நிலக்கரி சுரங்கங்கள்: டெல்டாவை சூறையாடத் துடிக்கும் கார்ப்பரேட்டுகள்

மோடி அரசு வேறுவழியில்லாமல் ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களை நீக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புதான் பிரதான காரணமாகும். ஆளும் தி.மு.க அரசு இத்திட்டத்திற்கு எதிராக இருப்பது முக்கிய காரணமாகும்.

0

மிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் காவேரி டெல்டா மண்டலமாகும். தமிழகத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. கடந்த 2021- 2022 நிதியாண்டில், 22.05 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில், 122.22 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முப்போகம் விளையும் விவசாய பகுதிதான் மோடி அரசால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக, வளர்ச்சி என்ற பெயரில் (மீத்தேன், ஹைட்ரோகார்பன்) இயற்கை எரிவாயுக்கள் மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் நாசகாரத் திட்டங்களை செயல்படுத்தியது மோடி அரசு. டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் – 2020 நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி அரசு, விவசாயத்தை அழித்து டெல்டா மாவட்டங்களை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றும் தன்னுடைய நோக்கத்தில் இருந்து துளியும் பின்வாங்கவில்லை.

இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கங்களை அமைக்க தற்போது ஏல அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் அதன் வெளிப்பாடுதான். டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலக்கரி வளங்களை சூறையாட நீண்ட கால திட்டத்துடன்  செயல்பட்டு வந்துள்ளது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் போது, இது நிலக்கரி எடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை  என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டினர். தற்போது அது நிரூபணமாகியுள்ளது.

படிக்க : டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

மேலும், தமிழ்நாட்டில் நிலக்கரி எந்தெந்த மாவட்டங்களில் எத்தகைய அளவு உள்ளது என்பதை ஆய்வு செய்து வைத்துள்ளது மோடி அரசு. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மூன்று சுரங்களுக்கான அறிவிப்பு என்பது ஒரு தொடக்கம் தான். வருங்காலங்களில் பிற நிலக்கரி சுரங்களுக்கான அறிவிப்பை மோடி அரசிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஒருபுறம், நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதில் கார்ப்பரேட் கும்பல்களின் நலன் அடங்கியிருந்தாலும், மறுபுறம், இது காவி பாசிஸ்டுகளின் தமிழ்நாட்டு மக்களின் மீதான தாக்குதலும் ஆகும்.

தமிழ்நாட்டின் எதிர்ப்புணர்வும்
மோடி அரசின்  தற்காலிக பின்வாங்குதலும்

கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான  ஏழாவது ஏல அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் தமிழ்நாட்டில் மூன்று வட்டாரங்கள் இடம்பெற்றிருந்தன. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு சேத்தியாத்தோப்பில் 84.41 சதுர கிலோமீட்டர், தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள வடசேரியில் 68.30 சதுர கிலோமீட்டர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டியில் 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தது.

மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் எவ்வளவு பழுப்பு நிலக்கரி உள்ளது, நிலக்கரியை எடுத்துச்செல்ல தொடர்வண்டிப் பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அந்த ஏல அறிவிப்பில் வெளியிட்டு இருந்தது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கும் என்று தெரிந்தே, திமிர்த்தனமாக இத்தகைய நாசகார திட்டத்தை அறிவித்தது.

நிலக்கரி எடுப்பது போன்ற திட்டங்களை அமல்படுத்துவதற்கு மோடி அரசு, தமிழ்நாடு அரசிடம் இருந்து தொழிற்துறை அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் மோடி அரசு, தமிழ்நாடு அரசை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. இத்திட்டத்தை பற்றி தெரியப்படுத்த கூட இல்லை. தன்னிச்சையாக அறிவித்தது. “இந்த செய்தி வந்தபோது உங்களைப் போன்று தான் நானும் அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறும் நிலைமையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இருந்தார். இது மாநில அரசின்  பெயரளவிலான இறையாண்மையும் மதிக்காத மோடி அரசின் பாசிச அணுகுமுறையாகும்.

மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் சம்மட்டி அடி கொடுத்தது. இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியான அன்று மாலையிலே டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். போராட்டங்களில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு ஆளும் தி.மு.க அரசும் எதிராக இருந்தது. முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்; சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட போது எதிர்க்காத தமிழக பா.ஜ.க, தற்போது நிலக்கரி எடுப்பதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. எதிர்க்கவில்லை என்றால் தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே அதற்கான காரணம். ஏற்கெனவே இந்தித் திணிப்பு, ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயரை தமிழகம் என்று மாற்றக்கூறியது, ஆன்லைன் ரம்மி ஆகியவற்றில் தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளான தமிழக பா.ஜ.க, வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை எதிர்ப்பது போன்று நாடகமாடியது.

