போக்குவரத்து நெரிசல் மிக்க பல்லடம் சாலையிலிருந்து இடதுபுறம் குடியிருப்புப் பகுதிக்குத் திரும்புகிறது ஒரு குறுகிய சந்து. சந்தின் இடதுபுறத்தில் ஒரு பேக்கரி. வலதுபுற மூலையில் அந்தச் சந்தை மேலும் குறுகலாக்கும்படி எட்டுக்கெட்டு மேடையில் சகல அலங்காரங்களோடு அமர்ந்திருக்கரார் பிள்ளையார். ‘பிள்ளையார் பட்டி இறைவா போற்றி’ பாடல் ஆளுயர ஸ்பீக்கர்களில் இரைந்து கொண்டிருந்தது. நான் பேக்கரியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தேன்.
கையில் கயிறு, காவி வேட்டி, ருத்திராட்சை மாலை சகிதமாக இரண்டு பேர் கடைக்கு வந்தார்கள். பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கலாம்.
‘அண்ணன் சிகிரெட் வாங்கிட்டு வரச்சொன்னாரு..’
அரைப்பாக்கெட் கோல்ட் பில்டர் சிகெரெட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு இறங்கிச் சென்றதைப் பார்த்த கடைப் பையனுக்கு அதிர்ச்சி. அருகில் நின்றிருந்த கடை முதலாளியைத் திரும்பிப் பார்த்தான். ‘போகட்டும் விடு எதுவும் கேக்காத’ என்பதைப்போல தலையசைத்தார் முதலாளி. அவரது சகிப்புத்தன்மைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது அவர் மலையாளி. உள்ளூர் ரவுடிகளைப் பகைத்துக்கொண்டு அங்கே தொழில் செய்ய முடியாது. இரண்டாவது அவர் இஸ்லாமியர். இதற்கு விளக்கம் தேவையில்லை.
ஆச்சா..
அந்தக் கார்னர் சைட் கடைக்கு இரண்டு பக்கமும் ஆங்கில எழுத்து ‘L’ வடிவில் படிக்கட்டுகள் இருக்கும். மூன்று படிகள். பிள்ளையாரைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டில் ஆறேழு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் போதை. ஒரு சுசுகி ஜிக்சர் வாகனத்தில் ஒருவன் வந்து மேடையின் முன்பாக நிறுத்திவிட்டு இவர்களோடு படியில் அமர்ந்தான்.
நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த ‘அண்ணன்’ வாயில் சிகரெட்டை வைத்து சில வினாடி போராட்டத்துக்குப் பிறகு பற்றவைத்தான். ஏற்கனவே ‘மட்டை’ கண்டிசனில் இருந்த அண்ணனின் நுரையீரலுக்குள் சென்ற நிகோடின் வஸ்து அலாசி விட்டிருக்க வேண்டும். காலி வயிற்றில் ஆல்கஹாலும் நிகோடினும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் ‘தூக்கி’ விட்டுவிடும். இது இயற்கையின் விதி. எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.
படிக்க:
♦ இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !
♦ பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !
ஒரு டாட்டா ஏஸ் வாகனம் அந்தச் சந்துக்குள் திரும்ப முற்பட்டது. பிள்ளையாருக்கு முன்பாக மூஞ்செலி போல நின்று பாதையை மேலும் குறுகலாக்கியபடி நின்றிருந்தது சுசூகி ஜிக்சர்.
“அண்ணே அந்த வண்டிய கொஞ்சம் நகட்டுங்கண்ணே..” கெஞ்சலாகக் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம்.
“டேய்.. வண்டியும் எடுக்க முடியாது ஒரு ..ண்டையும் எடுக்க முடியாது.. நீ ஒதுங்கிப்போடா..”
வண்டியை எடுப்பதற்காக எழுந்த இளைஞன் ‘அண்ண’னின் குரலைக்கேட்டு மீண்டும் அமர்ந்தான். ஆறடித் தொலைவைக் கடப்பதற்கு ஐந்து நிமிடம் போராடி வென்றார் டிரைவர்.
டீயைக் குடித்துவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். சில நிமிடங்களில் பேன்சி பொருட்கள், பொம்மைகளோடு ஒரு தள்ளுவண்டி வந்தது. இந்தமுறை அண்ணனுக்கு பதிலாய் தம்பியே சவுண்டு விட்டார்.
“ங்கொம்மா… வண்டிமேல பட்டுச்சு தள்ளுவண்டிய கவுத்து விட்ருவேன்..”
சத்தமில்லாமல் திருப்பிக்கொண்டு வந்தவழியே சென்றார் தள்ளுவண்டிக்காரர். என்ன நிறமென்றே கணிக்க முடியாத விசித்திர நிறத்தில் வாயிலும் மூக்கிலும் ஒழுகிய திரவத்தைக் காவி வேட்டியில் துடைத்துக்கொண்டு திரும்பி வந்தான் அண்ணன். தள்ளாடியபடி நடந்துவந்த அண்ணனை இரண்டுபேர் தழுவியபடி கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்க்க பத்தாசா நடனத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. (பத்தாசா நடனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் யூ டியூபில் சொடுக்கவும்)
தாங்கிப்பிடித்தவர்களில் ஒருவனின் சட்டை ஜிக்சர் வண்டியின் ஹேண்டில் பாரில் சிக்கிக்கொண்டு இழுக்க அண்ணைக் கைவிட்டான். நிலைதடுமாறி விழுந்தான் அண்ணன். படிக்கட்டின் முனையில் ‘சத்த்’ என்று மோதியது தலை. உண்மையில் அந்தச் சத்தம் எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பலமாக இருந்தது. என் கணிப்பு சரியெனில் அவனுக்கு (head injuries) தலைக்காயம் ஏற்பட்டிருக்க 90 விழுக்காடு வாய்ப்புள்ளது. வெளியில் இரத்தக்கசிவு இல்லையென்றாலும் உள்ளுக்குள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புண்டு. அவன் மயக்கமாகாமல் இருந்தது ஆச்சர்யம்தான். சிலர் ஓடிச்சென்று தூக்கி விட்டார்கள்.
‘டேய்.. விடுங்கடா ங்கொம்மா…க்கனுங்களா எனக்கு ஒண்ணும் ஆகாது..’ வந்த கூட்டம் விலகிச்சென்றது. அருகிலிருந்த யாருக்கும் நிலைமை புரியவில்லை. கூர்ந்து கவனித்தேன். வலது காதுக்கு மேல்பக்கம் ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு புடைத்திருந்தது. வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டிருந்த அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்துகொண்டு இருந்தான்.
சிகரெட் முடிந்துவிட்டது. கிளம்பும்போது பார்த்தேன். மேடையிலிருந்து வைத்த கண் மாறாமல் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அண்ணனுக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். அவர்களின் அரூப உருவம் என் மனக் கண்ணில் உறுத்திக்கொண்டே இருக்கிறது.
நன்றி : ஃபேஸ்புக்கில் – Samsu Deen Heera