முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

-

ணைய உலகில் கோலோச்சி வந்த கூகுள் இணையதளத்தின் சேவையான கூகுள் ரீடர் (கூகுள் படிப்பான்) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

கூகுள் ரீடர் சன்செட்இணயத்தில் நாம் விரும்பும் வாசிக்கும் இணையதளத்தின் புதிய கட்டுரைகளையும் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க வசதியாக கூகுள் ரீடர் இணைய பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இலவச சேவை. ஆனால் சில நாட்களுக்கு முன் கூகுள் ரீடரில் நுழைந்த வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, நுழைந்தவுடன் ஒரு சேதி “கூகுள் ரீடர் வரும் ஜூன்-30 தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்”.

‘கூகுள் ரீடர் பெரும் எண்ணிக்கையில் புதிய வாசகர்களை ஈர்க்கவில்லை. அதனால் அதை இழுத்து மூடுகிறோம்’ என்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது கூகுள் நிர்வாகம்.

கூகுள் ரீடர்க்கு பழக்கப்பட்ட வாசகர்கள் பிற படிப்பான் சேவைகளை (குறிப்பாக இலவச) தேடுவதும், இதுதான்  சாக்கு என்று பிரபல படிப்பான் சேவை தரும் இணையதளங்கள் தங்கள் சேவைகளை கட்டண சேவைகளாக்குவதும் நடந்து வருகிறது. அறிவிப்பு வெளிவந்த 48 மணி நேரத்தில் பிற இணைய படிப்பான் சேவைகளுக்கு 5 லட்சம் வாசகர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பலர் கூகுள் ரீடரை மூடக் கூடாது என்று கூகுள் நிர்வாகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார்கள்.

‘கூகுள் ரீடர் சேவையை நிறுத்திக்கொள்கிறது, அவ்வளவு தானே மாற்று சேவைகளுக்கு செல்லலாமே, அதில் விவாதிக்க என்ன இருக்கிறது’ என்று பலர் நினைக்கிறார்கள். விவாதிக்க நிறையவே இருக்கிறது.

இணைய சேவைகள், இணையம் என்பது 21-ம் நூற்றாண்டின் தகவல் தொடர்பு புரட்சிக்கான களம் என்று பலராலும் நம்பப்படுகிறது, அதனால் இணையத்தில் ‘போராளி’களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஃபேஸ்புக் புரட்சி, டிவிட்டர் புரட்சி, இணைய சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்று பலரும் மல்லுக்கட்டி வாதாடிக் கொண்டிருக்கும் சுதந்திரங்களை பற்றித் தான் நாம் பேச வேண்டும்.

ஆனால் ‘புரட்சிக்கு வாய்ப்பையும், கட்டற்ற சுதந்திரத்தையும்’ கொடுக்கும் மெய்நிகர் உலகில் தாங்கள் விரும்பிய படிப்பானை தக்க வைத்துக் கொள்வதற்குக் கூட இணைய போராளிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் சோகம்.

இணையத்தை இயக்கி ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை வருமானமில்லை என்று இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?

ஆர்குட்டில் இருந்து ஃபேஸ்புக்கிற்கு மாறியது போல், ப்ளாகில் இருந்து கூகுள் பஸ்ஸுக்கு போய், கூகுள் ப்ளஸ்ஸுக்கு மாறியது போல் பரதேசியாய் இன்னொரு இணைய சேவையை தேடி செல்ல வேண்டியதுதான்.

இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன. கட்டற்ற சுதந்திரம், பேச்சுரிமை, சுதந்திர சந்தையில் வாடிக்கையாளர்தான் ராஜா என்றெல்லாம் முழங்கும் இணைய முற்போக்குவாதிகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?

ஃபேஸ்புக்கில் போராளிகள் போடும் ஸ்டேடஸுக்கும், பகிரும் ‘சே குவாரா’ படங்களுகாகவுமா அந்த இணைய தளம் நடத்தப்படுகிறது? ஒவ்வொரு ஃபேஸ்புக் பயனருக்கும் தெரியும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதிலும் தான் அந்த இணைய சேவை தொடர்கிறது.

