தென்காசியில் 144 தடையுத்தரவு, கலவரச் சூழல், எச்ச ராஜாவின் விஷமத்தனமான பேச்சு என பல அடாவடிகளோடு நிறைவடைந்திருக்கிறது, விநாயகர் சதுர்த்தி. விழா என்ற பெயரில் சிலையை வைத்து அடாவடி செய்வது இந்துமுன்னணியின் வாடிக்கைதான் என்றபோதிலும், இந்தமுறை இவ்வளவு இரைச்சல் எங்கிருந்து வந்தது?

சென்னையில் காசி தியேட்டர் சிக்னலில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் நோக்கி செல்லும் சாலையில் பத்தடிக்கு ஒரு பிள்ளையார் என ஒரே தெருவில் எட்டுக்கும் மேற்பட்ட பிள்ளையாரை பார்க்க முடிந்தது. அவை எல்லாமே ஆறடிக்கு மேல் உள்ள பிரம்மாண்ட பிள்ளையார்கள். பந்தல் அமைப்பு, சீரியல் செட்டுகள், சவுண்டு சர்வீஸ், பொங்கல், பொரிகடலை சர்வீஸ் என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள். சங்க பரிவாரக் கும்பல் தமிழகத்தை இலக்கு வைத்திருப்பதையே இவை உணர்த்துகின்றன.

பொன்னாரும், எச்ச ராஜாவும், நிர்மலா சீதாராமன் வகையறாக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவிற்கு அடிமட்டத் தொண்டர்களையும் வெறியூட்டி வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களை சந்திப்பதற்காக எர்ணாவூர் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்கு இந்துமுன்னணி நிர்வாகி அய்யப்பனையும் சந்தித்தோம். அவரிடம் எந்த ஒரு பிரச்சினையைப் பற்றி நீங்கள் பேசினாலும் முடிவில் அல்லாவும் கிறிஸ்டினும் திராவிடமும்தான் அதுக்கு மூலக்காரணம் என்று முடிப்பார். அடிமட்ட தொண்டனிடமும் எவ்வாறு இந்துமதவெறியூட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு அய்யப்பன் ஒரு வகைமாதிரி.

அய்யப்பன்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவுக்கேற்ப அரசு சில விதிமுறைகளை வகுத்து சொல்லியிருந்தது. இதனை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றுதான் கேள்வியை ஆரம்பித்தோம். அடுத்தடுத்தக் கேள்விகளை நாம் கேட்கத் தேவையில்லாத அளவிற்கு அவரே சரவெடியாய் வெடித்துத் தீர்த்தார். இனி, அய்யப்பனின் வார்த்தைகளில்…

இந்து முன்னணியின் குடோன் வளாகம்.

”கழுத்தப் புடிக்கிற அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. எல்லாத்தையும் ஃபாலோ பன்றது முடியாது. ஒவ்வொருத்தனும் தடையில்லாச் சான்று வாங்கனும்னா சாத்தியமே இல்லை. களிமண்ணுலதான் சிலை செய்யனும்னு சொல்றது ஏத்துக்க முடியாது. அதைவிட, சாமிக்கு தடைன்னு ஒன்னு போடுறதே ஏத்துக்க முடியாதுல்ல.. இது இந்து தேசம். வழிபாடு சுதந்திரமா செய்யனும்.

எங்களோட நம்பிக்கை என்னன்னா, விநாயகர் இந்த அண்டத்துல இருக்கிற எல்லோருடைய கஷ்டத்தையும் ஏத்து கடல்ல போயி கரைப்பாரு. அதனாலதான் அஞ்சி நாள், பத்து நாள் வச்சி, வழிபட்டு கடல்ல கரைக்கறதுக்கா கொண்டு போறோம்.

இந்த கூத்தடிக்கிறது, கும்மாளமடிக்கிறது… அதும் இருக்கனும். திருவிழா. திருவீதிஉலாதான். விநாயகர் வீதி உலா வந்தா அத பார்க்குற மக்களுக்கு ஒரு சந்தோசம். ஒரு தீபாவளி வந்த மாதிரி, ஒரு பொங்கல் வந்தா மாதிரி, விநாயகர் சதுர்த்தியும் இந்துக்கள் மனசுல வந்து ஒரு பெரிய எதிர்பார்ப்ப உண்டாக்கியிருக்கு. இது பக்தி.

