Thursday, May 30, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

-

ந்து மதம் என்பதில் உள்ள கடவுகளின் எண்ணிக்கை ”எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது,” என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டு இருப்பதும், அத்தனைக் கடவுளுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு – முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை. அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பொருமானமுள்ள நேரங்களும், பலகோடி பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்ககூடிய காரியமல்ல.

பெரியார்இக்கடவுள்களின் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புகொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.”இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், பிள்ளையார் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.”

நிற்க. இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தாங்களுடைய எந்த காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புகொள்ள கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.

ஏனெனில், கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதற் கடவுளைப்பற்றி தெரிந்துகொள்வதுதான் நன்மையானதாகும், தவிர, முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி என்பதாக தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம்.

ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுளின் கதைகளைப் பற்றி விளக்கப்போவதில் முதல் கடவுள்பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால், “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்”. அன்றியும் சமீபத்தில் அக்கடவுளில் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்.

பிள்ளையார் பிறப்பு

அழுக்கு விநாயகர் சதுர்த்தி
படம் : நன்றி பரிமளராசன் (பேஸ்புக்கில்)

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழேபோட்டதும் அது ஆண் குழந்தையாகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து – “நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருசனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக்கொண்டு இருப்பதால் உள்ளேப் போகக்கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கும் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்கு போனதாகவும், பார்வதி சிவனைப்பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கிய குழந்தை வெட்டுண்டதற்காக புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்தது, பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது, இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் – பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டு கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்று இருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாக புகுந்து அக்கருசிசுவின் தலையை வெட்டிவிட்டதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகிறது, இது தக்காயகபரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறதாம்.

இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப்பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளை பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

பிள்ளையார் விசர்ஜன்
பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படி பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்ததால், மற்றக் கடவுள்கள் சங்கதிபற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க.

ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்த தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளை பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புகொள்ள முடியும்? ஆகவே, இந்த கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. இதனை பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் ”கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும்  “அது ஒரு சக்தி” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களை கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம், சிதம்பரம் கோயிலில் யானை முகம்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாக செய்திருப்பதுடன், இந்த காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது, பல ஆண் – பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகிறார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் குறியில் புகுத்தி அப்பெண்ணை தூக்கிகொண்டு இருப்பது போலவும், அந்த பெண் காலை அகட்டியவாறே அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்ற ஒரு கடவுள் யுத்தம் செய்ததாகவும்,அந்த யுத்தத்தில் அசுரர்களை எல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவுக்கு அசுரர்கள் (“வல்லபை”) என்னும் அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டு வருவது போல பல லட்ச்சக்கணக்கான அசுரர்கள் வந்துகொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், தனது தும்பிக்கையை அந்த அசுரப் பெண்ணின் பெண்குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் அப்படியே ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாக சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரி காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவைகளை எல்லாம் கடவுள் என்று சொல்லும் ”ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

”எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதிவிட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினம் அவ்வெழுத்துகொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா?அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாக தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்வதனால், இவைகளுக்கு தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்காமல் நின்றுவிட்டதா? யோசித்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுளுக்கு ஆபத்து” என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றை எல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் ஆராய்ச்சி குறைவதில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாச சங்கங்களை எல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுள்களையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.

இனி அடுத்தமுறை அடுத்த கடவுளை பற்றி கவனிப்போம்.

–    தந்தை பெரியார்.
(குடியரசு – கட்டுரை – 26.08.1928)

 1. இந்த கட்டுரையை சற்று முன்பே விடுமுறை நாளான அதாவது விநாயக சதுர்த்திக்கு முன்பே வெளியிட்டிருந்தால் பக்தகோடிகளிடம் நன்றாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்திருக்கலாம்.

 2. Religion / Worship is based on faith; it’s stupidity to expect proof for this.

  FYI – we have plenty of stories / incidents that are hard to believe in all religions and ancient mythologies. Some followers believe in that; we need to be decent enough to leave them.

  Criticizing just Hinduism, its religious stories and worship methods will not help anyone. It’s proven that after Dravidar Kazhagam’s active anti-hindu propaganda, the belief and followership of Hinduism have increased.

