தொழில் நுட்பத்தால் வழிநடத்தப்படும் சமூகமாக நாம் மாற்றப்பட்டு வருகிறோம். நாம் எப்படி வாழவேண்டும் நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி இன்று வடிவமைத்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் நாம் ஒரு கையடக்க டிஜிட்டல் எந்திரத்தில் விரல்களால் தேய்த்து தேய்த்து பக்கங்களைத் தள்ளி ஒரு மின் புத்தகத்தை படிக்க முடியும் என்பதை கற்பனை செய்திருக்க மாட்டோம். இன்று அதை தொழில்நுட்பம் சாதித்திருக்கிறது. தற்காலம் நம்மில் பெரும்பான்மையினர் டிஜிட்டல் வகையிலான வாசிப்பையே கொண்டிருக்கிறோம். அது கிண்டில் மூலம் அல்லது ஒரு மின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக வாசிப்பதாக இருக்கலாம். அல்லது உங்களது ஆண்ட்ராய்டு போனில் நடப்பு செய்திகளையோ வாட்ஸ்அப் அரட்டைகளை மேய்வதாக இருக்கலாம்.

எனினும் இன்றும் கூட நம்மில் சிலர் டிஜிட்டல் வாசிப்பை வசதியாகவும் வேறு சிலரோ அச்சு புத்தக வாசிப்பை வசதியாகவும் கருதுகிறார்கள். இந்த இரண்டு முறைகளிலும் என்ன வேறுபாடு இருக்கிறது, இரண்டின் சாதக பாதகங்கள் என்ன என்பன குறித்து விவாதிப்போம்

அச்சு வாசிப்பு அழிந்து விட்டது, அது டைனோசர் போல் அழிவிற்கான நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது என்று சில டிஜிட்டல் சித்தாந்தவாதிகள் கருதுகின்றனர். உண்மை என்னவோ வேறொன்றாக இருக்கிறது. பொதுவில் படிப்பது என்று எடுத்துக் கொண்டால் மக்கள் அச்சு புத்தகமாக படிப்பதற்கு தான் விரும்புகிறார்கள். டிஜிட்டலில் படிப்பதற்கு பெரிய அளவில் விரும்புவதில்லை. அல்லது டிஜிட்டல் உலகில் வாசிப்பு என்றொரு துறையை அவர்கள் முக்கியமான ஒன்றாக கருதுவதில்லை.

டிஜிட்டல் வாசிப்பை பொறுத்த வரையிலும் அது குறுகிய கட்டுரைகள் குறுஞ்செய்திகள் ஆகியவற்றை மட்டுமே படிப்பதற்கு அதிகம் பயன்படுத்துகிறது. இப்படித்தான் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் நம்மிடம் பிரபலமாகியிருக்கிறது. ஃபேஸ்புக்கில் வரும் நிலைத்தகவலில் (Read more) எனப்படும் மேலும் என்ற இணைப்பு இருந்தால் 100-க்கு 80 பேர் அதை சொடுக்கி படிப்பதிதல்லை. அப்படியே சொடுக்கினாலும் அதை சுட்டியின் உதவியோடு பறந்து பறந்து படிப்பார்கள். முழுக்கட்டுரையையும் ‘பார்ப்பார்களே’ ஒழிய படிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

மேலும் டிஜிட்டல் வாசிப்பில் கவனச் சிதறதல் ஒரு முக்கியமான குறை. இணைய இணைப்போடு ஒரு மின் புத்தகத்தை நாம் வாசிக்கும் போது திரையில் தென்படும் தொடர்புடைய அல்லது நமது உலவல் வரலாறு தொடர்புடைய ஏதாவதொரு இணைப்பை அழுத்தி அதன் பிறகு அடுத்த இணைப்பு என்று கடத்தப்படுவோம். இணைய இணைப்போடு வேலை செய்யும் கணினித் துறை சார்ந்தவர்களது வேலைத்திறனையும் இந்தப் பண்பு பாரதூரமாக பாதிக்கிறது. இதுவே பிரவுசிங் எனப்படும் இணைய உலவலாக கருதுப்படுகிறது.

