குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பணி நிமித்தமாக இரு நாட்கள் தங்க நேர்ந்தது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு பேர் அந்த குறுகிய காலத்தில் நண்பர்களானார்கள். ஒருவர் டில்லியை சேர்ந்தவர். இன்னொருவர் போபால். மற்றவர்கள் ஒடிசாவையும், கேரளாவையும் சேர்ந்தவர்கள்.

இந்தியும், ஆங்கிலமுமாக கலந்திருந்தது அவர்களது உரையாடல். எனது வேண்டுகோளை ஏற்று, இந்தியை தவிர்த்து ஆங்கிலத்திலேயே முடிந்தவரை நடந்தது. அனைவரும் ஊபர் புக் செய்து அகமதாபாத்தில் சில சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றோம்.

முதலில் காங்கரியா ஏரி (kankaria lake) சென்றோம். அது ஒரு செயற்கை ஏரி; படகு சவாரி அதன் சிறப்பு. அங்கு ஒரு ட்ராம், வாடிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு அந்த ஏரியை சுற்றி வந்தது. அந்த ட்ராமின் பெயர் அடல் எக்ஸ்பிரஸ். நமக்கு பெரியார், அண்ணா பெயர்களை போன்று அவர்களுக்கு அடல், ஹெட்கேவர் போலும்.

காங்கரியா ஏரி (kankaria lake)

அங்கிருந்து கொண்டு என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். கூட்டம் அதிகமில்லை, காதல் ஜோடிகள் ஒன்றிரண்டுதான் கண்ணில்பட்டன. அதனால் அந்த இடம் களையிழந்து காணப்பட்டது. அது ஏதோ ஒன்றை உணர்த்துவது போலிருந்தது. சற்று நேரத்தில் எல்லோருடைய மொபைல் போன்களும் அதிரத் தொடங்கின.

என்னிடம் போபாலை சேர்ந்தவர் அதிகம் உரையாடினார். அவர் பெயர் ரூபேந்திர பட்டக். அவருக்கு தமிழர் ஒருவர் ஏற்கெனவே நண்பராக இருந்துள்ளார். அவருடைய தமிழ் நண்பர் அறிவுப்பூர்வமானவர் என்று கூறினார். சென்னையை பார்க்க விரும்புவதாகவும் கூறினார். எனது அலைபேசி எண்ணைப் பெற்றார், போபாலுக்கும் அழைத்தார். உடனே செல்ல வேண்டும் என்று ஆவல் பிறந்தது.

அதன் பிறகு சபர்மதி ஆற்றங்கரைக்குச் சென்றோம். பத்து கிலோமீட்டர் தூரம் சபர்மதி ஆற்றின் இருமருங்கிலும் மக்கள் நடந்து இளைப்பாறும் வசதி கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் அழகியல் உணர்வுடன் இருந்தது; அதற்கு அனைவரும் மயங்கி விட்டனர். ‘See. Modi has really worked’ என்றார் பட்டக்,  மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

எனக்கு அகமதாபாத்தின் சேரிகள் நினைவுக்கு வந்தன. அவை மிகவும் மோசமான நிலையில் இருந்தன. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பறக்காமல் இருக்க கற்கள், கிழிந்த டயர்கள் ஆகியன மேலே வைக்கப்பட்டு இருந்தன. குடிசைப் பொந்துகளில் மக்கள் பல்லி, ஓணான் போன்று நீண்ட நேரம் வெறித்துப் பார்த்தவாறு இருந்தனர். நமது ஊர்களிலும் சேரிகள் இருக்கின்றன. ஆனால் அவை எண்ணிக்கையில் குறைவானது என்று தான் சொல்ல வேண்டும். மணிநகர் பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரையில் சேரி குடிசைகள்தான் இருந்தன. நிறைய ஃபோட்டோக்கள் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்துக் கொண்டோம். பிறகு சபர்மதி ஆசிரமம் சென்றோம்.

சபர்மதி ஆற்றின் கரையோரம் சபர்மதி ஆசிரமம் இருக்கிறது. குஜராத்தில் பார்த்தவற்றுள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது சபர்மதி ஆசிரமம்தான். அதற்கு காரணம் காந்தி. அனைவருக்கும் காந்தியை பிடித்திருந்தது. நாங்கள் பயணம் செய்த ஊபர் வாகனத்தின் ஓட்டுநர் குஜராத்தின் மாற்றங்கள் (முக்கியமாக சாலை மேம்பாடு) கடந்த பதினைந்து வருட காலத்தில் ஏற்பட்டது என்றார்.