இது இந்து சமுதாயம். என் நம்பிக்கை. என் விநாயகர். மத்தவங்க சொல்றா மாதிரி வெளிநாட்டுலேர்ந்து வந்ததெல்லாம் கிடையாது. ஹரி ஓம்னு ஆரம்பிக்கிற அரிச்சுவடியே கணபதிக்கிட்டயிருந்துதான். அதுமாதிரி இதெல்லாம் எங்களுடைய மரபு.

என்னை எங்க அம்மா எங்க அப்பாவுக்குத்தான் பெத்தாங்கன்றது என்னோட நம்பிக்கை. எங்க அம்மா காட்டுனதால அப்பானு சொல்றேன். இத நானு ஆராய்ஞ்சிட்டு ஒக்காந்துட்டுருந்தேனு வச்சிக்கிங்களே… என் பிறப்பே தப்பாயிபோயிடும்.

திராவிட கட்சிகள், அதான் நிறைய இருக்காங்களே சீர்திருத்த வாதிகள் வெளிநாட்டுல இருந்து காச வாங்கிட்டு எலும்புத் துண்டுக்காக வேல செய்றவங்கெல்லாம் இருக்காங்க… அவங்களாம் சேர்ந்து ஒரு மாயையை கொண்டு வந்துட்டாங்க. திராவிட பாரம்பரியம்னு சொல்லி இந்துக்களை அப்படியே நசுக்கி வச்சிட்டாங்க.

தமிழ்நாட்டுலதான் இப்படி, மகாராஷ்டிராவில எல்லாம் தடையே கிடையாது. அங்கெல்லாம் சூடு சுரணையுள்ள இந்துக்கள் வாழ்றாங்க. ஒன்னுமில்லைங்க. இந்த இடத்துல ஒரு பிரச்சினை வந்துருச்சின்னு வச்சிக்கிங்களே… நான் போயி கேக்கிறேன். வாய் வார்த்தை ஆயிருச்சி. நீங்க அந்தப் பக்கம் ரோட கிராஸ் பண்ணி போறீங்க. நீங்க என்னா சொல்லிட்டு போவீங்க? அவரு இந்து முன்னணியில இருக்கிறாரு. ஏதோ பிரச்சினை போலருக்குனு போயிட்டே இருப்பீங்க. சொல்றவரு யாரு? கோவிந்தசாமியா இருப்பாரு, கந்தசாமியா இருப்பாரு.

இந்து போயி ஒரு கிறிஸ்டின் காரன அடிச்சானு இருக்கா. ஒரு முசுலீமை காரனை அடிச்சானு இருக்கா. அடிக்கவே மாட்டான். மனசாலயும் எந்தவிதத்திலும் துரோகம் செய்யக்கூடாதுனு நினைக்கிறவன் தமிழன்.

மத்த மாநிலத்துக் காரனுங்களுக்கெல்லாம் மனசாட்சினு ஒன்னு கிடையாது. முதல்ல அடி அப்புறம் பாத்துக்கலானு இருப்பாங்க. தமிழனுக்கு இரக்க குணம் எல்லாம் அதிகம்.

இல்லனா, 56 தேசத்தை ஆண்டவன். இன்னிக்கு ஒரு தேசத்தக்கூட ஆள நாதியில்லாம இருப்பானா? என்னா சொல்றீங்க. தமிழன் ஆண்டாங்க. வேற யாருமில்லை. தமிழன்தான் 56 தேசத்தை ஆண்டவன். ஆனா, தமிழனுக்கு தமிழ்நாட்டுலேயே சாமி கும்பிட 24 தடை. என்னா பன்றது?

பேசினா பேசிகிட்டே இருக்கலாம்ங்க… எந்தெந்த வகையில இந்துக்கள முடக்கி கைய கால முறிச்சி போடனுனு நினைக்கிறாங்க. அந்தளவுக்கு வேலை செஞ்சிகிட்டிருக்காங்க.