அச்சு புத்தக வாசிப்பின் பலன்கள்

அச்சு புத்தக வாசிப்பு என்பது அளப்பரிய பல பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சிலர் சமீபத்திய வருடங்களில் செய்த ஆய்வுகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது. அதன்படி புத்தக வாசிப்பு மட்டுமே நீங்கள் கவனமாக படிப்பதற்கும் படித்ததை கிரகிப்பதற்கும், கிரகிப்பதை மனதில் பதிய வைத்து ஒழுங்கு படுத்துவதற்கும் பயன்படுகிறது.

ஒரு அச்சு புத்தகத்தை வாசிக்கும் பொழுது நமது மூளையானது சிக்கலான தகவல்களை அதன் இணைப்பை, இணைப்பு உருவாக்கும் அரூபமான கருத்துச் சித்திரத்தை,  நீண்ட வாக்கியங்களை புரிந்து கொள்ளும் விதமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. அதாவது புத்தக வாசிப்பின் போது நமது மூளை அதற்கேற்றபடி புதியதொரு இயங்கு நிலையில் தகவமைத்துக் கொள்கிறது.

இந்த மாற்றம் டிஜிட்டல் வாசிப்பின்போது நடப்பதில்லை. இவையெல்லாம் நம்மை அறியாமல் மூளையில் நடக்கும் மாற்றங்கள் என அந்த ஆய்வுகள் கூறுகின்றன. புத்தக வாசிப்பு என்பது ஒரு குவிமையக் கவனப் பணியாக இருப்பதால் ஒன்று நீங்கள் அந்த புத்தகத்தை ஒன்றி விரும்பிப் படிக்க வேண்டும். விருப்பமில்லை என்றால் எடுத்த புத்தகத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது செய்யப் போய்விடுவீர்கள்.

டிஜிட்டல் உலகில் இந்த விருப்பமின்மை என்பது பல்துறை கவன ஈர்ப்பால் இணைய உலவலை நாம் மூடுவதற்கு பதில் வெறொன்று என்று தாவிச் செல்வதற்கு தோதாக இருக்கிறது. இதன்படி மூளையானது டிஜிட்டல் என்று வந்தாலே குரங்கு போன்றதொரு தாவல் நிலைதான் பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்கிறது. கவனத்தை இழந்து நிற்கிறது.

வாசிப்பு என்பது மனித சமுதாயத்தின் தொழில்நுட்ப உரையாடல் என்கிறார்  நார்வே நாட்டின் ஸ்டாவென்ஜர்  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஆனி மேங்கன் (Anne Mangen of Norway’s University of Stavenger). என்ன இருந்தாலும் பௌதீக ரீதியாக ஒரு புத்தகத்தைத் தொட்டுப் படிப்பது உணர்ச்சி சார்ந்த அனுபவமாக இருக்கிறது என்கிறார் அவர். இது முற்றிலும் உண்மை என்பவர் வாசிப்பு என்பது ஒரு தாவித்தாவி இங்கும் அங்கும் மேய்வது அல்ல அது குறிப்பான கவனத்தைக் கோரும் ஒன்று என்கிறார் ஆனி.

டிஜிட்டல் வாசிப்பின் பிரச்சினைகள்

கணினித் திரையில் வாசிப்பது என்பது அச்சு புத்தக வாசிப்பை விட வேகமாக நடந்தாலும் நமது வாசிப்பின் மூலம் குறைவான தகவல்களை மட்டுமே மூளை பெறுகிறது. அப்படி எந்தக் குறைவான தகவல்களை நமது மூளை பெறுகிறது என்பது நமது வளர்ப்பு, ரசனையோடு தொடர்புடையது.

பேருந்து நிலையத்தில் திருடன் கைது என்ற தலைப்பை விட “பஸ் ஸ்டாண்டில் டிப் டாப் உடையுடன் பிக்பாக்கெட் ஆசாமி கைது” என்ற தலைப்பைப் பார்த்தால் நாம் விரும்பிச் செல்வோம். டிஜிட்டல் உலகில் இத்தகைய தலைப்புகள், பன்ஞ்ச் டயலாக்குகள், மெல்லிய முரண்பாட்டைக் கொண்ட காமடி வழக்குகள் போன்றவைகளையே அதிகம் மூளை கவனத்தில் கொள்கிறது. இதற்கு சான்றாக ஒன் இந்தியாவின் தலைப்புகளையும் உள்ளீடற்ற அதன் செய்திகளையும் கூறலாம்.

