ண்ணல் அம்பேத்கருக்கே காவி வண்ணம் அடித்த, சங் பரிவாரங்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில தலைவர்களையும் காவிக்கு பலிகொடுக்க கிளம்பியுள்ளனர். வரலாற்றை திரிப்பது, சிதைப்பதின் மேல் சங்கிகள் கட்டியெழுப்பும் இந்துத்துவ அதிகாரத்துக்கு பல சீர்திருத்தவாதிகளும்கூட இரையாகிவிட்டனர். இப்போது வங்கத்தின் கவிஞர் தாகூரை திரிக்கக் கிளம்பியிருக்கிறது சங்கி கூட்டம். அதை தோலுக்கிறது இந்தக் கட்டுரை…

மீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் இசுலாமிய மதத்தை விமர்சித்து ரவீந்திரநாத் தாகூர் எழுதியிருந்ததாகக் கூறி, பல மேற்கோள்கள் தொகுக்கப்பட்டிருந்தன. என்னுடைய நண்பர் இவையெல்லாம் உண்மையா என அறிய விரும்பினார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த மின்னஞ்சல் செய்தி ;

“நாம் உலக கவிஞரான ரவீந்திரநாத்தை துதிக்கிறவர்கள். அவர் இசுலாம் குறித்தும் முசுலீம்கள் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். இசுலாமிய மதத்தை அமைதி மற்றும் மனிதாபிமான மதம் என்றும் அனைத்து மதங்களும் சமமானவை என்றும் சொல்லிக்கொள்பவர்களைக் காட்டிலும் ரவீந்திரநாத் அறிவார்ந்த மனிதர். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்…” இப்படித் தொடங்கி, கேள்வியோடு இறுதியில் முடிகிறது…

ரவீந்திரநாத் தாகூர்

“இப்படியான கெட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ரவீந்திரநாத் போன்ற கவிஞர் முசுலீம்களின் இயல்புகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்போது, இந்து-முசுலீம்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நாம் ஆச்சரியத்துடனும் பேச்சு மூச்சற்றும் விடப்பட்டிருக்கிறோம்”.

மின்னஞ்சல் செய்தியில் ரவீந்திரநாத் எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கோள்களில் சிலது, அமியா சக்ரவர்த்திக்கும் ஹெமந்தபால தேவிக்கும் எழுதிய கடிதங்கள் மற்றும் இந்திய வரலாறு குறித்த கட்டுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அனைத்து மேற்கோள்களையும் என்னால் சரிபார்க்க இயலவில்லை. எட்டு மேற்கோள்களில் ஐந்து மேற்கோளை சரிபார்த்தேன். அவை அனைத்து தாகூர் கூறியவற்றை திரித்து எழுதப்பட்டுள்ளவை.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

தாகூர் சொன்னதாக மின்னஞ்சல் தெரிவித்த மேற்கோள்கள் ஒன்று சிதைக்கப்பட்டவையாகவோ அல்லது தாகூரின் நோக்கத்தை திரிக்கும் நோக்கத்தில் எடுத்தாளப்பட்டவையாகவோ இருந்தன. ஒரு மேற்கோள், தாகூர் இப்படி எழுதியதாக கூறியது…

“ஒவ்வொரு நாளும் கீழ்சாதி இந்துக்கள் முசுலீம்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பண்டிட்டுகள் அதை ஏற்றுக்கொள்வதில்லை”. இந்த வாக்கியத்தில் விடுபட்ட முந்தைய வாக்கியங்கள் என்ன தெரியுமா?

“ஒவ்வொரு நாளும் சமூக விலக்கம் என்னும் அவமானத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள கீழ்சாதி இந்துக்கள்…” என ஆரம்பிக்கிறது. அதாவது சமூகத்தில் உள்ள இந்து மத சாதி ஒடுக்குமுறைகளை பேசுகிறார் ரவீந்திரநாத். இசுலாமை பற்றி அல்ல!

