கேள்வி : //காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஏன் ரெளத்திரமாகிறது? எதனடிப்படையில் அது இந்தியாவை கண்டிக்கிறது?//

– சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராக இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் நடந்து கொள்கிறது. தனது ஆதரவு மதவாதக் குழுக்களை ஏவி விட்டு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. மேலும் பாகிஸ்தான் அரசியலில் மக்கள் நலப் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளுவதற்கு காஷ்மீரும் ஒரு கேடயமாக பயன்படுகிறது. அதற்காகவும் இந்தியாவின் நடவடிக்கைகளை அவ்வப்போது பாகிஸ்தான் கண்டிக்கிறது.

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: “இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,”

அதே போன்று இந்தியாவும் அதாவது பாஜக அரசாங்கமும் இதர மாநிலங்களில் காஷ்மீரைக் காட்டி சாதனையாக கூறிக் கொள்கிறது. உண்மையில் காஷ்மீர் மக்களோ இந்திய அரசை எதிர்த்து அடக்குமுறைகளை மீறி போராடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் மதச்சார்பற்ற முறையில் இருந்ததை மதரீதியாக மாற்றியதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் பங்குண்டு.

அதற்காகவே ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கி தீவிரவாதக் குழுக்களை களத்தில் இறக்கினார்கள். காஷ்மீர் மக்களோ இரண்டு நாடுகளிலிருந்து வரும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //திராவிட ஆட்சியின் 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பாலாற்றில், காவிரியில் 1 தடுப்பணை கூட கட்டாதது ஏன்?//

– பழனிச்சாமி

ன்புள்ள பழனிச்சாமி,

இன்றிருப்பது போல தமிழகத்தின் நீர் வறட்சியும், காவேரிப் பிரச்சினையும் 1960-களில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் கர்நாடகா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் விவசாய சாகுபடி நிலங்கள் அதிகரித்து, நீரின் தேவையும் அதிகரித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த பிறகும் அதை இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அமல்படுத்தாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

தற்போது பருவ மழையின் தயவால் மேட்டூர் அணை நிரம்புகிறதே அன்றி வேறல்ல! இதற்கு தடுப்பணை கட்டாமல் போனது பிரச்சினை அல்ல. மாறாக தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றமும், மத்திய பாஜக அரசும் செயல்படவில்லை என்பதே முதன்மையான பிரச்சினை. இதற்கு மேல் இருக்கும் அணைகளையும், நீர்ப்பாசன திட்டங்களையும் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் முறையாக பரமாரிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். கூடவே அரசாங்கங்கள் அமல்படுத்தி வரும் உலகமயக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது.

படிக்க :
♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

♦ ♦ ♦

கேள்வி : //பிள்ளையாரின் பிறப்பு பற்றி அவ்வப்பொழுது சில திராவிட இயக்கங்கள் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு உண்மை நிலையை உரைக்கின்றன. அது பற்றி வினவின் கருத்து என்ன ?//

– சீனி. மோகன்

ன்புள்ள சீனி.மோகன்,

பிள்ளையாரின் பிறப்பு குறித்து தந்தை பெரியார் சிவபுராணம், கந்தபுராணத்தை ஆதாரமாக்கி எழுதிய கட்டுரையை இணைப்பில் படிக்கலாம்.

பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

இந்துக் கடவுள்களில் பாப்புலராக இருக்கும் பிள்ளையாரின் பக்தர்கள் இந்த பிறப்பு கதைகள் தெரிந்துதான் பக்தர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதே போன்று இந்தக் கதைகளை படித்தாலும் அவர்கள் பிள்ளையார் வழிபாட்டை நிறுத்திவிடப் போவதில்லை என்பதும் உண்மைதான்.

ஆய்வாளர் தொ.பரமசிவனது கருத்துப்படி கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே வணிகரகள் மூலம் பிள்ளையார் தமிழகத்திற்கு அறிமுகமாகிவிட்டார். அப்போது அவர் பூணூல், வாகனம், ஆயுதம் இன்றி சாதாப் பிள்ளையாராக இருந்தார். பிறகு அவர் பார்ப்பனிய பிள்ளையாராகி இன்று இந்துமுன்னணி பங்கில் 1980-களுக்குப் பிறகு கலவரம் ஏற்படுத்தும் பிள்ளையாராக மாறி விட்டார்.

நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்

கடவுள் வழிபாடு, நம்பிக்கைகளை அம்லப்படுத்துவதன் மூலம் பக்தர்கள் மனம் புண்படுத்தப்படும். இதன் மூலம் இந்துமதவெறியர்கள் இந்துக்களை திரட்டுவார்கள் என்றொரு கருத்து இருக்கிறது.

ganesh-chaturthi

அப்படியானால் தமிழகத்தில் தந்தை பெரியாருக்கு மரியாதையே இருந்திருக்க கூடாது. மாறாக அவர் இன்றளவும் மதிக்கப்படுகிறார். அதே நேரம் இன்று பிள்ளையார் குறித்த பிறப்பு கதைகளை விட இந்து முன்னணி நடத்தும் பிள்ளையார் ஊர்வலங்கள் ஏற்படும் வன்முறை குறித்து மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த வருடம் (2019) திரூப்பூரில் ஒரு பனியன் கம்பெனி ஒரு இந்து முன்னணிக் குழுவிற்கு பணம் கொடுத்துவிட்டு தங்களுக்கு கொடுக்கவில்லை என மற்றொரு இந்து முன்னணிக் குழு அந்தப் பனியன் கம்பெனியை தாக்கியிருக்கிறது. பிள்ளையார் சாதாரண பக்தர்களின் கடவுளாக இருந்து விட்டு போகட்டும். ஆனால் இந்துமதவெறியர்களின் கையில் அவர் கலவரத்திற்கான கடவுளாக இருப்பதுதான் பிரச்சினை. இதை பிள்ளையார் தீர்க்கமாட்டார். நாம்தான் தீர்க்க வேண்டும்.

♦ ♦ ♦

கேள்வி : //நாம் தமிழர் கட்சி பற்றி எதிர்மறை பதில்கள் அர்த்தமற்றது. எந்த கட்சி நேர்மையா வென்றது? உண்மையா நிர்வாகம் செய்யுது? அடுத்த தலைமுறை நல்லா வாழ ஒழுக்கததை கடத்துர கட்சிதான் எது? பதில் சொல்ல வேண்டும்.//

– மாதவன்

ன்புள்ள மாதவன்,

அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அரசு என்பது நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், போலீசு இராணுவம், நீதித்துறை – சிறை போன்ற உறுப்புகளுடன் செயல்படுகிறது. இதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்களால் ‘தெரிவு’ செய்யப்படும் உறுப்பையே அரசாங்கம் என்று அழைக்கிறோம். இந்த இலக்கணப்படி அரசாங்கம் என்பது அதிகாரம் குறைந்த உறுப்பு ஆகும். கட்சிகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து அரசாங்கம் அமைக்கின்றனர்.

ஆனால் அரசின் மற்ற உறுப்புகள் அனைத்தும் நிலையாக இருக்கின்றன. இதனால்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும்போது மாநிலங்களில் அரசுகள் வழக்கம் போலவே செயல்படுகின்றன. அப்போது தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் இல்லை.

அரசாங்கத்தால் சட்டத்தை இயற்ற மட்டும் முடியும். அரசின் அதிகார வர்க்கம்தான் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் படைத்தது. எனவே நாம் தமிழர் என்று மட்டுமல்ல மற்ற கட்சிகளும் அரசாங்கத்தை கைப்பற்றுவது – வெல்வதை மட்டுமே பேச முடியும். சீமான் முதல்வரானால் ஒரு கலெக்டரையோ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையோ நியமனம் செய்ய முடியாது. அவர்களது தயவு இன்றி ஆட்சியும் செய்ய முடியாது. எனவே நிர்வாகம், ஊழல், அதிகார முறைகேடு அனைத்தும் அரசு எனும் ஒட்டுமொத்த அமைப்பில் இருக்கும் போது நீங்கள் ஒரு கட்சியாக அரசாங்கத்தை மட்டும் மாற்றி என்ன பயன்? ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டால் அதை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தியே தீரவேண்டும். அப்போது சீமானோ மற்றவர்களோ முதல்வர்களாக இருந்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்.

