Tuesday, June 18, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்

-

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1

ரசாங்கம் விவசாயிகளுக்குப் போதுமான நிவாரணங்களை வழங்க வேண்டும்…” விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த வீடு மிகச் சாதாரணமாக இருந்தது. தலைவாசலின் முன்னே இருந்த சிறிய திண்ணையின் ஒரு மூலையில் அந்த அம்மாள் அமர்ந்திருந்தார். முதியவர் ஒருவரின் புகைப்படத்தின் முன் ஊதுவர்த்தி புகைந்து கொண்டிருந்தது. பூஜைப் பொருட்கள் பழைய தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

வீட்டின் பக்கவாட்டில் தற்காலிக பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு அதன் கீழ் சில நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பி.ஆர்.பாண்டியன் பேசுவதை புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின்னே பச்சைத் துண்டணிந்த சங்கப் பிரதிநிதிகள் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தனர்.

muthulakshmi
மாரடைப்பில் இறந்து போன இரத்தினவேலின் மனைவி முத்துலட்சுமியும் அவரது பெயர்த்தியும்.

அது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள ஆதனூர் கிராமம். துர்மரணம் நடந்த வீடு அது. அந்த வீட்டில் துக்கம் கேட்க வந்தவர்கள் நெஞ்சு வெடிக்கும் மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க,  நாங்கள் அந்த அம்மாளின் முன் அமர்ந்தோம். அவர் முத்துலட்சுமி. அவரது கணவர் ரெத்தினசாமி நவம்பர் 6-ம் தேதியன்று இறந்து போயிருந்தார். எம்மை நிமிர்ந்து பார்த்தவர், நிலைகுத்திய பார்வையோடு கேட்காமலே பேசத் துவங்கினார்.

“காலையில வயக்காட்டுக்குப் போனவரு தான். வீட்டுல பழையது இருந்திச்சிது. சீக்கிரமா வாரம்னு சொல்லிட்டுத்தேன் போனாரு… நானும் வருவாரு வருவாருன்னு காத்திருந்தேன்… கடேசில பொணமாத்தேன் வந்தாரு…” என்றவர் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

தமிழகத்தில் நடப்புப் பருவத்தில் விவசாயிகள் சாவு அதிகரித்து வருகின்றது. இன்றைய நிலவரப்படி சுமார் 19 விவசாயிகள் இறந்து போயுள்ளனர். தமிழகமெங்கும் நடப்பு பருவத்தின் விளைச்சலை நம்பி கடன் வாங்கி சாகுபடி செய்திருந்தனர் விவசாயிகள். பயிர்கள் பொய்த்துப் போவதைக் காணாச் சகியாமல் பூச்சி மருந்து குடித்து சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், வேறு சிலரோ அதிர்ச்சி தாளாமல் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.

“ரெண்டு தரம் வெதச்சிப் பார்த்தும் பயிர் வரல்லே சார். மூனாந்தரம், நாத்து விட்டுப் பார்த்தாரு. இதுக்கே முப்பதாயிரம் கடன் வாங்கியிருக்காரு. விதையும் நாத்தும் கூட கடன் சொல்லித் தான் வாங்கியிருக்காரு..  ஏற்கனவே தங்கச்சி கலியாணத்துக்கு அஞ்சி லச்சம் வரைக்கும் கடன் இருக்கு.. ஏதோ அறுவடையானா கடனிலே கொஞ்சம் அடைச்சிரலாம்னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தாரு.. தண்ணீ வரல்லே.. பயிரெல்லாம் கருகத் தொடங்கிருச்சி.. கருகின பயிரையே பார்த்திட்டு நின்னவரு திடீர்னு நெஞ்சைப் பிடிச்சிட்டு விழுந்திட்டாரு.. வயக்காட்டுலயே செத்துப் போயிட்டாரு சார்” என்றார் அறிவொளி. ரெத்தினசாமியின் இளைய மகன்.

இரத்தினவேலின் மகன் அறிவொளி மற்றும் அவரது நண்பர்கள்
இரத்தினவேலின் மகன் அறிவொளி மற்றும் அவரது நண்பர்கள்

”நீங்க படிச்சிருக்கீங்களா”

“ஆமா சார். டிப்ளமா.. ஹானர்ஸ்ல பாஸ் பண்ணிருக்கேன்?”

“வேலைக்குப் போறீங்களா?”

“இல்ல சார். விவசாயம் தான்”

“ஏன், படிச்சிட்டு வேலைக்குப் போகலை?”