  An interesting fact: Around the world doctors, and astronomers believe in God / Supreme Power more than others.

  • //Religion / Worship is based on faith; it’s stupidity to expect proof for this…//

   I totally agree with you ! Since baseless faith itself a stupidity, expecting proof for such stupidity is stupid!

 3. முதற்கடவுளான விநாயகனுக்கு தந்தை பெரியார் தரும் முக்கியத்துவம் மெச்சத்தகுந்தது.

 4. ரொம்ப நல்லா இருக்கு சாமி….
  பெத்த அப்பன் சிவனுக்கே தன் பிள்ளை யார் என்று தெரியாமல்
  தலயை வெட்டி…..

  • திராவிட மக்களின் வழிபாட்டு தெய்வங்களின் வரலாறுகளை புராண,ஆபாச குப்பை கொண்டு மறைத்துவிட்டனர், சுயனலமிகளான பார்ப்பனர்கள்! புத்தரின் 2000 அம்சங்களில் தலையாயது யானை பிறவியெடுத்த புத்தரின் அவதாரம்! புத்தரின் சிஷ்ய கோடிகளாக சேர்ந்த பார்ப்பன சிந்தனையாளர்களே, பிழைப்பிற்காக இத்தகைய கதைகளை(புராணங்களை) இட்டுக்கட்டினர்! புத்தர் உபயொகித்த,சாதாரண மக்கள் புழங்கிய, பிராகிருதத்தை விடுத்து சமஷக்ருதத்தை புகுத்தினர்! பின்னர் சமயம் பார்த்து பவுத்த அரசுகளை வீழ்த்தி பார்ப்பன ஆதரவு அரசுகளை அமைத்த போது, பவுத்த வேடமிட்ட பார்ப்பன பூசாரிகள் வினாயகனையும், விஷ்ணுவையும் வழிபட ஆரம்பித்தனர்! சக வம்சத்து அரசர்கள் தாஙகள் பவுத்தர்கள் என்று கூறிக்கொண்டனர்! மீண்டும் பார்ப்பன மதம் தலையெடுத்தவுடன் விஷ்ணு கோத்திரத்துடன் வேத மதத்தவர் ஆயினர்! இப்போதும் வைணவர்கள் மற்ற சைவ வேத பிரமாணங்களை ஏற்றுக்கொள்வதில்லை! அவ்வப்போது சாதி மறுப்பு புரட்சியும் செய்திருக்கிரார்கள்!

   மேற்கொண்டு, அய்யா வெங்கடேசன் அவர்கள் விளக்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்!

 5. முதலில் பிள்ளையார் என்பது ஒரு கிராம தேவதையாக நம் முன்னோர் வழிபாட்டு வந்தனர். ஆனைமுகம், மனித உடல் கொண்ட அந்த கடவுள் சிவனின் பிள்ளையானது பின்னர் வந்த ஆரியர் உண்டாக்கிய கதை தான்.

  முருகன் என்ற குறவர் கடவுளை ஸ்கந்தன் என்று சிவனின் இந்திரியத்தில் இருந்து பிறந்த குழந்தை என்று மாற்றி கதை உருவாக்கியவர்களும் அவர்களே.

  திருப்பதி மலை மேல் இருப்பதும் அந்த ஊர் மக்கள் கும்பிட்ட வன தேவதை தான். ஆனால் அதனை வெங்கடேச பெருமாளாக மாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். இன்றும் திருப்பதி சாமியின் பின்புறம் பார்த்தால் தெரியும், நீண்ட சடை இருப்பது தெரியும். அது பெண் தெய்வத்தின் சிலை தான்.

  அய்யப்பன் கடவுள் கூட உள்ளூர் மலை மக்கள் வழிபட்ட கடவுள் தான். அதற்கு சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் (ஆணுக்கும், பெண் வடிவம் தரித்த ஆணுக்கும்) பிறந்த குழந்தை என்று கதை கட்டி அங்கும் கல்லா கட்டினார்கள்.

  நம் முன்னோர்கள் எந்த வித தடையும் என்றி நேரடியாக கடவுளை தொட்டு வணங்கிய காலம் மாறி இன்று பார்ப்பனர்கள் மட்டும் தொட்டு வணங்கவும், நான் தொலைவில் நின்று பார்த்து விட்டு திரும்பும் அவலம் நடைபெறுகிறது.