உலகமய காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வராமலேயே பல ஒப்பந்தங்கள் அமலுக்கு வருகின்றன. மாநில அரசாங்கங்களோ தமது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து வருகின்றன. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த அரசு எந்திரம் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது நாம் இந்த அரசு அமைப்பை எப்படி மாற்றுவது என்று யோசிப்பதே சரியானது. யோசித்துப் பாருங்கள்! நன்றி

 

♦ ♦ ♦

கேள்வி : //1. பா.ஜ.க தலைமையிலான அரசு தற்போது பாசிசத்தை விரைவாக அமுல்படுத்தி வருவதை அறியமுடிகிறது. இதனை எதிர்கொள்ள நாடு தழுவிய அளவில் அமைப்பு ரீதியாக திரண்ட தொழிலாளர்கள் போராட்டமோ, விவசாயிகள் போராட்டமோ நடைபெறுவதாக தெரியவில்லை. எப்படி பாசிசத்தினை எதிர்கொள்வது? பலமில்லாத இச்சூழ்நிலையின் விளைவாக ஹிட்லரின் வழியில் நாட்டின் போக்கு மாறிவிட்டால் கம்யூனிச இயக்கங்களால் என்ன செய்ய முடியும்?

2. தமிழகத்தில் இருந்து தான் பெரும்பாலும் பாசிசத்திற்கு எதிரான அமைப்பு ரீதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் களத்தில் செயல்படும் மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், பூவுலகின் நண்பர்கள், த.பெ.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகள் இணைந்து கூட்டாக செயல்பட்டால் ஒரு வலுவான பாசிச எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமே, அதற்காக இந்த இயக்கங்கள் ஒண்றினைவதில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?//

– சுரேஷ்

ன்புள்ள சுரேஷ்,

பொருளாதார ரீதியான நெருக்கடி நாட்டினை கவ்விக் கொண்டிருக்கும் போது பாஜக அரசாங்கத்தின் பாசிசப் போக்கு ஒவ்வொரு துறையிலும் வந்து கொண்டிருக்கிறது. இதை காஷ்மீர் விவகாரத்திலேயே பார்த்தோம். பாஜக-வை எதிர்ப்போரை எந்த வகையிலாவது முடக்குவதை திட்டமிட்டே மத்திய அரசு செய்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் தொழிலாளர் அமைப்புகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அப்படி இணையவில்லை என்றால் பாசிசத்தின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற இங்கு யாருமே எஞ்சியிருக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் ஒத்த கருத்துள்ள அமைப்புக்களை மக்கள் அதிகாரம் திரட்டி வருவதாகவே நம்புகிறோம். அது அரசியல் ரீதியில் பலமுள்ள குரலாக மாற வேண்டும். மக்கள் அதிகாரம் ஒன்றிணைக்கும் போராட்டங்களில் மாற்று அமைப்புகள், கட்சிகளைச் சார்ந்தோர் அவ்வப்போது பங்கேற்கின்றனர். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த ஒற்றுமை வளரும் போதே அந்தக் குரலுக்கு வலு அதிகரிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி.

♦ ♦ ♦

கேள்வி : //சீமான் பற்றிய உங்கள் பார்வை சிரிப்பை வரவைக்கிறது. ஆதிக்க சாதிதான் தமிழன் என்று குறிப்பிட்டு இதுவரை பேசியது இல்லை ஆதி தமிழனே பறையன் தான்டா என்று பல முறை பேசியுள்ளார், அப்பறம் சீமான் பதவியில் அமர்ந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியும் முடியாது சொல்ல முடியாது.

