நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்

பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!

ன்றைய இந்தியச் சமூகத்தில் மத உணர்வு ஆழமாக வேர் விட்டுள்ளது. தனிப்பட்டவர்களின் உள் விவகாரமாக மட்டுமின்றி சமூகத்தின் விவகாரமாகவும் மதம் மாறிவிட்டது. மத உணர்வு, வகுப்பு வாதமாக மாற்றப்பட்டு வருகிறது.

வழிபாட்டுத் தலங்களிலும் வீடுகளிலும் மட்டுமே இருக்க வேண்டிய மதம் வீதிக்கு வந்துவிட்டது. சமய விழாக்கள், ஊர்வல அரசியலாக மாறிவிட்டன. கொழுக்கட்டையும் நோன்புக் கஞ்சியும் மத வட்டத்தைத் தாண்டி அரசியலுக்குள் நுழைந்து விட்டன……

– நூலின் முன்னுரையில் ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

மிழ்நாட்டில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள மிக பிள்ளையார் கோவிலாகப் பிள்ளையார் பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலை தொ.பரமசிவம் (1997: 46-48) கருதுகிறார்.

வணிகர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் பிள்ளையார் பரவியதாகக் கூறும் அவர் பிள்ளையார்பட்டிக் சாத்தினரால் உருவாக்கப்பட்டதைச் சான்றாகக் காட்டுகிறார். பிள்ளையாரின் தொடக்க கால உருவம் இரண்டு கை உடையதாகவும், பூணூல், அணிகலன், ஆயுதங்கள் இல்லாமலும் காட்சியளித்தது. காலப்போக்கில் பிள்ளையாருக்குப் பூணூலும் அணிகலனும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிள்ளையார்பட்டி கோவிலிலுள்ள பிள்ளையார் உருவம் இரண்டு கைகளை மட்டும் உடையதாயும் பூணூல், அணிகலன்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றிக் காட்சியளிப்பதாலும் இதுவே தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பிள்ளையார் உருவம் என்று நிறுவுகிறார். இதன் பின்னரே தாமரை மலரில் வீற்றிருப்பவராகவும் நான்கு கரங்களையுடையவராகவும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் போன்றவற்றை ஏந்தியவராகவும் உருப்பெற்றார்.

எந்த இடத்திலும் எழுந்தருளச் செய்து எளிய முறையில் அனைவரும் வணங்கும் பிள்ளையாருக்கு, பிள்ளையார் சதுர்த்தி அல்லது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆண்டுதோரும் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தென்மாவட்டங்களில் வீடுகளில் பிள்ளையார் உருவத்தின் முன் மோதகம், சுண்டல் கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்றவற்றைப் படைத்து வழிபாடு செய்வதுடன் பிள்ளையார் சதுர்த்தி நிறைவடைகிறது. பிள்ளையாரின் உருவத்தை நீர் நிலையில் கொண்டு போடும் வழக்கம் தென்மாவட்டங்களில் பாவலாகக் கிடையாது. வட மாவட்டங்களில் கோவில் அல்லது ஊர்ப் பொது நீர் நிலையில் பிள்ளையாரைப் போடும் வழக்கம் உண்டு. ஆயினும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலையில் பிள்ளையார் உருவத்தைப் போடும் வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாக இல்லாத ஒன்று.

1981 பிப்ரவரி 19 இல் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 180 தேவேந்திர குல வேளாளர் குடும்பங்கள் இசுலாமியச் சமுதாயத்தைத் தழுவின. அதே ஆண்டு மே 23 இல் மேலும் 27 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. இதன் தொடர்ச்சியாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் தேவேந்திர குல வேளாளர்கள் சிறுசிறு குழுக்களாக இசுலாமியச் சமயத்தைத் தழுவினர். இதனை யொட்டி “மறு மதமாற்றம்’, மதமாற்றத்திற்கு எதிரான “தாய்மதம் திரும்பச் செய்தல்’ என்ற குரல் இந்து மத அடிப்படைவாதிகளால் எழுப்பப்பட்டது. வடபுலத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் துறவியர்கள் மீனாட்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதனையொட்டி ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் இந்து மத அடிப்படைவாத இயக்கம் ஒன்று தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இதன் பின்னர் 01.03.1982 முதல் 15.03.1982 வரை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்ற கடற்கரைக் கிராமத்திலும் வேறு பகுதிகளிலும் மதக்கலவரங்கள் உருவாயின.

