பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!

இஸ்ரேலிய அரசுக்கெதிரான இஸ்ரேலிய மக்களின் போராட்டமும் உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும்தான் பாலஸ்தீன மக்கள் மீதான கொடிய போரை நிறுத்துவதற்கான நமக்கான ஆயுதங்கள் ஆகும்.

காசா பகுதி மீது யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு நடத்திவரும் இன அழிப்புப் போரானது, ஏழு மாதங்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொடூரமாகப் படுகொலை செய்துள்ள நிலையில், இன அழிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல் அரசு. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதைக் கண்டிப்பது போல நாடகமாடிக் கொண்டே தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி, இனப்படுகொலைக்குத் துணை நிற்கின்றன.

உலகை உலுக்கிய ரஃபா தாக்குதல்

கடந்த மே 7-ஆம் தேதி முதலாக, காசாவின் தெற்குப் பகுதியில் எகிப்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஃபா பகுதியில் இஸ்ரேலிய இராணுவப் படைகள் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளன. மேலும், வடக்கு மற்றும் மத்திய காசாவின் பல பகுதிகளிலும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினாலும் குண்டுவீச்சினாலும் பாலஸ்தீன மக்கள் நாள்தோறும் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், குடியிருப்புகள் போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இடங்களைக் குறிவைத்துத் தாக்குவதை, படுகொலை செய்வதை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த மே 19-ஆம் தேதி, மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கு காசாவின் ஜபாலியா நகரில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையையும், பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதையும் அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், யூத இனவெறி இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையையும், இஸ்ரேல் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டையும் தொடர்ந்து மறுத்து வருவதன் மூலம் சர்வதேச அரங்கில் இஸ்ரேலை பாதுகாத்து வருகிறது, அமெரிக்கா.

முன்னதாக, காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தாக்குதல் நடத்திய போது, ரஃபா பகுதிக்கு பல லட்சம் மக்களை விரட்டியது இஸ்ரேலிய இராணுவம். ஆனால், தற்போது ரஃபா மீதே தாக்குதல் நடத்தி தனது கோரமான இன அழிப்பு நோக்கத்தை வெளிக்காட்டியுள்ளது. மேலும், இங்குள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் விரட்டியடித்து வருகிறது. அல் மவாசி என்ற பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் அரசு அடாவடித்தனமாக அறிவித்து இருந்தாலும், பாலஸ்தீன மக்கள் காசாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். மிகுந்த துயரங்களின் ஊடாக கடந்த 15 நாட்களில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். ரஃபாவிலிருந்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த ஃபரித் அபு ஈடா, “எங்களுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. காசாவில் பாதுகாப்பான அல்லது நெரிசல் அல்லாத இடம் எதுவும் இல்லை. நாங்கள் எங்கும் செல்ல முடியாது” என்று தமது வேதனையை வெளிப்படுத்துகிறார்.


படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


இஸ்ரேல் அரசானது, எகிப்திலிருந்து தெற்கு காசாவிற்குள் நுழைவதற்கான ரஃபா நுழைவாயிலையும், அதன் அருகில் அமைந்துள்ள கெரெம் ஷாலோம் என்ற மற்றொரு நுழைவாயிலையும் கைப்பற்றி அவ்வழியாக உணவு, குடிநீர் போன்ற நிவாரணப் பொருட்கள் செல்வதைத் தடை செய்துள்ளது. காசாவின் கடற்கரையில் அமெரிக்கா கட்டியுள்ள தற்காலிகத் துறைமுகம் மூலமாக மிகச்சொற்ப அளவிலான நிவாரணப் பொருட்களே காசாவிற்குள் செல்கின்றன. நாளொன்றுக்கு 600 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் நிலையில், 150-க்கும் குறைவான லாரிகள் மட்டுமே உள்ளே செல்கின்றன. இவ்வகையில் யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது பட்டினியையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி இன அழிப்பைத் துரிதப்படுத்தி வருகிறது.

தற்போது நடத்தப்பட்டு வரும் போரானது, 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக 7.5 லட்சம் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்த “நக்பா” என்ற பேரழிவு நடவடிக்கையை விட மோசமானதாகி விடுமோ என்ற அச்சம் பாலஸ்தீன மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில், காசாவின் மீதான போரை நிறுத்துவதற்காக எகிப்து மற்றும் கத்தாரால் முன்மொழியப்பட்ட மூன்று கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட போதிலும், இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களால், காசாவில் 70 சதவிகித கட்டடங்கள் இடிக்கப்பட்டிருப்பது; 36 மருத்துவமனைகளில் 24 மருத்துவமனைகள் செயலிழந்து இருப்பது, மற்றவை பெயரளவில் செயல்பட்டு வருவது; உலகின் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குள் செல்வதைக் கட்டுப்படுத்தி மக்களைப் பட்டினியிட்டும் மருத்துவச் சிகிச்சையை மறுத்தும் படுகொலை செய்து வருவது; ஊட்டச்சத்து குறைபாட்டினால் பச்சிளம் குழந்தைகள் துடிக்கத் துடிக்க இறந்து வருவது என நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், ரஃபா பகுதி உள்ளிட்ட காசா பகுதிகள் மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்கள் இந்நிலையை மேலும் மோசமாக்கும், பல லட்சம் மக்களின் உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரையும் பீடித்துள்ளது.

போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் இஸ்ரேல்

எகிப்து மற்றும் கத்தாரால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது, காசா மீதான இஸ்ரேலின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது. காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களையும் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலியர்களையும் விடுவிக்க வேண்டும் என்று முன்மொழிகிறது.

அந்தவகையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலியர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற இஸ்ரேலிய மக்களின் முக்கியக் கோரிக்கையை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முன்மொழிகிறது. எனினும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “போர் நிறுத்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லை” என்றும் “இஸ்ரேல், ஹமாஸின் தீய ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்ய அனுமதிக்காது” என்றும் “ஹமாஸ் தனது இராணுவத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்காது” என்றும் கூறியுள்ளார். அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது, ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழிப்பது என்ற பெயரில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து, அம்மக்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே நெதன்யாகுவின் பதில். இத்தனை நாட்களாக நடத்தப்பட்டுவரும் போர் நமக்கு உணர்த்துவது அதைத்தான்.

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் தனது பிரதமர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சமும் நெதன்யாகுவிற்கு உள்ளது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியானது மத சியோனிஸ்ட், ஷாஸ், யூ.டி.ஜே. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 64 இடங்களைக் கைப்பற்றி மிகக்குறுகிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதில் தீவிர வலதுசாரி மத சியோனிஸ்ட் கட்சியிடம் 14 இடங்கள் உள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் தங்கள் கட்சியின் ஆதரவை திரும்பப் பெற்று ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்று பலமுறை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். தீவிர வலதுசாரிகள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் ஆட்சியை இழக்க நேரிடும்; அதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள நேரிடும். அப்படி நடந்தால் மீண்டும் தன்னால் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம் நெதன்யாகுவிடம் உள்ளது.

தற்போதைய ஆட்சி கலைக்கப்பட்டால், இஸ்ரேலிய ஹாலிவுட் தயாரிப்பாளர் அர்னான் மில்ச்சன், ஆஸ்திரேலிய தொழிலதிபரும் இஸ்ரேலிய குடிமகனுமான ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரிடமிருந்து ஆடம்பரப் பரிசுகளைப் பெற்றது உள்ளிட்ட நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரிக்கப்படும். அதனால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சமும் நெதன்யாகுவிடம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும், தீர்ப்புகளை முறியடிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை இஸ்ரேல் அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் மோசடி நாடகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதற்கு சி.ஐ.ஏ. இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மூலம் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனாலும் அதை மீறி இஸ்ரேல் அரசு போரைத் தொடர்ந்து வருவதாகவும் ஒரு பிம்பம் அமெரிக்கப் பத்திரிகைகளால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், இது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்க மக்களை ஏமாற்றும் அமெரிக்க அரசின் அயோக்கியத்தனமான நடவடிக்கையாகும். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாலஸ்தீன ஆதரவு மற்றும் முற்போக்கு சக்திகள், மாணவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இந்த ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி வருகிறது, ஜோ பைடன் அரசு.

சொல்பேச்சு கேட்காத இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர் (8346 கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்குவதை ஜோ பைடன் நிறுத்தி வைத்திருக்கிறார்; குடியரசுக் கட்சி செனட்டர்கள் குழு கண்டிப்பாக ஆயுதங்கள் வழங்கியே ஆக வேண்டுமென மிரட்டி வருகிறார்கள்; ஆயுதம் வழங்க உத்தரவிடும்படி குடியரசு கட்சியினர் காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் அதனை முறியடிப்பார்; எனினும் இஸ்ரேலுக்கான ஆதரவை எவ்வித நிபந்தனையுமின்றி அமெரிக்கா வழங்கும் என அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் மிகக்கேவலமாக கூத்தடித்து வருகின்றன.

சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர், ஹமாஸ் தலைவர்கள் மூவர், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டுமென முன்மொழிந்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் இதை ஆதரித்து வரவேற்றுள்ள நிலையில், அமெரிக்கா முதல் சில நாட்களுக்கு கள்ள மவுனம் சாதித்தது. பிறகு, கைது வாரண்ட் கேட்பது ‘ஒப்புக்கொள்ள முடியாத செயல்’ என்றும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். குடியரசுக் கட்சியின் சில செனட்டர்களோ, “நீங்கள் இஸ்ரேலைக் குறிவைத்தால் நாங்கள் உங்களைக் குறிவைப்போம்” என வெளிப்படையாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இந்நீதிமன்றத்துக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். முன்னாள் அதிபர் டிரம்போ, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்ய வேண்டியது அவசியம் எனப் பேசி வருகிறார்.

