திருமதி தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது என்பது எந்த வகையில் பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் / பாஜக முகாமுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு செயல்தான்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் / பாஜக மீது பொதுவாகவே ஒரு ‘நன்மதிப்பை’ அல்லது ‘எதிர்ப்புணர்வு குறைந்த ஒரு மனநிலையை’, பெருமளவில் ஒரு சமூகம் கொண்டிருக்குமானால் அது நாடார் சமூகமாக இருக்கக்கூடும். (இது ஒரு அனுமானம்தான், ஆய்வுப்பூர்வமான ஒரு முடிவு அல்ல). நாடார்கள் மிகப்பெரும்பான்மையான அளவில் இருக்கிற கன்னியாகுமரி தொகுதியில் பாஜக செல்வாக்கோடு இருக்கிறது. இந்த வளர்ச்சியை அவர்கள் ஓர் இரவில் பெற்றுவிடவில்லை. அனேகமாக 30 – 40 ஆண்டுகள் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறார்கள்.
கட்சியின் மாநில தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்தார், அவர் பிறகு மத்திய அமைச்சராக ஆக்கப்பட்டார், தமிழிசை மாநில தலைவராக நீண்டகாலம் இருந்தார், இப்போது கவர்னர் ஆக்கப்பட்டிருக்கிறார். என்னதான் கட்சிக்கு குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை தமிழிசை பெற்றுத்தராவிட்டாலும், அவருடைய சின்சியர் உழைப்புக்கு ஒரு வெகுமதிதான் இந்த பதவி.
ஜாதிகாரனையும் சந்தோசப்படுத்தி, கட்சியின் பல்வேறு அணியினரையும் சந்தோசப்படுத்தி, தமிழிசையையும் சந்தோசப்படுத்தி, தமிழிசை மாநில தலைவராக இருப்பதை விரும்பாதவர்களையும் சந்தோசப்படுத்தி, சாமானிய அப்பாவி தமிழர்களையும் சந்தோசப்படுத்தி – இப்படி பல்வேறு தரப்பினரையும் திருப்தி செய்யும் விதமான பாஜகவிற்கு பலவகைகளிலும் சாதகமான ஒரு முடிவு இது.
எந்த வகையிலும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு முகாமை சேர்ந்த நமக்கு சாதகமான ஒரு செயலோ அல்லது தமிழிசையை பாராட்டி வாழ்த்துவதற்கான ஒரு செயலோ அல்ல இது.
படிக்க:
♦ பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
♦ தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி
தமிழிசை ஒரு பெண் என்பதாலோ, அதிலும் பார்ப்பனரல்லாத சமூக பெண் என்பதாலோ, தமிழர் என்பதாலோ, அதிலும் பார்ப்பனரல்லாத தமிழர் என்பதாலோ, குமரி அனந்தன் மகள் என்பதாலோ, நம் வீட்டு பெண் போன்றதொரு தோற்றம் கொண்டவர் என்பதாலோ – இப்படி எந்தவொரு காரணத்தினாலோ அவர் ஃபாசிசத்தின் பிரதிநிதி என்கிற உண்மை இல்லாமல் ஆகிவிடாது.
பொதுவாகவே நம்மவர்கள் பலரிடம் தமிழிசை மீது ஒரு soft corner உண்டு. நம் தலைவர்கள் வீரமணி, ஸ்டாலின், கனிமொழி போன்றோர் இன்று கொடுத்திருக்கும் வாழ்த்து செய்தியிலும் கூட அதை பார்க்கலாம்.
ஆனால், தமிழிசையால் தூக்கி பிடிக்கப்படும் இந்துத்துவ ஃபாசிசம் என்பதற்கு தமிழர்கள் மீதோ திராவிடர்கள் மீதோ எந்தவிதமான soft corner-ம் கிடையாது என்பதை நாடறியும்!
Call a spade a spade என்பதைப் போல, ஃபாசிசத்தை ஃபாசிசம் என்று தயக்கமின்றி அடையாளப்படுத்துவோம்.
தமிழிசை என்னும் ஃபாசிசத்தின் பிரதிநிதிக்கு ஆளுனர் பதவி கிடைத்ததற்கு வாழ்த்துவது என்பது, ஃபாசிசத்தின் மீது பரிவு காட்டுமாறு மக்களை பழக்குவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது !
நன்றி : ஃபேஸ்புக்கில் – Prabaharan Alagarsamy