அதிசயமாய்ப் பார்த்தார்; பின் சொன்னார், “அதான் வயக்காடு இருக்கே? ரெண்டாவது அண்ணனுக்கு கொஞ்சம் புத்தி சரியில்லே.. அதான் அப்பாவோட சேர்ந்து வயக்காட்ட பார்த்துக்கலாம்னு இருந்திட்டேன்”

”வேலைக்குப் போயிருந்தா சம்பளம் கிடைச்சிருக்குமே?”

“அது என்னாத்துக்கு சார்? நம்ம நெலம் இருக்கு.. வெவசாயம் இருக்கு.. வேற என்னா?”

”எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?”

“மூணு மா… ஏக்கர்னு சொன்னா ஒரு ஏக்கருக்கு கொஞ்சம் குறைவா வரும்”

“அப்ப, வேலைக்குப் போயி சம்பாதிக்கிறதை விட விவசாயம் லாபம்னு சொல்றீங்க?”

“அப்படி சொல்ல முடியாது. ஏதோ சாப்பாட்டுக்கு.. செலவுக்கு சரியா இருக்கும்”

”விவசாயம் தான் வாழ வைக்கலையே? அப்புறமும் ஏன் நீங்கள் அதிலேயே இருக்கணும்? வேற வேலைக்குப் போயிருக்கலாமே?”

“அதுக்காக? நெலத்தை தரிசா போடச் சொல்றீங்களா? வெதைக்க வக்கில்லாமே நெலத்தை தரிசா போட்டிருக்கான்னு ஊர்ல கேவலமா பேச மாட்டாங்க?” சட்டென வந்த பதிலில் ஆத்திரம் இருந்தது.

டெல்டா மாவட்ட இளைஞர்கள் விவசாயத்தைக் கைவிட்டு விட்டதாக பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அது முழு உண்மையில்லை. மானாவரி பாசனம், ஆற்றுப் பாசனம் நடக்கும் பகுதிகள் மற்றும் மேலத் தஞ்சைப் பகுதிகளில் இளைஞர்கள் பரவலாக வெளியூர்களுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். அதே நேரம், செழிப்பான இறவைப் பாசன விவசாயம் நடந்த கடைமடைப் பகுதிகளில் கணிசமான அளவில் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத்தால் எந்த லாபமும் இல்லை என்று நாங்கள் சந்தித்த அனைவரும் தவறாமல் சொன்னார்கள். நாங்களும் அவர்களிடம் ”ஏன் லாபம் தராத விவசாயத்தில் ஈடுபட வேண்டும்?” என்கிற கேள்வியைத் தவறாமல் கேட்டபோது சொல்லி வைத்தாற் போல் அனைவரிடமும் ஒரே பதில் தான் வந்தது. சிலரின் பதிலில் சீற்றம்; சிலரின் பதிலில் ஆற்றாமை; சிலரின் பதிலில் விரக்தி.. ஆனால், உணர்ச்சிகள் வேறுபட்டாலும் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது.

நெல் சாகுபடி நிறுத்தப்பட்ட களை படர்ந்த வயல்
நெல் சாகுபடி நிறுத்தப்பட்ட களை படர்ந்த வயல்

“கவருமெண்டு ஆபீசருங்க தான் சாகுபடி செய்யச் சொன்னாங்க.. இப்ப சாகச் சொல்லுறாங்க” என்கிறார் திருத்துறைப்பூண்டியை அடுத்த நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது கனி பாப்பா. மொத்தம் பதினெட்டு ஏக்கரில் சாகுபடி செய்கிறார். அதில் பதினாறு ஏக்கர் குத்தகை நிலம்.

”ஒரு ஏக்கருக்கு செலவு செய்தது போக எவ்வளவு மிஞ்சும்?”

”மூடை நெல்லு 800-லிருந்து ஆயிரம் வரைக்கும் போகும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் முப்பது மூடை அறுவடை ஆகும். உழவுக்கூலி, பூண்டு வெட்ட, வரப்பு வெட்ட, விதைக்க, உரத்துக்கு, மருந்தடிக்க, களையெடுக்க, அறுவடை கூலின்னு செலவு இருபதாயிரத்துக்கு கொஞ்சம் அதிகமா ஆகும். ஏக்கருக்கு அதிகபட்சம் ஏழாயிரம் நிக்கும். இதுல குத்தகை நிலம்னா, நிலத்தோட சொந்தக்காரருக்கு ஏக்கருக்கு ஆறு மூடை அளக்கனும்..”

