோற்றுவித்தனர்.

இந்துத்துவ மூளைச்சலவை நடப்பதெப்படி?

North-East-
ஓராசிரியர் பள்ளி

1986-ல் துவங்கப்பட்ட ஏகல் வித்யாலயா என்கிற பரிவார அமைப்பிற்கு தற்போது நாடெங்கிலும் சுமார் 52,000 கிளைகள் உள்ளன. அசாமின் கோக்ரஜர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 290 ஓராசிரியர் பள்ளிகளை இவ்வமைப்பு நடத்தி வருகின்றது. 2002 குஜராத் கலவரங்கள் நடந்த பின் அது குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலர், இசுலாமிய கொத்துப் படுகொலைகள் அரங்கேறினால் அதற்கு மக்கள் உளவியல் ரீதியில் தயாராவதற்காகவும், பழங்குடியின மக்களை இசுலாமியர்களுக்கு எதிரான காலாட்படையாக பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குக் கொம்பு சீவவும் பல பத்தாண்டுகளாக வனவாசி கல்யாண் ஆசிரம் ஓராசிரியர் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகல் வித்யாலயா நடத்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

அது என்ன ”ஓராசிரியர் பள்ளிகள்?”

போதிய கல்வியறிவோ, ஆசிரியர் பயிற்சியோ, அறிவியல் பூர்வமான கல்வித்திட்டமோ இல்லாத இவற்றை “ஓராசிரியர் பள்ளிகள்” என அழைப்பதே பொறுத்தமற்றதாகும். “ஆசிரியர்” என தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் சங்க பரிவார தொண்டர் ஒருவர் நடத்தும் “பள்ளியில்” பழங்குடியினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிள்ளைகளை சுமார் 40 பேர் வரை சேர்த்துக் கொள்கின்றனர். பள்ளியில் ஏற்றத்தாழ்வான வயதுகளில் சேரும் ‘மாணவர்கள்’ அனைவருக்கும் ஒருவரே ஆசிரியர்.

இந்தப் பள்ளிகளின் பாடதிட்டம் என்ன?

மொழி, அடிப்படைக் கணிதம், பொது அறிவு, தார்மீக அறம் (moral Values), சுகாதாரம், கைவினை மற்றும் யோகா ஆகிய ஏழு பாடங்களே தமது பாடதிட்டம் என அறிவிக்கிறது ஏகல் வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளம். இந்தப் பாடதிட்டத்தில் ஏன் அறிவியல், புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் இல்லையே என கேட்கும் அப்பாவிகளுக்கு மேலும் சில விளக்கங்கள் அளிக்க வேண்டியுள்ளது.

North-East-ekal-shool
எண் ஒன்றுக்கு ஒரு முறை “ராம்” எண் இரண்டுக்கு இருமுறை “ராம்” மூன்றுக்கு மும்முறை ”ராம்” என குழந்தைகள் கூவ வேண்டும்.

தினசரி மூன்று மணி நேரம் மேனிக்கு மொத்தம் மூன்று வருடங்களில் முடிந்து விடும் ஒரு வகையான பயிற்சியைத் தான் பாடதிட்டம் என நீட்டி முழக்குகிறது ஏகல் வித்யாலயா. சொல்லிக் கொள்ளும் அந்த மூன்று மணிநேர படிப்பின் துவக்கத்திலும் இறுதியிலும் பஜனைக்காக மட்டும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கணிதத்திற்கும் மொழிக்குமாகச் சேர்த்து மொத்தம் 60 நிமிடங்கள். தினசரி 30 நிமிடங்கள் என மூன்று வருடத்திற்கு சொல்லிக் கொடுக்கப்படும் கணிதம் என்னவாக இருக்கும் என்பதை 2004-ம் ஆண்டு ஏகல் வித்யாலய “பள்ளிகளை” குறித்து விரிவன கள ஆய்வு மேற்கொண்ட பத்திரிகையாளர் ஹர்தோஷ்சிங் பால் பதிவு செய்துள்ளார். எண் ஒன்றுக்கு ஒரு முறை “ராம்” எண் இரண்டுக்கு இருமுறை “ராம்” மூன்றுக்கு மும்முறை ”ராம்” என குழந்தைகள் கூவ வேண்டும். இது தான் ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் பழங்குடியினருக்கு அறிமுகப்படுத்தும் கணிதத்தின் யோக்கியதை.