மற்றவர்கள் நெகிழ்ந்தார்கள். தொடர்ந்து அவருடன் பேசிக் கொண்டு வந்தார்கள். அவர்களின் உரையாடலை அருகில் அமர்ந்திருந்த கேரளத்தை சேர்ந்த ஜான் சுருக்கமாக மொழிபெயர்த்து கூறினார். ஊபர் ஓட்டுநரின் இந்தி புரியவில்லை என்றாலும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசியது கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. அவரது பேச்சில் ஒரு பெருமிதத் தொனியும், நிறைவும் ஒலித்தது.

செல்லும் வழியில் காண நேர்ந்த குடிசை வீடுகளை கேட்க சொன்னேன். அவை அகற்றப்பட்டு அங்கே வேறு வீடுகள் கட்டப்படுவதாக பதில் வந்தது. அதே போன்று ஓரிடத்தில் பழைய வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு கிடந்தன.

சபர்மதி ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது காந்தியின் அரசியல் பரிணாமத்தை விளக்கும் புகைப்படம், அவருடைய மேற்கோள்கள் ஆகியவை இருந்தன. தண்டி யாத்திரையை சிறிய பொம்மைகளால் சித்தரித்த படம் பார்ப்பவர்களை ஈர்த்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துமஸ் குடில்களில் வைக்கப்படும் இயேசு, மேரி, ஜோசப் மற்றும் குழந்தை இயேசுவுக்கு பரிசளிக்கும் பொம்மைகளை அவை ஒத்திருந்தன.

ஆற்றின் கரையில் சபர்மதி ஆசிரமப் பரப்பு முடிவுறும் இடத்தில் அமர்ந்தோம். அங்கிருந்து கொண்டு காந்தியை பற்றிய எண்ணங்களை அசை போட்டோம். இந்திய வரலாற்றில் பெரும் மக்கள் திரளை பொதுப் பிரச்சினைக்கு ஒன்றிணைத்தது காந்தி என்று சிலாகித்தார் ஒடிசாவை சேர்ந்த பிரஷீத் மிஸ்ரா. காந்தியின் இறுதி நாட்களில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டதையும், அது அவர் கொலைக்குக் காரணமாக இருந்ததையும் கூறினேன். அதை நினைத்துப் பார்க்க யாருக்கும் விருப்பமில்லை. இந்தியா மீதிருந்த காந்தியின் பிடியை பாஜக முதலில் தளர்த்தியது என்றபோது கனத்த மவுனம் நிலவியது.

நண்பர்களுக்கு காந்தியையும் பிடித்திருக்கிறது; மோடியையும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையில் இரண்டு தனித்தனி புகைவண்டிப் பெட்டிகள் இயங்குகின்றன. கடந்த தேர்தலில் ஒரு ஓட்டை பிஜு ஜனதா தளத்துக்கும் இன்னொரு ஓட்டை மோடிக்கும் செலுத்தி உள்ளார், பிரஷீத். இது ஒரு விசித்திர இந்து மனநிலை.

வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள விசயம், சமூகக் கொந்தளிப்புகள் என மோடி பற்றிய செய்திகள் அவர்கள் செவிகளில் எளிதில் உட்புகாது. அவர்கள் கேட்க விரும்புவதை மட்டும் தருவதற்கு அல்லது அவர்கள் என்ன கேட்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்குரிய ஊடகங்கள் ஏராளம் இருக்கின்றன. இந்துத்துவக் கொடூரங்கள் சில ‘ஃப்ரிஞ் அமைப்புகளின்’ செயல்பாடாக அவர்கள் மனம் நம்புகிறது. இது மனதின் ஒரு வகை நடிப்பு.