ஏறக்குறைய வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போய் விட, கையில் மிஞ்சுவது ஆள் கூலிக்கும் குறைவான தொகையாகவே இருக்கின்றது. குறுவை, தாளடி, சம்பா என மூன்று போகமோ அல்லது குறைந்தது இரண்டு போகமோ விளைந்து, நெல் பயிரிடாத மாதங்களில் துவரை, உளுந்து, கடலை போன்ற வேறு பயிர்களும் விளைந்தால் ஓரளவுக்கு லாபம் பார்க்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் ஒரு போக விளைச்சலுக்கே தஞ்சை விவசாயிகள் தடுமாறி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் சுமார் 40 சதவீதம் குத்தகை விவசாயிகளாகவும், சுமார் 20 சதவீதத்தினர் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் அளவுக்கு நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளாகவும், சுமார் 20 சதவீதமானவர்கள் ஐந்து ஏக்கர் வரை வைத்துள்ள நடுத்தர விவசாயிகளாகவும் உள்ளனர். குத்தகை விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு ஓரிரு ஏக்கர் சொந்த நிலமும் உள்ளது.

நிலத்தடி நீரையும், ஆற்றுப்பாசனத்தையும், போர்வெல்லையும் நம்பியிருந்த குறுவை மற்றும் தாளடி சாகுபடி ஏறத்தாழ ஒழிந்து போன நிலையில், வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படும் மேட்டூர் அணையையும் மழையையும் நம்பியிருக்கும் சம்பா சாகுபடி மட்டும் கடந்த சில வருடங்களாக நடந்து வந்திருக்கிறது. தற்போது காவிரியும் கைவிட்ட நிலையில் மழையும் பொய்த்திருப்பது பயிர்களையும் அதை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்க்கையையும் கருக்கி உள்ளது.

முகமது கனி பாப்பாவுக்கு 62 வயதாகிறது. முப்பதுகளில் உள்ள அவரது இரண்டு மகன்களும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 62 ஆயிரம் கடனில் வாங்கிய கிர்லோஸ்கர் இறவை இயந்திரத்தை ஒரு மாதமாக பெட்டி பிரிக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்.

“வாய்க்காலில் தண்ணீர் வரல்லே. விதைச்சதெல்லாம் கருகிப் போச்சி. இதுக்கு வாங்கின கடனை எப்படி அடைப்பேன்னும் தெரியலை. சாகிறதைத் தவிர வேற எந்த வழியும் கண்ணுக்குத் தெரியலே…” என்கிறார்.

“இயற்கையே உங்களைக் கைவிட்டாச்சின்னா விதி விட்ட வழின்னு இருந்திட வேண்டியது தானே?”

“அது எப்படி.. நெலத்தை சும்மா போட்டுட்டு கிடக்க சொல்றீங்களா? ஊர்ல நாலு பேரு கேவலமா பேசமாட்டான்?”

“இப்போ நடக்கிற தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் தவிர்க்க வேற என்ன தான் வழி?”

”அரசாங்கத்தாலே மட்டும் தான் முடியும். இருக்கிற கால்வாய தூர்வாரியிருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்திருக்கும்.. அதையும் ஒழுங்கா செய்யலை”

“ஏன் நூறு நாள் வேலைத் திட்டத்தில ஏரி குளம் கால்வாய் தூர்வார்றதா தானே சொல்றாங்க?”

சுப்ரமணிய தேவர் மற்றும் முகம்மது கனி பாப்பா
சுப்ரமணிய தேவர் மற்றும் முகம்மது கனி பாப்பா

”அதெல்லாம் சுத்த ஏமாத்து வேலைங்க. நூறு நாள் வேலைக்குப் போறோமின்னு கவருமெண்டு காசை தின்னுட்டு ஒருவனும் வேலை பார்க்கிறதில்ல” என்று அவர் சொல்ல, அருகில் இருந்த ரங்கசாமி குறுக்கிட்டார். அவர் அதே ஊரைச் சேர்ந்தவர். விவசாய கூலித்தொழிலாளி.

”அப்படி இல்லை சார். எங்களை கூட்டிப் போயி என்ன வேலைன்னு சொல்லாம எதுனா செய்யச் சொல்றாங்க. வெறும் கணக்கு தான். ஆபீசருங்களுக்குத் தானே எந்தக் கம்மாயை எப்படி வெட்டனும்னு தெரியும்?”

