Saturday, January 23, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

-

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 3

மது விவசாயத்தை அழிக்க திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது தான் பசுமைப் புரட்சித் திட்டம். அதைப் பற்றி நாம் விரிவாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் மரபுசார் விவசாயச் செயல்பாட்டாளர் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றார்.

drought2
கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு.

“அது பற்றி ஏற்கனவே நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறைய ஆய்வுகளும் நம்மிடம் இருக்கின்றன. நீங்க… இந்த சமயத்தில் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைக்கு பாரம்பரிய விவசாயம் முன்வைக்கும் தீர்வுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்றோம்.

”அதாவதுங்க.. நம்மளோட பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களையெல்லாம் பசுமைப் புரட்சியிலே அழிச்சிட்டாங்க. அதில் சில ரகங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடியவை; அதே போல சில ரகங்கள் கடுமையான வெள்ளத்தையும் தாங்கி வளரக் கூடியவை. பாரம்பரிய ரக நெல்லுக்கு இப்ப போடக்கூடிய அளவுக்கு ரசாயன உரங்கள் தேவையில்லை”

“ஆனால், பாரம்பரிய நெல் ரகங்கள் ஒட்டு ரக பயிர்களை விட விளைச்சல் குறைவாக இருக்கும் என்று தானே சொல்றாங்க?”

”அது ஒரு விசமத்தனமான பிரச்சாரம் சார். ஒரு ஏக்கருக்கு முப்பது மூடை என்பது தான் நவீன ரக பயிர்களுக்கு அரசே நிர்ணயம் செய்திருக்கிற சராசரி உற்பத்தி அளவு. இதுலே அரசே நிர்ணயம் செய்திருக்கிற செலவு பார்த்தீங்கன்னா 20 ஆயிரம். அதாவது, மழை, தண்ணீர் எல்லாம் சரியா இருந்தா… அரசு சொல்லும் கணக்குப் படி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு போக விளைச்சலுக்கு கிடைக்கப் போற லாபம், 5,500. இன்னொரு போகம் நெல்லும் விளைஞ்சி, நடுவுல மாற்றுப்பயிரும் சரியா விளைஞ்சா ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் 20 ஆயிரத்துக்கும் கொஞ்சம் குறைவா வரலாம். அதே பாரம்பரிய விவசாய முறையிலயும் ஏறக்குறைய இதே அளவுக்கு விளைச்சல் இருக்கும்.. ஆனா, செலவுன்னு பார்த்தா உர செலவு மிச்சம். அதுல ஒரு மூன்று அல்லது நான்காயிரம் ரூயாய்கள் ஒரு போகத்துக்கு மிச்சமாகும். வருசத்துக்கு பத்துலேர்ந்து பன்னிரண்டு ஆயிரம் அதிகமா கிடைக்கும்”

”சரிங்க.. ஆனா ஒட்டுமொத்த விவசாயத்துக்கான அடிக்கட்டுமானமே அரசின் கொள்ளைகளால உடைத்து நொறுக்கப்படுது. அரசோட நோக்கமே விவசாயத்தை அழிக்கிறதா இருக்கும் போது பாரம்பரிய விவசாயம் மட்டும் இந்த சூழல்லே இருந்து தப்பிக்க முடியுமா?”

“அது முடியாது என்பதை ஏற்கிறேன். அரசினுடைய விவசாய விரோத கொள்கைகளுக்கும் சேர்ந்தே தான் நாங்க போராடிகிட்டு இருக்கோம். ஆனா, இதற்கு மேல விவசாயம் உயிரோட இருக்கனும்னா அதுக்கு பாரம்பரிய விவசாயம் மட்டுமே ஒரே தீர்வா இருக்கும்னு நம்புறோம்” என்றார்.

தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்
தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்

“ஆனால், கருநாடகத்திலேர்ந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் அந்த மாநிலத்தின் மொத்த கழிவும், குறிப்பா பெங்களூரில் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் இரசாயனக் கழிவு நீரும் கலந்து தான் வருது. இதே நிலைமை இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் நீடிச்சா தஞ்சை மண்ணே விசமாகிப் போகாதா? ஒட்டுமொத்த சூழலும் மாசுபடும் போது, பாரம்பரிய விவசாயம் மட்டும் எப்படிக் காப்பாற்றும்?”

”அது முடியாது என்பது சரி தான். அப்படியான பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்பதையும் ஏற்கிறேன். ஆனால், இந்த சூழலுக்குள்ளேயே பாரம்பரிய விவசாய முறை ஓரளவுக்காகவது விவசாயியைக் காப்பாற்றும் என்பது தான் எங்களது வாதம்” என்றார்.

நாங்கள் அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினோம். விவசாயம் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டு வரும் போக்கை அவர் உணர்ந்துள்ளார். எனினும், அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தை பாரம்பரிய முறைகளின் மூலம் காப்பாற்றி விட முடியும் என்பதை ஆணித்தரமாக நம்பவும் செய்கிறார். பாரம்பரிய விவசாயத்தைப் பரவலாக்க நம்மாழ்வார் துவங்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையும், தற்போது நடத்தப்பட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் குறித்தும் விளக்கினார்.

”விவசயாம் சார்ந்த மாற்றுத் தொழில்கள்” எனும் பெயரில் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதே அரசின் கொள்கையாக இருக்கும் சூழலில் மரபுசார் விவசாய உத்திகள் மட்டும் விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட முடியாது என்கிற எதார்த்தத்தை உணரவில்லை என்பது ஒருபுறம் இருக்க; இன்னொரு புறம் மரபுசார் வேளாண்மை குறித்த பிரச்சாரங்கள் ஏதோவொரு வகையில் விவசாயிகளுக்கு தற்காலிக நம்பிக்கை ஏற்படுத்தும் என்.ஜி.ஓ அரசியலையே முன்வைக்கின்றன.

தற்போது ஆங்காங்கே நடந்து வரும் மரபுசார் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு – அதில் குறிப்பாக அரிசி ரகங்களுக்கு – சந்தையில் உள்ள வரவேற்பைக் குறித்து அறிந்து கொள்ள தஞ்சையில் உள்ள அரிசி ஆலை மற்றும் அரிசி மண்டி ஒன்றின் உரிமையாளர் திரு பால்ராஜ் அவர்களைச் சந்தித்தோம்.

”நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது உண்மை தான். அதெல்லாம் ஆரம்பத்திலேயே முடிஞ்சி போச்சு. இப்ப அதிகமா யாரும் கேட்கிறதில்லே. ஒரு சிலர் வாங்கிட்டு இருக்காங்க.. மத்தபடி பாரம்பரிய ரகங்களை வாங்கி வைத்தா தேங்கிடுது” என்கிறார் பால்ராஜ்.

”பாரம்பரிய அரிசி ரகங்கள். சிறு தானிய உணவு வகைகளை சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி மாதிரியில்லே சொல்றாங்க? அப்புறம் ஏன் மக்கள் அதை விரும்பி வாங்கறதில்லே”

“அதுல உண்மை இருக்குன்றது என்னோட சொந்த அனுபவம் தம்பி. நானே கூட பாரம்பரிய ரகங்களை சாப்பிடுவேன். அதைச் சாப்பிட்டா உடம்பே லேசான மாதிரி இருக்கும். உடம்புலே அசுத்தம் தேங்காது.. சர்க்கரை வியாதி கட்டுக்குள்ளே இருக்கும்..”

Organic-Rice2
நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது

“எங்களோட கேள்வி… அப்படி இருக்கும் போது மக்கள் ஏன் விரும்பி வாங்குறதில்லே?”

”நம்ம ஆளுங்களுக்கு சோறைப் பிசைந்து கையில் ஏந்தினால் அதில் சாம்பாரோ ரசமோ பற்றி நிற்கணும். வழிஞ்சி ஓடினா ஆகாது. சாம்பார், பருப்புக் குழம்பு, காரக்குழம்பு, ரசம் மாதிரியான நம்முடைய சமையல் முறைக்கு இந்த ரகங்கள் சரியா செட் ஆகிறதில்லே. கர்நாடகா பொன்னி, ஆந்திர பொன்னி ரகங்கள் இங்கே எடுபடாம போகிறதுக்கும் இதே தான் காரணம். ஆனாலும், சிறு தானியங்களை வாங்கறவங்க வாங்கிக்கிட்டு தான் இருக்காங்க.. ஏதோ உப்புமா பொங்கல் மாதிரியாச்சும் வச்சி சாப்பிடுறாங்க…. சிக்கல் என்னான்னா, இப்படி உடல் நலனுக்காக பிடிவாதமா வாங்குறவங்க சிறுபான்மையா இருக்காங்க. மத்தபடி பெரும்பாலானவங்க சாதாரண அரிசி தான் வாங்கறாங்க”

“அதுக்கு என்ன காரணம்?”

“நம்முடைய சமையல் முறை தான். இந்த முறையான சமையலுக்கு எத்தனையோ தலைமுறைகளா நாம் பழக்கப்பட்டிருக்கோம். மாற்றிக் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை… எனக்குத் தெரிஞ்சு பாரம்பரிய விவசாயத்துக்கு மாறினவங்க பலரும் விளைச்சலுக்கு சந்தை இல்லாத காரணத்தாலே பழையபடி நவீன விவசாய முறைக்கு மாறியிருக்காங்க..”

