கேள்வி : //மோடியும் ” காமராஜர் ஆட்சி ” என்று இப்போது பிதற்றுவது எப்படியிருக்கு //

-எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

Modi

தேர்தல் பிரச்சார நேரத்தில் மோடி அப்படி கூறியிருப்பார். காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கருக்கு பாராளுமன்றத்தில் படம் திறந்து விட்டு இன்னொருபுறம் காந்தியை ஆண்டுதோறும் நினைவுகூர்கிறார் மோடி.

அது போல பசுவதைத் தடைச் சட்ட கலவரத்தின் போது ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தில்லியில் காமராசாரின் வீட்டையே எரிக்க முயன்றது. திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை எதிர்ப்பதற்காக துக்ளக் சோ துவங்கி வைத்த இந்த “காமராஜர் ஆட்சி பொற்காலம்” புரளியை சோவின் மனங்கவர்ந்த மோடி உச்சரிப்பதில் என்ன அதிசயம்?

♦ ♦ ♦

கேள்வி : // கேள்விக்கு பதில் வரல அப்படி அந்த கேள்வி தப்புனாலும் அதை எடுத்துச் சொல்லலாம்..? அப்படி வினவில் போட முடியாத கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலமாக பதில் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்? //

– பா.அருண்

ன்புள்ள அருண்,

அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவே முயல்கிறோம். வேலைச் சுமை தவிர தாமதத்திதற்கு வேறு காரணங்கள் இல்லை

♦ ♦ ♦

கேள்வி : // தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றால் என்ன? //

– சசாங்கன்

விரிவாக பதிலளிக்க வேண்டிய இந்தக் கேள்விக்கு ஒரு எளிய அறிமுக விளக்கம் மட்டும் கொடுக்கிறோம். 1991-ம் ஆண்டில் இந்தியாவில் இம்மூன்றும் அறிமுகம் செய்யப்பட்டன. தனியார்மயம் என்பது தனியார் இன்னின்ன தொழில்தான் செய்ய வேண்டும், அவை தவிர மற்ற தொழில்களை செய்யக் கூடாது, சில துறைகள் அரசிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்கிறது. அவ்வகையில் அனைத்து தொழிற்துறைகளும் ஏன் கல்வி, சுகாதாரம் போன்ற சேவை அடிப்படையிலான துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டன. தற்போது ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பார்த்தால் நாட்டின் பாதுகாப்பு தொழிற்துறைகளிலும் தனியார் துறை வந்துவிட்டது. இந்த 28 ஆண்டுகளில் ஏராளமான பொதுத்துறைகள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன. பல பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன.

தாராளமயம் என்பது சந்தைதான் அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்ற முறையில் அன்னிய முதலீடு உள்ளே வருவது மற்றும் தனியார் தொழில் துவங்க இருக்கும் தடைகள் அத்தனைகளையும் ரத்து செய்யக் கோருகிறது. கோக், பெப்சி மட்டுமல்ல சில்லறை வணிகத்தை அழிக்கும் வால்மார்ட் கூட எந்த தடையுமின்றி வரலாம் என்பதை தாராளமயம் நடைமுறைப்படுத்துகிறது. தற்போது அமேசான் ஆன்லைன் விற்பனையாக அது பரிணமித்துவிட்டது. சில துறைகளில் அன்னிய முதலீடு 49% இருக்கலாம் என்பதை 51 மற்றும் அதற்கு மேல் என்பதை தாராளமயம் கொண்டு வருகிறது. ‘லைசன்ஸ் ராஜ்ஜியம்’ என்று கூறப்பட்ட தடைகள் அனைத்தையும் தகர்ப்பதே தாராளமயம். தாராளமயத்தின் மூலம் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது, சங்கம் கட்ட ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் போன்றவையும் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு உத்தரவுகளோடு, சட்டங்களையும் திருத்துகிறார்கள், அல்லது புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.