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
♦ 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

மேற்கத்திய நாடுகளில் மாணவர்களிடையே பாடப்புத்தகம் சார்ந்த வாசிப்பில் என்ன போக்கு நிலவுகிறது என்று பார்க்கலாம். டிஜிட்டல் வாசிப்பு என்பது ஆழமான வாசிப்பிற்கு பதிலாக மேலோட்டமான வாசிப்பையே ஊக்குவிக்கிறது. இதன் பொருட்டு பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு டிஜிட்டல் கட்டுரையை அச்சில் எடுத்துக்கொண்டு படிக்கிறார்கள். இது அவர்களை கட்டுரைக்குள் நுழைவதற்கும் முக்கியமான பாகத்தை வண்ணமிட்டு குறிப்பதற்கும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தில் நாம் எங்கே நிற்கிறோம் எது புரிந்தது புரியவில்லை என்பதை நிதானித்து முடிவு செய்வதற்கும் உதவி செய்கிறது.

நீங்கள் டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.

அச்சு வாசிப்பும் டிஜிட்டல் வாசிப்பும் ஒரு ஒப்பீடு

டிஜிட்டல் – அச்சு எனும் இரண்டு வகைப்பட்ட வாசிப்பு அனுபவங்களின் முதன்மையான வேறுபாடு என்னவென்றால் அச்சு வாசிப்பில் வாசிக்கும் போது நீங்கள் அந்த புத்தகத்தின் கனத்தையும் வார்த்தைகளின் நீளத்தையும் உணர்கிறீர்கள். அச்சு புத்தகத்தினுடனான நேரடியான தொடர்பு அந்த புத்தகத்தின் எழுத்து மற்றும் கருத்து ரீதியான வரைபடத்தை நமது மூளை உணருமாறு செய்கிறது. மேலும் நாம் என்ன வாசிக்கிறோம் என்பதை நின்று நிதானித்து புரிந்து கொள்வதற்கும் அச்சு புத்தகம் உதவுகிறது. மறுபுறத்தில் டிஜிட்டல் வாசிப்பு என்பது நமது கண்களுக்கு அதிக அழுத்தத்தையும் வேலையையும் கோருவதால் வாசிப்பு என்பது கடினமாகிறது.

இதன் பொருட்டே நவீன தொழில்நுட்பம் நமது கண்களுக்கு அதிக வேலையை கொடுக்காத வண்ணம் திரைகளை கண்ணுக்கினியதாக மாற்றி வருவதும் உண்மைதான். அதன்படி கிண்டில் (Kindle) வாசிப்பு கணினித் திரை வாசிப்பை விட மேம்பட்டதாக இருக்கிறது. அதில் கண்கள் வெண்திரை வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. மேலும் அதன் திரை கண்ணாடிக்கு பதில் வேறு ஒரு பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் ஒளியின் எதிர்விளைவு (ரிஃபிளக்சன்) என்பது நிகழ்வதில்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. இப்படியாக கண் மற்றும் அதன் பிரச்சினைகளை நவீன தொழில்நுட்பம் குறைப்பதற்கு முயன்று வருகிறது.

சரி இது தான் பிரச்சனை என்றால் நாம் நமது டிஜிட்டல் வாசிப்பையும் புத்தக வாசிப்பை ஒத்திசைவாக பயன்படுத்த முடியுமா என்று பார்க்க் வேண்டும். அதற்கான பதில் முடியும் என்பதுதான். எதை டிஜிட்டலில் வாசிக்க வேண்டும் எதை புத்தகத்தில் வாசிக்க வேண்டும் எதை மேலோட்டமாக படித்தால் போதும் அதை ஆழமாக அசைபோட்டு படிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் முடிவு செய்யும் பட்சத்தில் இரண்டு வாசிப்பையும் முரண்படாமல் பயன்படுத்த முடியும்.