பாய் குல்லா போட்டுகிட்டு பைக்ல போறான். அவன விட்டுட்டான். நான் பின்னாடியே போறேன். என்ன புடிச்சான். குல்லா என்ன அல்லா கொடுத்த ஹெல்மெட்டா…? அவனுக்கு ஒரு கேசப் போடு, எனக்கு ஒரு கேசப் போடு! இல்ல தூக்குல கூட போயி போடுங்க. நான் தொங்கறதுக்கு ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டு நின்னுட்டேன். அவனப் புடிக்கிறதுக்கு உங்களுக்கு தைரியம் இல்லை. 7% இருக்கவங்க மேல இருக்கிற பயம், 83% மேல இல்லை.

ஆனா, இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. 84 ல நடந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பிரச்சினைக்கு அப்புறம்… ஓரளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா இந்து முன்னணி ஆரம்பிச்சு… சூடு சொரணையோட இந்துக்கள் நிமிர்ந்து நிக்க வந்துட்டான்.

முன்னெல்லாம், தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் வந்து, ஜாதியை சொல்ல பயந்தான். மழுப்பி காலனிக்காரங்கனு சொன்னான். இன்னிக்கு, பறையன் அப்படின்னு தைரியமா சொல்றான். எந்த ஜாதியா இருந்தாலும் சரி, இந்து. நீ என் சகோதரன். அப்படினு சொல்ல வச்சது இந்து முன்னணி. இந்த ஒற்றுமை 80% வந்துருச்சி. இன்னும் 20% வந்துருச்சின்னா, அரசியல்வாதியிலருந்து அத்தனை பேருக்கும் ஒரு பாடம் இருக்கும்.

இனி, இந்துக்கள தொட்டா ஒரு பிரச்சினை பன்னுவாய்ங்க. அப்படின்ற ஒரு இது வந்துரும். வரும். இப்பயே வந்துருச்சி. எங்காளுங்கள வாரவழிபாடுக்கு வாங்கடான்னா.. மண்டைய சொறிவானுங்க. ஏன்னா, கவிச்சி சாப்பிட்டிருப்பான். கோயிலுக்குள்ள வரமாட்டான். ஆனா, டேய் ஒரு பிரச்சினைடான்னா… கட கடன்னு ஓடியாந்து எனக்கு முன்னாடி ஸ்டேசன்ல முற்றுகைப் பன்றதுக்கு நிப்பானுங்க. எவ்வளோ உணர்வு பாருங்க அவனுங்களுக்கு. எல்லாமே விநாயகரோட அருள்தான்.

தனியா நடந்து போனாலே, பிட் நோட்டிஸ் குடுக்குற கூட்டமாயி போச்சு. எவனாவது செருப்ப வீசிருவான். இங்க இருக்கிறவன்லாம் என்னா பன்னுவான், இவ்ளோ நாள் பக்தியா எடுத்துட்டு போற பிள்ளையார் மேல செருப்ப தூக்கி அடிச்சா என்னா ஆகும். கோபப்பட்டிருவாங்க. அப்புறம் சாமிகிட்ட முறையிடுவாங்க. அங்கேயே உக்காந்து போராட்டம், ஆர்ப்பாட்டம்னு பன்னிருவாங்க. ஸ்தம்பிக்க வச்சிருவாங்க சென்னையை… அதனால போலீச நிறைய கொண்டுவந்து குவிச்சி… அந்த மாதிரி யாரும் வராத அளவுக்குத் தடுக்குறாங்க.

நாம போலீசு கொடுத்த வழியிலதான் போகப் போறோம். பெரும்பான்மையா இருக்கிற நமக்கே மசூதி இருக்கு. சுடுகாடு (தர்காவைத்தான் திமிராக சுடுகாடு என்கிறார்.) இருக்கு. இந்தப் பக்கமா போங்கனு சொல்றாங்க. அப்போ, அந்த வழியா போகாதீங்க… போனா, அவங்க உங்களை அடிச்சிருவாங்கனுதானே சொல்றாங்க. தேடி வந்து பைக்கில வந்து கல்ல தூக்கி அடிச்சி சாமிய வந்து ஏதாவது பன்னிட்டு போயிட்டாங்கன்னா.. என்னா பன்றதுனு போலீசு காரங்களுக்கு ஒரு பயம்.

