அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 06
கி.பி. 320 முதல் 600 வரை:
”இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்ம தேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார். இவரைக் கலியுக அவதாரமென்று அழைத்தனர். ஜெயினர்கள் (சமணர்) அவரை வெறுத்தனர். இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான், இந்தக் கலியுக அவதாரக் கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை, கிருஷ்ணா ஆகிய இரு நதிகளுக்குமிடையே ஆண்ட வகாடா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள், மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்த நூற்றாண்டில் கூட வட நாட்டின் கோட்பாடு, பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம் பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது. இவற்றினால் தமிழர் வாழ்க்கை கி.மு. 5000 முதல் கி.பி. 400 வரை யாதொரு மாறுதலும் இன்றி ஒரே படித்தரமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இன்றுள்ள இந்து மகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது, இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால் ஏற்படுத்தட்டும்!
சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டும். வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? இந்துஸ்தானத்திலே இரதகஜதுரக பதாதிகளை புண்ய தீர்த்தப் புரோஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை, அம்பு விடுவதைச் செய்வதை விட்டு, இங்கு என்ன வேலை என்று கேட்கிறோம்?
”இந்து” என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது? திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது? என்ற பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எந்த வீரரும், வீராங்கனையும் வேறு எங்கும் போக வேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும்; அகராதியைப் பார்க்கட்டும்; இலக்கியங்களைக் காணட்டும்; உண்மை விளங்கும்.
நேரம் கிடைக்காது என்பர். உண்மை! சுருக்கித் தொகுத்து நாமே தருகிறோம். படித்து உணரட்டும்.
• இராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”
• இராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”
• சுவாமி விவேகானந்தர், ”இராமாயணம்’ என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.
• 1922 -ல் கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, ”பழைய இந்தியாவின் சரித்திரம்.”
• இராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”
• ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”
• பண்டர்கார் கட்டுரைகள்.
• டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய ”தென் இந்தியாவும், இந்தியக் கலையும்.”
• P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”
• ஜெகதீச சந்தர்டட் எழுதிய ”இந்தியா – அன்றும் இன்றும்”
• A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”
• C.S. சீனிவாசாச்சாரியார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’, ”இந்து இந்தியா.”
• H.G. வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்”
• சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா.”
• C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”
• ஹென்றி பெரிஜ் 1965-ல் எழுதிய விரிவான “இந்திய சரித்திரம்”
• இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”
• G.H. இராபின்சன் எழுதிய “இந்தியா”
• நாகேந்திரநாத் கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”
• வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய ”ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்’
• ‘இம்பீரியல் இந்தியன் கெஜட்”
• சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய ”இந்திய மக்களின் சரித்திரம்”
• இராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”
– இவ்வளவு ஆராய்ச்சியாளர்களிடமும் ‘தப்பி’ பிறகு நம்மிடம் வரட்டும், வீர சவர்க்காரும், வீர வரதரும், வயது முதிர்ந்த (ஆனால் விவேக முதிர்ச்சிக்கு நாம் உறுதி கூற முடியாது) திவான்பகதூர் சாஸ்திரியாரும்!
இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத், இராஜஸ்தான் ஐக்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.
சரித பாகங்களை ஒட்டியும் விளக்கவும் அவ்வப்போது வெளியிடப்படும் பூகோளப் படங்களில் இந்துஸ்தானம் என்ற பகுதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கே போய் அந்தப் படங்களைத் தேடிக் கொண்டிருப்பது? என்று இந்து மகாசபைக்காரர் கவலைப்படுவர். உண்மைதான். அவர்களுக்கு வேலை அதிகம். தேடித் திரிய வேண்டாம். நாமே குறிப்புத் தருகிறோம்.
கான்ஸ்டேபிள் கம்பெனியார் வெளியிட்ட பூகோளப் பாடப் புத்தகத்தில் (Atlas) இந்தியா எனும் பூபாகத்தில் இனவாரி வட்டாரமும், மொழிவாரி வட்டாரமும் பிரித்து வேறு வேறு வர்ணம் தீட்டப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இரு விதமான படங்களிலும், திராவிடம் தனியாக இருக்கக் காணலாம்.
சரித சம்பவங்களில் முக்கியமானவற்றை நோக்கினாலும், இந்தியா எனும் பூபாகத்தில், இடையிடையே ஏற்பட்ட ”வல்லரசு’’களின் எல்லைகளை நோக்கினாலும், எந்த இராஜ்யமும், விந்திய மலைக்கு மேற்புற அளவோடுதான் இருக்கக் காண்பர். நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணியமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்.
படிக்க:
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
♦ வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !
இத்தகைய தனித் திராவிட நாட்டிலே இந்துக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? இந்து மதத்தின் பேரால் இம்சை பல செய்தது போதாதா? இன்னமும் இந்துஸ்தானத்துக்கும், பாகிஸ்தானத்துக்கும் தகராறு இருப்பதாக திராவிட நாட்டிலே பேசி, இங்குள்ள மக்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கேட்கிறோம். ஒரு குடம் கங்கை நீரை அங்குக் கொண்டு வந்து புரோக்ஷணம் செய்வதைவிட இந்து மகா சபையினர் கங்கையிலே நன்றாக முழுகி எழுந்து அங்கே பேசட்டும். இந்துஸ்தானத்தைத் தமதாட்சிக்குட்படுத்திக் கொள்ளட்டும். பாகிஸ்தானத்தாரும் அதைத் தடுக்கவில்லை. நாமும் தடுக்கவில்லை. மேலே பாகிஸ்தான் தெற்கே திராவிட நாடு! இடையே இந்துஸ்தான்! இதுதான் முடிவு.
முன்பு, திவான் பகதூர் K.S. இராமசாமி சாஸ்திரியார் மதுரையில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்து ஆற்றிய சொற்பொழிவில், இங்கு இந்து மகாசபையைக் கூட்ட வேண்டி வந்த உட்காரணத்தைக் கக்கிவிட்டார். அதாவது, இந்து – முஸ்லீம் பிரச்சினையைப் பற்றிய பயங்கரமான பீதிகளைக் கிளப்பிவிட்டுத் திராவிடத்தில் உள்ளோரையும் “இந்துக்கள்’ என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பது போல் நடித்து, ஆரியத்தை நிலைக்கச் செய்வதுதான் இங்குள்ள இந்து மகா சபையினரின் உண்மையான கருத்து. அது சாஸ்திரியாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை