ந்தியத் தலைநகரான புது தில்லி 2020-ம் ஆண்டில் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வீதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களின் சுமையை மேலும் கூட்டியுள்ளது.

தனது பேத்தியை மடியில் வைத்துக்கொண்டுள்ள, 71 வயதான முகமது அக்ரம், ஏழு நபர்கள் கொண்ட தனது குடும்பத்தாருடன் பல ஆண்டுகளாக நடைபாதையில் வசித்து வருவதாகக் கூறுகிறார். “இந்த தங்குமிடங்கள் என் மகள்களுக்கு பாதுகாப்பானவை அல்ல, ஏனெனில், வெளியேயிருப்போரில் பலரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களாக இருக்கின்றனர். அவர்கள் இங்கே தங்கியிருக்கும் அனைவரிடமும் வரம்பு மீறுகிறார்கள். இங்கே குளிர் தாங்க முடியாததாக உள்ளது. எங்களுக்கு போதுமான விறகு இல்லை” என்கிறார் அக்ரம்.

தில்லி அரசாங்கம் கிட்டத்தட்ட 200 இரவு தங்குமிடங்களை அமைத்தது. ஆனால், அவை நகரத்தின் வீடற்ற மக்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் இரவுகளை திறந்த வெளியிலேயே கழிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

“எங்களிடம் சுமார் 40 படுக்கைகள் உள்ளன, இதில் ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய குடும்பங்களின் அளவைப் பொறுத்து, அதிகபட்சமாக 60 பேருக்கு இடமளிக்க முடியும்” என்று ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இரவு வசிப்பிடங்களை நிர்வகிக்கும் சுனில் குமார், அல்ஜசீராவிடம் தெரிவித்தார்.

நாங்கள் ஒரு நபருக்கு இரண்டு அல்லது மூன்று போர்வைகளை வழங்க முடியும், ஆனால், இங்கு அடிக்கும் குளிருக்கு இது போதுமானதாகயில்லை. சில அறை ஹீட்டர்களும் இருக்க வேண்டும்,” என்றார்.

சிலர் நடைபாதையில் நெருப்பு எரிப்பதன் மூலம் தங்களை சூடாக வைத்திருந்தனர், அடர்த்தியான மூடுபனி புதன்கிழமை (01.01.2020) இரவு வெப்பநிலையை 2.4 டிகிரி செல்சியஸ் (36.3 டிகிரி ஃபாரன்ஹீட்) ஆகக் குறைத்து, சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை சீர்குலைத்தது.

திங்களன்று (30.12.2019), இந்திய தலைநகரம் 1901-ம் ஆண்டிற்கு பிறகு மிகக் குறைந்த வெப்பநிலை கொண்ட நாளை, வரலாற்றில் மீண்டும் பதிவு செய்தது. அதிகபட்ச அன்று வெப்பநிலை 9.4 செல்சியஸ் (48.9 ஃபாரன்ஹீட்) என்று மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது.

“அதிகபட்ச வெப்பநிலை வட இந்தியாவின் பெரிய பகுதிகளிலும் 10 டிகிரிக்கு குறைந்தது” என்று புது தில்லியில் உள்ள பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

தலைநகரைத் தவிர, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை தொடர்ந்து கடுமையான குளிர் அலையை எதிர்கொண்ட பிற இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் ஆகும்.

“பொதுவாக ஜனவரி மாதத்தில்தான் வெப்பநிலையானது குறையும், ஆனால், இந்த முறை டிசம்பர் மாதத்திலேயே பல தசாப்தங்களின் சாதனையை இந்தக் குளிர் முறியடித்துள்ளது” என்று ஸ்ரீவாஸ்தவா மேலும் கூறினார்.

அடர்த்தியான மூடுபனி போக்குவரத்தை கடுமையாக சீர்குலைத்தது, இது புது தில்லி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், ரயில் தாமதத்திற்கும் வழிவகுத்தது. புதுடெல்லியில் இருந்து 29 ரயில்கள் புதன்கிழமை (01.01.2020) தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்திலிருந்து சிகிச்சைக்காக வந்த ரிக்கு தேவி, வயது 40, இந்த தங்கும் இடத்திற்குள் எனக்கும் இடம் கிடைத்து, என் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். “இது அரசாங்கத்தின் ஒரு நல்ல முயற்சி. இங்கும் கொஞ்சம் குளிராக இருந்தாலும், தெருக்களில் உள்ளவர்கள் எதிர்கொள்வதை விட இது பலமடங்கு சிறந்தது” என்று ரிக்கு தேவி கூறுகிறார். இவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு வெளியே ஒரு தங்குமிடம் ஒன்றில் தங்கியிருக்கிறார்.
அடர்த்தியான மூடுபனி கடந்த 01.01.2020 அன்று ஒரு ‘அபாயகரமான’ நிலையைத் தொட்டதால் புதுடில்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது.
பிரபலமான லஜ்பத் நகர் சந்தைக்கு அருகே ஒரு பறக்கும் பாலத்திற்கு கீழ் வாழும் 62 வயதான நூர் பி தனது கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். தான் டெல்லியைச் சேர்ந்தவள் என்றும் இப்படி தெருக்களில் வாழும் நிலைக்கு எப்படி வந்தேன் என தெரியவில்லை என்றும் கூறினார். “இந்த குளிர் தாங்க முடியாதது. எனது முழு வாழ்க்கையிலும் நான் இவ்வளவு குளிரை உணர்ந்ததில்லை. நான் இங்கே இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். என்னால் சரியாக நடக்க முடியாது. இங்கே மக்கள் எனக்கு உணவு மற்றும் போர்வைகளை தருகிறார்கள்” என்றார். ஒரு தன்னார்வலர் அவருக்குப் போர்வைகளை வழங்கியுள்ளார்.
புது தில்லியில் வீடற்றவர்கள் பெரும்பாலும் அருகிலுள்ள கடைகளிலிருந்து குப்பைகளை சேகரித்து தங்களை சூடாக வைத்திருக்க அதை எரிப்பதைக் காணலாம்.
சிலர் தங்கள் வீட்டு விலங்குகளை அடிக்கும் குளிரிலிருந்து காப்பாற்ற அவற்றை சணல் சாக்குகளால் மூடியுள்ளனர்
சுகாதார வல்லுநர்கள் மக்களை காலை நடைக்கு வெளியே செல்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். “நீங்கள் மேலும் வெளியே செல்ல விரும்பினால், பல அடுக்கு ஆடைகளை அணிந்து, முகத்தை நல்ல முகமூடியால் மூடுங்கள்” என்று புது தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நுரையீரல் நிபுணர் டாக்டர் இம்தியாஸ் அஹ்மத் கூறியுள்ளார்
குளிரை வெல்ல அதிகாலை தேநீர்! வடக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை 3-4 செல்சியஸ் அதிகரித்துள்ளது என்று இந்தியாவின் வானிலை துறை ஜனவரி 1 அன்று கூறிய போதிலும், குளிரின் பிடியிலிருந்து டெல்லி மீளாமலேயே இருந்தது.
தொடர்ச்சியான குளிர் அலைகளில் வீடற்ற குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
வரவிருக்கும் வாரத்தில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும், தலைநகரில் வாழும் மக்களுக்கு இது மிகவும் கடுமையான குளிர்காலமாக இருக்கிறது. காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 15 கி.மீ (9 மைல்) ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கிலிருந்து வீசும் காற்று தொடர்ந்து புதுடில்லியின் வெப்பநிலையை சற்று அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


மூர்த்தி
நன்றி : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க