இந்திய சுதந்திர காலக்கட்டத்திலிருந்து தொடர்ந்து வந்த காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை மோடியும், அமித் ஷாவும் நீக்குவதன் பின் உள்ள காரணங்கள் குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஏழு மில்லியன் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, தகவல் தொடர்புகளை துண்டித்து, ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்து, ஊடகங்களை தடை செய்து, காஷ்மீர் மக்களுக்கு செய்துகொடுத்த இறையாண்மை சத்தியத்திற்கு துரோகம் செய்து… பாஜக தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முன்னெடுக்க விரும்பும் பல நடவடிக்கைகளுக்கு முன்னோட்டங்களாக இவை உள்ளன.
ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டவும், கல்வி நிலையங்களிலும் அரசாங்கப் பணிகளிலும் பட்டியலின மற்றும் பழங்குடிகளின் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்தவும் வேண்டுமானால், மோடி அரசாங்கம் எப்படி காஷ்மீர் பிரச்சினை கையாள்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அமையும்.
காஷ்மீரில் உள்ள தடைகள் நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்க்க அரசாங்கம் காத்திருப்பதைப் போல, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நாடு முழுவதும் உள்ள மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் அது கவனிக்கிறது. காஷ்மீர் மீதான சட்டரீதியான தாக்குதலை நாடு முழுவதும் பரவக்கூடிய ஒரு செயல்முறையின் அடையாளமாக பொது சமூகம் பார்க்குமா?
ஒரு விசயம் தெளிவானது : காஷ்மீரில் என்ன நடக்கிறதோ அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு என்ன நடக்கவிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும்.
படிக்க:
♦ காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
♦ பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
பிரச்சினையில் மற்றொரு பள்ளத்தாக்கு !
காஷ்மீர் பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறதோ அதற்கு இணையாக நர்மதா பள்ளத்தாக்கில் நிகழ்வதும் பாஜகவுக்கு முக்கியமானது. சர்தார் சரோவர் அணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டத்தில் உள்ள குறைபாடுகளையும் நீர்த்தேக்கத்துக்காக வெளியேற்றப்பட்ட 41,000 குடும்பங்களின் மறுவாழ்வு திட்டங்கள் எப்படி தோல்வியுற்றன என்பதையும் அம்பலப்படுத்தி 35 ஆண்டுகளுக்கும் மேலாக நர்மதா பாதுகாப்பு இயக்கம் போராடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மிகப்பெரிய கால்வாய் திட்டத்தால் இடப் பெயர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இன்று 32,000 குடும்பங்கள் நர்மதா பள்ளத்தாக்கில் மறுவாழ்வு இன்றி இருக்கிறார்கள். அரசாங்கம் அமர்த்திய தீர்ப்பாயம் வழங்குவதாக உறுதியளித்தபோதும் அவர்களின் மறுவாழ்வுக்கு ஒரு திட்டமும் இல்லை, நிலமும் இல்லை. அங்கே எதிர்ப்பின் அணை சுவர் உள்ளது, அதை பாஜக அரசாங்கம் உடைக்கத் தவறிவிட்டது.
இதனால்தான் அவர்கள் கிராமங்களை மூழ்க வைக்க முடிவு செய்தார்கள். குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி அக்டோபர் மாதத்தில் இந்த நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 138 மீட்டரை எட்டும் என சொல்லியிருந்தார். இது கழிமுகப்பகுதிகளை மூழ்கடித்து, அதிக மக்களை அங்கிருந்து வெளியேற்றும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு புனர்வாழ்வளிப்பதில் பெரும் தோல்வி அடைந்ததற்கான ஏராளமான ஆவண சான்றுகள் இருந்தபோதிலும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதைத் தடுக்கும் முயற்சியில் நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதாபட்கர் ஆகஸ்டு 25-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அவருடைய உடல்நலம் ஞாயிற்றுக்கிழமை முதல் மோசமடைந்து வருகிறது.
அதே நேரத்தில் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது, மக்கள் போக இடமில்லாமல் தவிக்கும் வேளையில் பிரதமர் மோடி அணை நிரம்பி வழிவது குறி பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
News that will make you thrilled!
Happy to share that the water levels at the Sardar Sarovar Dam have reached a historic 134.00 m.
Sharing some pictures of the breathtaking view, with the hope that you will go visit this iconic place and see the ‘Statue of Unity.' pic.twitter.com/nfH67KcrHR
— Narendra Modi (@narendramodi) August 28, 2019
அணை நிரம்பி, கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கி மக்கள் அதில் எலிகள் போல் வெளியேற்றப்படுவது மோடிக்கும் ஷாவுக்கும் ஏன் முக்கியமாகிறது?
இந்த சுதந்திர தினத்தின் போது ரூ. 100 லட்சம் கோடி கட்டுமான திட்டங்களுக்கு முதலீடு செய்யப்படும் என அறிவித்தார் மோடி. ஐந்து தொழிற்சாலை வழித்தடங்களை உள்ளடக்கிய இது, இந்தியாவின் 43% நிலப்பரப்பில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு 12 முதன்மையான துறைமுகங்கள், 185 சிறு துறைமுகங்களை மேம்படுத்தும் சாகர்மாலா திட்டம் 3,600 மீன்பிடி கிராமங்களை பாதிக்கும்.
பாரத்மாலா திட்டம் 65,000 கி.மீ நெடுஞ்சாலை கட்டுமானத்திட்டம். இதன் மூலம் 111 தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். அதோடு 100 ஸ்மார்ட் நகரங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்.
படிக்க:
♦ மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
♦ உ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !
இந்தத் திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள், மக்கள் திரள் நிரம்பியவை. தங்களுடைய வீடு, நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் எதிர்ப்புணர்வை காட்டுவார்கள் என்பதில் வியப்பு கொள்ள எதுவும் இல்லை.
நர்மதா பாதுகாப்பு இயக்கம் போன்ற நீண்ட போராட்ட வரலாறு மற்றும் மக்கள் ஆதரவு உள்ள இயக்கத்தை உடைக்க முடியும் என அரசாங்கம் நம்பினால், அதனால் எந்தவொரு எதிர்ப்புணர்வையும் உடைக்க முடியும்.
நர்மதாவும் காஷ்மீரும் அரசாங்கத்தின் சோதனை மைதானங்களாகிவிட்டன. இரண்டு பள்ளத்தாக்கைச் சேர்ந்த மக்களும் அரசின் மீறல்களை நிறுத்த முயற்சித்தன. இந்த நிகழ்வுகளுக்கு இந்தியாவின் பிற பகுதிகள் எப்படி வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் எழுதப்படும்.
கட்டுரையாளர்: Joe Athialy
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: ஸ்க்ரால்