Saturday, October 23, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !

என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !

-

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

தோழர், நானெல்லாம் கம்யூனிஸ்டுன்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா சிவப்புத் துண்டோட மதிப்பா அலையுறேன்.. நான் தற்கொலை செய்துக்க வழியில்லை. ஏதோ வேற வழியில்லாம வாழ்ந்துகிட்டு இருக்கேன்..” என்கிறார் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த அந்த உள்ளூர் தோழர். சி.பி.ஐ கட்சியின் பகுதி அமைப்பில் பொறுப்பில் இருப்பவர் அவர். அவருக்குச் சொந்தமாக இருக்கும் துண்டு நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்.

chellakon-Drain2
தூர்வாரப்படாத நிலையில் வாய்க்கால்

”பயிர் வாடிப் போனதைப் பார்த்து அதிர்ச்சியில் மரணம் விளைவதை விவசாயத்தில் இல்லாதவர்களால் நம்ப முடியாது. வெறும் செடி தானே என்று தான் அவர்கள் நினைப்பார்கள்”

“என்னது வெறும் செடியா? அந்த வெறும் செடிய நம்பி கலியாணம் வைச்சிருப்பான்.. பள்ளிக்கூட பீசு கட்டலாம்னு நெனச்சிருப்பான்.. கடனை அடைக்கலாம்னு நெனைச்சிருப்பான்.. கண்ணு முன்னாடி கருகிப் போகிறத பார்த்தா நெஞ்சு அடைக்காது? எனக்கே இந்த இறவை எந்திரத்துக்கு வாங்கின 60 ஆயிரம் கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியலை.. இருக்கிறதா சாகுறதான்னு தெரியாம தெனமும் போயி கருகிப் போன பயிரையே மணிக்கணக்கா வெறிச்சி பார்த்துட்டு வர்றேன்.. என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை” என்கிறார் முகமது கனி பாப்பா

”இவ்வளவு தண்ணீர் குடிக்கும் நெல்லைத் தான் சாகுபடி செய்யனுமா? இப்ப நிறைய என்.ஜி.ஓ அமைப்புகள் மாற்றுப் பயிர் பற்றியெல்லாம் சொல்றாங்களே?”

“மாற்றுப் பயிர் பற்றி இந்த மண்ணுக்கும் தெரியாது; எங்களுக்கும் தெரியாது” என்றார் முகமது கனி பாப்பா.

ஒரு நதி உருவாகி பல லட்சம் வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஓடி அதைப் பண்படுத்துகிறது. அந்த நதியின் ஓட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக அடித்து வரப்பட்ட வண்டல் மண் அதன் முகத்துவாரப் பகுதிகளில் படிமங்களாய்ச் சேர்கின்றது. நதிக் கரைகளை ஒட்டி வாழும் மக்கள் அந்த இயற்கையின் இயக்கப் போக்கை தங்களது பல்லாயிரம் ஆண்டுகால அனுபவ அறிவால் அறிகிறார்கள். அதிலிருந்து விவசாயம், தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். டெல்டா மாவட்டங்கள் நெல் சாகுபடிக்கு ஏற்றதென்பது மனிதனின் சொந்த விருப்பத்திலிருந்து வந்தடைந்த முடிவல்ல – அது இயற்கை அந்த மக்களுக்கு வழங்கிய வாய்ப்பு.

இயற்கையின் சமன்பாட்டைக் குலைக்காத வண்ணம் பாரம்பரிய நீர்மேலாண்மை ஏற்பாடுகளை உண்டாக்கி வைத்துள்ளனர் தஞ்சை விவசாயிகள். கிளை நதிகளின் பாதையில் மேட்டுப்பகுதியிலிருந்து தலைவாய்க்கால்களை வெட்டி அதை தாழ்நிலப் பரப்பிற்கு அழைத்து வந்து, பின் வடிவாய்க்கால்கள் வழியே மீண்டும் நதியின் போக்கில் இணைத்துள்ளனர். மேலத்தஞ்சைக்குள் நுழையும் காவிரி பல கிளை நதிகளாகப் பிரிகின்றது – இந்தக் கிளை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பை தலைவாய்க்கால்களும், வடிவாய்க்கால்களும் சிலந்தியின் வலையைப் போல் நெருக்கமாக கட்டி வைத்துள்ளன. கீழத்தஞ்சை பகுதிகள் முழுக்க ஊர்களின் அமைப்பும் குறுக்குச் சாலைகளுமே கூட இதே போல் சிலந்தி வலைப் பின்னலின் வடிவில் தான் அமைந்துள்ளன.

தஞ்சாவூர் கூலி விவசாயி
தஞ்சாவூர் கூலி விவசாயி

ஒரு கிளைநதியிலிருந்து தலைவாய்க்கால் நீரைப் பிரித்து தான் செல்லும் வழித்தடங்களில் பல குளங்களை நிரப்பிய பின் வடிவாய்க்கால்கள் மூலம் மீண்டும் வேறோர் பகுதியில் நதியோடு கலக்கிறது. நெல் சாகுபடிக்கென பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டாக்கப்பட்ட இந்த உட்கட்டமைப்பை உயிருடன் வைக்க அவற்றை ஒவ்வொரு ஆண்டும் முறையாக தூர்வாருவதைத் தவிர புதிதாக ஏதும் செய்யத் தேவையில்லை. டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் அத்தியாவசியமான இந்தக் கடமையைத் தான் அரசு கடந்த பத்தாண்டுகளில் முற்றாகப் புறக்கணித்து விட்டு அந்த மண்ணுக்கும், அதன் தன்மைக்கும் முற்றிலும் விரோதமான பயிர்களை ”மாற்று” என விவசாயிகளின் தலையில் கட்டியுள்ளது.

”மாற்றுப்பயிர்களை முயற்சித்துப் பார்ப்பதில் தஞ்சை விவசாயிகள் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள்?”

”அது மாற்றுப் பயிர்கள் அல்ல; ஏமாற்றுப் பயிர்கள்” என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை செயல்பாட்டாளரான நெல் ஜெயராமன்.

“அது பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?”

“அரசாங்கம் பாம் மரத்தை மாற்றுப் பயிரா வளர்க்கச் சொல்லுது. பாம் மரம் நட அம்பது சதவீதம் வரை மானியமும் தருது. ஒரு ஏக்கரில் பாமாயில் நடவு செய்ய 40 ஆயிரம் வரை செலவாகும். இதுவும் மற்ற மரங்களைப் போல ஆண் மரம் பெண் மரம்னு இருக்கும். ஆண் மரமா போனா அதனால பலனில்லே. அப்படியே பெண் மரமா இருந்தாலும், இந்த மண்ணோட தன்மைக்கு நல்லா கொழு கொழுன்னு வளரும் – ஆனா, ரொம்பச் சின்னதா குலை தள்ளும். இது நம்ம மண்ணுக்கு ஏத்த மரமில்லை அல்லவா? அப்படி ரொம்ப கொஞ்சமா கிடைக்கிற பாம் விதைகளை நீங்க ஒரு மணி நேரத்துக்குள்ளே பிழிஞ்சிடனும். நேரம் போகப் போக பிழி திறன் குறைந்து கொண்டே போகும். விவசாயிகள் கிட்டே பாமாயில் மரங்களை நடவு செய்ய கேன்வாஸ் செய்யிற அரசாங்கம், பாமாயில் ஆலைகளை இங்கே சுற்று வட்டாரத்திலே ஏற்படுத்தவே இல்லை.. அதனாலே பாம் மரங்களை நட்ட விவசாயிகள் இப்போ உள்ளதும் போச்சுங்கிற நிலைக்கு வந்திட்டாங்க”

”முட்டாள்தனமான திட்டமா இருக்கே?”

“இதுக்கே அசந்துட்டா எப்படி? முள்ளில்லா மூங்கிலோட கதைய கேளுங்க. முள் இல்லாத மூங்கில்னு ஒன்னை செயற்கையா உருவாக்கி அதைப் பயிரிடச் சொல்லி அதிகாரிகள் கேட்டுக்கிட்டாங்க. அதுக்கு 75 சதம் மானியம்னு அறிவிக்கவும் செஞ்சாங்க. அதை நம்பி எனக்குத் தெரிந்த ஒருவர் தன்னோட 12 ஏக்கர் நிலத்துல நடவு செய்தார். நட்ட கொஞ்ச நாளிலேயே குபுகுபுன்னு மூங்கில் வளர்ந்து மொத்த நிலத்தையும் போர்த்திக்கிடுச்சி. ஆள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு நல்ல அடர்த்தி. ஆனா, அப்படி வளர்ந்தது முள் இருக்கிற மூங்கிலாவும் போச்சிது. விவசாயத்துறை அதிகாரிகள்கிட்டே போயி கேட்டா, ஆய்வு செய்து கண்டு பிடிச்சதுலே ஏதோ பால்ட் ஆயிடுச்சின்னு கைய விரிச்சிட்டாங்க. இப்ப அந்த நிலத்தை திரும்ப பக்குவப்படுத்தி விவசாயம் செய்ய கிட்டத்தட்ட பதினைஞ்சி லட்சம் தேவைப்படுது. கடந்த மூணு வருசத்துக்கும் மேலயா அவருக்கு அந்த நிலத்தாலே பயனும் இல்லாம, மூங்கிலும் காலை வாரி விட்ட நிலையில, பதினைஞ்சி லட்சத்துக்கு எங்கே போவாரு சொல்லுங்க?”