இந்த நடிப்புக்கு இரையாகும் உள்ளம் பின்னர் அதை நடிப்பு என உணர்வதில்லை. “எல்லாவற்றுக்கும் மோடியை தூற்றுகிறவர்கள் இவர்கள்” என்பன போன்ற முன்முடிவுகள் அவர்களை அந்த விசச்சூழலில் இருந்து வெளிவர விடாமல் தடுக்கிறது. ஒரு விடாப்படியான விமர்சன அணுகுமுறைக்கு அவர்கள் எண்ணங்களை உட்படுத்துவது அல்லது மோடி அரசால் நேரடியாக பாதிக்கப்படுகின்ற உணர்ச்சிப்பூர்வ அனுபவம் என்ற ஒன்று ஏற்படும் வரை இந்த சிக்கல் நீடிக்கும். பெரியார் – அம்பேத்கரை ஓரளவு படித்தறிந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசமாகவும் இந்த நிலையை புரிந்து கொள்ளலாம்.

அகமதாபாத்தில் இசுலாமியர்கள் நடத்தும் உணவகங்களில் மட்டும்தான் அசைவ உணவு கிடைக்கிறது. இதை மற்ற நண்பர்களும் கூறினர். உணவு என்றாலே சைவம்தான் என்பது நியதியாகிவிட்டிருக்கிறது. இரண்டாம் நாள் இரவு இசுலாமியர் கடைக்கு சென்று உணவருந்தினோம். ஒடிசாவை சேர்ந்த பார்ப்பன நண்பர் சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் மசாலாவை வெளுத்துக் கட்டினார். தென்னகத்து பார்ப்பனர்களின் உணவு ஆச்சாரம் பற்றிக் குறை கூறினார். உணவருந்தலில் இருந்த நெகிழ்வுத்தன்மை அவருடைய சமூகப் பார்வையில் இல்லை. இசுலாமியர்கள் பற்றிய அபிப்பிராயம் எல்லாப் பார்ப்பனர்களைப் போலவே அவரிடமும் மோசமாக இருந்தது.

குழந்தைகளை அதிகமாக பெற்றுப் போடுவதுதான் முசுலீம்களின் ஒரே வேலை என்றார். அதனால் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் வசிக்கும் இடங்களில் பதற்றம் அதிகரிக்கிறது என்றார். அது ஒரு கட்டுக்கதை என்பதை 2011-ல் எடுக்கப்பட்டு 2014-ல் வெளியான சென்சஸ் அறிக்கையை முன்வைத்து வாதாடினேன்.

அது ரம்ஜான் மாதம் என்பதால் நள்ளிரவிலும் முஸ்லிம்கள் அதிகளவு வெளியில் தென்பட்டனர். அவர்கள் தொழுகைக்காக வெளியே வந்தவர்கள். அது வித்தியாசமாக இருந்தது. இந்துத்துவ கும்பலை எந்த வகையிலும் ‘எரிச்சலூட்டாத’ ஒரு வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழகி விட்டனர் போன்றிருந்தது. கூட்டமாக அவர்கள் நிற்பதை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மனம் குறுகுறுத்தது. அது தேவையற்ற குறுக்கீடாகி விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் கூடவே ஏற்பட்டது. அகமதாபாத் ரயில் நிலையம் அருகில் நின்றவர்களை படம் பிடிக்க முடிந்தது.

அகமதாபாத்தில் மோடி ஆதரவாளர்களுடன் மட்டுமல்ல; மோடியை நிராகரிக்கும் இருவரிடமும் பேச முடிந்தது. அவர்களில் ஒருவர் 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை விரிவாக கூறிவிட்டு அப்பாவி முஸ்லிம்கள் அதற்கு பழிவாங்கப்பட்டனர் என்றார். இன்னொருவர், சென்னையில் ஆட்டோக்காரர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுவார்களாமே. அப்படியா? என்றார். இதே கேள்வி quora-வில் கேட்கப்பட்டதற்கு பலரும் சாதகமான பதிலையே வழங்கி இருந்தனர். பொதுவாக தமிழர்களுக்கு வேறொரு இனக்குழுவை வெறுக்கும் அணுகுமுறை இல்லை. மாறாக அவர்களை பார்த்து வியப்பவர்கள்.

சென்னையில் ஒரு டீக்கடைக்காரர் தன்னிடம் கணக்கு வைத்து டீ, சமோசா உண்ணும் ஒரு வட இந்தியத் தொழிலாளி பற்றி கூறும் போது, வார இறுதியில் சரியாகக் கடனை அடைத்து விடுவார் எனவும், கணக்கை முடிக்கும் போது கணக்கு விவரத்தின் மேல் ஒரு கோடு போடுவது வரை நின்று உன்னிப்பாக கவனித்து விட்டு செல்வார் என்றும் வியப்பு மேலிட கூறினார். சீமானின் இனவாத அரசியல் ஓரளவுக்கு மேல் மக்களை ஈர்க்காததற்கான விடையும் இதில் உள்ளது.