மோடி அரசு வேறுவழியில்லாமல் ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களை நீக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புதான் பிரதான காரணமாகும். ஆளும் தி.மு.க அரசு இத்திட்டத்திற்கு எதிராக இருப்பது முக்கிய காரணமாகும்.

இது தற்காலிக பின்வாங்கலாகும். மோடி அரசு, தமிழகத்தில் உள்ள மூன்று வட்டாரங்களை ஏல பட்டியலில் இருந்து தான் நீக்கியுள்ளது. இனிமேல் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மாட்டோம் எனக் கூறவில்லை.ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களுக்கு கீழ் கோடிக்கணக்கான டன் அளவில் கொட்டிக்கிடக்கும் நிலக்கரியை சூறையாடுவதில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள்.

ஆத்ம நிர்பார் பாரத் அல்ல! 
அதானி நிர்பார் பாரத்!

மோடி அரசு நிலக்கரி சுரங்கங்களை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விடுவதில் பெரும் ஆதாயம் அடையப் போவது அதானி கும்பல்தான். இந்தியாவில் அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்களை பராமரிப்பதிலும், நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வதிலும், நிலக்கரியை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்வதிலும் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்  ஒன்பது நிலக்கரி சுரங்கங்களையும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா ஒரு நிலக்கரி சுரங்கங்களையும் கொண்டுள்ளது. நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஏழு மின் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. மேலும், அதானி குழுமத்திற்கு சொந்தமான கிட்டதட்ட 12 துறைமுகங்களில் நிலக்கரி கையாளப்படுவதாக கூறப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை என்றால் அம்பானி ஞாபகம் நமக்கு வருகிறதோ, அதுபோல நிலக்கரி என்றால் அதானி கும்பல்தான்.

மோடி அரசும் அதானி கும்பலுக்கு நிலக்கரி சுரங்கங்களை அடிமாட்டு விலைக்கு தூக்கி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஏலத்தில் மோடி அரசும் அதானியும் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு, ஏலத்தை அடிமாட்டு விலைக்கு முடித்தது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. ஏலத்தில் ஈடுபட்ட இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆகும். இதற்காக மோடி அரசு ஏலத்தில் குறைந்தபட்சம் மூன்று நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்ற விதியை திருத்தி இரண்டு நிறுவனங்களாக மாற்றியுள்ளது.

படிக்க : நிலக்கரி முதல் மின் தட்டுப்பாடு வரை – தனியார்மயமாக்கத்தின் விளைவே !

அதானி குழுமம் முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளின் மூலம் பங்குச் சந்தையில் தனது குழுமத்தின் பங்கை செயற்கையாக உயர்த்திக் காட்டியதை விரிவாக அம்பலப்படுத்தியது ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, எல்லா துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு நிலக்கரி துறையும் விதிவிலக்கல்ல. அதற்கேற்ப பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தளர்த்தப்பட்ட விதிகள் கூட அதானி குழுமத்தின் இலாபவெறியை பூர்த்தி செய்யவில்லை.

நிலக்கரி சுரங்களை அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களுக்கு திறந்துவிடுவதன் மூலம், இந்தியாவின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய உள்ளதாக காரணம் கூறுகிறது மோடி அரசு. 101 வட்டாரங்களில் நிலக்கரி சுரங்களுக்கான ஏல அறிவிப்பும் அதற்காகத்தான். அதை பறைசாற்றும் விதமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி , “நாட்டின் நிலக்கரி உற்பத்தி 2025 -2026 ஆம் நிதியாண்டிற்குள் 1.1 பில்லியன் டன்களை எட்டும் எனவும், அதில் 200 மில்லியன் டன்கள் தனியார் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும்” என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

அதற்கேற்ப, தனியார் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருகிறது. கடந்த 2022 -23 நிதியாண்டில் தனியார் நிலக்கரி சுரங்க உற்பத்தியாளர்கள் 121.88 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளனர். இது முந்தைய நிதியாண்டை விட 34.59% அதிகம் ஆகும். மேலும், உபரியாகும் நிலக்கரி இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார் அமைச்சர். கார்ப்பரேட் கும்பல்கள் தான் ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. இதற்கான விதிகள் 2020 ஆம் ஆண்டே தளர்த்தப்பட்டு விட்டன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி குழுமத்தின் மோசடிகள் அம்பலப்பட்டு போயுள்ள இச்சூழலில் மோடி அரசானது, அதானி குழுமத்தின் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக தீவிரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் நாடாளுமன்ற விசாரனைக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. மாறாக, தொழிலாளர் ஓய்வூதிய நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்கிறது. அடிமாட்டு விலைக்கு நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்க்க காத்துக் கொண்டிருக்கிறது. அதானிகளின் வளர்ச்சி தான் தேசத்தின் வளர்ச்சி என்பதை தன்னுடைய செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க