methan-project-300x166
விவசாயிகளை அவர்களது பாரம்பரிய நிலம்சார்ந்த உழவுத் தொழிலில் இருந்து தூக்கியெறிவது, எதிர்காலத்தில் இயற்கை எரிவாயுக்களை முதலாளிகளுக்கு ஒப்படைப்பது

”ஏன் இந்த மண்ணோட தன்மைக்கு ஏற்ற வேறு பயிர்களை அரசாங்கம் பரிந்துரைக்கலாமே?”

”சார், இது நெல்லோட மண்ணு. வேற ஏதாவது இருக்கலாம்.. ஆனா, இது வரைக்கும் அது பத்தி நமக்குத் தெரியல்லே. அப்படி வண்டல் மண்ணில் வெற்றியடைந்த பயிர்னு ஒன்னு இருக்கிறதா எனக்குத் தனிப்பட்ட முறைல நம்பிக்கையும் இல்லே. வேற சில சந்தர்ப்பங்கள்ல பட்டுப்புழு வளர்க்கச் சொன்னாங்க. ஆனா, வளர்ச்சியடைஞ்ச கூட்டுப்புழுக்களை சேலத்துக்கு எடுத்துட்டு போக வேண்டியிருப்பதாலே அதுவும் தோல்வி தான் அடைந்தது. இப்போ பல இடங்கள்லே நன்னீர் மீன் வளர்ப்பை பரிந்துரை செய்யறாங்க.. அது ஓரளவுக்கு லாபம் கொடுக்குது”

நன்னீர் மீன்கள் என்றாலும், அவையும் மிகப் பெரியளவுக்கு இரசாயன ஊட்டச்சத்துக்களை கொட்டியே வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகள் ஓரளவுக்கு வளர்ந்த பின் மீன்கள் வளர ஊசியும் போடப்படுகின்றன. ஏறத்தாழ பிராய்லர் கோழிகளுக்கு ஒப்பான ஒரு தொழில் எனக் கொள்ளலாம். எனினும், ஒரு ஏக்கர் அளவுக்கு குட்டைகள் அமைத்து நன்னீர் மீன் பண்ணை நடத்துகிறவர்கள், வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் வரை சம்பாதிக்க முடிகின்றது. சில ஆண்டுகள் கழித்து பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களின் விளைவாக நன்னீர் குட்டைகள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றன. மேலும் ஓரிரு ஆண்டுகளிலேயே நன்னீர் குட்டைகள் மெல்ல மெல்ல அதிக லாபமீட்டும் இறால் குட்டைகளாக அவதாரமெடுக்கவும் செய்கின்றன. ஒரு ஏக்கரில் அமைக்கப்படும் இறால் குட்டைகள் சராசரியாக 7-8 லட்சம் வரை வருமானமாகத் தருகின்றது. ஆனால், இறால் குட்டைகள் அந்த மண்ணை களர் நிலமாக்குவதோடு அக்கம் பக்கத்தில் எவருமே விவசாயம் செய்ய முடியாதபடிக்கு நிலத்தடி நீரை முற்றாக மாசுபடுத்தியும் விடுகின்றது.

நிலத்தடி நீர் மாசுபடுவதன் எதிவினையை வேதாரண்யம் பகுதிகளில் காண முடிந்தது. பூக்கள், புகையிலை, மா, முந்திரி, சவுக்கு போன்ற பணப்பயிர் சாகுபடியும் முற்றாக குலைந்து போயுள்ளது. வேதாரண்யம் சுற்று வட்டாரங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 130 குளங்கள் தூர்ந்து போயுள்ளன. இவை தவிர பெரும்பாலான வடிகால்களும் தூர்ந்து அடைபட்டுப் போயிருக்கின்றன. வடிநிலப்பரப்பில் உள்ள அடப்பாறு, உப்பனாறு, தென்னடாறு போன்றவற்றின் நீரோட்டப் போக்குகள் இறால் பண்ணைகளால் சீர்குலைந்து போயிருக்கின்றன. விளைவாக வேதாரண்யம் சுற்று வட்டாரத்தில் பத்தடி ஆழத்திலேயே உப்புநீர் ஊற்றெடுக்கிறது. இதன் காரணமாக பணப்பயிர்களும் பொய்த்துப் போகத் துவங்கியுள்ளன. முன்னொரு காலத்தில் பணப்பயிர்களால் செழிப்புற்று விளங்கிய இந்தப் பகுதி தற்போது வறட்சியின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றது.