எங்களுக்கெல்லாம் வாழ்றதும் ஒன்னுதான் சாகறதும் ஒன்னுதான். சமுதாயத்துக்காக வேல செய்ய வந்திருக்கோம். இந்த மாதிரி எத்தனையோ பேரு உயிர விட்டவங்க இருக்காங்க. பால கங்காதர திலகரு. சுப்பிரமணிய சிவா., தேசத்துக்காண்டி விட்டவங்க. நாங்க தேசத்துக்காண்டி வேலை செய்றவங்க. அதனால எங்களுக்கெல்லாம் உயிர்மேல ஒரு நாட்டம் கிடையாது. போற உயிரு எப்ப வேணா போகட்டும். ஆனா, இந்த தேசத்துக்காண்டி போகனும்னு நினைக்கிறவன்.

அப்பொழுது அங்கு வந்த மூன்று சிறுவர்கள் மூனரை அடி, ஐந்தரை அடி அளவுகளில் பிள்ளையார் இருக்கா. எவ்வளவு விலை என்று விசாரித்தனர். அவர்களிடம் விலையை சொல்லிவிட்டு அவர்களுடைய ஏரியாவை விசாரித்தார். அந்த சிறுவர்கள், கொருக்குப்பேட்டை என்றனர். உடனே, டேய்.. அந்த ஏரியாவுல பால்ராஜ் தெரியுமாடா உங்களுக்கு. அவங்க கிட்ட கேளுங்க. அவங்கள கூட்டி வந்து வாங்கிட்டு போங்க. இல்லனா, சிந்தாதிரிப் பேட்டையில ஆபிசு இருக்கு. அங்க ரிஜிஸ்டர் பன்னிட்டு வந்து வாங்கிட்டு போங்க..டா… என சொல்லிவிட்டு கிளம்பினார். காவி கொடி கட்டிய வாகனங்களும் வந்த வண்ணம் இருந்தன!

பிள்ளையார் சிலைகளை பக்தர்களோ இல்லை இந்துக்களோ கர்ம சிரத்தையாக வாங்கி தெருவுக்கு தெரு வைத்து வழிபடுவது இல்லை. அனைத்தும் இந்து முன்னணியின் நேரடி ஏற்பாட்டால் வம்படியாக வைக்கப்படுகிறது. இந்த பிள்ளையார் சிலைகள் பெரும் பொருட்செலவுடன் தயாரிக்கப்படுவதால் இந்து முன்னணி பெரும் முதலாளிகள், பணக்காரர்கள் போன்றோரை புரவலர்களாக வைத்து செலவழிக்கிறது. மேலும் பகுதியிலுள்ள உதிரி இளைஞர்கள் இதை வைத்து வசூல் செய்வதற்கும், கெத்து காட்டுவதற்கும் பிள்ளையார் சிலை உதவி செய்வதால் தமிழகம் முழுவதும் இது விசமாய் பரவி வருகிறது.

பிள்ளையார் சிலை கிட்டங்கியின் பொறுப்பாளர் அய்யப்பன் பேசும் இந்து முன்னணி கருத்துக்களில் ஓரிரண்டை பேச ஆரம்பிக்கும் உதிரிப்பாட்டாளிகள் பின்பு கலவரம் வரும்போது அடியாட்படையாக பணியாற்றுகிறார்கள். அடுத்ததாக அய்யப்பன் பேசுவதில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. தமிழர்கள்தான் இந்துக்கள் என்பதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தோள் கொடுக்கும் சித்தாந்தமே இந்துத்துவம்தான் என்றும் கூறுகிறார். தமிழின அரசியலோ, தலித் அரசியலோ இரண்டையும் இந்துத்துவத்தின் நட்புச் சக்திகளாக மாற்றும் வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. மாறாக இரண்டுமே இந்துத்துவத்திற்கு எதிரானது என்பதை முன்னிறுத்தி முற்போக்காளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முதல் ராம் விலாஸ் பஸ்வான் வரை இந்துத்துவத்தின் தளபதிகளாக மாறும் நிலையில் நாம் இன்னமும் அதிகம் பணியாற்ற வேண்டும்.

குறிப்பு: இந்த நேர்காணலின் முதல் வடிவம் 11.00 மணி அளவில் திருத்தப்படாத நிலையில் வெளியிடப்பட்டது. திருத்திய வடிவத்தை 1.00 மணி அளவில் வெளியிடுகிறோம். இதில் அய்யப்பன் அளித்த நேர்காணல் அப்படியே அவரது வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகியிருக்கிறது. முன்னுரை, பின்னுரையில் சில கருத்துக்களை இணைத்திருக்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க