மற்றபடி வழக்கம் போல் திரிக்கப்பட்ட வரலாறு, புராணப் புரட்டுகள், இசுலாமிய/கிறிஸ்தவ வெறுப்பு, போலி தேசபக்த பஜனை தான் பாடங்கள். சுருக்கமாகச் சொன்னால் சமவெளி இந்துக்களுக்கு தினசரி ஒருமணி நேர ஷாகாவை வடிவமைத்த அதே நோக்கத்திற்காகத்தான் பழங்குடி ‘இந்துக்களுக்கு’ மூன்று மணி நேர ஷாகாக்களை உருவாக்கியுள்ளனர்.

கலாச்சார ரீதியிலும், புவியியல் ரீதியிலும் இந்தியாவிலிருந்து துண்டுபட்டுக் கிடக்கும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் பிடியில் வைக்க உட்குழப்பங்களை ஏற்படுத்தியது மத்திய உளவுத்துறை. அதன் காரணமாக பிளவுண்டு கிடக்கும் பழங்குடியினரை அணுகும் இந்துத்துவ கும்பல், பார்ப்பன இந்துத்துவ விளக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு கலாச்சார ரீதியில் “இந்துக்களாக” ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. இதன் மூலம் வடகிழக்கை புவியியல் ரீதியில் இந்து-இந்தியாவின் அங்கமாக்குவதோடு, அதற்கு பொது எதிரிகளாக கிறிஸ்தவர்களையும் இசுலாமியர்களையும் முன்னிறுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதித் திட்டங்கள் ஓரளவுக்குப் பலனளிக்கவும் துவங்கியுள்ளன.

வடகிழக்கை புவியியல் ரீதியில் இந்து-இந்தியாவின் அங்கமாக்குவதோடு, அதற்கு பொது எதிரிகளாக கிறிஸ்தவர்களையும் இசுலாமியர்களையும் முன்னிறுத்துகின்றனர்
வடகிழக்கை புவியியல் ரீதியில் இந்து-இந்தியாவின் அங்கமாக்குவதோடு, அதற்கு பொது எதிரிகளாக கிறிஸ்தவர்களையும் இசுலாமியர்களையும் முன்னிறுத்துகின்றனர்

மிசோரம் மாநிலத்தில் பரவலாக வசிக்கும் மிசோ பழங்குடியினரோடு நடந்த மோதலில் அம்மாநிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சில பத்தாயிரக்கணககான புரூ இனத்தவர்கள் தற்போது திரிபுரா மாநில எல்லைக்குள் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். 1998-ல் கலவரம் நடந்த போது ’சேவை’ ஆற்றச் சென்றது சேவா பாரதி. அதைத் தொடர்ந்து வி.ஹெச்.பி, வனவாசி கல்யான் ஆசிரமம், வன பந்து பரிக்சத், பாரதிய ஜனசேவா சன்ஸ்தான் போன்ற பரிவார அமைப்புகள் அப்பகுதியில் குவிந்து முகாமிட்டனர்.

சில ஆண்டுகளிலேயே புரூ இனத்தவரிடையே இருந்து ஒரு சிலரை மூளைச் சலவை செய்து முழு நேரப் பணியாளராக்கினர். புரூ இனம் இந்துக்களின் ஒரு பிரிவு என்பதற்கு வரலாறு மற்றும் பண்பாட்டுத் திரிபான கதைகளை மக்களிடையே பரப்பினர். விளைவாக மிருகங்களை வணங்கும் (animistic religion) பழங்குடி மதமொன்றைப் பின்பற்றி வந்த புரூ இன மக்கள் இன்று முற்று முழுதாக ‘இந்துக்கள்’ ஆக்கப்பட்டுள்ளனர். வெறுமனே ராமனை, ஈசுவரனைக் கும்பிடும் இந்துக்கள் என்றால் கிறிஸ்தவ பாணி ’மதமாற்றம்’ எனக் கடந்து சென்று விடலாம் – மாறாக இம்மக்களை மிக ஆழமாக பார்ப்பனமயமாக்கியிருக்கிறார்கள்.