”நீங்க பல வருசங்களா விவசாயிகள் கிட்டே இருந்து நெல் கொள்முதல் செய்திருக்கீங்க. உங்களோட அனுபவத்திலேர்ந்து இத்தனை வருசங்கள்லே சாகுபடி முறைகள்லே என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கு?”

பசுமைப் புரட்சிக்கு முன்னே மேலத் தஞ்சைலேர்ந்து மேற்கே திருச்சி வரைக்கும் வரகு சோளம் தான் பயிரிடுவாங்க. இந்தப் பகுதிகள்லே இயற்கையா அமைஞ்சிருந்த ஆற்றுப் பாசன முறையும் சரி, மழையை நம்பியிருந்த மானாவரி பாசன முறையும் சரி, அந்த மாதிரி பயிர்களுக்குத் தான் ஏதுவானதா இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்னே, இந்தப் பகுதிகள்லே ஒரு சில இடங்கள்லே இருந்த நெல் சாகுபடி பரவலாச்சி. இன்னைக்கு நீங்க எங்கயுமே வரகு பயிரைப் பார்க்கவே முடியாது”

“அப்படின்னா நெல் உற்பத்தியோட அளவு அதிகரிச்சிருக்க வேணுமே?”

“ஆமாம். சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கத் தான் செய்தது. இப்ப கடந்த பத்தாண்டுகள்லே என்ன நிலைமைன்னா.. கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு. இயற்கையா நெல் விளையறதுக்கு ஏதுவான அந்தப் பகுதியோட உட்கட்டமைப்புகள் எதுவும் புனரமைக்கப்படவே இல்லை”

“இப்ப உங்களோட கொள்முதல் எப்படி இருக்கு?”

“டெல்டா மாவட்டங்கள்லே நெல் விளைச்சல் எந்தளவுக்குக் குறைஞ்சிருக்கோ அதே அளவுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள்லே அதிகரிச்சிருக்கு. அங்கெல்லாம் ஆறு-கால்வாய் பாசனம், போர்வெல் பாசனம்னு செய்யுறாங்க. அதே மாதிரி வெளி மாநிலங்கள்லே இருந்தும் நெல் வருது. ஆந்திரா கருநாடகாவிலேர்ந்து நெல் வருதுன்றது ஒரு பக்கம்… இப்ப சில வருடங்களா ஒரிசா, மேற்கு வங்கத்திலேர்ந்து கூட வருது. அதுவும் ரொம்ப சல்லிசான விலைக்கே வருது”

”சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் இப்படி ஒரு வாதம் முன்வைக்கிறாங்க.. அப்படியே விவசாயம் டெல்டா பகுதியிலே அழிஞ்சாத் தான் என்ன? வேறு தொழில் பிழைப்புன்னு போயிட வேண்டியது தானே. லாபமில்லாத விவசாயத்தை ஏன் கட்டியழ வேணும்? தொழிற்சாலைகள், ஐ.டி அப்படின்னு எத்தனையோ வழியிருக்கே?”

”இல்லைங்க.. அவங்க சொல்ற மாதிரி இல்லை. நான் விவசாயிகளோட நெருங்கிப் பழகியவன் என்கிற முறையில சொல்றேன். இங்கேர்ந்து திருப்பூருக்கு வேலைக்குப் போனவனெல்லாம் கொஞ்ச நாள்லே திரும்பி ஓடியாந்துடறான். ஏன்னா.. இது அவன் நிலம். அவனோட சொந்தம். திருப்பூர் பனியன் கம்பெனி அப்படியா? காலைலே சோத்தைக் கட்டிக்கிட்டு உள்ளே போனா சிறைக்கைதி மாதிரி சாயந்திரம் வரைக்கும் அடைஞ்சி கிடக்கனும். அங்கே எதுவும் சொந்தம்னு இல்லை. சுதந்திரமா வேலை செஞ்சி பழகினவங்களை இப்படி அடிமைகளைப் போல அடைச்சி வேலை வாங்கறதும் கஸ்டம்.. இவங்க அப்படி வேலை செய்யிறதும் கஸ்டம்..”

”சரி, இங்க வந்தா மட்டும் என்ன சொர்க்கமாவா இருக்கப் போகுது?”

“இது சொர்க்கம் இல்லை தான். இங்கே பிழைப்பு இல்லை தான். சோத்துக்கு வழி இல்லை தான்.. ஆனா அடிமையா இருக்க வேண்டியதில்லை தானே… சுதந்திரம் இருக்கில்லே?”

