தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்காலை விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியும் அதை நிரந்தரமாக மூடச்சொல்லியும் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை நிகழ்த்திய படுகொலைத்தாக்குதலில் 13 பேர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் படுகாயமுற்றனர். தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் உருக்காலை விரிவாக்கத்திற்கு தற்காலிகத் தடை விதித்தும் மக்கள் கருத்துக்கேட்பிற்குப் பிறகே விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்நிறுவனத்திற்கு மே 23 ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் வேதாந்தா நிறுவனமோ மக்களின் கருத்தைக் கேட்காமலேயே ஆலையின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருக்கிறோம் என்று சாதிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அந்நிறுவனத்தால் எந்த நம்பிக்கையில் இப்படி கூற முடிகிறது?
சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நீதிமன்றத்தின் பல்வேறு ஆவணங்களின் படி 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதான் வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு பெருநிறுவனங்களுக்கு பாதிக்கப்படும் பகுதியைச் சேர்ந்த மக்களது கருத்தைக் கேட்காமலேயே ஆலை விரிவாக்கம் செய்ய உதவி செய்துள்ளது.
நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஆவணங்களைப் ஆய்வு செய்த போது பல்வேறு நிறுவனங்களின் நெருக்குதலுக்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்ட இந்த விதிவிலக்கு தெரிய வந்துள்ளது. இந்த விதிவிலக்கு முன்னால் சுற்றுச்சூழல் அமைச்சரால் “விளக்கம்” என்ற பெயரால் வழங்கப்பட்டது. இத்திருத்தம் தான் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தூத்துக்குடி போன்ற இடங்களில் மக்களது கருத்துக்களை கேட்காமல் பல மாதங்கள் முன்னதாகவே தொழிற்சாலை நிர்மாணத்தைத் தொடங்க வழிவகை செய்தது. திட்டத்தை தொடங்கும் முன் சட்டத்தின் படி மக்களது கருத்தினை கேட்க வேண்டும் என்று முந்தைய காங்கிரசு அரசு 2014 மே மாதம் கூறியிருந்த நிலையில் மோடி அரசின் விளக்கம் என்ற பெயரிலான சட்டத்திரிப்பு வேலை வேதாந்தா உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கு நல்வாய்ப்பாய் அமைந்துவிட்டது.
வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான மோடி அரசின் டிசம்பர் மாத அரசாணை மோசடியானது என்பதை 2016 ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயம் கண்டறிந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தியது. ஆனால் சட்டத்திருத்தத்தை திரும்பபப்பெற்றால் பலத்திட்டங்களை அது பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
ஆயினும் முடிவில் மோடி அரசின் 2014 டிசம்பர் திருத்தத்தை பசுமைத் தீர்ப்பாயம் இரத்து செய்தது. சுற்றுச்சூழல் அனுமதியில்லாத தொழில்துறை பூங்காக்களில் புதிய திட்டங்களைத் தொடங்க பொதுமக்களின் கருத்துக் கேட்பை கட்டாயமாக்க தேவையான புதிய ஆணையை சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால் அப்போது தூத்துக்குடியில் தன்னுடைய உற்பத்தியை இரட்டிப்பாக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கான காலநீட்டிப்பை வேதாந்தா நிறுவனம் பெற்றிருந்தது.
பசுமைத்தீர்ப்பாயத்தின் 2016 ம் ஆண்டு தீர்ப்பு மற்றும் வேறு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பிற்கு பிறகே தொழிற்சாலையை விரிவாக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சுற்றுச்சூழல் அனுமதிக்கான வழக்கமான விதிமுறைகள் :
பெரும்பாலும் பெரிய தொழில்துறைத் திட்டங்கள் அனைத்திற்கும் மைய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட வேண்டும். தொழில் தொடங்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்கு விட வேண்டும். பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களால் கருத்துக்கேட்பும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளும் ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். கருத்துக்கேட்பின் போது அத்திட்டத்தை மக்கள் நிராகரிக்க முடியாது. ஆனால் திட்டம் தொடங்கும் முன்பே மக்களது பிரச்சினைகள் அனைத்தும் அந்நிறுவனத்தாலும் மத்திய அரசினாலும் தீர்க்கப்பட வேண்டும்.