 6. கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதையும், பணம் சம்பாதிப்பதையும், மக்களுக்குள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதையும் மறுக்கிறேன்.

  அதே சமயம் அப்பாவி ஏழை மக்களின் நம்பிக்கைகளை கிண்டல் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எல்லா மதங்களிலும் சில நம்ப முடியாத கதைகள் உண்டு. அதை என்னை போன்றவர்கள் கதையாக எடுத்து கொண்டு விட்டு விடுவோம். சிலர் அதை வரலாறு என்று நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை நான் இகழ மாட்டேன்.

 7. நடைமுறையில் இந்தப் புராணக் கதைகளுக்கும் பிள்ளையார் வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தக் கதைகளால் ஈர்க்கப்பட்டு ஒருவர் பிள்ளையார் பக்தராக இருக்கிறார் என்று கூற முடியாது. மறுபுறம், இக்கதைகள் தெரியாத அறியாமையினால்தான் இவ்வாறு இருக்கிறார் என்றும் கூறமுடியாது. பெருவாரியான பிள்ளையார் பக்தர்களுக்கு இக்கதைகள் தெரிந்திருக்கும் என்றும், தெரிந்தும் பக்தராக இருக்கிறார்கள் என்றுதான் நான் கணிக்கிறேன். அவர்கள் இக்கதைகளை பெரிதாக சட்டை செய்வதில்லை. நடைமுறையில், பிள்ளையார் ஈசன்-உமையின் பிள்ளை, முருகனுக்கு அண்ணன், அவருக்கு ஆனை முகம் என்ற அளவில் புராணம் சுருக்கப்பட்டு விடுகிறது. பிள்ளையார் வழிபாடு பரவலாக இருக்க காரணம் வினைகள் தீர்ப்பவர், எடுத்த காரியங்களில் வெற்றி தருபவர், முழு முதல் கடவுள், எளிய வழிபாட்டின் மூலம் அடையக் கூடியவர் போன்ற குணாதிசியங்களால் கட்டப்பட்ட அவரது பிம்பம்தான்தானே தவிர புராணக் கதைகள் அல்ல. ஆகவே, பெரியார் இக்கட்டுரை எழுதி சுமார் நூறாண்டுகள் ஆன பின்பும், செருப்பு மாலை, சிலை உடைப்பு போன்ற மரியாதைகள் செய்த பின்னும் பிள்ளையார் எல்லா தெருக்களிலும் அமர்ந்துகொண்டு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். சமீப காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார் கோவில்களின் எண்ணிக்கை அதிகமானதாகத்தான் உணர்கிறேன். அவரது செல்வாக்கு கூடுவதாகக் தான் தோன்றுகிறது. எனவே, பிள்ளையார் எதிர்ப்பாளர்கள் இக்கதைகளை மறுபிரசுரம் செய்து கொண்டிருப்பது, தாங்கள் பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாய் பரவசம் தரலாமே தவிர, பிள்ளையார் செல்வாக்கை குறைப்பதில் உதவாது என்று எனக்குத் தோன்றுகிறது. நிதர்சனம் அப்படித்தான் உள்ளதாக எண்ணுகிறேன்.

