30.07.2023

கிருஷ்ணகிரி – பட்டாசு குடோன் விபத்தில்
9 பேர் மரணம்;
அதிகார வர்க்கமே குற்றவாளி!

பத்திரிகை செய்தி

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு கடை நடத்தி வந்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 9 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து நடந்த இடம் கிருஷ்ணகிரி நகரில் உள்ள பழைய பேட்டை பகுதி, போகனப் பள்ளி கிராமத்தைச் சார்ந்த பகுதியாகும். வெடிவிபத்து நடந்த குடோன் மற்றும் சுற்றியிருந்த கட்டிடங்கள், வீடுகள் அடியோடு தரைமட்டமாகி விட்டன. மரணித்தவர்களின் உடல் பாகங்கள் 50 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்தன.

ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் உரிமம் பெற்று பழைய பேட்டை பகுதியைச் சார்ந்த ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்துள்ளார். இந்த குடோனுக்கு அருகிலேயே வெல்டிங் பட்டறையும், உணவகமும் இயங்கி வந்துள்ளது. பட்டாசுகள் மட்டுமல்லாமல் உணவகத்தில் இருந்த சிலிண்டரும் வெடித்ததால்தான் இந்தளவுக்கு கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


படிக்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிப்பு: விபத்து அல்ல, படுகொலை! | பு.ஜ.தொ.மு


சுற்றிலும் கடைகள் இயங்கி வந்த நிலையிலும், குடியிருப்புகள் இருந்த நிலையிலும் இந்த ஆபத்தைக் கணக்கில் கொள்ளாமல் பட்டாசு குடோனுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். இதற்கு முன்பும் ஒரு முறை  அந்த குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கோடு செயல்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் வழக்கம்போல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.

இங்கு மட்டுமல்ல, விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிவிபத்துகள் தொடர்ச்சியாக நடப்பதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதிகாரிகளோ விபத்து ஏற்படும்போது கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு பிறகு ஊழல் முறைகேடுகளால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பதே நாம் காணும் உண்மையாகும்.

இத்தகைய விபத்துகளைத் தடுக்க வேண்டுமென்றால் அதிகார வர்க்கத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்போதுதான் அதற்கான தீர்வை நோக்கி நகர முடியும்.


தோழர். சு.பரசுராமன்
மாவட்ட செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க