ந்தியாவில் நாள்தோறும் கட்டவிழ்த்துவிடப்படும் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்க நகரங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கிரிட்டர் பாஸ்டன் பகுதியிலிருந்து கேம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்டு சதுக்கம் வரை பேரணியாக வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், தலித்துகள், முசுலீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துவருவதை எதிர்த்து குரல்கொடுத்தனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களுக்கு நீதி வேண்டியும் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உரிய நீதியை வழங்கக் கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாது தெற்காசியர்கள், அமெரிக்கர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

சிகாகோவில் நடந்த போராட்டத்தில் கும்பல் வன்முறைகளில் ஈடுப்பட்டவர்கள் மீதும் அவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
“நாங்கள், இந்திய குடிமக்கள் குறித்துக் கவலை கொள்கிறோம். இந்தியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கும்பல் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசின் மெத்தனத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம். கும்பல் வன்முறையாளர்களின் கைகளின் சட்டத்தை கொடுப்பது நாட்டை இருண்ட காலத்துக்குத்தான் அனுப்பும். எனவே, நாட்டைக் காக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

படிக்க:
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

‘கும்பல் கொலைகளுக்கு எதிரான அரசியல் கிரிமினல்களைத் தண்டியுங்கள்’, ‘அக்லக், பெஹ்லு, அரஃபாசுல், ஜுனைத்….. அடுத்து உங்களுக்கு நடக்கும் முன் தடுத்து நிறுத்துங்கள்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தூக்கிப் பிடித்தபடி அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

“சமூகத்தின் ஒரு பிரிவினர் மற்றும் தனிநபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது அனைத்து மக்களுக்கும் உள்ள முக்கியமான கடமையாகும். உணவு, தண்ணீர், உறைவிடம், பாதுகாப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்காக தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது ஆள்பவர்கள் தொடுக்கிற தாக்குதல் இது. மக்களை திசை திருப்பவும் அவர்களைப் பிரிக்கவும் அனைத்து மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் இதுவாகும். இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்கிறார் கேம்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் ஜஸ்பால் சிங்.

தப்ரேஸின் நினைவாகவும், ராமனின் பெயரால் பயமும் வெறுப்பும் எப்படி பரப்பப்படுகிறது என்பதையும் ஒரு குழுவினர் கவிதையாக வழங்கினர். ஹார்வர்டு சதுக்கத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள், பணியாட்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“சிறுபான்மையினரையும் மற்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரையும் அச்சுறுத்தவும் அடிமைப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கருவியே கும்பல் வன்முறை. அமெரிக்க வரலாற்றில் நடந்த அவமானகரமான கும்பல் வன்முறைகளைக் கண்ட எங்களுக்கு, இந்தியாவில் இப்போது நிகழும் வன்முறைகளைக் காண்பது, சீற்றம் வரப்போதுமானதாக உள்ளது. இதை நிறுத்த உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று போராட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கர் ஒருவர் தெரிவித்தார்.

“வெறுப்பு எதையும் சாதிக்காது என மனித வரலாற்றில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. வளர்ந்த, முற்போக்கு சமூகங்களில் சகிப்புத்தன்மை, உள்ளடக்கிய தன்மையும் முக்கிய குணங்களாகும். எந்தவொரு நாகரிக சமூகமும் கும்பல் வன்முறைகளை ஏற்றுக்கொள்ளாது. உலகின் பழமையான நாகரிங்களில் ஒன்றான இந்தியாவில், சகிப்புத்தன்மைக்கான வரலாற்றைக் கொண்ட, மதசார்ப்பற்ற அரசியலமைப்பைக் கொண்ட நாட்டுக்கு மதத்தின் பெயரால் வெறுப்புப் பாதையில் உலகத் தலைவராக உயரும் இலக்கை தாங்கிக்கொள்ளும் வலிமை இல்லை” என்கிறார் பயோடெக் துறையில் பணியாற்றும் வினய் விகாஸ்.

பன்மைத்துவமான, மதச்சார்ப்பற்ற, உள்ளடக்கிய இந்தியாவுக்காவும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டவும் ஒட்டுமொத்த இந்திய சமூகமும் முன் வந்து போராட வேண்டும் என போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.


அனிதா
செய்தி ஆதாரம்: சப்ரங் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க