ஒரே ஒரு வலைப்பதிவு பக்கத்தை தொடங்கி அதில் 100 ஹிட்டுகள் வந்தவுடன் கூகுள் விளம்பரத்தை சந்தில் போட்டு, 2000 ஹிட்டுகளுக்கு பின் வீட்டுமனை விளம்பரத்தை சைடில் போடும் பதிவர்களுக்கு இப்படி ஒரு நப்பாசை என்றால் இந்த சேவையை வைத்து பல லட்சங்களை லாபம் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு முதலாளியின் ஆசை எவ்வளவு இருக்கும்?

கூகுளின் ஆசைக்கு ரீடர் சம்பாதிக்கவில்லை, காலி. நாளை கூகுள் மெயில் சம்பாதிக்கவில்லை என்றாலும் காலி. இவை காலி என்பதால் வருமானம் தரும் வேறு சேவைகளை ஆரம்பிப்பார்கள். இத்தகைய சேவைகளை ஏற்கனவே வேறு முறைகளில் பயன்படுத்தி இயங்குபவர்கள் எல்லாம் வேறு வழியின்றி அவர்களது நிபந்தனைக்கு உட்பட்டால்தான் இணைய சேவை வசதிகள் கிடைக்கும். இப்படி இணைய உலகமே முதலாளிகளின் லாப வேட்டையின் வெற்றி தோல்விகளில்தான் இயங்குவதாக மாற்றப்பட்டிருக்கிறது.

இணையம் என்பது அவர்கள் லாபமீட்ட உதவும் வங்கியாகவும், இணைய பயனர்களின் அந்தரங்கத்தை திருடி காசு பார்க்கும் புரோக்கராகவும் தான் இருக்கும். அது விடுவிக்கப்படும் போது தான் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த தகவல் தொடர்பு புரட்சியை அது சாதிக்கும். அந்த நிலைமையை இணையத்தின் வளர்ச்சி சாதித்துவிடாது. ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உலகமயத்திற்கும் எதிராக உலக மக்கள் அரசியல் களத்தில் நடத்தும் போராட்டத்தின் வெற்றியே உண்மையில் அத்தகைய தகவல் தொடர்பு புரட்சியை கொண்டு வரும். அதுவரை இணையம் என்பது அவர்களின் கையில் கிடைத்திருக்கும் அமுதசுரபி. நாமெல்லாம் அதை தலையில் சுமந்து கொண்டு திரியும் விளம்பர அடிமைகள். அவ்வளவுதான்.

– ஆதவன்

 1. வேர்ட்பிரஸ் காரனை திட்டலயா? சுயநலமியின் யோக்கியதை இது. !

 2. நல்ல பதிவு. ஓரமாய் கசிந்த இந்த நெருடலை மடை திறந்த நதியாய் விளக்கியதற்கு நன்றி.

 3. ///இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன.///

  ஆம். அதுதான் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை. ஆனால் இணயம் பிரபலமாகிய கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை மேலும் மேலும் இலவசமாக பல அருமையான சேவைகள் உருவாகியே வருகின்றன. ஈவிரக்கமில்லாமல் கொன்றழிக்கப்படுவதை விட பல ஆயிரம் புதிய இலவச சேவைகள் உருவாகியே வருகின்றன. 90கள் வரை வினவு வின் பிரச்சாரம் எப்படி நடந்தது ? இன்று வினவு தளம் சாத்தியமானது எப்படியாம் ?

  /// கட்டற்ற சுதந்திரம், பேச்சுரிமை, சுதந்திர சந்தையில் வாடிக்கையாளர்தான் ராஜா என்றெல்லாம் முழங்கும் இணைய முற்போக்குவாதிகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்///

  பேச்சுரிமை மற்றும் இணைய சுதந்திரம் மிக நல்ல நிலையில் தான் உள்ளது. ஆமா, நீங்க உருவாக்கப்போகும் புரட்சி அரசில் இதை விட மிக அதிகம் சுதந்திரம் அளிக்க போகிறீர்களா என்ன ? கடந்த கால வரலாறு தான் பேசுகிறதே. நீலிகண்ணீர் விடாதிக தோழரே..

  • கூகுள் தம் சேவையை நிறுத்தறவரை கம்யூனிஸ்ட்களுக்கு ஏது பொறுமை. அவங்களே நிறுத்திடுவாங்க.

 4. முட்டாள் தனமான பதிவு. இப்டியே போனா ‘புறா மூலம் தூது அனுப்பும் முறை, கருப்பு வெள்ளை தொலைக்காட்சி, தந்தி’ இது எல்லாத்தையும் நிப்பாடுனதுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டி வரும்.