கல்லணைக்கு மேற்கே உள்ள கால்வாய் பாசனப் பகுதிகளிலும், கல்லணையிலிருந்து மன்னார்குடி, திருவையாறு, திருகாட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் வரையிலான ஏரி மற்றும் கால்வாய்களின் மூலம் பாசனம் நடக்கும் பகுதிகளிலும், அதற்கும் கிழக்கே உள்ள வடிநிலப்பகுதிப் பாசனமும் மொத்தமாக சீர்குலைந்துள்ள நிலையில் அரசு வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவர கவனம் செலுத்து வருகின்றது.

ஏறத்தாழ அனைத்து ஊர்களையும் இணைக்கும் தார்ச்சாலைகள் புத்தம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சலவைக் கல்பதித்த பேருந்து நிலையங்களையும் காண முடிந்தது. இவை தவிற, மன்னார்குடியையும் நீடாமங்கலத்தையும் இணைக்கும் அகல இரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், நாகப்பட்டினத்தையும் திருத்துறைப்பூண்டியையும் இணைக்கும் அகல இரயில் பாதைக்கான வேலை ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளது. நீடாகங்கலம், திருவாரூர், தஞ்சை ஆகிய வழித்தடம் நாகப்பட்டினம் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Water-Management
பாரம்பரிய நீர்மேலாண்மை

ஒருபுறம் விவசாயத்துக்கான உட்கட்டமைப்பை திட்டமிட்டு அழித்தொழிப்பது, விவசாயிகளை பாரம்பரிய விவசாயத்திலிருந்து விரட்டியடிப்பது, மாற்று விவசாயம் என்கிற பெயரில் மொத்தமாக வேறு தொழில்களை நோக்கி நெட்டித் தள்ளுவது என்பது ஒரு போக்கு. இதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையிலான விவசாய விரோத அணுகுமுறையும், சமூகத்தின் தற்சார்பை அடியறுக்கும் அரசின் நடைமுறையும் துணை புரிகின்றது.

இன்னொரு புறம் உட்கட்டமைப்பு என்கிற பெயரில் விவசாயத்துடன் தொடர்பில்லாத திட்டங்களில் பணத்தைக் கொட்டுவது, டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இரயில் தடங்களின் மூலமும் சாலை வழியாகவும் இணைப்பது என்பது இன்னொரு போக்கு. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு நேரடியான பேருந்து இணைப்பு இல்லாத ஊர்களில் இருந்து கூட தற்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொழிலாளிகளின் இடப்பெயர்வுக்கு இந்த ‘உட்கட்டமைப்பு’ வசதி ’உதவி’ புரிந்துள்ளது உண்மை தான் என்றாலும், புதிதாக ஏற்படுத்தப்படும் மற்றும் சீர்திருத்தபடும் பழைய போக்குவரத்து வழித்தடங்கள் அனைத்தும் நாகைத் துறைமுகத்தை அச்சாக கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேற்சொன்ன இந்த இரண்டு போக்குகளும் டெல்டா மாவட்டங்களின் பூமிக்கடியே புதைந்து கிடக்கும் இயற்கை எரிவாயுக்களான மீத்தேன், பெட்ரோல் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை தனியார் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்கும் திட்டத்தை நோக்கியே செல்கின்றன.

அதாவது, விவசாயிகளை அவர்களது பாரம்பரிய நிலம்சார்ந்த உழவுத் தொழிலில் இருந்து தூக்கியெறிவது, எதிர்காலத்தில் இயற்கை எரிவாயுக்களை முதலாளிகளுக்கு ஒப்படைப்பது, அதற்குத் தோதான உட்கட்டமைப்புகளை இப்போதிருந்தே ஏற்படுத்தி வைப்பது என்பதே அரசின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இது இவ்வாறிருக்க, தன்னார்வக் குழுக்களும் நம்மாழ்வார் வகைப்பட்ட இயற்கை ஆர்வலர்களும் இன்னொரு பக்கத்திலிருந்து இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதைகள் குறித்து அதிகமும் பரப்புரை செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விவசாயமே கழுத்தறுபட்ட கோழியைப் போல் துடித்துக் கொண்டிருக்கும் போது பாரம்பரிய விவசாய முறைகள் மட்டும் விவசாயிகளைக் காக்குமா?

– தொடரும்

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க