அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு

அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை மறைப்பதற்கு, இஸ்ரேல் அரசு தற்போது அல்ஜசீரா அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் செயல்படும் அல்ஜசீரா செய்தி நிறுவன அலுவலகத்தை 45 நாட்கள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

கத்தாரைத் தலைமையிடமாகக் கொண்ட அல்ஜசிரா செய்தி நிறுவனம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள ரமல்லா (Ramallah) நகரில் செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலகத்தை செப்டம்பர் 22 அன்று சோதனை செய்த இஸ்ரேல் அதிகாரிகள் 45 நாட்கள் அலுவலகத்தை மூடுமாறு உத்திரைவிட்டுள்ளனர்.

இது குறித்து, மேற்குக் கரையின் செய்தி நிறுவனத் தலைவர் வாலிட் அல் – ஓமரி (Walid al-Omari) கூறுகையில் “இஸ்ரேல் அதிகாரிகள் அல்ஜசீரா செய்தி நிறுவனம் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகவும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக்கவும் தெரிவித்து எங்கள் அலுவலகத்தை மூடுமாறு கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் உள்ள அல் ஜசீராவின் நிருபர் நிடா இப்ராஹிம் (Nida Ibrahim) கூறுகையில், “இஸ்ரேல் ராணுவத்தின் சோதனைகள் மற்றும் மூடல் உத்தரவு ஆச்சரியமளிக்கவில்லை. செய்தி நிறுவனத்தை மூடுமாறு இஸ்ரேல் அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆக்கிரமிக்கப்பட மேற்குக் கரையில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் செய்தி நிறுவனத்தை மூடுவது பற்றி இஸ்ரேல் அரசு விவாதிப்பதாகக் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் இன்றே அது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர்கள் குழு “தன்னிச்சையான ராணுவ முடிவு என்பது பத்திரிகை மீதான உரிமை மீறல்” என்று தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அதோடு “அல் ஜசீராவுடனான எங்கள் முழு ஒற்றுமையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். மேலும் எங்கள் தலைமையகம் மற்றும் திறன்களை அங்கு பணிபுரியும் எங்கள் சக ஊழியர்களின் சேவையில் வைக்கிறோம்” என்று பத்திரிக்கையாளர்கள் குழு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது.


படிக்க: பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!


குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இனவெறி இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தி 16,000 குழந்தைகள் உள்பட 41,500-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் மேற்குக் கரையிலும் தன்னுடைய ராணுவத் தாக்குதல்களை இனவெறி இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. காசாவில் போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை மேற்கு கரையில் 652 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் சுட்டுக் கொன்றுள்ளதாக அசோசியேட்டட் செய்தி நிறுவனம் (Associated Press) தெரிவித்துள்ளது.

முக்கியமாக மேற்குக் கரைப் பகுதிகளில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மீதும் பத்திரிக்கை அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதற்கு முன்பு அல்ஜசீரா அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை மறைப்பதற்கு, இஸ்ரேல் அரசு தற்போது அல்ஜசீரா அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க