மீபத்தில் தோழி ஒருவரின் திருமணத்திற்காக கட்டில், தலையணை, மெத்தை வாங்க என்னிடம் கேட்டு இருந்தார். நானும் இணையத்தில் அது குறித்துத் தேடி ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொடுத்தேன். அதன்பிறகு எனது தேடுப்பொறி தொடங்கி, முகநூல், மின்னஞ்சல் என எல்லாம் மெத்தை தலையணை கொண்ட விளம்பரங்களால் நிரம்பி வழிகிறது. இது போன்ற அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இது ஏன், எப்படி நடக்கிறது என்று எப்போதாவது யோசித்து இருப்போமா?

இது ஒரு தனி உலகமாக செயல்பட்டுவருகிறது. நமது சிந்தனையை மாற்றியமைக்கத் தக்க ஒரு அபாய உலகம் அது. அதற்குப் பெயர் “கண்காணிப்பு முதலாளித்துவம்”.

“கண்காணிப்பு முதலாளித்துவம்” என்பது அடிப்படையில் ஒரு சந்தை உந்துதல் செயல்முறையை விவரிக்கிறது; இந்தச் சந்தையில் விற்பனைக்கான பொருள் உங்கள் தனிப்பட்ட தரவாகும். மேலும், இந்த தரவுகளின் சேகரிப்பு மற்றும் உற்பத்தி இணையத்தில் உலாவும் நம்மைப் போன்ற வெகுஜனங்களின் மீதான கண்காணிப்பை நம்பியுள்ளது. இந்த செயல்பாடு பெரும்பாலும் இணையத் தேடுபொறிகள் (கூகுள்) மற்றும் சமூக ஊடக தளங்கள் (பேஸ்புக்) போன்ற ‘இலவச’ ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது.

படிக்க :
♦ இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!
♦ நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !

இந்த நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தத் தக்க தரவுகளை உருவாக்க நமது ஆன்லைன் செயல்பாடுகளை (விருப்பு வெறுப்புகள், தேடல்கள், சமூக வலைப்பின்னல்கள், கொள்முதல்) சேகரித்து ஆராய்கின்றன. இந்த நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் கண்காணிப்பு, அதன் முழு பரிமாணமும் நமக்கு தெரியாமலேயே – நம்மால் புரிந்து கொள்ளப்படாமலேயே – பெரும்பாலும் செய்யப்படுகிறது.

தொழில்நுட்ப புரட்சியின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் நம்மை திகைப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ளன. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியரான ஷோஷனா சுபோஃப் தனது “The age of Surveillance Capitalism” புத்தகத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்) மற்றும் பிற நிறுவனங்களும்  பயனர்களின் தகவலை எவ்வாறு கண்காணித்து கணித்து தங்களுக்குச் சாதகமான வகையிலான தகவலை உட்செலுத்தி நம்மை இயக்குகிறது என்பதை விளக்கியிருக்கிறார்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது சொந்த நோக்கங்களுக்காக நமது தனிப்பட்ட தரவை சுரண்டும் விதத்தில் நம்மை குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆக்கியுள்ளன என்று எச்சரிக்கிறார், சுபோஃப். மேலும், இந்த “கண்காணிப்பு முதலாளித்துவம்” தனிநபர் தன்னாட்சியை குறைத்து ஜனநாயகத்தை வேரோடு அழிக்கிறது என்றும் கூறுகிறார்.

தரவு ஒரு பொருளாதார சந்தை

பெரும் தரவு பொருளாதாரம் (The Big Data Economy) 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரதானமான ஒன்றாக வளரத் துவங்குகிறது. சமீப காலங்களில், நமது பொருளாதாரம் தொழிற்சாலைகளில் பெருமளவிலான உற்பத்தி வரிசைகளில் இருந்து விலகி படிப்படியாக அறிவுசார் தொழில்நுட்பத்தை நம்பியிருக்கிறது. மறுபுறம், “கண்காணிப்பு முதலாளித்துவம்” டிஜிட்டல் உலகத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக மாதிரியை பயன்படுத்துகிறது. மேலும், பணம் சம்பாதிக்க “பெரும் தரவு”களையே நம்பியுள்ளது.

இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தரவு பெரும்பாலும் அந்தந்த மக்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது. அவர்களே அவர்களின் இலக்குகளாகவும் இருக்கின்றனர். உதாரணமாக, விளம்பரங்கள் மூலம் நம்மை குறிவைக்க கூகுள் தனிப்பட்ட ஆன்லைன் தரவுகளை நம்மிடமிருந்து சேகரிக்கிறது.அதன் மூலம் நமது விருப்பு வெறுப்புகள், தேடல்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு நமக்கு தேவையான விசயத்தை கணக்கிட்டு அது தொடர்பான விளம்பரங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

இதேபோல, பேஸ்புக் நமது தரவை வைத்து நாம் எப்படியான பொருளை வாங்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்று சிந்தனையை நமக்கு தெரியாமலே நம்முள் கட்டமைக்கிறது. அதற்கேற்றாற் போன்ற பதிவுகள், காணொளிகள், போன்றவற்றை நமக்குத் தொடர்ச்சியாகக் காட்டுகிறது.

மூன்றாம் தரப்பு தரகர்கள் கூகுள் அல்லது பேஸ்புக் போன்ற தரவுகளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நமது தரவை விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்கள் பல்வேறு மூலங்களிலிருந்து தரவை வாங்குகின்றன. தனிநபர்கள் அல்லது தனிநபர்களின் குழுக்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து பின்னர் அதை விற்கின்றன.

உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு ஹெல்த் என்ஜின் (HealthEngine), எனும் மருத்துவ முன்பதிவு செயலி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெர்த் வழக்கறிஞர்களுடன் குறிப்பாக பணியிட காயங்கள் அல்லது வாகன விபத்துகள் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா செயல்பாடுகள் இணைய நிறுவனங்கள் ஆன்லைன் செயல்பாட்டை எந்த அளவிற்கு கண்காணிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் செயல்பாடுகள் பேஸ்புக்கின் சொந்த விதிகளையும்  மீறி கல்வி ஆராய்ச்சி என்ற போர்வையில் தரவுகளைச் சேகரித்து விற்றன. அவர்களின் கையாளுதல்கள் அமெரிக்காவில் தேர்தல் சட்டத்தையும் அது மீறியிருக்கலாம்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்ஸ் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாக இருந்தபோதிலும், கண்காணிப்பு முதலாளித்துவத்தின் பெரிய வியாபாரிகளாகவும், முன்னணி போட்டியாளர்களாகவும், பேஸ்புக், கூகுள் தங்களால் முடிந்தவரை, இன்னும் சட்டப்பூர்வமாக தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். அதில், அவர்களின் பயனர்கள், பயனர்களின் ஆன்லைன் நண்பர்கள் மற்றும் அவர்களின் ஆஃப்லைன் நண்பர்கள் (நிழல் விவரக்குறிப்பு ஆங்கிலத்தில் Shadow Profile என அழைக்கப்படும்) பற்றிய தகவல்களும் அடங்கும்.

நிழல் சுயவிவரம் என்பது குறிப்பிட்ட சமூக தளத்தில் அவர்கள் இல்லாதபோதும் அவரைப் பற்றி உருவாக்கப்பட்ட ஒரு சுயவிவரமாகும். இப்படியான தகவல்கள் அவர்களின் நண்பர் யாரோ ஒருவருடன் தொடர்பு கொண்டதால் அவர்களைப் பற்றி சில தரவுகள் சேமிக்கப்படலாம். இந்த தளங்கள் மற்றும் இதிலிருந்து சேகரிக்கும் தகவலும் பெரும் லாபம் ஈட்டுகின்றன.

“கண்காணிப்பு முதலாளித்துவம்” யாரால்? எங்கிருந்து வந்தது?

