விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம். இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டதுதான் “இந்து மதத் தத்துவம்” (நூல்). மக்களை நல்வழிப் படுத்துவதற்கானது எனக் கூறிக்கொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும் இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவுபடுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல; அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன.

பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும். படியுங்கள்; பரப்புங்கள் ! ( நூலின் பதிப்புரையிலிருந்து…)

“…சாதியமைப்பை விவரித்த முன்னோடி என்ற நிலையில் மனு சாதிகள் எப்படி தோன்றின என்பதையும் கூறுகிறார். எனவே, மனு கூறும் சாதியமைப்பின் தோற்றம்தான் என்ன? இதற்கான அவரது விளக்கம் மிக எளிமையானது. நாற்பெரும் வருணங்களைத் தவிர்த்த மீதி சாதிகள் கீழானவை. நாற்பெரும் மூலச் சாதிகளைச் சேர்ந்த ஆண், பெண்களின் கூடா ஒழுக்கத்திலிருந்து உருவானவையே இந்த சாதிகள். நாற்பெரும் மூலச் சாதிகளைச் சார்ந்த ஆண், பெண்களிடையே நிலவிய பரவலான ஒழுக்கக்கேடுகளும் நடத்தைப் பிறழ்வுகளும் எண்ணற்ற சாதிகள் உருவாக வழிவகுத்தன; இத்தகைய சாதி, மக்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகக் காரணமாயின. நாற்பெருஞ் சாதி ஆடவர் – பெண்டிரின்பால் எத்தகைய பழியைச் சுமத்துகிறோம் என்பதைச் சிறிதேனும் பொருட்படுத்தாமலேயே அவர்கள் ஒழுக்கத்தின்பால் குற்றஞ் சுமத்துகிறார் மனு. குறிப்பாக, சண்டாளர் எனப்பட்ட தீண்டப்படாத சாதி மக்கள் பிராமணப் பெண்ணுக்கும், சூத்திரம் ஆடவனுக்கும் பிறந்த மக்கள். இதன்படி பார்க்கும்போது சண்டாளர்கள் எண்ணற்றவர்களாக இருப்பதால், ஒவ்வொரு சூத்திர பிராமணப் பெண்ணும் ஒழுக்கங்கெட்டவளாக, பரத்தையாக இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இதேபோல் ஒவ்வொரு சூத்திர ஆடவனும் சோரம் போனவனாக இருந்திருக்க வேண்டும். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மனு பல்வேறு சாதிகளின் தோற்றத்துக்குக் கூறும் மதிகேடான பழி சுமத்தல் வரலாற்றுண்மைகளைத் திரித்துக் கூறலாகவே அமைகிறது.” (நூலின் பின் அட்டையிலிருந்து…)

படிக்க:
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?

… இந்துச் சாதி அமைப்பால் சமுதாயத்துக்கு மிகுந்த பயனுள்ளதென கூறும் இந்துக்கள் பலரை அறிவேன். ஆகவே, இதனை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட விரும்பவில்லை. அவர்கள் இந்த முறையினை மனு புத்திசாலித்தனமாக உருவாக்கியதோடு புனிதமானதாகவும் ஆக்கியுள்ளார் எனப் பாராட்டுகின்றனர். சாதியைப் பார்ப்பதனாலேயே இத்தகைய நோக்கு உருவாகிறது. அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சாதியால் பெறப்படுகின்ற சமுதாயப் பயன் அல்லது பயனின்மையைச் சாதியின் தனித்தனித் தன்மைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்துத்தான் கணிக்க வேண்டும். சிக்கலை இவ்வகையில், எதிர்கொண்டால், பின்வரும் முடிவுகள் புலப்படும்.

(1) தொழிலாளரைச் சாதி பிரிக்கிறது
(2) சாதி, வேலையில் ஈடுபாடு கொள்வதிலிருந்து பிரிந்து வருகின்றது
(3) சாதி, உடலுழைப்பில் இருந்து புத்திசாலித்தனத்தைப் பிரிக்கின்றது
(4) சாதி, அடிப்படை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதைத் தடுத்து ஊக்கம் அற்றவனாக்கிவிடுகின்றது
(5) சாதி, ஒருவரோடொருவர் இணைந்து பழகுவதைத் தடுக்கின்றது.

