Saturday, October 23, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் ஆக்கிரமிப்பு விநாயகர்கள் !

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் ஆக்கிரமிப்பு விநாயகர்கள் !

-

சென்னையில் 2,700 சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி, பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார் என்கிறது இன்றைய செய்தி. 2,700 இடங்களில் ஆகப்பெரும்பாலானவை சாலை ஆக்கிரமிப்புகள். ஆண்டுதோறும் இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. இவை அனைத்தையும் ஆசீர்வதித்து அனுமதியும் வழங்குகிறது போலீசு.

இது ஆடி மாத கோயில் திருவிழாக்களைப் போல மத நம்பிக்கை சார்ந்த விசயம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி என்பது மத நம்பிக்கை சார்ந்த விழாவாக இருக்கலாம். ஆனால், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றோர் நடத்தும் விநாயகர் ஊர்வலமும், அதற்காக நகரம் முழுவதும் நிறுவப்படும் ஆக்கிரமிப்பு விநாயகர்களும் மத நடவடிக்கைகளோ மத உரிமைகளோ அல்ல.

மகாராட்டிரத்தில் பார்ப்பன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் திலகரால் தொடங்கப்பட்ட இந்த விநாயகர் ஊர்வலம், 1991 -96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் தலையெடுத்தது. திருவல்லிக்கேணியில் திட்டமிட்டே கலவரமும் அரங்கேற்றப்பட்டது.

இந்த பின்புலத்தில் விநாயகர் வழிபாடு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 25, 26 வழங்கும் மத உரிமை என்பது இதற்குப் பொருந்தாது என்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இதனை விசாரிக்காமல் வாய்தா போட்டு இழுத்தடித்து முடக்கியது உயர்நீதிமன்றம்.

இந்த பின்புலத்தில் 1997 நவம்பர் புதிய கலாச்சாரம் இதழில் இது குறித்து வெளியிடப்பட்ட கட்டுரையை சற்றே சுருக்கித் தந்திருக்கிறோம். இக்கட்டுரையைப் படியுங்கள்.

இந்த விநாயகர் பெயரில் இந்து மதவெறிக்காலிகள் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். நமது போராட்டத்தை நாம் தொடருவோம்.

***

சென்ற ஆண்டு (1996) விநாயகர் ஊர்வலம் தொடர்பாக சென்னை நகரக் காவல்துறைக்கு (தமிழக அரசுக்கு) எதிராக இந்து முன்னணி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு, இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

கடந்த ஆண்டுகளில் அந்தப் பாதை வழியே சென்றபோது நடந்த கலவரங்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவை காரணமாக மேற்கூறிய பாதையில் ஊர்வலமாகச் செல்ல அனுமதி மறுத்த காவல்துறை, வேறு பாதை வழியாகச் செல்ல ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது.

பாக் விநாயகர்

ஊர்வலப்பாதை ‘மதச் சம்பிரதாயம் சம்மந்தப்பட்ட விசயம்’ என்றும் அதைத் தன் விருப்பம் போல் மாற்றியமைக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை என்றும் கூறி சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்து முன்னணி ‘விநாயகர் சதுர்த்தி மத்தியக் குழு’ என்ற பெயரில் வழக்கு தொடர்ந்தது.

தனது வாதங்களைக் கீழ்கண்டவாறு முன்வைத்தது :

இந்து முன்னணியின் வாதங்கள்

கடந்த 13 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சென்னையை சேர்ந்த இந்துக்கள் தமது வீட்டிளளவில் நடத்தும் விழாவாக மட்டும் நடத்தவில்லை; பொதுச் சாலைகளில் அலங்காரப் பந்தல் அமைத்து சிலைகளை வைத்து வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகல் நடத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷாரை எதிர்த்து சுயராச்சியம் அடைவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் எனும் சம்பிரதாயத்தை திலகர் தான் முதன்முதலில் துவக்கினார். காந்தி கண்ட ராமராச்சியத்தைத் தோற்றுவிப்பதற்காகப் பலதரப்பு மக்களிடமும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கு மேற்கூறிய விநாயகர் ஊர்வலம் தேவையாக உள்ளது.

இது ஒரு மத சம்பிரதாயம் என்பதால் இந்த ஊர்வலத்தை நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை; ஊர்வலப் பாதையைத் தீர்மானிக்கவோ, திருத்தவோ காவல் துறைக்கு அதிகாரம் கிடையாது என்பது இந்து முன்னணியின் வாதம்.

