சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து தேசிய ஊடகங்கள் கடந்த வாரம் திடீர் அக்கறை கொண்டன. ‘ஒரு நகரம் வறண்டு போனது’, ‘மனிதர் ஏற்படுத்திய நெருக்கடி’, ‘21 நகரங்களில் வறண்டு போன நிலத்தடி நீர்’, ‘துளியும் இல்லை; சொட்டும் இல்லை’, ‘தானாக உருவாக்கிக்கொண்ட நீர் பற்றாக்குறை’ என விதவிதமான தலைப்புகளில் சென்னையில் தண்ணீர் பிரச்சினை அலசப்பட்டது. பிபிசி -யில் வந்த செய்தியின் அடிப்படையில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்னிந்திய நகரமான சென்னையின் தண்ணீர் பிரச்சினைக்கு கவலை தெரிவித்திருந்தார்.

சென்னை நகர மக்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை ‘2018 -ல் இந்திய பருவநிலை குறித்த அறிக்கை’யை ஜனவரி 16-ஆம் தேதி வெளியிட்டது. அக்டோபர் – டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரிக்கும் கீழே பதிவாகியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தது அந்த அறிக்கை. அதாவது நீண்ட கால சராசரியான 56% மழை மட்டுமே பதிவானதாக அறிக்கை கூறியது. 1901 -ஆம் ஆண்டிலிருந்து மழை குறைவாக பெய்த ஆண்டுகளில் இந்த பருவம் ஆறாவது இடத்தில் இருந்தது.

கேரளாவைத் தவிர, தென்னிந்தியாவின் மற்ற நான்கு துணை வானிலை ஆய்வு மையங்களான கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி ஆகியவை குறைந்த மழையளவையே பதிவு செய்ததாக இந்திய ஆய்வு மையம் கூறியது.

ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் நான்கு நீர் தேக்கங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழாவரம் ஆகியவை முற்றிலுமாக வறண்டன. குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டது.

படிக்க:
நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
♦ காவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் !

நாட்டின் பெரும்பாலான இடங்களில் தென்கிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கிய நிலையிலும் சென்னையிலும், சில தென்னிந்திய பகுதிகளும் தண்ணீர் பிரச்சினை குறைந்தபாடில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை (அக்டோபர் – டிசம்பர்), தென்கிழக்கு பருவமழை (ஜூன் – செப்டம்பர்) இரண்டுமே சரியான மழை பொழிவை இந்தப் பகுதிகளில் கொடுக்கவில்லை.

உதாரணத்துக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துணை வானிலை ஆய்வு பிரிவில், வடகிழக்கு பருவமழையில் வருடாந்திர மழை பொழிவில் 50% மட்டுமே பெற்றதாக பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையே ஆண்டின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்கும் மழையை அள்ளித்தருவதாகும். அதற்கு இன்னும் மூன்று மாத காலம் உள்ளது.

ஆனால், நாம் சென்னையைக் கடந்து பார்த்தால் நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ளதைப் பார்க்க முடிகிறது. காந்திநகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பராமரிக்கும் தெற்காசிய வறட்சி கண்காணிப்பகம், நாட்டின் 44% இடங்களில் வறட்சியை ஒத்த நிலை இருப்பதாகக் கூறுகிறது. 17% க்கும் அதிகமான இடங்கள் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளன. இவற்றில் சில பகுதிகளில் சராசரியான பருவமழையைப் பெற்றாலும்கூட வறட்சியிலிருந்து அவற்றால் மீள முடியாது என்கிறது வறட்சி கண்காணிப்பகம்.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழையும் சராசரிக்கு கீழாகவே பெய்தன. அதனால்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சி நிலையை இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாக மார்ச் – மே மாதங்களில் பெய்த மிகக்குறைந்த மழையளவு (மைனஸ் 24%) மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி ஆரம்பிக்கும் தென்கிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. எனவே, பருவமழை முன்னேற்றமும் மெதுவாக உள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் தாமதமாக மும்பையில் பருவமழை ஜூன் 25-ஆம் தேதி வந்தது.

ஜூன் 26-ஆம் தேதி கணக்கின்படி, 36 வானிலை துணை ஆய்வு பிரிவுகளில் 31 மையங்கள் பற்றாக்குறை மற்றும் பெரிய அளவிலான பற்றாக்குறை மழையளவை பதிவு செய்தன. இதுவரை தென்கிழக்கு பருவமழையின் அளவு மைனஸ் 36% அளவில் குறைவாக பதிவாகியுள்ளது.

தண்ணீர் சேமிப்பை கண்காணிக்கும் மத்திய தண்ணீர் ஆணையத்தின்படி, நாட்டின் 91 நீர்த்தேக்கங்களில் 27.265 பில்லியன் ச.மீ. அளவிலான தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது நீர்தேக்கங்களில் முழு கொள்ளளவில் 17% மட்டுமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு 29.699 பில்லியன் ச.மீ. நீரளவு இருந்தது.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் காரீஃப் விதைப்பு தாமதமான நிலையில் செய்வதறியாதது உள்ளனர். ஆனால், வறட்சி முன்னறிப்பு இல்லாமல் வரவில்லை. அக்டோர்பர் 2018 -லேயே மகாராஷ்டிர அரசு பல தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதிகாரப்பூர்வமாக 151 தாலுக்காக்களைச் சேர்ந்த 28,524 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 358 தாலுக்காக்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 42% பகுதி வறட்சி பாதிப்புக்கு ஆளானது.