இக்கலவரத்தை உருவாக்குவதில் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்தனர். 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை என்ற ஊரில் உள்ள போக்குவரத்துத் தீவில், பிள்ளையார் சிலை ஒன்றைத் திடீரென்று நிறுவினர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையால் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது என்ற வதந்தியைத் திட்டமிட்டு உருவாக்கினர். இதனால் பதட்ட நிலை உருவானது. இவ்வாறு குமரி மாவட்ட மதக் கலவரத்திற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

1983-84 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை என்ற பெயரில் இந்துமத அடிப்படைவாதம் மிக எளிய சாமானியர்களைச் சென்றடைந்தது. ஞானாரதம், புனித கங்கை தீர்த்தம் அடங்கிய ரதம், சக்தி ரதம் என்ற பெயர்களில் ரதயாத்திரைகள் நடந்தன.

1989 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இடித்து அங்கு இராமர் கோவில் கட்டப் போவதாக இந்துமத இயக்கங்கள் அறிவித்தன. இதன் அடிப்படையில் இராமர் கோவில் கட்டுவதற்கான செங்கற்களை இந்தியா முழுவதிலுமிருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லும் செங்கல் ஊர்வலம் 1984 இல் நிகழ்ந்தது. இவ் ஊர்வலங்கள் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு பிள்ளையார் ஊர்வலத்தை இந்து முன்னணியினர் உருவாக்கி இன்று வரை தொடர்கின்றனர்.

சமய விழாக்களும் அவை தொடர்பான ஊர்வலங்களும் தமிழ்நாட்டிற்குப் புதியனவல்ல. சைவ, வைணவ கோவில் விழாக்களை ஒட்டியும் நாட்டார் கோவில் விழாக்களை ஒட்டியும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் இச்சமயக் கடவுளர்கள் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி இவ்விழாக்களின் முக்கிய அம்சமாகும்.

– நூலின் பக்க எண் 56-58-ல் ஆசிரியர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்.

இத்தகைய ஊர்வலங்களிலிருந்து இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எவ்வாறு வேறுபட்டது என்பதை பல்வேறு சான்றாதாரங்களிலிருந்து விளக்குகிறார் நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

நூலின் தலைப்பில் உள்ளபடி வெறுமனே பிள்ளையார் என்ற வரம்போடு இந்நூல் நின்றுவிட வில்லை. சமபந்தி – ஓர் எதிர்ப்பண்பாடு; பூசாரிகளுக்கு வலை விரிக்கும் இந்துத்துவ அரசியல்; சாதிய முரண்பாடுகளும் மதமாற்றமும்; தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் என்பது உள்ளிட்டு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி பல்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இடம்பெற்றிருக்கிறது.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துகொண்டு பா.ஜ.க. பார்ப்பன பாசிசக்கும்பல் நாட்டையே காவிமயமாக்கத்துடிக்கும் இன்றைய காலகட்டத்தில் வரலாற்றாசிரியர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியனின் இந்நூல் ஜனநாயக சக்திகளுக்கும், வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் பயன்படும் அரிய நூலாகும்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: பிள்ளையார் அரசியல்
(மத அடிப்படை வாதம் பற்றிய கட்டுரைகள்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
# 16, (142) ஜானி ஜான் கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 014.
பேச: 044 – 28482441, 42155309.
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

பக்கங்கள்: 204
விலை: ரூ.75.00 (மலிவு விலை பதிப்பு)

இணையத்தில் வாங்க: மெரினா புக்ஸ் (இங்கு ஆறு டாலர் என்று போட்டிருக்கிறார்கள்)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகலாயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க