நிலக்கரி முதல் மின் தட்டுப்பாடு வரை – தனியார்மயமாக்கத்தின் விளைவே !
கோல் இந்தியாவை சீரழித்து, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறது ஒன்றிய மோடி அரசு.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2 அன்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டு இருந்தது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தினசரி 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு 23 டன் நிலக்கரி தேவை. கடந்த சில தினங்களாக நிலக்கரி வரத்து குறைவு மற்றும் மின் தேவை அதிகமாக இருந்ததால் இருப்பில் உள்ள நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால் நிலக்கரி இருப்பும் வெகுவாக குறைந்தது. அதனால் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தை போல் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.
நிலக்கரி தட்டுப்பாடானது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியா முழுவதும் உள்ளது. மற்ற மாநிலங்களில் (பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்) நிலக்கரி தட்டுப்பாடானது தமிழ்நாட்டுடன் ஒப்பீடும் போது மிக அதிகமாக உள்ளது.
“நாடு முழுவதும் மொத்தமுள்ள 173 அனல்மின் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றில் தேவையான நிலக்கரி கையிருப்பு 25%-க்கும் குறைவாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில் 10%-க்கும் குறைவாக உள்ளது” என தமிழ் இந்து 29.4.2022 அன்று தனது தலையங்க கட்டுரையில் எழுதியுள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி நிலவரப்படி 66.72 மில்லியன் டன்களுக்கு இருக்க வேண்டிய நிலக்கரி கையிருப்பு 22.52 மில்லியன் டன்கள் தான் உள்ளது. இது பொதுவான கையிருப்பில் 34% மட்டுமே. அதன்படி 9 நாட்கள் மட்டுமே அனல்மின் நிலையங்கள் மின்சாரம் தயாரிக்க முடியும் என ஒன்றிய மின்சார ஆணைய அறிக்கை கூறுகிறது.
மேற்கூறியவாறு நிலக்கரி தட்டுப்பாடானது நாடு முழுவதும் நிலவுவதால், இந்தியா முழுவதும் மின்தடையும் அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் தேவையான மின்சாரத்தைவிட 6% குறைவாக மின்சார விநியோகமே உள்ளது. ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27 வரை 1.88 பில்லியன் யூனிட் தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் 3 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 8 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. ஆந்திரப்பிரதேசத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 7 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பீகாரில் 300 மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 4 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பஞ்சாப்பில் 6 – 7 மணி நேரம், ராஜஸ்தானில் 7 மணி நேரம், உத்தரகாண்டில் 6 மணி நேரம், தெலுங்கானாவில் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.
குஜராத்தில் தொழிற்சாலைகள் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு இந்தியாவிற்கே முன்மாதிரி அல்லவா. ஆனால் அங்கேயே வாரம் 1 நாள் தொழிற்சாலைகள் விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை நாள்தோறும் 2 – 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள மின் தேவையில் 70% அனல்மின் நிலையங்களில் இருந்தே பெறப்படுகிறது. அனல்மின் நிலையங்களானது நிலக்கரி வைத்தே இயங்குகிறது. எனவே நிலக்கரி தட்டுப்பாடானது நாட்டின் மின் உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது.
தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு கொள்ளை லாபம் – மக்களுக்கோ விலையேற்றம்
மே 5, 2022 அன்று ஒன்றிய அரசானது மின்சாரச் சட்டம் 11-வது பிரிவு படி, இறக்குமதி நிலக்கரியில் இயங்கும் அனைத்து அனல்மின் நிலையங்களையும் முழுத்திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்களில் பெரும்பாலானவை தனியார் அனல்மின் நிலையங்கள். எஸ்ஸார் பவர், கோஸ்டல் எனர்ஜென், டாடா பவர், அதானி பவர் போன்றவை முக்கியமானவை ஆகும்.
உக்ரைன் – இரஷ்யா இடையிலான போரினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை 44% – 55% வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மடங்கு இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது.
இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மின் உற்பத்தியாளர்கள், அதிகப்படியான விலை வைத்து மின்சாரத்தை விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர்.
கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இதேபோல் நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, அதானி பவர், டாடா பவர், எஸ்ஸான் பவர் 3 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்தன.
நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு முன்னால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4 முதல் ரூ.6-க்கு விற்பனை செய்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி ரூ.16 முதல் ரூ.18 வரை பல மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசானது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20 வரை விலை கொடுத்து வாங்கியதாக செய்திகள் வெளியாகின.