சதி, குழந்தைத் திருமணம் போன்ற பழைய பார்ப்பனிய வழக்கங்கள் மேன்மையானவை என்று இம்மக்களுக்கு போதித்துள்ள இந்துத்துவ கும்பல், கிறிஸ்தவர்கள் மற்றும் இசுலாமியர்களின் மேல் ஆழமான வெறுப்பை விதைத்துள்ளது. புரூ மற்றும் போடோ இனத்தவரிடையே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயல்பாடுகளை ஆராய்ந்தால் ஒரு வகையான செயல்பாட்டு முறையை (Modus Operandi) கவனிக்க முடிகிறது. இயற்கை இடர்பாடுகள் அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவர காலங்களில் “சேவை” பணியாற்ற சேவா பாரதியின் முகமூடியோடு களமிறங்குவது, பின் பழங்குடியினத்தவர் மத்தியிலிருந்தே ஆள் பிடி தரகர்களை உருவாக்குகின்றனர்.

vanvasi-kalyan-shram
விசுவ இந்து பரிக்சத்தின் ஆள்பிடி தரகர்கள், பதினைந்து வயதுக்குட்பட்ட பழங்குடி இனக் குழந்தைகளை சட்ட விதிமுறைகளை மீறி வேறு மாநிலங்களுக்குக் கடத்துகின்றனர்.

தம்மை பிரச்சாரக்குகள் என அழைத்துக் கொள்ளும் விசுவ இந்து பரிசத்தின் ஆள்பிடி தரகர்கள், பதினைந்து வயதுக்குட்பட்ட பழங்குடி இனக் குழந்தைகளை சட்ட விதிமுறைகளை மீறி வேறு மாநிலங்களுக்குக் கடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் சங்கப்பரவார கும்பல்களால் நடத்தப்படும் ஆசிரமங்கள் எனப்படும் மூளைச்சலவை மையங்களில் வைத்து இக்குழந்தைகளை மதத்தீவிரவாதிகளாக வார்த்தெடுக்கின்றனர். பின்னர் இவர்களை பழங்குடியினச் சமூகத்தில் மீண்டும் விதைக்கும் இந்துத்துவவாதிகள், இவர்களைக் கொண்டே மொத்த சமூகத்தின் உளவியலிலும் பார்ப்பன வெறி விசத்தை பரப்புகின்றனர்.

கேட்பதற்கு கொக்கு தலையில் வெண்ணை வைக்கும் வழிமுறையாகத் தெரிகிறதா?

”இன்னும் 100 அல்லது 200 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் பழங்குடி இன அடையாளத்திற்கு என்ன நேர்கிறது என்று பாருங்கள்” என்கிறார் வடகிழக்கு மாநிலங்களுக்கான வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் செயலாளர். (இணைப்பில் உள்ளா ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை). உடனடி பலன்களை நோக்கமாகக் கொள்ளாமல் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டாலும், தேர்தல் வெற்றிகளின் வடிவில் தொட்டறியத்தக்க பலன்களை அடையத் துவங்கியுள்ளது இந்துத்துவ கும்பல்.

அசாம் மற்றும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா, பிற மாநிலங்களிலும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. குறிப்பாக மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள இந்து மைத்தி இன மக்களை போடோ பழங்குடியின மக்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மேகாலயா மற்றும் திரிபுராவில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகளின் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு “வளர்ச்சி” கோஷத்தை முன்வைத்துள்ள பாரதிய ஜனதா, மத்திய அரசு இம்மாநிலங்களுக்கு வழக்கமாக ஒதுக்கும் நிதியை விளம்பரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றது.

babita-parents
வடகிழக்கு மாநிலத்தின் பழங்குடி மக்களிடமிருந்து 31 இளம் பெண் குழந்தைகள் சங்பரிவார் கும்பலால் இந்துமயமாக்க கொண்டுசெல்லப்பட்டது. குழந்தை எங்கே என தவிக்கும் பெற்றொர்களில் பபிதாவின் பெற்றொர்களும் ஒருவர். நன்றி: அவுட்லுக்

அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் இந்து இந்தியாவின் அங்கம் என்பதை வலியுறுத்தும் விதமாக அம்மாநிலங்களை (வடகிழக்கு மாநிலங்கள் – மதுரா – பிருந்தாவன்)  உள்ளடக்கி ”இந்து  ஷேத்ராடன வரைபடம்” (Hindu Pilgrimage Map) ஒன்றை உருவாக்கி வருகின்றது மத்திய அரசு. இதற்கான திட்டம் மற்றும் வழிகாட்டுதல் பிரதமர் அலுவலகத்திலிருந்தே பெறப்பட்டு அதனடிப்படையில் தமது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.