இன்னொரு உதாரணத்தைக் காண்போம்.. தாகூர் சொன்னதாக ஒரு மேற்கோள் இப்படி சொல்கிறது…

“இந்த மதம்(இசுலாம்) எங்கு சென்றாலும் அது தன்னை எதிர்க்கும் மதங்களை நசுக்க அது ஒருபோதும் தயங்கியதில்லை. பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த இந்தக் கொடூரமான தாக்குதலை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது”. இந்த மேற்கோள் தாகூரின் சாந்திநிகேதன் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

நான் இந்தக் கட்டுரையைப் பார்த்தேன். இந்த வாக்கியங்கள் இருந்தன. ஆனால், அவர் சொல்ல வந்த பொருள் வேறு. நான் முழுமையாக அந்தக் கட்டுரையைப் படித்தேன். அந்த கட்டுரையில் தாகூர் மேலும் இப்படிச் சொல்லியிருக்கிறார்…

உ.பி -யில் அம்பேத்கர் சிலைக்கு காவி வர்ணம் பூசிய இந்துத்துவ கும்பல்.

“முசுலீம்களின் வருகையின்போது விழித்தெழுந்த புனிதர்களின் (நானக், ரவிதாஸ், தாது போன்றவர்களை தாகூர் குறிப்பிடுகிறார்) கருத்துக்களை விவாதித்தால், இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு பாரதம் அதன் உள்ளார்ந்த உண்மையை மறைத்து தாங்கிநின்றது… முசுலீம் மதத்தை எதிர்க்கத் தேவையில்லை என்பதை பாரதம் அப்போது காட்டியது”.

தாகூரை நாம் உண்மையாக அறிவோம். அவர் இந்து மற்றும் முசுலீம்களின் நலன் விரும்பியாக இருந்தார். அவர்களின் ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் ஆர்வமுள்ள ஒருவராக இருக்கவே அவர் விரும்பினார். ஆனால், வகுப்புவாத ஒற்றுமையை வளர்ப்பதில் உள்ள முரண்பாடுகளையும் அவர் காணத் தவறியதில்லை. இந்துக்களும் முசுலீம்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய விருப்பத்தை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

வங்காளதேசத்தின் ஷேக் முஜுபூர் ரஹ்மன் தன்னுடைய சுயசரிதையில், பிரிட்டீஷ் இந்தியாவில் இந்து வங்காள தலைவர்களில் மூவர் மட்டுமே வகுப்புவாதத்துக்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தாகூர், சித்ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ் ஆவர்.

வரலாற்றாசிரியர் சுமித் சர்கார், 1905-ல் வங்காள பிரிவினையை எதிர்த்து நடந்த சுதேசி இயக்க போராட்டத்தின்போது இந்து ஜமீன்தாரர்கள் இசுலாமிய விவசாய தொழிலாளர்களை ஒடுக்கியவிதம், தேசியவாத இயக்கத்திலிருந்து தாகூருக்கு எத்தகைய விலக்கத்தை கொடுத்தது என்பது குறித்து விளக்கமாக பேசுகிறது.

இப்போது மேற்குவங்க இந்துக்களை கவர முசுலீம்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட, கேலியாக்கப்பட்ட தாகூரைக் காணும்போது எனக்கு அதிர்ச்சியாகிறது.

படிக்க:
♦ வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
♦ மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் !

பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்கத்தில் பெற்ற மக்களவை தொகுதிகள் அதிகமாகியுள்ளன. வங்கத்தில் உள்ள நகர்ப்புற, படித்த நடுத்தர மக்களிடையே இந்து மத உணர்வுகளைப் பயன்படுத்தி மதவாதம் ஊடுருவியுள்ளது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அதிகமாகும். அது விசாரணைக்குரியதும்கூட.

1947 முதல் மேற்கு வங்கத்தில் மதவாத பிரச்சினைகள் ஆழமான வடுக்களை விட்டுச் சென்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இப்போதிருக்கும் நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்துக்களிடையே முசுலீம்களுக்கு எதிரான மனநிலை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தாகூரின் மேற்கோள்கள் திரிக்கப்பட்டு உலவ விடப்படுகின்றன.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சி வகுப்புவாத பிரிவினைகளால் பிரிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று அல்ல. மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ள ஒரு பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மைவாத அரசியலை செய்ய முனைவது அமைதியை உருவாக்காது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் நன்மை செய்யலாம்; அதனால் மீன்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?


கட்டுரை : தீபேஷ் சக்ரவர்த்தி
அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க