  இப்போது நாம் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் (செல்போன், கணினி etc.) யார் கொண்டு வந்தது? உங்கள மாதிரி புரட்சி பண்றவங்களா இல்ல அரசாங்கமா? ரெண்டும் இல்ல.. சந்தை பொருளாதாரம் தான்.

 5. ///இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன.///
  //இப்போது நாம் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் (செல்போன், கணினி etc.) யார் கொண்டு வந்தது? உங்கள மாதிரி புரட்சி பண்றவங்களா இல்ல அரசாங்கமா? ரெண்டும் இல்ல.. சந்தை பொருளாதாரம் தான். //

  இரண்டுமே உண்மைதான் ஆனால் இரண்டும் பாதி உண்மை தான். பாதி உண்மை பொய்யய் விட மோசமானது.

  எல்லா ஆரய்ச்சிகளும் தங்கள் நேரம், உழைப்பு, குடும்பம், எல்லாவற்றையும் தியாகம் செய்த உழைப்பாளிகளின் விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் சாத்தியமானது…

  தூரங்களை கடக்கும் ரேடியோ, தந்தி முறையை கண்டுபிடித்த சர்.சிவி ராமன், மார்க்கோனி போன்றவர்கள் வாழ்நாள் முழுவதையும் கருவிகளுக்குகிடையில் ஆராயிச்சி கூடத்தில் கழித்தனர். இப்போ வயர்லஸ் நெட்டை விற்கும் கம்பனிளோ பயன் படுத்துபவர்களோ அவர்கள்ளுக்கு என்ன செய்கின்றனர்? என்ன செய்யத்தான் முடியும் ?

  பணம் புகழ் எல்லாம் அவர்கட்கு ஒரு பொருட்டே இல்லை. அவர்களின் கண்டுபிடிப்பை மக்களிடம் விற்கும் பொருளாக மாற்றியது தான் சந்தை பொருளாதரம். பின்னர் பொருளை மேம்படுத்தி, பல வகை உருவாக்க மூலதனம் இடப்பட்டது. அப்புரம் லாபம் வரும் பொருளை உருவாக்க செலவிடப்பட்டது

  லாபம் இல்லாத பல ஆயிரம் கண்டுபிடிப்புக்கள் உள்ளன. சந்தை பொருளாதரம் அவற்றை சீந்துவது இல்லை. அதுவும் இப்ப இருக்கும் உலகில் இருக்கும் பொருளில் கொஞ்சம் செலவில்லாமல் மாற்றி அதை புது பொருள்ன்னு விற்று லாபம் ஈட்ட த்தான் பார்க்கிறார்களே தவிர, நீண்ட கால ஆரயிச்சிகெல்லம் முதலீடு பண்ணுகிறவர்கள் ரொம்ப குறைவு.

  என்னிடமே ஒரு பவர் புராஜக்ட் இருக்கு, ஆரயிச்சிக்கு 1-2 வருடம் ஆகலம். ஆனால் தற்போதய மின் உபயேக கணக்கீட்டை வைத்ததே பார்த்தால் கூட உலகில் இருக்கும் 10% பேருக்கு யூனிட் 10 பைசா விலையில் மின்சாரம் விற்றாலும் வருடத்துக்கு 950 கோடி லாபம் கிடைக்கும், உலகம் முழுவதற்க்கும் தடையற்ற 24 மணி மின்சாரம் மலிவாக தரலாம்,

  யாரிடம் பேசினாலும் நீங்க செல்லுறதேல்லம் இப்போதய தேவைக்கு உதவாது. தயாராக எதாவது பொருள் நல்ல விற்பனை இருப்பது இருந்தா சொல்லுங்க. பார்க்கலாம்னு பதில் வருது.

  சந்தை பொருளாதரம் ஒண்ணும் மக்களுக்கு வசதி தர இங்கே இல்லை. அதை விட முக்கிய விஷ்யம் இணையேமே பலகோடி செலவு பிடிக்கும் விஷயம் தான். அதை நிர்வகிக்கும் நிருவனம் மற்றும் அரசு இரண்டுக்கும் பிரச்சன்னை வராத வரையில் தான் கருத்து சுதந்திரம் எல்லாம் அதாவது கடிக்காம குலைக்கும் நாயை கண்டுகாம இருக்குற மாதிரி,

  கஷ்மீர் எல்லையில் இப்பவும் செல்போன், இணையத்துக்கு குடியரசு இந்தியாவில் தடை இருக்கு தெரியும் இல்ல. அவங்களுக்கு உங்களால பிரச்சனை வந்து அப்பவும் உங்களுக்கு சுதந்திரம் இருந்ததான் அது உன்மையான கருத்து சுதந்திரம்.