மணிபூரின் வைணவத் தொடர்பு, திரிபுராவின் சைவ தொடர்பு மற்றும் வடகிழக்கில் உள்ள மூன்று சக்தி பீடங்கள் போன்றவை இந்த ஆன்மீக வரைபடத்தில் இடம் பெறுமென்றும் கூடுதலாக அசாமின் உமாநந்தாவில் உள்ள சிவன் கோவிலும் இடம் பெறும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியதிகாரத்தின் பலன்களை தமது அமைப்பின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், பழங்குடியினச் சமூகத்தின் வேர்மட்ட அளவில் செயல்படுவதையே முதன்மையாகக் கொண்டுள்ளது இந்துமதவெறிக் கும்பல். இந்துத்துவமயமாக்கல் தேர்தல் வெற்றிகளில் வெளிக் காட்டிக் கொண்டாலும், அதனையும் கடந்து வேறு வேறு தளங்களில் எதிரொலித்துக் கொண்டுள்ளது. கடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி கவுகாத்தியில் விளையாடிய போது ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என கோஷமிட்டுள்ளனர். இது வடகிழக்கு மாநில வரலாறு காணாத சம்பவம் என விவரிக்கிறது ”நார்த்ஈஸ்ட் டுடே” என்கிற பத்திரிகை.

வடகிழக்கு மாநிலங்கள் தவிர பழங்குடியின மக்கள் அடர்த்தியாக வாழும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே உத்தியின் அடிப்படையில் ஆதரவுத்தளத்தை விரித்துள்ள இந்துத்துவ கும்பல், அதன் காரணமாக சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளைக் குவித்துள்ளது. களப்பணிகள் ஒரு பக்கமும், அரசு அதிகாரத்தின் பலன்கள் இன்னொரு புறமுமாக இந்துத்துவ கும்பலுக்கு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ள நிலையில் கோடிக்கணக்கான அந்நிய நிதியும் இந்த அமைப்புகளிடம் குவிந்துள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதியம், அமெரிக்க ஏகல் வித்யாலயா அறக்கட்டளை, பரம சக்தி பீடம், சேவா இண்டர்நேசனல் போன்ற இந்துத்துவ அமைப்புகள் 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 365 கோடி அளவுக்கு நன்கொடை வசூலித்துள்ளதாக தெரிவிக்கிறது தெற்காசிய குடிமை வலையம் (SACW – South Asican Citizen Web) என்கிற தன்னார்வ அமைப்பு.

ஒருபுறம் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ள கும்பலைக் கொண்டு பார்ப்பனிய மதவெறிப் பிரச்சாரங்களின் மூலம், மதவெறியின் சுவடு கூட இல்லாத பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து சமூகத்தை பல கூறுகளாக வெட்டிப் பிளப்பது – இன்னொரு புறம் அதைத் தேர்தல் வெற்றிகளாக அறுவடை செய்கின்றனர். இந்தப் போக்கிற்கு அக்கம் பக்கமாகவே இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களை மட்டுமின்றி இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுக்கு தோதுப்படாத ஜனநாயக சக்திகள் அனைவரையும் பொது எதிரிகளாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரித்து ’இந்து’ சமூகத்தை ஒரு நிரந்த அச்சத்தில் ஆழ்த்தி வைத்துள்ளனர். இவர்களையே அடித்தளமாக கொண்டு மொத்த சமூகத்தையும் தமது பாசிச மதவெறி அரசியலின் பிடிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்த்திக் கொண்டுள்ளனர்.

எங்கோ வடகிழக்கிலோ, மத்திய இந்தியாவிலோ நடக்கும் சம்பவங்கள் என இவற்றைக் கடந்து விட முடியாது. பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ”தமிழ்க் காதலும்” தருண் விஜய்களின் திருவள்ளுவர் பாசமும் ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிகைகள். பெரியாரின் மண் என்கிற செயலற்ற இறுமாப்பு மட்டும் போதுமா?

– தமிழரசன்.

செய்தி,வீடியோ மற்றும் ஆடியோ நன்றி: அவுட்லுக் (The outlook )

மேலும் படிக்க:
OUTLOOK EXCLUSIVE: INVESTIGATION #OperationBabyLift
Target northeast: How RSS plans to make region saffron
Sowing saffron in the north east
Remapping Northeast: Centre to link region with Hindu circuit
Sangha Parivar, the torch-bearer of Hindutva in North East India also.
In tribal belt, Congress stares at losses while BJP hopes to gain
The Rise of BJP in the Northeast, the Complete Story
Congress will be eliminated from the Northeast: Himanta Biswa Sarma
Interviewing Hartosh Bal on Ekal Vidyalayas

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க