கண்காணிப்பு முதலாளித்துவத்தை முதலில் கூகுள் கையில் எடுத்தது. பொருட்களுக்கு புதிய சந்தைகளை உருவாக்க தரவுகளை பிரித்தெடுக்கும் நடைமுறைகள் மற்றும் தொகுக்கப்பட்ட பயனர்களின் தரவைப் பயன்படுத்தினர்.

தற்போது, மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஒன்றாக செய்கிறார்கள். அவர்கள் நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்துகிறார்கள். நமது தரவுகளை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றனர். இது இந்த நிறுவனங்களுக்கு வியக்கத்தக்க வணிக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அமேசான், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் (கூகுள்), ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகியவை சந்தை மூலதனமயமாக்கலின் மூலம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதல் ஆறு இடங்களில் இடம் பெற்றுள்ளன.

உதாரணமாக, கூகுள், சராசரியாக ஒரு வினாடிக்கு 40,000 தேடல்கள், ஒரு நாளைக்கு 3.5 பில்லியன் மற்றும் வருடத்திற்கு 1.2 டிரில்லியன். அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில் 822 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது.

நமது தரவு ஆதாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

புதிதாக கிடைக்கக்கூடிய தரவுகள், ஆதாரங்கள், தரவின் அளவு வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. விரிவடைந்த தொழில்நுட்ப சந்தையில் தற்போது சென்சார்களை (Sensor) அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் அதிகரித்து வருவதுதான் காரணம்.

ஸ்மார்ட் வாட்ச், கூகுள் கிளாஸ், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ட்ரோன்கள், சென்சார் இணைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தானியங்கி வாகனம் ஆகியவை அடங்கும். மைக்ரோஃபோன்கள், கேமராக்கள், ஆக்ஸிலரோமீட்டர்கள் மற்றும் வெப்பநிலை மற்றும் மோஷன் சென்சார்கள் போன்ற சென்சார்கள் சேகரிக்கப்பட்டு பண்டமாக்கக்கூடிய நமது செயல்பாடுகளின் (தரவு) பட்டியலில் கூடுதல் கவனம் பெறுகின்றது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!
♦ பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

பொதுவாகப் அணியக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவி, நமது அன்றாட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே மாறி வருகின்றது. நமது செயல்பாடுகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைச் சேமித்து நமது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிலையை தரவுகளாக மாற்றுகிறது.

இந்த தரவு சுகாதார காப்பீட்டு வழங்குநர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை. அமெரிக்காவில், சில காப்பீட்டு வழங்குநர்கள் காப்பீட்டிற்கு தகுதி பெறுவதற்கு பாலிசிதாரரின் சாதனத்திலிருந்து இந்த தரவையும் சமர்பிக்க வேண்டும்.

சென்சார் இணைக்கப்பட்ட பொம்மைகள் கண்காணிப்பு முதலாளித்துவத்துடன் மிகவும் தொடர்புடையவை. மற்றொரு வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த பொம்மைகளை மையமாக வைத்து குழந்தைகளின் தரவுகளை மற்றொரு மதிப்புமிக்க பொருளாக மாற்றி சந்தைப் படுத்துகின்றன.

ஓட்டுப் போடும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரின் தரவுகளும் பண்டங்கள் தான். அவை மனிதனின் தன்னாட்சியை, சுய சிந்தனையை இழக்கச் செய்து, பெரும் கார்ப்பரேட்டுகளின் நோக்கத்திற்கு ஏற்ப ஆடும்  பொம்மலாட்ட பொம்மைகளாக நம்மை மாற்றிவருகின்றன.

அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்கள் முதலாளித்துவத்தின் கைகளில் சிக்கியிருக்கையில் அவை எவ்வளவு பெரிய மனிதப் பேரவலத்தை உண்டாக்கக் காத்திருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது !

சிந்துஜா சுந்தராஜ்
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்
disclaimer