ஏன்னா நம்மளுடைய நாடு ஜனநாயக நாடு அதிகாரத்துடன் சரியான முறையில் காய் நகர்த்தினால் எதுவுமே சாத்தியமே, வேறு எந்த கட்சிக்கு வாக்கு செலுத்துவது அனைத்து கட்சியையும் விமர்சனம் சொல்லுறிங்க அப்ப யாருக்கு வாக்கு செலுத்துவது உங்கள் பார்வையில் ? (குறிப்பு : நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் அல்ல . I’m Communist (SFI)). பதிலுக்காக காத்திருக்கிறேன்.//

– கணேஷ்குமார்

ன்புள்ள கணேஷ்குமார்,

தமிழகத்தின் மண் வளம், கனிம வளம், நீர் வளம், காட்டு வளம், மலை வளம், கால்நடை வளம், விவசாய வளம் அனைத்தையும் நான் ஆட்சிக்கு வந்தால் காப்பாற்றுவேன் என்று சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வருவதாகவே வைத்துக் கொள்வோம். இவ்வளங்களை அவர் எப்படிக் காப்பாற்றுவார்? அதற்கு அவரிடம் என்ன அதிகாரம் இருக்கிறது? தாதுமணல் கொள்ளையராக வைகுண்டராசனை சிறையில் அடைப்பாரா? உண்மையில் வைகுண்டராசன் காலில் தம்பதி சகிதமாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர் அவர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவு போட்டால்

Seeman poster

சீமான் மாநில முதல்வர் என்ற முறையில் அதை அமல்படுத்த வேண்டும். முடியாது என்றால் பதவி விலக வேண்டும். அதானிக்கு கொடுக்கப்பட்ட மீத்தேன் உரிமையை அவரால் ரத்து செய்ய முடியாது. மீறினால் அவரது அரசாங்கம் நீக்கப்படும். இல்லையேல் அவரே பதவி விலக வேண்டும். இப்படி நிர்வாக ரீதியாக அவர் தமிழகத்தின் எந்த வளத்தையும் காப்பாற்ற முடியாது போவதால் சாதிக்கொரு தலைவரை தெரிவு செய்து அவர்களது பிறந்த இறந்த தினத்தன்று பிரம்மாண்டமாக சுவரொட்டி போட்டு வீரத்தமிழன், மறத் தமிழன், என்று அடைமொழியுடன் விளம்பரம் செய்கிறது

நாம் தமிழர் கட்சி. சீமான் சாதிகளிக்கிடையில் நல்லுறவு பேண நினைக்கிறார். பறையர் இன மக்களை ஆதித் தமிழர்கள் என்றால் தேவர் ஜெயந்தி அன்று தேவர் இன மக்களை வீரத் தமிழர் என்பார். சாதிகள் என்பதே உயர்வு தாழ்வு கற்பித்து அசமத்துவத்தை பேணும் அமைப்பு எனும் போது சாதிகளுக்கிடையில் நல்லுறவு வருவது எங்கனம்? ஆதிக்க சாதி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது அடக்கப்படும் சாதி மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது எப்படி? அதற்கு நாம் தமிழரிடம் என்ன திட்டம் உள்ளது? வாக்கு வங்கி அரசியல் படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிக்க சாதி மக்களை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் அதற்கு நாம் தமிழரும் விதி விலக்கு அல்ல.

நாம் தமிழர் என்று அல்ல எல்லா வாக்கு வங்கி கட்சிகளுக்கும் மேற்கண்ட சிக்கல் பொருந்தும். அதனால்தான் நாம் வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த அமைப்பு முறையை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது அங்குள்ள மக்கள் அணிதிரண்டு ஒற்றுமையுடன் போராடுவதால் மட்டுமே சாத்தியம். வேறு எதுவும், எதையும் செய்து விடமுடியாது. சட்டமும், நீதிமன்றமும், பாராளுமன்றமும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் போது மட்டுமே பின்வாங்கும். இதை ஜல்லிக்கட்டிலிருந்து, தூத்துக்குடி வரை பார்த்து விட்டோம். இப்படி கொஞ்சம் அசைபோட்டு பாருங்கள். நன்றி

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

 

2 மறுமொழிகள்

  1. வினவு கேள்வி பதில் பகுதி சிறப்பாக இருக்கிறது. அதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு வினவும் அதை செழுமைப்படுத்த முயற்சிப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. சலிக்காமல் பதில் கூற கோருகிறேன்.
    வாழ்த்துக்கள்..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க