  பிள்ளையார் வழிபாட்டை என் மனதிற்குகந்தது என்ற வகையிலும், தனிமனித உரிமை என்ற வகையிலும் பூரணமாக ஆதரிக்கும் வேளையில், வேறொரு விஷயம் பற்றியும் குறிப்பிட வேண்டும். நீண்ட காலத்திற்கு பிறகு பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் தமிழகத்தில் இருக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. சிறுவயதில், மண் பிள்ளையார், வெள்ளருக்கு மாலை, குண்டுமணி கண்கள், வீட்டில் செய்த குடை, கொழுக்கட்டை, சுண்டல், தெருவோரப் பிள்ளையார் கோவிலில் பத்து சுத்து, மறுநாள் குளத்தில் கரைத்து விட்டு அத்தோடு பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு கும்புடு என்று இருந்த காலம் ஏக்கமாக நினைவுக்கு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாய், பந்தல் போட்டு பெரிய பிள்ளையார்கள் முளைத்த காலம்கூட நினைவில் உள்ளது. இப்போது பார்த்தால், எண்ணிக்கையும், அலங்காரமும் அளவுக்கு மீறி இருப்பதாக நினைக்கிறேன். இதைக் கூட அவரவர் விருப்பம் என்ற வகையில் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், லாரி, லாரியாக ஏகப்பட்ட பிள்ளையார் ஊர்வலங்களும், அவற்றில் ஹோலிப் பொடி பூசி, தலையில் ரிப்பன் கட்டி, குத்தாட்டம், கோஷம் என அடிக்கும் கொட்டமும் பயம் தருகின்றன. தீபாவளி போல வெறும் கொண்டாட்டமாய் இருந்தால் பரவாயில்லை. இவற்றை பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

  இந்த நவீன வெறி கலந்த ஊர்வலங்கள் எதில் கொண்டுபோய் நிறுத்துமோ என பீதி பிறக்கிறது. பிள்ளையாரை முன்வைத்து மத வெறி கிளப்பி, அவரை மத அரசியல் ரீதியாக பயன்படுத்த முனைகின்றனர் என்ற கருத்தில் நியாயம் இருப்பதாக தோன்றுகிறது. பிள்ளையார்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறாயின், என்னளவில் திருசெங்காட்டங்குடி, திருநாரையூர் பதிகங்கள், சுண்டல், கொழுக்கட்டை என பூரண அமைதியோடு பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட முடியும். மறுபுறம், பிள்ளையார் பக்தரல்லாதோரும் விடுமுறை நாள் என்ற வகையில் நிம்மதியாக அந்நாளை கொண்டாட ஏதுவாகும்.

  • Venkatesan,
   //இந்த நவீன வெறி கலந்த ஊர்வலங்கள் எதில் கொண்டுபோய் நிறுத்துமோ என பீதி பிறக்கிறது.பிள்ளையாரை முன்வைத்து மத வெறி கிளப்பி, அவரை மத அரசியல் ரீதியாக பயன்படுத்த முனைகின்றனர் என்ற கருத்தில் நியாயம் இருப்பதாக தோன்றுகிறது.//

   விநாயகர் ஊர்வலம் மத வெறி பரப்பி கலவரம் செய்யவே என்பது அனைவருக்கும் திரிந்த ஒன்றாயிற்று. சொல்லப்போனால், பார்ப்பனர்களை தவிர விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்துக்களே வெறுக்கின்றனர். இந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டு கலவரம் செய்பவர்கள், விநாயகனை கரைக்க சென்று பலியானவர்கள்,கைது செய்யப்பட்டவர்கள் – இவர்களில் ஒரு பார்ப்பனனை கூட காண முடியாது.

   மக்களே வெறுத்து போய் இவனுங்கள செருப்பால் அடிக்கும் காலம் விரைவில் வரும்

   • Ashvin, அடுத்தடுத்த தொடர்களில் எவ்வளவு முரண்.
    ஐயம்மார் வெறுப்பு உங்க கண்ணை மறைப்பது தெரிகிறதா?

    // பார்ப்பனர்களை தவிர விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்துக்களே வெறுக்கின்றனர். //

    // இந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டு கலவரம் செய்பவர்கள், விநாயகனை கரைக்க சென்று பலியானவர்கள்,கைது செய்யப்பட்டவர்கள் – இவர்களில் ஒரு பார்ப்பனனை கூட காண முடியாது. //

  • நீஙக சொல்லவருவது…
   ஒரு இனம் தூங்கும் வரை இப்படித்தான்.
   .யார் எது சொன்னாலும் காதில் வாங்காமல்
   பிள்ளையாரே கதி என்று தூங்குவோம்..சரிதானே?