  கூகுள் முதலாளிக்கு இது வாழ்வா சாவா பிரச்சன்னை. லாபம் தராத சரக்கை வைத்து தொழில் நடத்தி நட்டப்பட்டல், இப்பொ அந்த சரக்கால் பயனடையும் யாரும் வந்து நட்டத்தை பகிர போவதில்லலை. கூகிளின் இந்த நடவடிக்கையை தவறுன்னு சொல்லமுடியாது. என் வசதிக்கு நீ நட்டபடுன்னு சொன்னா யார் கேட்பா ?

  லாபநோக்கம் இல்லாமல் ஒரு அரசோ, சங்கமோ, தனிநபரோ, கூகிளின் சேவையை போல ஒருசேவையை ஆரம்பித்து மக்களுக்கு எப்பவும் இலவசமாக தரலாமே, யார் தடுக்கபோகிறார்கள் ?
  கூகிள் ஓப்பன் சேர்ஸ் முறையில் தானே இயங்குகிறது ? வேண்டுவதெல்லம் சர்வர் மட்டுமெ ?

  கூகிளின் கணக்கை துவங்க்கும்போது தரும் ஒப்பந்தததை படித்து பார்த்தாலே பல விஷ்யம் புரியும். நான் படித்தபோது எப்படி இருக்குன்னா…

  “இந்த வசதி உள்ளது உள்ளபடி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்பவில்லைஎனில் நீங்கள் அதுகுறித்து எந்த தகவலும் தரவேண்டியதில்லை, அதேபோல் கூகிளும் தராது ”

  சந்தை பொருளாதரம் தன் சுயநலத்ற்காக இயங்குவது, தன் சுயநலதிற்காக வேறு வழியில்லாமல் சில நன்மைகளை மனித குலத்திற்கு செய்து இருக்கலாம். ஆனால் சந்தை பொருளாதரம் கொடுத்தது அதிகமா பொற்றது அதிகமானு கணக்கு பார்க்கவே தேவை இல்லமல் பெற்றது தான்னு கண்ணை மூடிகிட்ட சொல்லிடலாம்

  வேர்டு ப்ரஸ், மற்ற பல இணய தளங்கள் ஓப்பன் சேர்ஸ்ல் இயங்குவதுபோல், கார்பரேட் சுரண்டல் வாதிகள் இல்லாமல், இணைய இணைப்பு முதலாக தர முடிந்தால், அப்போது தான் உண்மையான மக்கள் சேவை , சுதந்திரம் எல்லம் எதிர்பாக்க இயலும்.

  நாரயணன் உங்களுக்கான பதில் சந்தை பொருளாதரம் வசதி செய்யவில்லை, தான் லாபம் இட்டும் வழியில் வேறு வழியில்லமல் மக்களுக்கு கிட்டியுள்ளது தான் வசதிகள்.

  • தூரங்களை கடக்கும் ரேடியோ, தந்தி முறையை கண்டுபிடித்த ( சர்.சிவி ராமன்), மார்க்கோனி போன்றவர்கள் வாழ்நாள் முழுவதையும் கருவிகளுக்குகிடையில் ஆராய்ச்சி கூடத்தில் கழித்தனர். இப்போ வயர்லஸ் நெட்டை விற்கும் கம்பனிகளோ, பயன்படுத்துபவர்களோ அவர்களுக்கு என்ன செய்கின்றனர்? என்ன செய்யத்தான் முடியும்.

   சர் ஜகதீஸ் சந்திரபோஸ் தான் ரேடியோ வை கண்டுபிடித்தவர் சர் சி வி ராமன் அல்ல.நன்றி.

  • Only one thing,i ll mention here.

   Market Capitalism funds research perhaps for its own greed primarily but still they do.

   This is the reason CV Raman did not become a gumastha/civil servant and instead was able to indulge in research.

   So,thats also why many big scientists escaped the USSR and went to the USA to do research.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க