ஒரு விரல் புரட்சி செய்தால் அமெரிக்க உத்தரவை மீறி ஈரானிடன் கச்சா எண்ணெய் வாங்க முடியுமா ?
பிஜேபி ஆதரவாளர்கள் கிட்ட கேட்டா, எங்க தலைவர் வீராதி வீரன் சூராதி சூரன், ‘அவர் சிவந்த கண்களை காட்டினால் போதும் அதை பார்த்து இந்த லோகத்துல இருக்கற அனைத்து தலைவர்களும் நடுங்குவாங்க’ன்னு எல்லாம் அடிச்சு விடுவாங்க.
பிஜேபி-காரர்கள் இப்படி என்றால், தேர்தல் வந்துவிட்டதால் மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்றை தான், அதுதான் ‘ஒரு விரல் புரட்சி’ – தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம், அதனால் ஓட்டு போடுங்கள்!
எப்போதும் போல, உண்மை இவர்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது!
மே 2019 முதல் இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி மறுத்துவிட்டது என்று செய்திகள் வருகின்றன. நமக்கு இயல்பாக எழும் கேள்வி / எழவேண்டிய கேள்வி, ‘இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் எவ்வாறு தடை செய்ய முடியும்?’ என்பதுதான்.
இதை புரிந்துகொள்ள கொஞ்சம் பின் நோக்கி செல்ல வேண்டும்.
அதற்கு முன் சில தகவல்கள். இந்தியா தனது பெட்ரோலிய தேவைகளை இறக்குமதி செய்துதான் பூர்த்தி செய்கிறது என்று நமக்கு தெரியும். சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்களையே நாம் உபயோகிக்கிறோம். இதில் 10-12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதாகும்.
ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. பொருளாதாரத் தடையால் அத்தியாவிசய பொருட்களை இறக்குமதி செய்வதில் ஈரான் மிகவும் சிரமப்பட்டது. மற்ற நாடுகளின் அழுத்தத்தாலும் ஈரான் கொஞ்சம் விட்டுக்கொடுக்க முன்வந்ததாலும் ஒபாமா அவருடைய பதவியின் இறுதி காலத்தில் ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்; ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிடுவதாக உத்தரவாதம் அளித்தது. திருவாளர் டிரம்ப் அதிபராகும் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது!
டிரம்ப் பிரச்சாரத்தின்போதே ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறிக்கப்போவதாக பேசி வந்தார். பதவி ஏற்று ஒரு ஆண்டிற்கு பிறகு, மே 2018-ல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தை முறித்து, ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தார்.
படிக்க:
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு!
♦ ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!
விதித்தால் விதிக்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?
அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்ததால் இந்தியாவையும் ஈரானிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க கூடாது என்று சொல்கிறது.
‘நீ யாருடா நான் எங்க, என்ன வாங்கணும்னு சொல்றதுக்கு?’ என்று இந்தியாவால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், இந்தியா டாலர் கொடுத்துதான் எண்ணெய் வாங்குகிறது. அந்த டாலர்களை எல்லாம் அமெரிக்கன் வங்கிகள் வழியாகத்தான் ஈரானுக்கு கொடுக்க முடியும். அந்த வங்கிகள் பொருளாதார தடையினால் அந்தச் சேவையை செய்ய முடியாது என்று சொன்னார்கள்.
2-3 வருடங்களுக்கு முன், ஒபாமா ஆட்சி காலத்தில் ஈரான் மீது பொருளாதார தடை இருந்தபொழுதும், இதே பிரச்சனை வந்தது. அப்பொழுது, இந்தியாவிடம் ரூபாயிலேயே பணம் பெற்றுக்கொள்வதாக ஈரான் சொன்னது. இந்தியாவும் ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி நிறுவனங்களை இந்திய வங்கி ஒன்றில் கணக்கு துவங்க சொல்லி அந்த வங்கிக் கணக்கில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கான பணத்தைச் செலுத்தி வந்தார்கள். ஈரான் அந்த ரூபாய் பணத்தை வைத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்தி வந்தது.