ஒன்றிய அரசானது தற்போது தனியார் மின் உற்பத்தி நிலையங்களை முழு வீச்சோடு மின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியதோடு மட்டுமில்லாமல், மாநில அரசுகளுக்கு கூடுதல் விலையை மக்களிடம் இருந்து வசூலிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
2022 ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படு மின்சாரத்திற்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 அக்டோபரில் ஒரு யூனிட் ரூ.16 முதல் ரூ.18 வரை வைத்து விற்றவர்கள், தற்போது எவ்வளவு விலை வைத்து விற்பார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி ஒருபுறம் தனியார் மின் உற்பத்தியாளர்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர். மறுபுறம் மின்சார விலை ஏற்றமானது மக்களின் தலை மீது விழுகிறது.
கோடை காலமும், ஒன்றிய அரசின் முறையற்ற நிலக்கரி விநியோகமும் தான் காரணமா?
இந்தியாவில் 9 வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில், 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதனால் 2022 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் தேவை 207.11 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2021-ல் 182 ஜிகாவாட்டாகவும், ஏப்ரல் 2020-ல் 133 ஜிகாவாட்டாக தான் மின் தேவை இருந்தது. தற்போது மின் தேவையானது 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் கோடைக்காலம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் 220 ஜிகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிபிசி செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஒன்றிய மின்துறை அதிகாரிகள், “கோடை வெப்பம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே உச்சத்தை தொட்டுள்ளதால் நுகர்வோரின் மின்தேவை அதிவேகமாக அதிகரித்தது. இது தேவை – விநியோக இடைவெளியை அதிகமாக்கியிருக்கிறது” என்று கூறியுள்ளார்கள்.
மேற்கூறியவாறு அவர்கள் கூற்றுப்படி பார்த்தாலும், கோடை வெப்பச்சலனம் காரணமாக ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனால், அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை. அதைச் செய்ய தவறியது பற்றி இந்த அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நிலக்கரி கையிருப்பு குறைந்தற்கான காரணம் பற்றாக்குறை அல்ல. அவற்றை அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்குப் போதுமான அளவில் ரயில் பெட்டிகள் கிடைக்காததுதான் என்று ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அமித்ஷா ஏப்ரல் 29 அன்று நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பு உள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்ல போதுமான சரக்கு ரயில்களை ஏற்பாடு செய்ய ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
ரயில் பெட்டிகளை முறையாக ஏற்பாடு செய்யாதது, கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய முன்கூட்டியே திட்டமிடாதது எல்லாம் அரசின் நிர்வாக குறைபாடுகள் தான். அவை நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணங்கள் அல்ல. ஆனால் அரசானது இவைகள் தான் உண்மையான காரணங்கள் என மக்களின் முன் நிறுத்த முயற்சி செய்கிறது.
நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாடு – தனியார்மயமாக்கத்தின் விளைவே
ஒன்றிய அரசானது நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து, இந்திய நிலக்கரி லிமிடெட் (கோல் இந்தியா) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏற்கெனவே மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் மூலம் மீண்டும் இயக்க மே 6 அன்று முடிவு செய்துள்ளது.
இந்த 20 நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியானது, சந்தையில் நடைமுறையில் உள்ள விலையின் அடிப்படையில் தனியார் மூலம் விற்பனை செய்யப்படும். அதில், ஒரு பகுதி இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 20 நிலக்கரி சுரங்கங்களின் திறப்பு விழாவில் பேசிய ஒன்றிய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “நிலக்கரி உற்பத்தியில் தற்சார்பை அடையவும், இறக்குமதியை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இணைய தனியார் துறைகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
அதாவது ஒன்றிய அரசு சொல்லும் தற்சார்பு என்றால், எல்லா நிலக்கரி சுரங்கங்களையும் தனியாருக்கு கொடுத்து, எல்லா விதிகளையும் தகர்த்து நிலக்கரியை ஒட்ட சுரண்டி உற்பத்தியை அதிகரிப்பதுதான் தற்சார்பு ஆகும். ஏன் தற்போது 20 நிலக்கரி சுரங்கங்களை அரசு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா மூலமே இயக்கலாமே? ஏன் தனியார் மூலம் இயக்க வேண்டும்? இங்குதான் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கை அமல்படுத்துதல் உள்ளது.
