தமிழக அரசே! டெல்டா விவசாயத்திற்கு 20,000 கன அடி நீரை
முறைவைக்காமல் திறந்துவிடு!

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு (2018) இதே சமயத்தில் சம்பா பயிரிட போதுமான உரம் இருப்பில் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படாமல் வேண்டுமென்றே விவசாயிகளை இழுத்தடித்தது. தொடர் போராட்டங்கள் நடத்திய பிறகு உரம் இறக்குமதி செய்தனர். பிறகு அறுவடை சமயத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு என்று சொல்லி கொள்முதல் செய்யவில்லை. டெல்டா முழுக்க விவசாயிகள் மறியல் போராட்டங்கள் நடத்திய பிறகே வேறு வழியின்றி கொள்முதல் செய்தது. இவற்றையெல்லாம் மீறி விவசாயம் செய்தாலும் காவிரி மேலணையை பராமரிக்காததால் கதவணைகள் உடைத்துக்கொண்டு தண்ணீரெல்லாம் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கவிட்டனர். மேலணையை புனரமைக்க  ரூ 387.60 கோடி ஒதுக்கி ஒராண்டு ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த சில உதாரணங்களே இந்த அரசு விவசாயிகள் மீது எவ்வளவு வன்மம் வைத்துள்ளது என்பதற்கு சான்று.

இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 17-ம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டனர். கிட்டத்தட்ட மேட்டூரில் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகள் கடைமடைப் பகுதிகளாகும். கடைமடைப் பகுதிவரை பாசனம் செய்ய நொடிக்கு 20,000 கன அடியாவது திறக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை 10,000 கன அடிக்கு மேல்திறக்கவில்லை. 20,000 கன அடி திறக்க வேண்டும் என்று டெல்டா முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் பகுதிகளில் கூட இன்னும் பாசனத்திற்கான நீர் திறக்கவில்லை. தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது என்று அலட்சியமாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கிறார். இன்னும் பல்வேறு இடங்களில் பாசன வாய்க்கால்கள் புதர் மண்டி கிடக்கின்றன, கஜா புயலுக்கு விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. தற்போது ஆமை வேகத்தில் தூர்வாருகின்றனர். அதுவும் கணக்கு காட்டுவதற்காகத்தான் என்று விவசாயிகள் அதிகாரிளைப் பற்றி புட்டு புட்டு வைக்கின்றனர்.

பெட்ரோ கெமிக்கல் மண்டலம், ஹைட்ரோகார்பன் மண்டலம் என்று அறிவித்துவிட்டு எப்படி அரசு விவசாயப் பணிகளை அனுமதிக்கும். முடிந்தவரை விவசாயிகளை அலைக்கழிப்பது, விவசாயத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவது, விவசாயிகள் போராட்டம் நடத்தினால் ‘விவசாயிகளின் நண்பனைப் போன்று’ நடிப்பது, அதை வைத்து கமிசன் அடிப்பது, இதுதான் அரசின் நிலை என்பதை விவசாயிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இவற்றின் விளைவே விவசாயிகளின் தொடர் போராட்டங்கள். இத்தகைய அரசின் மெத்தனப்போக்கை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசே!

♦ சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் 20,000 கன அடி நீரை உடனே திறந்துவிடு! கடைமடை வரை தண்ணீர் வரத்தை உத்தரவாதம் செய்!
♦ போர்க்கால அடிப்படையில் ஏரி, குளம், பாசன வாய்க்கால்களை தூர்வாரு! கதவணைகளை சரிசெய்!
♦ தேவையான உரம், இடுபொருட்களை இருப்பில் வை! தரமான விதைநெல்லை அரசே பொறுப்பேற்றுக்கொண்டு வழங்கு!
♦ 2018 – 19 காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனே வழங்கு! கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்கு!
♦ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வை!

விவசாயிகளே! பொதுமக்களே!

♦ டெல்டாவை ஹைட்ரோகார்பன் மண்டலமாக அறிவித்த அரசு, விவசாயத்தை பாதுகாக்காது என்பதை உணர்ந்து கொள்வோம்!
♦ அனைத்து தரப்பு மக்களும் விவசாயத்தை பாதுகாக்க களத்தில் இறங்குவோம்!

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.
தொடர்புக்கு: 8220716242

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க