காவல் துறையின் வாதங்கள்

காவல்துறை (தமிழக அரசு) தனது எதிர் மனுவில் கீழ்கண்டவாறு பதிலளித்தது :

கடந்த ஆண்டுகளில் பல சந்தர்பங்களில் இந்து – முசுலீம் மோதல் கலவரம், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த ஆண்டும் அவ்வாறு சட்டம் ஒழுங்கு பிரச்சினை தோன்ற வாய்ப்புள்ளது.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைப்பது என்பது சென்னையில் சமீபகாலத்தில் ஏற்பட்டதுதானேயொழிய மரபு அல்ல, எனினும் இப்பழக்கம் பற்றி ஏதும் கருத்துக் கூற அரசு விரும்பவில்லை.

திலகர் இம்மரபைத் துவக்கியதிலும் அரசியல் நோக்கம் தான் மேலோங்கியிருக்கிறது. தற்போது இந்து முன்னணி ஞாயிற்றுக்கிழமையன்று ஊர்வலம் வைத்திருப்பதும் ஆகம விதிகள் சாத்திரங்களின் அடிப்படையில் அல்ல; மயிலைக் கோயில் சார்பாக நடத்தப்படும் அறுபத்து மூவர் விழா போன்றவைகள் தான் ‘மத ஊர்வலம்’ என்ற அடிப்படையில் காவல்துறை முன் அனுமதியில்லாமல் நடத்த முடியும். விநாயகர் ஊர்வலம் அத்தகையது அல்ல. எனவே காவல்துறை முன் அனுமதி பெற்றுத்தான் தீர வேண்டும் என்பது அரசுத் தரப்பு வாதம்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ணுகுமுறை!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் தனது தீர்ப்பில் உயர்நீதி மன்றம் கீழ்கண்ட விசயங்களை குறிப்பிட்டது.

கோக் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை நிறுவி, குறிப்பிட்ட காலத்திற்கு வழிபட்டு, பின்னர் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது மத சம்பிரதாயத்தின் பிரிக்கவெண்ணாத அம்சம்தான் என்பதை ஏற்க்கலாம்… ஆனால் அந்த குறிப்பிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்வதுதான் வெகு நீண்ட காலம் கடைபிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயம் என்று நிரூபிக்க ஆதாரம் ஏதும் (இந்து முன்னணியினரால்) தரப்படவில்லை.

விநாயகர் இந்த இடத்தில்தான் வைத்து வழிபடவேண்டும். இன்ன இடத்தில்தான் கரைக்க வேண்டும் என்பதற்கும் ஆதாரம் ஏதும் தரப்படவில்லை…

மேலும் சுதந்திரப் போராட்ட காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான அரசியல் கருவியாக இவ்விழா பயன்படுத்தப்பட்டதைப் போலவே, இன்றும் சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விட முடியாது. எனினும் இவ்வாறு அரசியல் நோக்கத்திற்கு பயன்படுகிறது என்பதலேயே இந்த ஊர்வலம் தனது மதத் தன்மையை இழந்து விடுவதில்லை.

அடுத்ததாக அரசியல் சட்டப்பிரிவு 25, 26 மற்றும் 19(1) (b) ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் முன்னுரிமைகள் அல்ல; குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலவும் எதார்த்தமான நிலைமைகள், ஊர்வலத்தின் போது கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவற்றை முறைப்படுத்த (அரசுக்கு) அதிகாரம் உண்டு.

எனவே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதென்பது மதச் சம்பிரதாயம் தான் என்ற போதிலும், அது முற்றுரிமை அல்ல என்றும் அதனை முறைப்படுத்தவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்றும் கருதுகிறோம்.”

இவ்வாறு உயர் நீதிமன்ற பெஞ்சு சென்ற ஆண்டு தீர்ப்புக் கூறியது,

எது மத உரிமை ?

மேற்கூறிய உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக இப்பிரச்சினை தீர்ந்துவிட்டதா? நாளையே இந்த அரசோ அல்லது வேறெந்த அரசோ – பழையபடி மசூதி வழியாகவே ஊர்வலம் செல்ல அனுமதியளிக்கலாம்.

எனவே, ஊர்வலப் பாதையல்ல பிரச்சினை – விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பார்ப்பன இந்துமதவெறி அரசியலை நடத்துவது இந்து முன்னணியின் மத உரிமையா என்பது தான் பிரச்சினை.

பாட்ஷா விநாயகர்

இந்த ஆண்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர், மாநிலக் காவல்துறை இயக்குநர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோருக்கு ஒரு தாக்கீது அனுப்பப்பட்டது. “சென்னையிலும், மற்றும் பிற நகரங்களிலும் கடைவீதிகள், முச்சந்திகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது” என அதில் கூறப்படிருந்தது. ஆனால் இதற்குப் பதில் இல்லை.