ஒன்றிய அரசானது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகள் மூலம் இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்தை சீரழித்ததை சுருக்கமாக பார்ப்போம்.
1972 – 1973 காலகட்டத்தில் நிலக்கரி சுரங்க தேசியமயமாக்கல் சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் தேசியமயமாக்கப்பட்டன. 1990-களில் தனியார்மய, தாராளமய மற்றும் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒன்றிய அரசானது 1993 – 2010 வரை ஐந்து முறை நிலக்கரி சட்டங்களில் தனியாருக்கு சாதகமாக திருத்தம் செய்துள்ளது. இதில், 2006-ல் நிறைவேற்றப்பட்ட 100% அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் சட்ட திருத்தமும் அடங்கும்.
1993-ம் ஆண்டு இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 200 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டன. இந்த 200 சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், 2021 வரை உற்பத்தியானது ஆண்டுக்கு 60 மில்லியன் டன்னை தாண்டவில்லை. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய கோல் இந்தியாவானது ஒரு நிர்பந்தத்திலேயே வைக்கப்பட்டது எனக் கூறுகிறார் முன்னாள் கோல் இந்தியா தலைவர் பார்த்தா பட்டாச்சார்யா.
இப்படி ஒருபுறம் ஒன்றிய அரசானது கோல் இந்தியா நிறுவனத்தை நிர்பந்தத்திலேயே வைத்த வேளையில், மறுபுறம் அந்நிறுவனத்தின் உபரி நிதியை சூறையாடியது.
2015-ம் ஆண்டு கோல் இந்தியாவானது 35 ஆயிரம் கோடி உபரி நிதியாக வைத்திருந்தது. அதைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தை மேம்படுத்தாமல் ஒன்றிய அரசானது அப்பணத்தை தன் பங்காக எடுத்துக் கொண்டது. 2019-ம் ஆண்டு உபரி நிதி 8 ஆயிரம் கோடியாக குறைந்தது என்கிறார் நிலக்கரி துறையின் முன்னாள் செயலர் அணில் ஸ்வரூப்.
மோடி அரசானது 2020-ம் ஆண்டு, வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரியை மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம் என அனுமதித்தது. அதாவது தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை, அதிக இலாபம் வைத்து எந்த துறை சார்ந்த நிறுவனத்துக்கும் விற்கலாம் என்பது தான் அத்தளர்வு கூறுகிறது.
மேற்கூறியவாறு கோல் இந்தியா நிறுவனமானது படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக தன் உற்பத்தியை அதிகரித்து கோல் இந்தியா நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போராடி வந்துள்ளது.
1990-க்குப் பிறகு 2021 வரை கோல் இந்தியாவிற்கு சொந்தமான 28 பில்லியன் டன் உற்பத்தி திறனுடைய நிலக்கரி சுரங்கங்கள் அதனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள் முன்னாள் கோல் இந்தியா நிர்வாகிகள். ஆகவே ஒன்றிய அரசானது, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயப்படுத்தாமல் முறையாக இயக்கி இருந்தாலே, நிலக்கரி தட்டுப்பாடு என்பது இந்தியாவில் இருக்காது.
ஆனால், ஒன்றிய அரசு அதற்கு மாறாக நிலக்கரி சுரங்கங்களை படிப்படியாக தனியார்மயமாக்கி, கோல் இந்தியாவை சீரழித்து, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறது. இதற்கு தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி, 20 பழைய சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைத்ததே சிறந்த உதாரணம்.
ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகள் மூலம் நாட்டில் உள்ள நிலக்கரி வளங்களை ஒட்ட சுரண்டி இலாபம் சம்பாதிக்கபோவது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்தான். நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களின் சொத்து. அதை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்கையடிக்க மக்களாகிய நாம் அனுமதிக்கலாமா? கண்டிப்பாக முடியாது.
ஆகவே, உழைக்கும் மக்களாகிய நாம், நிலக்கரி துறையில் மட்டுமல்லாமல் எல்லாதுறைகளிலும் அமல்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்க எல்லா ஒடுக்கப்படும் வர்க்கங்களை ஒன்றிணைத்து போராட்டங்களை கட்டியமைப்பதே, தனியார்மயக் கொள்கைகளை ஒழிப்பதற்கான தொடக்கமாக அமையும்.