2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் சில விதிவிலக்குகளை உருவாக்கியது. ஒரு தொழிற்பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருந்தால் அங்கே தொடங்கப்படும் சிறிய தொழிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மேலும் அதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்பதே அது.
இந்த விதிவிலக்குக் குறித்தக் கேள்விகள் 2014 மே மாதம் முந்தைய காங்கிரசு ஆட்சியில் எழுப்பப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் 2006 ம் ஆண்டு உருவாக்கப்படுவதற்கு நீண்ட நாட்கள் முன்பே ஒரு தொழிற்துறை பூங்கா தொடங்கப்பட்டு அதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் கிடைக்காமலிருந்தால் என்ன செய்வது? இது போன்ற தொழிற் பூங்காக்களுக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லையா என்பதே அக்கேள்விகளில் மையமானது.
காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2014 மே 16 ம் தேதி அதற்கு விளக்கம் கொடுத்தது. தொழிற் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருந்தால் மட்டுமே அங்கே தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு பொது மக்களது கருத்துக்கேட்பு தேவையில்லை என்று அது கூறியது. 2006 ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளின் படி மதிப்பீடு செய்யப்படாத தொழிற்பூங்காவில் தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு பொதுமக்களது கருத்துக்களை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று அது கூறியது.
ஆனால் “வியாபாரத்தை எளிதாக்குவது” என்ற தாரக மந்திரத்தை முழக்கமாக கொண்டு 2014 மே மாதம் 26 ம் நாள் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு பின்னர் அதை தலைகீழாக மாற்றியது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு கடிதங்கள் வந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக புதிய “விளக்கத்தை” 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் தேதி ஒரு குறிப்பாணையாக மைய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்துறை பூங்காவில் புதிதாக தொடங்கவிருக்கும் தொழில்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை என்பதே அந்த விளக்கத்தின் பின் இருக்கும் திரிபு வேலை.
இப்படி காங்கிரசு அரசினால் சட்டபூர்வமாக செய்யப்பட்டத் திருத்தத்திற்கு வெறும் குறிப்பாணை மூலமாக புதிய “விளக்கம்” மோடி அரசினால் கொடுக்கப்பட்டது வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு நற்பயனாய் வந்து சேர்ந்தது. வியாபாரத்தை எளிதாக்குவதற்காக ஓராண்டிலேயே செய்யப்பட்ட மோடியின் குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு பெருமை பொங்க இந்த மாற்றத்தைக் குறிப்பிட்டது.
வேதாந்தா பயனடைந்தது எப்படி:
தூத்துக்குடியிலுள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் தான் வேதாந்தாவின் தாமிர உருக்காலை முதலில் தொடங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் வருவதற்கு முன்னரே அது தொடங்கப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தன்னுடைய தாமிர உருக்காலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனுமதியை 2009 ம் ஆண்டில் முதலில் கோரியது. காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது.
ஆனால் அந்த சுற்றுச்சூழல் அனுமதி ஐந்தாண்டுகளில் காலாவதியாகிப் போனது . மீண்டும் 2013 ம் ஆண்டு அனுமதியை நீட்டிக்க அன்றைய காங்கிரசு அரசிடம் ஓடியது வேதாந்தா நிறுவனம். ஆனால் காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கால நீட்டிப்பை இம்முறை 2014 ஆம் ஆண்டு மே மாதம் மறுத்து விட்டது. ஆனால் வேதாந்தா நிறுவனத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 2018 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க 2015 ம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதித்தது புதிதாக பதவியேற்ற மோடி அரசு. தொழில்களை தொடங்க பொதுமக்களின் கருத்துக்கேட்பு தேவையைக் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்த வந்த சூழலில் தான் இது நடந்தேறியது. தொடர்ந்து வேதாந்தா நிறுவனமும் விரிவாக்கத்தைத் தொடங்கியது.
இதனையொட்டி தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெடித்து நூறு நாட்களையும் கடந்தது. தொடர்ந்து நடந்தப் போராட்டத்தை தமிழக அரசு 13 பேரை படுகொலை செய்து நசுக்கியது இரத்தகறை படிந்த வரலாறாகிப் போனது.
– வினவு செய்திப் பிரிவு
மேலும் படிக்க:
Thoothukudi protest: How NDA govt decisions helped Vedanta bypass norms