இந்த ஏற்பாடு மே 2018-ல் டிரம்ப் பொருளாதார தடை விதித்த பொழுது வேலை செய்யாமல் போய்விட்டது. ஏனென்றால், ஒபாமா ஆட்சியின் பொருளாதார தடையின்போதே அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாத மாதிரி ஒரே ஒரு இந்திய வங்கிதான் இருந்தது. ‘அமெரிக்க பொருளாதார தடை இந்திய வங்கியை எப்படி கட்டுப்படுத்தும்’ என்று சந்தேகம் வருகிறதா? வரவேண்டும்!
பெரும்பாலான இந்திய வங்கிகள், அமெரிக்காவில் கிளைகள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் டாலரில் பரிவர்தனைகளும் சொத்துக்களும் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட வங்கிகளின் டாலர் சேவைகளை அமெரிக்க அரசால் முடக்க முடியும். ஈரானுடன் பரிவர்த்தனை செய்யும் எந்த ஒரு நிறுவனத்தையும் அமெரிக்க அரசாங்கம் முடக்க முயற்சி செய்யும்.
கடந்த முறை இருந்த ஏற்பாட்டில் யூகோ வங்கி என்ற ஒரு வங்கிக்கு அமெரிக்க சொத்துக்களோ சேவைகளோ எதுவும் இல்லாமல் இருந்ததால் அந்த வங்கியை உபயோகப் படுத்தி ரூபாயில் ஈரானுக்கு பணம் செலுத்த முடிந்தது. ஆனால் இந்த முறை, யூகோ வங்கிக்கும் அமெரிக்க சொத்துக்கள் இருப்பதால் ஒரு வழியும் இல்லாமல் நிற்கிறது இந்திய அரசாங்கம்.
பணம் செலுத்துவது போக, எண்ணெயை ஏற்றி வரும் கப்பல், அந்த கப்பலுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை அமெரிக்காவால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். பொருளாதாரத் தடை விதித்த பின், ஈரானுடன் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டாலும் சம்பந்தப்படும் நிறுவனத்தை அமெரிக்காவில் செயல்பட அனுமதிக்காது. எண்ணெய் கப்பல் நிறுவனங்களும், அதற்குக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் உலகத்திலேயே மிகக் குறைவாகத் தான் இருக்கும், அவற்றுக்கும் அமெரிக்காவுடனான வியாபாரம்தான் முதன்மையானதாக இருக்கும். இவ்வாறிருக்க அமெரிக்கா எளிதில் கட்டுப்படுத்தி விடுகிறது.
படிக்க:
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்
இவை அனைத்தையும் சரி செய்துதான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு ஈரானிடம் எண்ணெய் வாங்கியது என்பது வேறு கதை.
இந்த நிலையில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை திடீர் என்று நிறுத்தினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம்; அதனால் எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்காவிடம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 6 மாதத்திற்குள் ஈரானிடமிருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்கா விலக்கு வழங்கியது. அந்த 6 மாத விலக்கு ஏப்ரல் 2019-உடன் முடிவுக்கு வந்தது. விலக்கை நீட்டிக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 1947-ல் இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்குமாறு மேற்கத்திய நிறுவனங்களான ஷெல் (Shell), கால்டெக்ஸ் (caltex) போன்றவற்றிடம் இந்திய அரசு கேட்ட பொழுது அந்த நிறுவனங்கள் மறுத்துவிட்டன. அதன் பிறகு, 1960-களில் ஈரானுடன் இணைந்துதான் இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு உதவியது ஈரான்! அப்படி வலுவாக இருந்த உறவு இப்போது எப்படி இருக்கிறதென்று பாருங்கள்!
விலக்கு நீட்டிப்பு கேட்ட பொழுது, விலக்கை நீட்டிக்கவில்லை என்றால் இந்தியா அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும் என்று இந்தியா அமெரிக்காவிடம் வாதிட்டது, முறையிட்டது. அதற்கு ‘இந்தியா அமெரிக்காவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கலாம்’ என்று அமெரிக்கா பதிலளித்தது. ஆனால், இந்த உத்தரவாதமும் இப்போது காற்றில் பறந்துவிட்டது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை அதிகமாகிறது அமெரிக்கா விற்கும் விலையை குறைக்க வேண்டும் என்று இந்தியா கேட்ட பொழுது, தனியார் நிறுவனங்களை இந்த விலைக்கு தான் விற்க வேண்டும் என்று எங்களால் வற்புறுத்த முடியாது என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் தெரிவித்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.
இன்னும் சில முக்கிய செய்திகளும் வந்தன. இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18 உடன் ஒப்பிடும் பொழுது 2018-19-ல் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
குறைந்த விலையில் இரானிடம் எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக அதிக விலையாக இருந்தாலும் தன்னிடம்தான் வாங்க வேண்டும் என்பது அமெரிக்கா ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று புருடா விடுவதற்கு ஒரு காரணம். இதற்குமேல் வெளிப்படையாக இருக்கவும் முடியாது.
இது ‘பாவப்பட்ட’ ஏழைகளை பாதிக்கின்ற விஷயமோ, இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பாதிக்கக்கூடிய விஷயமோ அல்ல, அடுத்த முறை பெட்ரோல் பங்க் செல்லும்போது நம்மை நேரடியாக பாதிக்கப்போகும் விஷயம்.
இந்த பிரச்சனை போல பல பிரச்சனைகளுக்கு நமக்கு கொடுக்கப்படும் ஒரே மாத்திரை – ‘ஓட்டு’. ஒரு ஓட்டு போட்டால் இது போன்ற அனைத்து பிரச்சனைகளை பற்றியும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியாவை மட்டுமல்ல – நம்மைப் போன்ற பல நாடுகளை காலனி போல நடத்துகிறது, இதற்கு ஒரே ஓட்டு தீர்வு தந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
ஓட்டு போடுவதுடன் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
சும்மா ஊர்ல போஸ்டர் ஒட்டுறவன், பாட்டு பாடுறவன், சிலைக்கு மாலை போடுறவன், மனித உரிமைக்காக போராடுபவர்கள், தலித்துகளுக்காக போராடுபவர்கள், அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள், எங்கள் மண்ணை, காட்டை, காற்றை நாசம் செய்யாதே என்று போராடுபவர்கள் – என இவர்கள் அனைவரையும் அரசு பிடித்து சிறையில் அடைக்கிறது.
என்ன காரணத்துக்காக சிறையில் அடைக்கிறது தெரியுமா? இவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றுச் சொல்லி சிறையில் அடைக்கிறது. இந்த இறையாண்மை என்றால் என்ன? ஒரு நாட்டுக்கு தன்னைத் தானே ஆளும் உரிமை என்பதுதான் இறையாண்மை. நாட்டு மக்கள் போஸ்டர் ஓட்டுவதால், பாடுவதால், போராடுவதால், இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு நடப்பதாக அரசு கூறுகிறது. இந்த சிறிய மனிதர்கள் இவ்வளவு பலம் கொண்ட அரசை என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றங்களும் கேட்பது இல்லை, நாமும் பெரும்பாலும் கேட்பது இல்லை.
உண்மை என்னவென்றால், இது போல் போராடும் சிறிய மனிதர்களால்தான் இந்தியாவின் இறையாண்மை மீட்கப்படுகிறது, காப்பாற்றப்படுகிறது. தூத்துக்குடியில் லண்டன் நிறுவனம் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகட்டும், நியம்கிரியில் அதே நிறுவனம் காடுகளையும் மலைகளையும் அழிப்பதாகட்டும், ஒரிசாவில் கொரிய நாட்டை சேர்ந்த போஸ்கொ நிறுவனம் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகட்டும், பல இடங்களில் வெளிநாடுகளில் இருந்து வரவிருந்த அணு உலைகளாகட்டும் – இவை அனைத்தையும் இந்திய அரசு தடுக்கவில்லை, எளிய மனிதர்களின் போராட்டங்கள்தான் தடுத்தன! போராட்டங்கள் தான் இறையாண்மையைக் காப்பாற்றின!
ஒரு விரல் புரட்சி செய்தாலும் செய்யாவிட்டாலும், போராட்டங்களே நம்மையும், நமது சந்ததிகளையும், இறையாண்மையையும் காப்பற்றும்!
செய்தி ஆதாரங்கள் :