ஏரி குளங்கள் கால்வாய்கள் மற்றும் இணைப்பாறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைத் தூர்வாரும் பணிகள் கடந்த பத்தாண்டுகளாகவே சரியாக நடைபெறவில்லை என்றும், அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் முற்றாகவே நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பலர் தெரிவித்தனர். டெல்டா மாவட்டப் பகுதிகளில் நாங்கள் சென்ற வழித்தடமெங்கும் கண்ணில் பட்ட எல்லா கால்வாய்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக மழிக்கப்பட்ட முகங்களைப் போல் விகாரமாக காணப்பட்டன. பல இடங்களில் பெரிய குளங்கள் தூர்ந்து போயிருந்தன; குளங்களின் கரையோரங்களில் பத்துக்குப் பத்து அளவில் அரையடி ஆழத்தில் ஆங்காங்கே தரை சுரண்டப்பட்டு காணப்பட்டது.

“இது தான் நூறு நாள் வேலைத் திட்டம் ” என்றார் உடன் வந்த தோழர். அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் விவசாயத்தை அழித்தொழிப்பதும், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் புறக்கணிப்பதும் தெரிந்த செய்திகள் தான். என்றாலும், டெல்டா மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது.

”எனக்கு இப்போ 81 வயசாகுது. 1953-லேர்ந்து விவசாயத்தில இருக்கேன். அந்தக் காலத்திலே அரசாங்கத்துக்கு மக்கள் மேல கொஞ்சம் மரியாதை இருந்தது. அப்போ குடிமராமத்துன்ற பேர்ல வீட்டுக்கு ஒருத்தரை வரவழைச்சி தூர்வாரும் வேலை செய்வாங்க. இப்போ அரசாங்கமே கொள்ளையடிக்கத் தானே நடக்குது?” என்கிறார் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தில்லை வளாகம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத் தேவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணியத் தேவர் இத்தனை ஆண்டுகளில் விவசாயத்தின் போக்கு எந்த வகையில் மாறுதலுக்கு உட்பட்டது என்பதை விளக்கினார்.

பழைய கால கிராம அமைப்பில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் விவசாயத்தின் இருப்புடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருந்ததால், உழவுத் தொழிலை உயிரோடு விட்டு வைப்பது நிலப்பிரபுக்களுக்கு அவசியமானதாக இருந்தது. குடி மராமத்தை உள்ளூர் நிலப்பிரபுக்களே முன்னின்று ஒருங்கிணைத்தனர் – உள்ளூராட்சி அமைப்புகளிலும் அதிகாரத்தில் இருந்த பழைய நிலப்பிரபுக்கள், மராமத்துப் பணிகள் நடைபெறுவதை உத்திரவாதப்படுத்திக் கொண்டனர். இந்நிலை தொண்ணூறுகளுக்கு பின் தலைகீழாக மாறியது.

பெரும் நிலப்பிரபுக்களின் அதிகாரம் நிலத்துடன் பிணைந்திருந்த அதே சமயம், விவசாயத்துடன் பிணைந்திருக்கவில்லை. தொண்ணூறுகளுக்குப் பின் விவசாயத்தை விட லாபம் கொழிக்கும் பிற தொழில்கள் கைக்கெட்டும் தொலைவில் – நகரங்களில் – இருப்பதைக் கண்ட நிலப்பிரபுக்கள் விவசாயத்தை குத்தகைதாரர்களின் பொறுப்பில் விடுவது அதிகரித்தது. பெரு நிலப்பிரபுக்கள் விவசாயத்திலிருந்து விலகும் போக்கு பசுமைப்புரட்சியின் காலத்திலேயே துவங்கி விட்டதெனினும் தொண்ணூறுகளுக்குப் பின் வேகமெடுத்தது.

கிளைதாங்கியைப் போலவே ஆறுகளின் இணைக்கு செல்லக்கோன் வாய்க்கலின் தூர்வாரப்படாத நிலை.
கிளைதாங்கியைப் போலவே ஆறுகளின் இணைக்கு செல்லக்கோன் வாய்க்கலின் தூர்வாரப்படாத நிலை.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில், உள்ளூரளவில் தலையெடுக்கத் துவங்கியிருந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அரசியலைக் கைப்பற்றத் துவங்கினர். தொண்ணூறுகளுக்குப் பின் அரசின் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே விவசாயத்தையும் அதற்கான அடிக்கட்டுமானங்களையும் மேலிருந்து திட்டமிட்டு அழித்தொழிக்கும் வேலையைக் கையிலெடுத்துக் கொண்டதென்றால் – கீழிருந்து அதை துரிதப்படுத்தும் வேலையை புதிய பாணி அரசியல் ரவுடிகள் கையிலெடுத்தனர்.

