ரண்டாம் முறையாக பதவியேற்ற 100 நாட்களுக்குள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவில் மோடி அரசு இருப்பதாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தனியார்மயமாக்கும் திட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படவில்லை எனில், 46 அரசு நிறுவனங்களும் இழுத்து மூடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி கொள்ளக் காரணம் உள்ளது. நிறைய சீர்திருத்தங்களைச் செய்ய இருக்கிறோம், அதற்கு நான் உறுதியளிக்கிறேன். நிச்சயம் இது மிகுந்த பயனளிக்கும்” என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாருடன் மோடி (கோப்புப் படம்)

ஆரவார வெற்றியுடன் கடந்த வாரம் மோடியும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அருண் ஜெட்லி உடல்நிலையைக் காரணம் காட்டி, நிதியமைச்சக பொறுப்பை மறுத்த நிலையில், அடுத்த நிதியமைச்சராக அமித் ஷா நியமிக்கப்படக்கூடும் என ஊடகங்கள் எழுதின. இந்த நிலையில் அந்த பொறுப்பு நிர்மலா சீதாராமனிடம் தரப்பட்டுள்ளது.

சோவியத் பாணியிலான அதிகாரத்துவத்துடன் இந்தியா முடங்கிவிட்டதாகக் கூறி, 65 ஆண்டுகால திட்டக் கமிசனைக் கலைத்தது மோடி அரசு. அதற்குப் பதிலாக ‘நிதி ஆயோக்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசின் கொள்கை முடிவுகளின் மையமாகவும் ‘புதிய யோசனை’களைத் தரும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

வரும் ஜூலையில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவின் பிரச்சினைக்குரிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சப்படும் என்றும், முன்னதாக கீழ் அவையில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

நான்கு குறியீடுகள் – சம்பளம், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு – நலன் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் அடங்கிய 44 சட்டங்களைக் குறிவைத்து நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

படிக்க:
♦ சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
♦ மோடி ஆட்சியில் வளர்ந்த ஒரே துறை தனியார் மருத்துவம் !

பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிப்பது குறித்த முக்கியமான முடிவை அரசு எடுக்க இருப்பதாகவும் ராஜீவ் குமார் கூறுகிறார். “அரசுவசம் உள்ள நிலத்தில் சரக்கு முனையத்தை உருவாக்கி அதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம்” என்கிறார். இத்தகைய நிலம் வழங்கும் திட்டத்தை முதலீட்டாளர் அல்லது தொழில்துறைக்கு ஏற்றபடி உருவாக்கிக்கொள்ளவும் முடியும் என்கிறார்.

அரசின் நிலம் வழங்கும் திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அபாயங்களான உரிமை தொடர்பான சட்ட பிரச்சினை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவும். விவசாய நிலங்களை வழங்குவதால் போராட்டம், வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளதால், அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்கலாம் என்பதைத்தான் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சொல்ல வருகிறார்.

அடுத்து, மோடி அரசு மேற்கொள்ள உள்ள முக்கியமான ‘சீர்திருத்தம்’ குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார் குமார். அடுத்து வரும் 100 நாட்களில் 42-க்கும் அதிகமான அரசு நிறுவனங்களை முழுவதுமாக தனியார்மயமாக்குவது அல்லது இழுத்து மூடிவிடுவது குறித்து மோடி அரசு கவனம் செலுத்த உள்ளதாகக் கூறுகிறார். நட்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க, வெளிநாட்டு நேரடி முதலீட்டில் உள்ள சில நிபந்தனைகளைக்கூட தளர்த்திக்கொள்ள திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களையும் நிர்வகிக்க தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம், அந்த நிறுவனங்கள் வசம் உள்ள சொத்துக்களை விற்க முடியும் எனவும் இதனால் அரசின் நிர்வாக பொறுப்புகள் குறையும் எனவும் தெரிவிக்கிறார்.

மேலும், “இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் 6.6% வீழ்ந்தது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பணி வழங்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக தேவைப்படுகிறது. வங்கிகளின் கவலைக்குரிய இருப்பு நிலையும், நிழல் கடன் அளிக்கும் துறையில் இருக்கும் நெருக்கடியும் இந்த நிலைக்குக் காரணம்” என ராஜீவ் குமார் கூறுகிறார்.

படிக்க:
♦ இந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி ! – மக்கள் கருத்து | காணொளி
♦ ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி

அரசு வங்கிகளை சீர்திருத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என யோசனை தெரிவிக்கும் ராஜீவ் குமார், கட்டுமான மற்றும் புதிய பொது வீடுகளுக்கு  செலவழிக்கும் வகையில் அதிகத் தொகையை உருவாக்க வேண்டும் என்கிறார். புதிய பொது வீடுகள் மூலம் தனியார்மயமாக்கத்தை விரைவாக்க முடியும் என்றும் அதன் மூலம் அதிக வரி வசூலும் கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

“நாம் வங்கிகளிலிருந்து தொடங்க வேண்டும். நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான தயாரிப்பில் இருக்கிறோம்… நிதிக் கொள்கை என்பது எதிர் சுழற்சிக்கானதாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.. அதற்கு நல்ல பலன் கிடைக்கும்” என்கிறார் ராஜீவ் குமார்.

மொத்தத்தில், வந்த நூறு நாட்களில் நாட்டைக் கூறு போட்டு விற்கத் தயாராகி இருக்கிறார் மோடி.

கலைமதி
நன்றி: தி வயர்

3 மறுமொழிகள்

  1. பொய் செய்திகளையே மூலதனமாக கொண்டு இயங்கும் செய்தி ஊடகங்கள் தமிழக மக்களை மடைமாற்றம் செய்வதில் வெற்றி அடைந்துள்ளனர்.

  2. வினவு கூட்டங்கள் ஸ்டெர்லைட் ஆலையை பொய்களை சொல்லி மூடி அந்த தொழிலாளர்களை நடுதெருவிற்கு கொண்டு வந்தார்களே அது மாதிரியா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க