ஆனால் சிலை வைக்க இடம் பிடிப்பது தொடர்பாக இந்து முன்னணிக்கும் இந்து மக்கள் கட்சிக்குமிடையே தகராறு ஏற்பட்டதால், இரு அமைப்பினரும் எந்தெந்த இடங்களில் சிலை வைக்கலாம் என்பதை ஆர்.டி.ஓ. ஒதுக்கித் தருவாரென அரசு அறிவித்தது. அதாவது பொது இடங்களை ஆக்கிரமிக்க ஆர்.டி.ஓ. ஏற்படு செய்து தருவார் என்பது தான் இதன் பொருள்.

இந்து முன்னணி நடத்தும் விநாயகர் வழிபாடும், ஊர்வலமும் மத உரிமைகள் அல்ல என்றும், பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைக்க அரசே அனுமதிப்பது சட்டவிரோதம் என்றும் பொதுநலன் கோரும் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.க.இ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தி என்பது அனைத்து சாதியினரும் கொண்டாடும் பண்டிகை அல்ல; சிறுபான்மையான பார்ப்பன ‘உயர்’ சாதி இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை. களிமண் உருவ பொம்மையை வைத்து வழிபடுவதும் பிறகு அதை கிணறு, குளம், ஆற்றில் கரைப்பதும் அவர்களது மரபு.

அரசின் கோழைத்தனம் !

பெரிய விநாயகர் சிலகளைப் பொது இடங்களில் நிறுவி, பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதென்பது கடந்த 14 ஆண்டுகளாக இந்து முன்னணி உருவாக்கி வரும் ‘மரபு’. ‘திலகர் செய்தார்’. ‘காந்தியின் ராமராஜ்ஜியம்’ என்று இந்து முன்னணி எதைச் சொன்னாலும் அதையெல்லாம் அரசியல் நோக்கத்திற்கானவையே. இதைத் தனது எதிர் மனுவில் அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது; எனினும் இதை வலியுறுத்தாமல் கோழைத்தனமாகப் பின்வாங்கிவிட்டது.

வெகு நீண்ட காலமாக நிலவிவரும் பழக்கம் மட்டும் தான் ‘மத சம்பிரதாயம்’ என நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சம்பிரதாயம் இந்து மதத்தினர் அனைவராலுமோ, ஒரு உட்பிரிவினராலோ, ஒரு சாதியாலோ, ஒரு வட்டாரத்தினரலோ பின்பற்றப்பட்டல் மட்டுமே அது சம்பிரதாயமாக ஏற்கப்பட வேண்டும். மதச் சம்பிரதாம் என்பதற்கு உச்சநீதிமன்றம் இதுவரை அளித்துள்ள விளக்கங்கள் இவ்வாறுதான் கூறுகின்றன.

என்ரான் விநாயகர்

எனவே இந்து முன்னணி உருவாக்கியிருக்கும் இந்த விநாயகர் வழிபாடு ஒரு மத சம்பிரதாயம் அல்ல; அரசியல் சட்டப்பிரிவுடன் 25, 26 –இன் கீழ் வழங்கப்படும் மத உரிமை எனும் அடிப்படை உரிமையைப் பெறத் தகுதியானதல்ல.

மேலும், ஒரு சம்பிரதாயத்தை உருவாகுவதற்கு இந்து முன்னணி என்பது ஒரு மடமோ, ஆதினமோ, சாதியோ, உட்பிரிவோ அல்ல; சட்ட மொழியில் சொன்னால் அது ஒரு அரசியல் பன்பாட்டு அமைப்பு – அவ்வளவு தான்! மத மரபைத் தோற்றுவிக்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. யார் வேண்டுமானாலும் மதச் சம்பிரதாயத்தைப் புதிதாகத் தோற்றுவிக்கலாம் என்றால் நாமும் துடைப்பக்கட்டை வழிபாடு ஒன்றைத் துவக்கி மத உரிமை கோரலாம்; அல்லது ஊர்வலமாக விநாயகரை எடுத்துச் சென்று கரைப்பதற்குப் பதிலாக ‘உடைப்பது தான் எங்கள் சம்பிரதாயம்’ என்றும் நாம் கூறலாம்.

ஆக்கிரமிப்பு இந்து சம்பிரதாயமா?

“ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாச் செல்வது தான் மதச் சம்பிரதாயம்” என்பதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதே போல பொது இடங்களை ஆகிரமிப்பது தான் “இந்து சம்பிரதாயம்” என்று ராம கோபாலன் வாதாட முடியாது. அப்படியொரு ‘மத உரிமை’ இருந்திருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடங்களில் எல்லாம், ஜெ – சசி கும்பல் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டியிருக்கும்.

சென்னையிலும் பிற நகரங்கலிலும் பேருந்து நிறுத்தங்கள், முச்சந்திகள், கடைவீதிகள், நடைபாதைகள், நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் – ஆகியவற்றில் தான் இந்து முன்னணியின் விநாயகர்கள் எழுந்தருளுகின்றனர். மேற்கூறிய இடங்கள் ‘அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்கள்’ அல்ல; அதாவது கோயில்கள் அல்ல. எனவே எந்தப் பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என அரசு கறாராக உத்திரவு பிறப்பிக்க முடியும். ஆனால் அரசோ ஆக்கிரமிபாளர்களுக்கு இடத்தைப் பகிர்ந்தளிக்க ஆர்.டி.ஓ –வை நியமிக்கிறது.