மேலும், “இரண்டு நாட்களில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வராவிட்டால் இஸ்ரேலை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று எங்களுக்குத் தெரியும்” என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மே 26-ஆம் தேதி கூறியிருந்தது. இந்நிலையில், அடுத்த நாள் இரவே ரஃபா எல்லையில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றின் மீது கொடுந்தாக்குதல் நடத்தி சுமார் 45-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் தலை துண்டாகி இறந்துபோன காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அமெரிக்கா ஆதரவு இருக்கும் வரையில் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரில்தான் இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ரஃபா தாக்குதலுக்காக இஸ்ரேலைக் கண்டிப்பது, குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது என அமெரிக்கா நாடகம் போட்டாலும், பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்துவதற்கான எல்லா அதிகாரமும் அமெரிக்க அரசிடம் உள்ளது. ஆனால், மத்திய கிழக்கில் சரிந்துவரும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலிய அரசின் நோக்கத்திற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்கிறது, அமெரிக்கா.

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரானது எட்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையிலும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதல்களை ஹமாஸ் படையினர் வீரதீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் “பாப்புலர் ஃப்ரண்ட்” போன்ற பாலஸ்தீன விடுதலைக்கான குழுக்களுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

அதன் விளைவாக, இஸ்ரேலிய இராணுவத்தினர் கைப்பற்றத் திட்டமிட்ட இடங்களை கைப்பற்ற முடியாமல் பின்வாங்கியுள்ளனர். காசாவின் தெற்கிலுள்ள ஜைடவுன் பகுதியில் சில இடங்களை கைப்பற்ற திட்டமிட்டு, ஹமாஸ் படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நான்காவது நாளிலேயே அப்பகுதியை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளதே அதற்கான சான்றாகும். தொடர்ந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்றால் ஹமாஸ் அமைப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது சாத்தியமில்லை. அதனால், பணயக் கைதிகளை விடுவிப்பதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் போர் நடவடிக்கைகளை மட்டும் தீவிரப்படுத்தி வரும் நெதன்யாகு அரசுக்கு எதிரான மக்களின் கோபம் மேலும் அதிகரிக்கும். கடந்த மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன.  இப்போராட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள், நெதன்யாகு பதவி விலக வேண்டும், ஹமாசுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், பிணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இவ்வாறு போராடும் மக்கள் மீது நெதன்யாகு அரசு கடும் அடக்குமுறைகளை ஏவி வருகிறது.


படிக்க: காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!


இன்னொரு பக்கத்தில், எட்டு மாதங்களைக் கடந்து போர் நடைபெற்று வருவதால் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மத்தியிலும் எப்போது போர் முடிவடையும் என்ற எண்ணம் எழுந்து வருகிறது. இராணுவ அதிகாரிகள் மத்தியில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமும், போர் தொடர்ந்து நீடித்தால் இராணுவ வீரர்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது. மேலும், தங்கள் மகன்கள் காசாவில் பணியாற்றுவதை விரும்பவில்லை என்று 900 இஸ்ரேலிய தாய்மார்கள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலண்டுக்கு கடிதம் எழுதியிருப்பதும் இவற்றின் வெளிப்பாடுதான்.

இஸ்ரேல் அரசின் இன அழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் துவங்கிய கல்லூரி – பல்கலைக்கழக மாணவர் போராட்டம் உலகெங்கிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பல நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலிய அரசு – பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் தமது பல்கலைக்கழக நிர்வாகங்கள் கொண்டுள்ள உறவுகளைத் துண்டிக்க வைப்பதில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போராடுபவர்கள் மீது அரசு ஒடுக்குமுறைகள் ஏவப்படும் நிலையிலும், நம்பிக்கையின் வெளிச்சக்கீற்றாக இப்போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலிய அரசுக்கெதிரான இஸ்ரேலிய மக்களின் போராட்டமும் உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும்தான் பாலஸ்தீன மக்கள் மீதான கொடிய போரை நிறுத்துவதற்கான நமக்கான ஆயுதங்கள் ஆகும். மற்றபடி, ஐ.நா. சபை தீர்மானங்களாலும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளாலும் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முடியாது, அவை வெற்றுக் காகிதங்களே.

பாலஸ்தீன குழந்தைகளின் கதறலும் தாய்மார்களின் கண்ணீரும் இன்னும் இலட்சோப இலட்சம் பேரை வீதிக்குக் கொண்டு வரும். மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலும் இப்போராட்டங்களுக்கு முன் மண்கோட்டையாய் சரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க