நினைவில் கொள்ளுங்கள் வினவில் இந்த கட்டுரையை நீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் தான் வாசிக்கிறீர்கள் ஆனால் இது உங்களிடம் மேலோட்டமான சிந்தனையை ஏற்படுத்துகிறதா ஆழமான அசைவுகளை ஏற்படுத்துகிறதா யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையை கணினி சாராமல் பிரிண்ட் அவுட் போட்டு படித்துப் பார்த்தால் இதன் உள்ளடக்கம் இன்னும் மேம்பட்ட அளவில் நம்மில் உள்ளிறங்கும் என்பது உண்மைதானே?

டிஜிட்டல் வாசிப்பின் பிரச்சினைகள் நவீன தொழிற்நுட்பத்திற்கு தோல்வியா?

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. டிஜிட்டல் வாசிப்பை விட புத்தக வாசிப்பு தான் மேம்பட்டது என்ற கருத்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்கிறோம் என்று நவீன உண்மையை மறுக்கிறதா? ஏனெனில் இதற்கு முன் பல துறைகளில் இந்த பிரச்சனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

நாடகம் வரும்போது கூத்து அழிந்தது; சினிமா வரும்போது நாடகம் அழிந்து விட்டது; தொலைக்காட்சி வரும்போது சினிமா நலிவடைந்தது. இணையம் வந்த பிறகு தொலைக்காட்சியே தத்தளிக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த மாற்றங்களை, கலைரசனையை, அறிவுத்திறனை நமது மூளை ஏற்றுக் கொண்டு மாறியிருப்பது உண்மைதானே?

நாடகங்களைப் போல வசனத்தையும், முழு வடிவிலான நடிப்பு காட்சிகளுக்கும் பதில் நவீன சினிமாவில் அல்லது நவீன ஓவியத்தில் குறைவான காட்சிகள், நெருக்கமான காட்சிகள், வசனமற்ற காட்சிகள் மூலம் நாம் ஒரு ஆழமான அனுபவத்தை பெறுவதில்லையா?

இணையப் பத்திரிகைகள் வந்தபிறகு அச்சுப் பத்திரிக்கைகள் தங்களது வணிகத்தை இழந்து வருகின்றன என்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு தவிர்க்க இயலாத உண்மை. அதன் பொருட்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளெல்லாம் விளம்பரங்களை இழந்து மக்களிடையே நன்கொடை பெற்று ஊடகத்தை நடத்தும் நிலையைப் பார்க்கிறோம். இப்படி இருக்கையில் புத்தக துறையில் மட்டும் அச்சுப் புத்தகம் மட்டும் அதிகம் இருப்பதும் வாசிப்பதும் சாத்தியமா? இந்த கேள்விக்கும் நாம் பதிலறிய வேண்டும்.

மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் லாரன் சிங்கர் ஒரு ஆசிரியரும் கூட. அவர் தனது சிறார் மாணவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆரம்பத்தில் அவர் நம்மை போல குழந்தைகளுக்கு புத்தகங்கள் மூலம் வாசிப்பை சொல்லிக் கொடுக்கிறார். அதன்பிறகு அந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒரு ஐபேட் கொடுக்கப்பட்டு வாசிக்கச் சொல்கிறார். என்ன அதிசயம் குழந்தைகள் அப்போதும் அதே போல தான் வாசித்தார்கள். என்ன… ஒரு வித்தியாசமான எந்திரத்தை கொடுத்து படிக்க சொல்வதாக குழந்தைகள் கருதினார்கள், அவ்வளவுதான்.

இது தனக்கு அதிசயமாக இருந்தது என்கிறார் சிங்கர். அவருடைய கருத்தின்படி முந்தைய அச்சுபுத்தக வாசிப்பும், இப்போதைய கணினி வாசிப்பும் இருவேறுபட்ட திறன்களை கோருகிறது. எதிர்காலத்தில் இது குறித்து நாம் ஒரு தெளிவான புரிதலை பெற முடியும். அதாவது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பின் போது எத்தகைய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது நாம் புரிந்து கொண்டிருப்பது போல இருக்காது என்கிறார் அவர்.

லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்த போது நாம் பல தொலைபேசி எண்களை மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தோம். கம்பியில்லா தொலைபேசியான செல்பேசி வந்தபிறகு அப்படி மனனம் செய்ய வேண்டிய தேவை இல்லை. எல்லா எண்களையும் செல்பேசி எந்திரமே வைத்திருக்கிறது. கால்குலேட்டர் வருவதற்கு முன்னர் எவ்வளவு பெரிய பெருக்கல், வகுத்தலாக இருந்தாலும் கையாலே கணக்கு போட்டு கண்டுபிடிப்போம். இப்போது கால்குலேட்டர் வந்து விட்டதால் மூளை திறனை இழந்து விட்டதா என்றால் இல்லை. புதிய கருவிகளை நமது பழைய திறன்களுக்கு தேவையில்லை என்று அறிவித்து விட்டபடியால் நமது மூளை புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் நிலையை எய்துகிறது. அப்படி நாம் நம்மை அப்டேட் செய்து கொள்கிறோமா என்பதே பிரச்சினை.

சிங்கரும் மற்றுமொரு பேராசிரியருமான முனைவர் பாட்ரிகா அலெக்சாந்தர் இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின்படி வாசகர்கள் டிஜிட்டல் வாசிப்பு குறித்து சிக்கலான மனநிலையை உருவாக்கிக் கொள்வதில்லை. மேலும் அவர்களது பார்வையின்படி டிஜிட்டல் வாசிப்பு என்பது இருபத்தோராம் நூற்றாண்டு வாழ்க்கையை கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி என்கிறார்கள். இரு வேறுபட்ட வகைகளில் நாம் வாசிப்பது என்பது பிரச்சினை இல்லை. மாறாக எப்போது நாம் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இருப்பினும் சிங்கர் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார். சில நேரம் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் அறிய வேண்டுமென்றால் அவர்கள் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ளலாம். ஏனெனில் டிஜிட்டல் வாசிப்பு மட்டுமே அச்சு வாசிப்பை விட வேகமாக வாசிக்கக்கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. அதே நேரம் ஆழமாக புரிந்து கொள்வதற்கும் பொருள் அறிந்து புரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் குறிப்பிட்ட கட்டுரையை டிஜிட்டலில் இருந்து அச்சில் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது நல்லது. ஆகவே நாம் என்ன கற்கும் முறையை ஏற்கிறோம் என்பது எதை எப்படி கற்கப் போகிறோம் என்பதோடு தொடர்புடையது.

ஆனி அருண்டேல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஆங்கிலத் துறை பேராசிரியர் வேயன் கோபிலின்ஸ்கி என்பவரது கருத்தை பார்ப்போம் (English professor, Wayne Kobylinski, Anne Arundel Community college) “என்னுடைய வகுப்பில் பெரும்பாலும் மாணவர்கள் அச்சு நூல்களை வாசிக்க தான் விரும்புகிறார்கள். எனினும் யாராவது ஒருவர் மின் புத்தகத்தை பயன்படுத்த வா என்று கேட்டால் நானும் மறுக்காமல் ஒத்துக் கொள்வேன். என்னுடைய மாணவர்களுக்கு அச்சுப் புத்தகங்கள் மட்டுமே படிப்பதற்கு ஈர்ப்பாக இருக்கின்றன”, என்கிறார் அவர்.

இதற்கு நேர்மாறாக கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோடி டொனாவன் என்ன சொல்கிறார் என்றால் தனது மாணவர்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்தில் தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அச்சிட்ட நூல்களை விரும்புவதில்லை. ஆனால் எங்களது ஆசிரியர்கள் இரண்டையுமே பயன்படுத்துமாறு கூறுகிறார்கள் என்கிறார்.

மேலும் டொனாவன் கவனித்தபடி அவரது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பை இலகுவாக பயன்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். டிஜிட்டலில் வாசிக்கும் பொழுது எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க முடியும். அதே சமயம் அச்சிட்ட நூல்கள் என்றால் ஓரிரு முறை மட்டும் தான் படிக்கத் தோன்றும்.