globalஉலகமயம் வல்லரசு நாடுகளின் நிதி மூலதனம் தங்கு தடையின்றி நம்மைப் போன்ற ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சுரண்டுவது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை உற்பத்தியின் பின்னிலமாக்குவது. தற்போது உலக அளவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவையை உலக அளவில் பல நாடுகளில் மலிவான உழைப்பு, தாராளமய சலுகைகளைப் பெற்றுக் கொண்டு மலிவாக உற்பத்தி செய்கின்றன. அதன் மூலம் பெரும் இலாபத்தை அடைகின்றன. உற்பத்தி மட்டுமல்ல நுகர்வையும் சுரண்டலுக்கேற்ப உலக மயமாக்குகிறார்கள். இதற்கு தோதாக உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்கிறார்கள். அவ்வகையில் தேசிய இனப் பண்பாடுகள் ஒழிக்கப்பட்டு நுகர்வு கலாச்சாரமே ஆதிக்கம் செலுத்துகிறது. கலை, இசை, சினிமா அத்தனையும் உலகமயத்தில் தேசிய அடையாளங்களை இழந்து வருகின்றன.

தனியார்மயம், தாராளமயம், உலக மயத்தை அமல்படுத்துவதற்காக 90-களில் உலக வர்த்தகக் கழகம் (World Trade Organisation) துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஏகாதிபத்திய நாடுகளின் சார்பில் ஏழை நாடுகளின் வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதிகளை வடிவமைக்கிறது. உலக வங்கியும் (World Bank), சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund) அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் உலகெங்கும் அமல்படுத்துவதை செய்கின்றன. அதற்காகவே ஏழை நாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளோடு கடன்களை அளிக்கின்றன. அந்த நிபந்தனைகள் உலகமயத்தை அமல்படுத்துவதை உத்திரவாதப்படுத்துகின்றன.

மொத்தத்தில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை அமெரிக்காவை மையமாகக் கொண்ட வல்லரசு நாடுகள் முழு உலகையும் பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்பு செய்வதற்காக அமல்படுத்தப்படுகிறது. உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலக வர்த்தகக் கழகம் போன்ற வல்லரசு நாடுகளின் அமைப்புகள் மேற்கண்ட மூன்று கொள்கைகளையும் அமல்படுத்தும் கருவிகளாக செயல்படுகின்றன.

♦ ♦ ♦

கேள்வி : // சிலை வழிபாடு தேவையா? பெரியார்க்கு  மாலை போடுறது அப்படினு கேள்வி வருது? சிலை பிற்போக்குத்தனமான ஒன்றா? //

– பா.அருண்

அன்புள்ள அருண்

கடவுள் சிலைகளை வழிபடுபவர்கள் பக்தர்கள். தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்பவர்கள் கட்சி மற்றும் இயக்க ஆர்வலர்கள். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட ஒன்று.

கடவுளர்களே இந்த உலகை படைத்து காப்பதாக நம்பும் பக்தர்கள் கடவுளர்களின் சிலைகளை தொழுகிறார்கள். அப்படி தொழும் போது தங்களது வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தவறாது வைக்கிறார்கள். நமக்கு அப்பாற்பட்ட சக்தி, இந்த உலகை ஆளும் சக்தி என்ற பயத்தோடும் இந்த வழிபடுதல் அல்லது தொழுதல் நடக்கிறது. இதுவும் தலைவர்களை மரியாதை செய்வதும் ஒன்று அல்ல.

தலைவர்கள் சிலைகளை பொறுத்தவரை அவர்களது கொள்கைகள் போராட்டங்கள் பங்களிப்பு சார்ந்து அவர்களை நினைவுகூர்ந்து அந்தக் கொள்கைகள் போராட்டங்களை தொடருவோம் என அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்கிறார்கள். அந்த வகையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு சிலைகள் வைப்பதும் மாலை போட்டு மரியாதை செய்வதும் அவர்கள் பிறந்த மற்றும் இறந்த தினத்தன்று பெருந்திரளாக மாலை போட்டு நினைவு கூர்வதும் சரியான ஒன்றுதான். இரண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க