அரசியலையே முழுநேரப் பிழைப்பாகவும், வருமானத்தை வாரி வழங்கும் தொழிலாகவும் ஏற்றுச் செயல்பட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளே உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். ஒருபுறம் அரசே உட்கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து வந்த நிலையில் – அவ்வாறு ஒதுக்கப்படும் தொகைகளையும் இவர்கள் முழுதாக கொள்ளையடித்தனர்.

சுப்பிரமணியத் தேவர் கிளைதாங்கி ஆற்றின் கதையை விளக்கினார். காவிரியின் கிளையாறுகளான பாமினியாறு, கோரையாறு, மறைக்கால்கோரையாறு ஆகியவற்றின் கடைமடைகளை இணைப்பது கிளைதாங்கி. அம்மூன்று ஆறுகளின் தண்ணீர் நேரடியாக கடலில் கலப்பதற்கு முன் அவற்றை இணைப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஆங்கிலேய அரசு.

தில்லைவளாகத்தின் அருகே ஓடும் கிளைதாங்கியில் இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த இறவை இயந்திரங்களையும் கால்வாய்களையும் ஏற்படுத்தி தலா சுமார் 520 ஏக்கர்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் பழுதுபட்ட இறவை இயந்திரங்கள் அதன் பின் சரிசெய்யப்படவே இல்லை. நாங்கள் அந்த இறவை இயந்திர அறையைப் பார்வையிட்டோம். நூற்றுக்கணக்கான வவ்வால்கள் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த அந்த அறையினுள் இருந்த இயந்திரங்கள் துருப்பிடித்து உருக்குலைந்து கிடந்தன.

கிளைதாங்கி ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் பல கிலோமீட்டர்கள் தொலைவுக்கு புதிதாக இறால் பண்ணைகள் முளைத்திருந்தன. கோடை காலங்களில் தங்களது பண்ணைகளுக்குத் தேவையான உப்புநீரைக் கடலில் இருந்து கிளைதாங்கி ஆற்றின் வழியே இறைத்துக் கொள்ளும் இறால் பண்ணை முதலைகள், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் டன் கணக்கான உப்பை இறால் குட்டையில் கொட்டுகின்றனர். இறால் குட்டைகளின் உப்பு அளவு அதிகரிக்கும் போது அதைக் கிளைதாங்கியில் திறந்தும் விடுகின்றனர்.

தில்லை வளாகம் துவங்கி, ஆதனூர், வேதாரண்யம் வரையில் பலகிலோமீட்டர்கள் இறால் குட்டைகளைக் காண முடிந்தது. கீழத்தஞ்சை பகுதி மட்டுமின்றி மேலத் தஞ்சையிலும் இறால் குட்டைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

“நீதி மன்றம் விளைச்சல் நிலத்தில் இறால் குட்டைகள் அமைக்க கூடாது என்கின்றன. ஆனால், அரசாங்கம் இறால் குட்டைகள் அமைக்க ஊக்குவிக்கின்றன. விவசாயத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே விவசாயிகளை நேரில் பார்த்து இறால் குட்டைகளும் நன்னீர் மீன் குட்டைகளும் அமைக்கச் சொல்கிறார்கள்” என்கிறார் சுப்பிரமணியத் தேவர்.

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 90-களில் நடத்திய இறால் பண்ணை அழிப்புப் போராட்டத்தால் உந்தப்பட்டு, அதற்கு சில ஆண்டுகள் கழித்து, தில்லை வளாகம் பகுதி மக்களைச் தனிப்பட்ட முறையில் திரட்டி போர்க்குணத்துடன் இறால் பண்ணை அழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தவர் சுப்பிரமணியத் தேவர்.

“ஏன் இப்போதும், அப்படியான ஒரு போராட்டத்துக்குத் தேவை இருக்கிறது தானே?” என்றோம்.

“சார், அன்னைக்கு நடந்த போராட்டங்களால மக்கள் மேல விழுந்த கேசுகளே இன்னும் முடியலை சார்” என்று குறுக்கிடுகிறார் சுப்பிரமணியத் தேவரின் மகன்.