உலகளாவிய அளவில் நாம் டிஜிட்டலில் வாசிப்பது என்பது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது உண்மையில். டிஜிட்டல் ஊடகம் என்பது நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அது பேஸ்புக் ஆகவோ வாட்ஸ்அப் ஆகவோ அல்லது விவாதிக்கும் குழுமங்கள் ஆகவோ இருக்கலாம். இது குறித்து 180-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் 33 நாடுகளில் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

(Anne Mangen, Chair of the Action, working at the Reading Centre at the University of Stavanger.) இந்த ஆய்வு குறித்து ஆய்வு குழுமத்தின் அங்கத்தினரும் ஸ்டாவேன்ஞ்சர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிபவருமான ஆனி மேங்கன் கூறுகிறார்.

டிஜிட்டல் உலகில் நாம் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் எதை வாசிக்கிறோம்?

இதற்கான விடை என்பது வாசிப்பு என்பதை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இத்துறையில் இது குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட வரையறையை பொறுத்தே அமைகிறது. நமது வரையறையில் பாடப்புத்தகங்கள் அதிலுள்ள படங்கள் சமூக வலை தளங்கள் பல்வேறு இணைய தளங்களுக்கு இட்டுச்செல்லும் ஹைபர் லிங்குகளை கொண்ட உள்ளடக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன.

படிக்க:
உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து
♦ 2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

இதன்படி ஒவ்வொரு நாளும் நாம் மின்னஞ்சல்கள், அரட்டை செய்திகள், நடப்பு செய்திகள், அலுவலக ஆவணங்கள், பதிவுகள், விவாதங்கள் அனைத்தையும் படிக்கிறோம். சுவாரஸ்யமான முறையில் இசையும் சினிமாவும் கூட முற்றிலும் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. இதை ஒப்பிடும் போது பல நாடுகளில் டிஜிட்டல் புத்தகங்கள் என்பது ஒட்டுமொத்த இணைய உலகில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் வாசிப்பின் அளவு அதிகரித்து வந்ததோடு தற்போது அது ஒரு முக்கியமான துறையாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

கிண்டில் போன்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் தற்போது கிடைத்திருந்தாலும் அது இணையத்தோடு இணைக்கப்பட வில்லை என்றாலும் வாசகர்களைப் பொறுத்தவரை அச்சுப் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இதில் அடைவதில்லை.

எப்போது நாம் அச்சிட்ட புத்தகங்களை படிக்க வேண்டும் என முடிவு செய்கிறோம்?

இக்கேள்வியை பொருத்தவரை பல பகுதிகள் காரணங்கள் நிலைமைகள் தீர்மானிப்பதாக இருக்கின்றன. ஒரு வாசகர் என்ன வகை புத்தகத்தைப் படிக்கிறார் அதன் பயன் மதிப்பீடு என்ன போன்றவைகளும் வாசிக்கும் முறையை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதில் முதன்மையானது அளவு மிக நீண்ட கட்டுரைகள் நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை படித்து உள்வாங்குவதற்கும் குறிப்பெடுத்துக் கொண்டு படிப்பதற்கும் பலரும் மாணவர்களும் கூட அச்சுப் புத்தகங்களையே விரும்புகிறார்கள். குறுகிய கட்டுரைகள் என்றால் அப்போது நிலைமை வேறாக இருக்கிறது

இறுதியாக, இணையம் வந்த பிறகு நாம் வாசிக்கும் பழக்கத்தையே இழந்து வருகிறோம் என்ற உண்மையும் இருக்கிறது. அதிகம் பார்க்கிறோம், கேட்கிறோம் போல படிக்கிறோம் எனச் சொல்ல முடிவதில்லை. இணையத்தில் கருத்துருவாக்கம் செய்யும் அறிஞர் பெருமக்கள் அனைவரும் படிப்பை முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள். படிப்பு இல்லையேல் அவர்களது புத்தாக்க உணர்வு, செயல்பாடு எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே முதலில் நாம் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லையேல் இந்த அச்சு, டிஜிட்டல் பிரச்சினையே இல்லை. அப்படி படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு இரு வகைகளுக்கும் ஏற்ற மாதிரி நமது வாசிப்பு பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

– இளநம்பி

நன்றி :
♦ How Is Reading Digitally Different Than Reading Print?
♦ ‘There’s No Easy Answer’

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க