“கூலி விவசாயிகளோட நிலைமை?”

“அவங்க தங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்டாங்க. நூறு நாள் வேலைத்திட்டத்திலே கிடைக்கிற கொஞ்சம் கூலிய வைத்து வாழ்க்கையை ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை”

photo-26
உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை

”சரி, குறைந்த பட்சம் டெல்டா மாவட்டங்களோட தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்காவது நெல் சாகுபடி நடக்குதா?”

“இல்லைங்க.. இப்ப வெளி மாநில நெல் கணிசமா வர ஆரம்பிச்சிடுச்சி. இனி வர்ற வருசங்கள்லே இது அதிகரிக்கும்”

“ஆந்திரா கர்நாடகா பொன்னி பற்றி சொன்னீங்க. அதுக்கும் நம்முடைய அரிசிக்கும் என்ன வித்தியாசம்?”

“நம்முடைய முறைக்கும் அவங்க முறைக்குமான வித்தியாசம் தான். அதாவது நாங்க நெல்லை வாங்கி ஒரு இரவு முழுக்க ஊற வைப்போம். அடுத்த நாள் அவித்து காயவைத்து பின்னாடி மிசின்லே போடுவோம். நம்முடையது பழைய முறை. அவங்களோடது நவீன முறை. நேரடியா நீராவில அவிச்சிருவாங்க..”

“எப்படியும் அவிக்கிறது தானே.. இதிலே என்ன வித்தியாசம்?”

”வித்தியாசம் இருக்கு. பழைய முறைப்படி அவிக்கும் போது நெல் ஒரே சமமா அவியும் – காயும். நீராவில அவிக்கும் போது நெல்லோட இரண்டு பக்கங்களும் அதிகப்படியா அவியும். அப்புறம், ஆவி நெல்லுக்குள்ளே ஊடுருவிப் போயிரும். அதனால ரெண்டு பிரச்சினை இருக்கு.. ஒன்னு, அந்த அரிசியை நீங்க ரொம்ப நாளைக்கு சேமித்து வைக்க முடியாது – வண்டு விழும். இன்னொன்னு, சோறு வடிக்கும் போது அரிசியின் முனைப்பகுதிகள் வெந்து நடுப்பகுதி வேகாமலும் போயிடும். சோறு விரை விரையா நிற்கும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்முடைய சமையல் முறைக்கு இது ஒத்து வராது. குழம்பில் சோற்றைப் பிசைந்து கையில் ஏந்தினால் எல்லாம் தனித்தனியா நிற்கும்.. சேராது. ஆனா இனி வேற வழி இருக்காது.. பழகிக்க வேண்டியது தான்”

அவர் சொன்னதில் உண்மை இருந்தது. மக்கள் இதற்குள் வாழக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். விவசாயம் பொய்த்ததற்கு இயற்கையின் மேல் கைநீட்டிய பலரும், உட்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டிருப்பதைக் கேள்விக்குட்படுத்தவில்லை. பலரும் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு சரியாக கூலி கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அதே நேரம், அந்த திட்டமே விவசாயத்தை புதைகுழியில் வீழ்த்தும் ஒரு சதியின் அங்கம் என்பதை உணரவில்லை.

என்.ஜி.ஓ குழுக்கள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை மக்களுக்கு ஏதோவொரு வகையிலான நம்பிக்கையை விதைக்க முற்பட்டு வருகின்றன. இந்தப் பேரழிவை எதிர்த்துப் போராடாமல், அதற்குள்ளேயே தங்களுக்கென்று ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட முடியும் என்கிற சிந்தனையை விதைப்பதில் கணிசமான அளவுக்கு வெற்றி ஈட்டியுள்ளன.

எனினும், எதார்த்த வாழ்க்கையின் பாடங்கள் மக்களுக்கு உண்மை எதுவென்று பளிச்சென்று காட்டி வருகின்றன. விவசாயத்தைக் காப்பதற்கான போராட்டங்களாக இல்லாவிடினும், கீழத் தஞ்சையின் பல பகுதிகளில் வேறு வேறு காரணங்களை முன்னிட்டு சிறு சிறு பகுதிப் போராட்டங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டார் உடன் வந்த தோழர். விவசாயத்தின் அழிவே டெல்டா மாவட்டங்களின் மற்ற பிரச்சினைகளுக்கான அனைத்தும் தழுவிய காரணமாக உள்ளதை மக்கள் அறிந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே நீண்ட கால நோக்கில் இதற்கான தீர்வாக இருக்கும்.

– முற்றும்

நேர்காணல் : வினவு செய்தியாளர்கள்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க