ஜூன் 26 நிலவரப்படி மகாராஷ்டிராவில் உள்ள அணைகளில் 5.96 % மட்டுமே தண்ணீர் உள்ளது. அவுரங்காபாத் பிரிவில் இந்த நிலைமை மிக மோசமான கட்டத்தில் உள்ளது. வறட்சி பாதிப்புக்கான மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள இதில், 0.47% தண்ணீர் மட்டுமே உள்ளது. அவுரங்காபாத்தில் ஒன்பது அணைகளில் ஏழு அணைகள் வறண்டு விட்டன.

கர்நாடக மாநிலம் முன் அனுமானிக்கமுடியாத சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. 24 மாவட்டங்களில் உள்ள 100 தாலுக்காக்கள் வறட்சியை சந்தித்துத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலம் ரூ. 16,500 கோடி அளவிலான நட்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த நவம்பரில் ஜார்க்கண்ட் அரசு, 18 மாவட்டங்களில் உள்ள 126 தொகுதிகள் வறட்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகக்கூறி நிவாரணமாக ரூ. 8.16 பில்லியனை மத்திய அரசிடமிருந்து பெற்றது. ஜார்க்கண்டில் 24 மாவட்டங்களில் 260 தொகுதிகள் உள்ளன. அதாவது, மாநிலத்தின் பாதி பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு மாதம் கழித்து, குஜராத் அரசு, 51 தாலுக்காக்களில் உள்ள 3,367 கிராமங்கள் வறட்சி தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக அறிவித்தது. பீகார், ஆந்திரம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தன.

ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு, ரூ. 6,680 கோடியை வறட்சி நிவாரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நிதியை அளித்தது. இதில் பெரும்பகுதியை ரூ. 4700 கோடியை மகாராஷ்டிரம் பெற்றது. கர்நாடகத்துக்கு ரூ. 950 கோடியும் ஆந்திராவுக்கு ரூ. 900 கோடியும் குஜராத்துக்கு ரூ. 130 கோடியும் நிதி உதவி வழங்கியது மத்திய அரசு.

வறட்சி கடுமையாக இருக்க பருவமழை பொய்த்தது மட்டுமல்ல, தவறான நிலத்தடி நீர் மேலாண்மையும் முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1970 -களில் எதிர்கொண்ட கடுமையான வறட்சி காலத்திலும்கூட இத்தகைய நிலமையை சந்தித்ததில்லை என்கிறார்கள் மராத்வாடா பகுதி மக்கள். வானத்திலிருந்து நீர்த்துளிகள் விழவில்லை என்றபோதும், நிலத்துக்கடியிலிருக்கும் நீர் குறைந்ததில்லை என்கிறார்கள் அவர்கள்.

படிக்க:
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

இப்போது, மராத்வாடா பகுதிகளில் ஆயிரம் அடிக்கீழேயும் நிலத்தடி நீர் இல்லை. பல கிராமங்கள் வெறுச்சோடிக் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் தங்களுடைய வீடுகளைப் பூட்டிவிட்டு, வேறு இடம் தேடி சென்றுவிட்டார்கள்.

நாடு முழுவதும் வறட்சி கடுமையடைந்து வந்த சூழ்நிலையில், அதை எதிர்கொள்ள தென்மேற்கு பருவமழையின் முடிவில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. கடந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தின் முடிவில் நாட்டின் பாதிப் பகுதி வறட்சியை நோக்கிச் சென்றது. இருக்கும் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்திருந்தால் இத்தகைய மோசமான தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது அனைவருடைய கவனமும் தாமதமானாலும் தென்மேற்கு பருவமழையையே நம்பியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை மே 31, விடுத்த வானிலை அறிக்கையில் சராசரியான மழைபொழிவை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காலம் நடந்துகொண்டிருக்கிறது. நாடு, மைனஸ் 36% குறைந்த மழைபொழிவையே பெற்றிருக்கிறது. இனி மழை பெய்ய ஆரம்பித்தாலும் விதைப்புப் பருவம் தப்பிவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் வேளாண்மை பாதிப்புக்குள்ளாகும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் சராசரிக்கும் குறைவான பருவ மழை பொழிவும், இந்த ஆண்டின் வறட்சி பாதிப்பும், அரசும் – மக்களும் ஒன்றிணைந்து பருவ மழையின் ஒவ்வொரு துளியையும் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றன.


கட்டுரை: நிதி ஜம்வால்
கலைமதி
செய்தி ஆதாரம்: த வயர். 

1 மறுமொழி

  1. கொடூரமான ஆட்சியாளர்களால் இந்தியா கட்டாயம் அழியும், அதற்க்கு முதல் பலி எதையும் கண்டுகொள்ளாத சுயநலவாதிகள

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க