 8. வெங்கடேசன் அவர்களே! பிள்ளையார் அரசியலுக்காகவே ஊர்வலம் வருகிறார்! முக்கியமாக மராட்டியத்தில் ஆங்கிலேயரை எதிர்க்க திலகர் கையாண்ட உத்தி இது! அவரின் வழி வந்த ஆர் எச் எச் சும் அதே பாணியில் அரசியல் செய்கிறது! தமிழ்நாட்டில் சைவமும், வைணவமும் செர்ந்து சமத்துவம் பேணிய சமண, புத்த மதங்களை ஓரங்கட்டின! இந்தியர்களுக்கு, குறிப்பாக திராவிட இனத்தவருக்கு இருந்த தாழ்வு மனத்தினால், மானம் ரோஷம் கெட்டு , கற்றல்- கேட்டல் ஒழித்து ஆரிய கூத்திற்கு அடிமையாய்விட்டனர்! பிரிந்துபட்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, தன் மதியை மொத்தமாக இழந்தனர் ! இன்னிலையில் விடிவெள்ளீயாக வள்ளலாறும், வ வு சியும், பெரியாரும் தோன்றினாலும், மதநம்பிக்கை என்ற காமாலை கண்களால் தெளிவு பெற முடியாமற்போனது! கயவர்கள் கள்வெறி கொண்டாடினாலும்,நம்மவர் படிப்பறிவின்மையால் இன்னும் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர்!

  எனது பிராமண நண்பர் பல நாட் களுக்கு முன் சொன்னது: பார்பானாயிருந்தாலும் தனியார் பார்பன கம்பெனியில் 12 மணி வேலை பெண்டுநிமிர்த்துகிறதாம் ! கொடி பிடிக்கவும் முடியாது, கோஷம் போடவும் முடியாத அடிமை வாழ்க்கை என்றார்! சாதியம்,நவீன கொத்தடிமைகளை உருவாக்குகிறது!
  தமிழ்னாட்டு பார்பனர்களை தாழ்ந்தவர்களாகவே, ஏனைய கர்னாடக, தெலுங்கு பார்ப்பனர்கள் கருதுகிறார்கள்! சங்கர மட வரலாறு (கும்பகோணம்,காஞ்சி) காண்க.

 9. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழைப் படித்தால் எவனும் உருப்படமாட்டான் என்றும் சொன்னவர் பெரியார் ________ ஈ.வெ.ராமசாமி நாயக்கர். தமிழை ஒரு நீச பாஷை என்றும் வசைபாடியவர் இவர். அப்போதைய தினமணி பத்திரிகையின் ஆசிரியர் மிகவும் வேதனையுடன் இந்த செய்தியை வெளியிட்டார். பெரியாரின் இந்த கருத்தை அப்போதைய பத்திரிக்கையாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் எதிர்க்கவில்லையே என்று வேதனைப் பட்டார்._____________இது போன்று எத்தனயோ கருத்துக்களை தமிழனின் மீது வாரி இறைத்தவர். இவரின் மீது பாசம் கொண்டு இவரது கருத்துக்களை வெளியிட்டு உள்ளீர்கள். யாராவது இதனை படித்து மகிழ்வார்கள்! _____________

 10. மின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதம்

  நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

  “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

  “நிச்சயமாக ஐயா..”

  “கடவுள் நல்லவரா?”

  “ஆம் ஐயா.”

  “கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

  “ஆம்.”

  “எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

  (மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

  “உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

  “ஆம் ஐயா..”

  “சாத்தா‎ன் நல்லவரா?”

  “‏இல்லை.”

  “எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

  “கடவுளிடமிருந்துதா‎ன்.”

  “சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

  “ஆம்.”

  “அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

  (மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

  “இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

  ……

  “அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

  “ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

  “ஆம் ஐயா..”

  “நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று… ‏

 11. ஏன் அப்பு இப்படி வாய் கிழிய பேசின உங்க பெரியார், ஏன் மற்ற மதங்களை பற்றி பேசவில்லை. பயமா? . இப்போ இருக்கிற தி க அன்பர்களும் இந்து சமயத்தை மட்டும் விமர்சிக்கிறார்களே.. மற்ற மதங்களை விமர்சித்தால் அவர்களின் தலை பறிபோய்விடும் என்கிற பயமா? இதற்கு பெயர் என்ன தெரியுமா? ………. த்தூ…..

  • இந்து கடவுள்கள் எல்லாமே பெரும் குழப்பத்தை உண்டாக்குபவைகளே எல்லாமே மூட நம்பிக்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க