மாயா(வதி) விநாயகர்

இவ்வழக்கில் அரசு மற்றும் நீதி மன்றத்தின் அனுகுமுறையைக் கூர்ந்து கவனியுங்கள். “அரசியல் நோக்கம் கொண்டதுதான் – எனினும் அதுபற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்கிறது அரசு. “அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துவது உண்மைதான் எனினும் ஊர்வலம் தனது மதத்தன்மையை இழந்துவிடுவதில்லை” – என்கிறது நீதி மன்றம்.

இந்து முன்னணியின் விநாயகர் (வழிபாடு) ஊர்வலம், அரசியல் நடவடிக்கையா, மதச்சடங்கா இரண்டில் எது என்பதே நம் கேள்வி. பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைப்பது மத நடவடிக்கை என்றால், பாபர் மசூதியை ஆக்கிரமித்து (இடித்து) ராமன் சிலை வைத்ததும் மத நடவடிக்கை என்று தான் ஏற்க வேண்டியிருக்கும்.

இந்து மதவெறியர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் மதத்தை அரசியல் நடவடிக்கையாகவும், அரசியலை மதச்சடங்காகவும் நடத்துவதற்கு இந்து முன்னணிக்கு இப்படித்தான் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இவ்விரண்டு உரிமைகளையும் தெளிவாக இனம் பிரிக்கவியலாதவாறு வேண்டுமென்றே மொன்னையாக்கியிருக்கிறார்கள் அரசியல் சட்டத்தை உருவாக்கிய ‘சிற்பிகள்’ அவ்வாறு இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய நெருக்கடிகள் வரும் போது அரசு வழுக்குகிறது; நீதிமன்றம் அப்போதைக்குத் தப்புவதற்கு ஒரு சந்து கிடைக்குமோ என்று தேடுகிறது.

மத உரிமையா, மதச்சார்பற்ற உரிமையா எதற்கு முன்னுரிமை?

மத உரிமையும், மதசாற்பற்ற சிவில் உரிமைகளும் மோதிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அரசும், நீதி மன்றமுன் மதச்சார்பற்ற உரிமைக்குத் தான் உடனே குழி வெட்டுகின்றன.

மத உரிமைகள் விசயத்தில் நீக்குப் போக்காகவும், தாராள மனதுடனும் நடந்து கொள்ளும் நீதி மன்றங்கள் சிவில் உரிமைகள் விஷயத்தில் வேறு அளவு கோலைப் பயன்படுத்துகின்றன.

கொழுக்கட்டைக்குப் பதிலாக கையெறி குண்டு போன்ற நவீன ஆயுதங்களைத் தாங்கி விநாயகர்கள் பவனி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில் வருபவர்கள் கையில் பை கூடக் கொண்டுவரக்கூடாது என நிபந்தனை விதித்தது நீதிமன்றம்.

ஜெயின் விநாயகர்

சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் கடையடைப்புகளுக்கு (பந்த்) எதிராக வழங்கியுள்ள தீர்ப்போ, அரசியல் சட்டப்பிரிவு -19 வழங்கும் அடிப்படை உரிமையை கிட்டத்தட்ட ரத்து செய்து விடுகிறது.

ஓட்டுப் பொறுக்கிகளைச் சாக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு காரணம ஏதும் கூறாமல் எந்த நடவடிக்கையையும் தடை செய்யும் வாய்ப்பை காவல்துறைக்கு வழங்குகிறது. எல்லா வகையான போராட்டங்களையும் வெறுக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் அரசியலற்ற மனோபாவத்திற்கு சட்டத் தகுதி வழங்கியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

சட்டப் பிரிவு -25 இன் கீழ் மத உரிமை என்ற பெயரில் இந்து மதவெறியர்களின் உரிமை சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது; சட்டப்பிரிவு -19 வழங்கும் கருத்துரிமையும், அரசியல் உரிமைகளும் சட்டப்படியே பறிக்கப்படுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாசிசம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது; ஜனநாயகம் சட்டப்படியே தடை செய்யப்படுகிறது

சூரியன்

புதிய கலாச்சாரம், நவம்பர் – 1997 இதழில் வெளியான கட்டுரை.

கேலிச்சித்திரங்கள் : 1995, ஆக – செப் – அக், புதிய கலாச்சரம் இதழில் வெளியான ஆர்.எஸ்.எஸ். நாயகர்களின் அடிமை விநாயகர் என்ற தலைப்பில் வெளியானவை!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க