மோடியைப் பற்றி சொல்லும் போது அது உங்கள் ஊரில் ‘அம்மா’வுக்கு இருப்பது போன்ற கவர்ச்சி என்றார், அந்த நண்பர். அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை ஆதரித்து பேசினார். குஜராத்தில் அரசு பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் கூறினார். இவர்கள் இருவரிடமும் பேசியது மோடிக்கு எதிரான மனநிலையின் வெகுஜனத் தன்மையை அறிய முடிவதாக இருந்தது.

நவஜீவன் எக்ஸ்பிரசில் சென்ட்ரலிலிருந்து ஏறிய போது இரு கல்லூரி பெண்கள் ஐ லவ் மோடி பனியன்களை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். எனது இருக்கையில் அமர்வதற்கு ஒரு சேட்டு குடும்பம் விடவே இல்லை. தூர இருக்கை ஒன்றில் அவர்கள் குடும்ப உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட ஒற்றை இருக்கைக்கு செல்லுமாறு கேட்டு என்னுடையதை விட்டுத்தரக் கோரினர். அங்கு சென்றால் நமது ஊர் பார்ப்பனர்கள் தமிழக அரசியலை அலசிக் கொண்டிருந்தனர். மிகக் குறுகிய நேரத்திலே வேறொரு உலகுக்குக் கடத்தப்பட்டதை போன்ற உணர்வு ஏற்பட்டது.

உணவு மற்றும் மொழி ஆகியவை உடனே உணரக்கூடிய வேறுபாடுகள். நாம் இந்தி கற்காததுதான் பிரச்சினை என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் இந்தி பேசாத மக்கள் வாழ்கிறார்கள் என்ற எதார்த்தம் பற்றிய புரிதலும், நெகிழ்வும் இந்தி பேசும் தரப்பிடம் இல்லாததுதான் அடிப்படை பிரச்சினை. இதனை உணராத படித்த ‘மேதாவிகள்’ சிலர் தமக்கு இந்தி தெரியாததற்காக நமது அரசியல்வாதிகளை திட்டுகிறார்கள்.

நவஜீவன் எக்ஸ்பிரசில் படுக்கை விரிப்பு  விநியோகிக்கும் ஊழியர்கள் (Bedroll Staff) தமிழர்கள். உங்களுக்கு இந்தி தெரியுமா என்று கேட்டதற்கு வேலைக்கு பயன்படும் சில வார்த்தைகள் மட்டும் தெரியும் என்றார்கள். “வேண்டுமென்றேதான் இந்தி கற்கவில்லை” என்று அவர்கள் சொன்னதை வருத்தப்படும் ‘மேதாவிகள்’ கேட்க வேண்டும்.

இந்தியப் பயணத்தை அடிக்கடி மேற்கொள்ளும் ஜெயமோகன் இந்தியாவெங்கும் ஒரு ஒற்றுமை தென்படுவதாக நெகிழ்வார். என்னால் வேறுபாடுகளையே அதிகம் உணர முடிந்தது. ஜெயமோகன் அரசியல் நோக்கு நாமறிந்ததே. என்றாலும் ஒரு எதார்த்தம் வேறுவேறாக பிரதிபலிக்கும் சாத்தியம் கொண்டதுதானே.

தமிழ்நாட்டின் கோயில் கோபுரங்கள் பிரமிட் வடிவில் இருப்பவை. மராட்டியம், குஜராத் கோவில் கோபுரங்கள் குவிந்து, அகன்று மறுபடியும் சுருங்கி கோழி முட்டை வடிவில் இருக்கின்றன. அதில் ஒரு கலைநயமும், நுட்பமும் காண முடியவில்லை. எல்லா கோவில்களிலும் காவி வண்ணக் கொடி பறக்கிறது. அது பாகைமானியின் வடிவத்தில் இருக்கிறது. அவற்றில் மதக் கொடி எது? ஆர்.எஸ்.எஸ் கொடி எது?  என்று தெரியவில்லை. அது வைரஸை பிரித்தறியும் முயற்சி.

ராஜ்