சாதி முறை தொழிலை மட்டும் பிரிப்பதாக இல்லை; அது தொழிலாளரையும் பிரித்து விடுகின்றது. சமூகத்துக்கு தொழில் பாகுபாடு தேவைதான். ஆனால், எந்த நாகரிகச் சமூகத்திலும் தொழில் பகுப்போடு, தொழிலாளர்களைச் சேரமுடியாதபடி பிரிவுகளாக, இயற்கைக்குப் புறம்பாகப் பிரிப்பதைக்காண முடியாது. சாதிமுறை தொழிலாளர் பிரிவு மட்டும் அல்ல. அது தொழிற்பகுப்பில் இருந்து மாறுபட்டது. சாதி முறை ஒன்றுக்குமேல் ஒன்றாய் அடுக்கு அடுக்காக உயர்வு தாழ்வுகளை வகுக்கும் தொழிலாளர்களின் அமைப்புமுறை. வேறெந்த நாட்டிலும் தொழில் பகுப்புடன் தொழிலாளர்களிடையில் வித்தியாசங்கள் இல்லை. சாதி முறைக்கு எதிராக மூன்றாவதாக இன்னொரு விமர்சனமும் உள்ளது. இந்த தொழில் பகுப்பு தானாக வந்ததல்ல; பிரிவுகள் இயல்பான பணி ஈடுபாட்டால் வந்தவையும் அல்ல. தனிப்பட்டவரின் திறமையின்மையை வளர்த்து, தானே தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செய்யும் அளவிற்கு உருவாக்க ஒவ்வொருவரின் தனித்திறமையையும் சமூகத் திறனையும் வளர்க்க வேண்டும்.

ஒருவர் பெற்றுள்ள அடிப்படைப் பயிற்சியைப் பொறுத்ததாக இல்லாமல் பெற்றோரின் சமூக அந்தஸ்தை வைத்தே ஒவ்வொருவருக்கும் வேலை தரும் வாய்ப்புள்ளதால் சாதி முறையில் அடிப்படைத் திறன் கொள்கையை மீறுகிறார்கள். இன்னொரு நோக்கில் பார்த்தால், சாதி முறையின் விளைவான இந்த அடுக்கு முறை ஆபத்தானது ஆகிறது. இதனால் தொழில் எப்போதும் நிலையாய் நிற்பதில்லை விரைவான, தலைகீழ் நிலையை அடைகிறது. இத்தகைய மாற்றங்களால் எவரும் தம் தொழிலை எளிதில் மாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மாறுகின்ற சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றிக் கொள்ளும் நிலையில் இல்லாவிட்டால் அவனால் வயிற்றைக் கழுவ முடியாது.

சாதி அமைப்பில் ஓர் இந்து, நிறைய ஆட்கள் தேவைப்படுகின்ற வேலைக்கு மாற்றிக் கொள்ள நினைத்தாலும் அந்தத் தொழில் அல்லது அந்த வேலை தன்னுடைய பரம்பரைத் தொழிலாக இல்லாவிட்டால் அதைச் செய்யமாட்டார். ஓர் இந்து பட்டினி கிடந்தாலும் கிடப்பாரே ஒழிய தன் சாதிக்கு உரியது அல்லாத தொழிலைச் செய்ய மாட்டார். இதற்கு மூலகாரணம் சாதி முறைதான். (நூலிருந்து பக் 86-87)

நூல்: அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்
ஆசிரியர்: அம்பேத்கர்

வெளியீடு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110/63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024
தொலைபேசி: 94448 34519

பக்கங்கள்: 204
விலை: ரூ 80.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

2 மறுமொழிகள்

 1. //ஓர் இந்து பட்டினி கிடந்தாலும் கிடப்பாரே ஒழிய தன் சாதிக்கு உரியது அல்லாத தொழிலைச் செய்ய மாட்டார்.//
  It is not true,
  Just offer MORE PAY(As Group I pay) and rest for TOILET CLEANING(Arundhadhiar work),
  and give less pay(Group IV pay) for IAS, IPS
  Than all BRAHMINS opt for Arundhadhiar work,
  Not for IAS, IPS or Prohitham

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க