சிறுபான்மை ரோஹிங்கியா முசுலீம்கள் மீது மியான்மர் இராணுவமும் பௌத்த பேரினவாதக் கும்பலும் கூட்டு சேர்ந்து  நடத்திய இனவெறித் தாக்குதலில் மியான்மரிலிருந்து இலட்சக்கணக்கான ரோஹிங்கியா முசுலீம்கள் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இன்று வரையிலும், அவர்களது வாழ்நிலை மிகவும் மோசமானதாகவே இருந்து வருகிறது.

மியான்மரிலிருந்து விரட்டப்பட்டு ஏறக்குறைய 9 மாத காலங்கள் நிறைவுற்ற நிலையில் இதுவரை சுமார் 7 இலட்சம்  ரோஹிங்கிய அகதிகள் வங்கதேச எல்லையிலுள்ள காக்ஸ் பஜார் என்ற இடத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அடிப்படை மருத்துவ, சுகாதார வசதிகளின்றி மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 60 குழந்தைகள் பிறக்கின்றன என்கிறது யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் அறிக்கை.

யுனிசெஃப்-இன் அறிக்கையின்படி இதுவரை இந்த முகாமில் 16,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அவற்றில் 3,000 குழந்தைகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச மருத்துவ வசதிகள் கிடைத்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத ஒரு வங்கதேச சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், 2018 மே மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி அகதிகள் முகாமில் இதுவரை 18,300 கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிப் பெண்களின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 25,000 வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இப்படிப் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் மியான்மர் இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய செய்தி.

இப்படி இன்னும் சுமார் 25,000 குழந்தைகள் பிறக்கவிருக்கும் நிலையில்,  பிரசவத்திற்குப் பிறகு அக்குழந்தைகள் தாய்மார்களால் கைவிடப்படும் வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றதெனவும், இன்னொருபுறம் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் தாய்மார்கள் பிரசவத்தின் போது இறப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறது அல்ஜசீரா வெளியிட்டுள்ள ஒரு காணொளி.

அந்தக் காணொளியில் ரோஹிங்கியா அகதிப்பெண் ஒருவர் பேசும்போது “மூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என் உடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர். அதற்குப் பின்னர் எனக்கு அடிவயிற்றில் தாங்க முடியாத வலியும் உதிரப்போக்கும் ஏற்பட்டது” என்கிறார்.

இன்னொரு ரோஹிங்கிய அகதியான சிறுமி சோரா பேகம், ”எங்கள் கிராமம் முழுவதையும் மியான்மர் இராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். பின்னர் எங்கள் ஊரிலுள்ள ஆண்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சுட்டுக்கொன்றனர். பிறகு எங்கள் ஊரிலுள்ள அழகான பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, பின்னர் வீடுகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர்” என்று கூறுகிறார்

கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மியான்மர் இராணுவம் இவை அனைத்தையும்  போலியான குற்றச்சாட்டுக்கள் என மறுத்துவிட்டது. ஆனால் மேற்காணும் தகவல்களும், காணொளியும் மியான்மர் இராணுவத்தின் நேரடித் தலையீட்டை அம்பலப்படுத்துகின்றன. அந்த நாட்டு அரசாங்கத்தின் தலைவரும், நாட்டின் ஆலோசகர் பதவி வகிப்பவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான, ஆங் சான் சூ கீ இந்தக் கொடூர சம்பவங்கள் அத்தனையும் நிகழ்ந்த போது வாய்மூடி அமைதி காத்தார்.

அவரது அமைதி, கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் 2000-க்கும் அதிகமான அப்பாவி முசுலீம்கள் ‘மாண்புமிகு’ மோடியின் ஆசியுடன் கொன்றொழிக்கப்பட்ட போது, அன்றைய இந்தியப் பிரதமர் ’நல்லவர்’ வாஜ்பாய் வாய்மூடி அமைதி காத்ததை நினைவுபடுத்தியது.  பெளத்த அடிப்படைவாதமும், இந்துத்துவாவும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை உலகுக்கு நிரூபித்தார் ஆங் சான் சூ கி.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும், இது சமூகத்தின் பேரவலம் என்று ஒரு அறிக்கையை விட்டுவிட்டுத் தங்கள் சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டன. மியான்மர் அரசும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம் இக்கணம்வரை ஒவ்வொரு நிமிடமும் கூடுக் கொண்டே வருகிறது. ஒட்டுமொத்தத்தில் மனிதர்களாகவே அங்கீகரிக்கப்படாத அகதிகளாகவே வாழ்கின்றனர் ரோஹிங்கிய அகதிகள்.

மேலும் படிக்க:
In Bangladesh, some 60 babies a day born in Rohingya camps: U.N.