”பொது வாழ்க்கையின்னு வந்தாச்சின்னாக்க.. தனிப்பட்ட அசௌகரியங்களை பார்த்துகிட்டு இருக்க முடியுமா?” என்று அவருக்கு பதிலளித்த சுப்பிரமணியத் தேவர், நம்மிடம் திரும்பினார், “அன்னைக்கு இருந்த இறால் பண்ணை முதலாளிகளை விட இன்னைக்கு இருக்கிறவங்க வேறமாதிரி இருக்காங்க தம்பி. இப்பல்லாம் ஒவ்வொரு பகுதியிலயும் இறால் பண்ணை முதலாளிகள் சங்கம் ஆரம்பிச்சிருக்காங்க…. ‘இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்கம்’ அப்படின்னு… இதிலே ஒவ்வொருத்தனும் காசு கட்டறான்.. ஒவ்வொரு சங்கத்துக்கும் சில பல லட்சங்கள் பொது நிதியா இருக்கு. இதை வச்சிகிட்டு அரசாங்க அதிகாரிகளை சரிகட்டிடறான்.. பல அதிகாரிகளே இறால் பண்ணைகல்ல கூட்டு பங்குதாரர்களா இருக்காங்க” என்றார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அறைகுறையாக நடந்த குளம் சீரமைப்பு பணிகள்
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக நடந்த குளம் சீரமைப்பு பணிகள்

மேலும் தொடர்ந்த அவரது மகன், “கடல் தண்ணீரையே உள்ளே இழுக்கிறதாலே கிளைதாங்கியிலேர்ந்து தண்ணீர் இறைச்சி சாகுபடி செய்யிற எங்க பயிரெல்லாம் கருகிப் போயிடுது சார். அதிகாரிகளை நேரில் கூப்பிட்டு வந்து காட்டினாலும் தலையாட்டிட்டு போயிடறானே தவிர நடவடிக்கை எடுக்கிறதில்லே. இறால் பண்ணைகளால இந்தப் பகுதியோட நிலத்தடி நீரே கெட்டுப் போச்சிங்க. பத்துப் பதிமூணு அடியில கூட உப்புத் தண்ணீர் தான் வருது. இந்தப் பகுதில நாங்க வறட்சின்னு ஒன்னைக் கேள்விப்பட்டதே இல்ல.. இப்ப நீங்களே போயி பாருங்க.. பயிரெல்லாம் கருகிப் போயி கிடக்கு” என்றார்.

சங்கமாகச் சேர்ந்துள்ள இறால் பண்ணை முதலாளிகள், தங்களை எதிர்த்த சாதாரண விவசாயிகள் சிலரை சத்தமின்றிக் கொன்றிருப்பதாக பகுதி மக்கள் கூறுகின்றனர். சுப்பிரமணியத் தேவர் அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரை விட்டு வைத்துள்ள அக்கும்பல், அவரது வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தி மிரட்டியுள்ளது.

“இவங்களோட பயமுறுத்தலுக்கெல்லாம் நான் அசையிறதா இல்லே தம்பி. இத்தனை வருசத்துலே எவ்வளவு பார்த்திருப்பேன்” என்கிறார் சுப்பிரமணியத்தேவர்.

இறால் பண்ணைகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதன் விளைவாக கடை மடைப்பகுதிகளில் நாங்கள் பயணித்த வழித்தடத்தில் சில இடங்களில் தெண்ணை மரங்களே கூட பட்டுப் போய்க் கிடந்தன.. “தோழர், ஒரு சில இடங்கள்லே உப்புத் தண்ணீரால பனை மரங்களே கூட பட்டுப் போயிருக்குங்க” என்றார் உடன் வந்த தோழர்.

காவிரி நீர் பிரச்சினை ஒரு பக்கமென்றால், நீராதாரங்களும் நீர்த்தடங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவது இன்னொரு பக்கத்திலிருந்து விவசாயத்தைப் படுகொலை செய்துள்ளது. அரசோ மற்றொரு புறத்திலிருந்து நெல் சாகுபடியிலிருந்தும், ஏன் விவசாயத்திலிருந்துமே, விவசாயிகளை வெளியேற்றும் வேலைகளைச் செய்து வருகின்றது.

மாற்றுப் பயிர்கள், மாற்றுத் தொழில்கள் எனும் பெயரில் அரசு நடத்தும் விவசாய அழித்தொழிப்பு பற்றி அடுத்த பகுதியில்…

– தொடரும்

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க