கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காக வணிக ரீதியான உற்பத்திக்காக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான  சுரங்கங்களை ஏலத்தில் கோரியுள்ளது அதானி நிறுவனம்.

கடந்த மே மாதம், பெருந்தொற்று பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் பெருநிறுவனங்களை கொழுக்க வைக்கும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பணியிழந்து, வருமானம் இழந்து லட்சக்கணக்கில் ஊர் திரும்பிய இடம்பெயர் தொழிலாளர்களுக்கு கைவிரித்துவிட்டு,  நிலக்கரி சுரங்கத்துறையில் வருவாய் பங்கீட்டில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும், நிலக்கரிச் சுரங்கங்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொதுச் சந்தையில் விற்பனை செய்யலாம்; இதை வைத்து பொருளாதாரத்தை நிமிரச் செய்வோம் என நிர்மலா அறிவித்தார். வெளிப்படையான முறையில் 500 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும் எனவும் அலுமினிய உற்பத்தித் துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படும் எனவும் அறிவித்தார்.

சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் ஏலம் எடுக்க இருக்கும் நிறுவனங்களை ‘ஊக்குவித்தார்’ நிர்மலா சீத்தாராமன்.

படிக்க :
♦ இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
♦ ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !

ஜூன் மாதம் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக  41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் நிலக்கரி துறையை தனியாருக்கு அளிப்பது இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறும் திசையை நோக்கிய முன்னெடுப்பு என பெருமிதப்பட்டார்.

அடுத்த 5-7 ஆண்டுகளில் இது சுமார் ரூ.33,000 கோடி முதலீட்டை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தக் கொரோனா காலக்கட்டத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியா இதிலிருந்து மீண்டு சுயசார்பு அடையும் என்று பிரதமர் மோடி பேசினார். தனியார்மயம் மூலம் நிலக்கரி ஏற்றுமதியில் இந்தியா 4வது பெரிய நாடாகும் எனவும் மோடி பேசினார்.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான சுரங்க ஏலம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போலவே, குஜராத்தைச் சேர்ந்த உள்கட்டமைப்பு நிறுவனமான அதானி நிறுவனம், 19 சுரங்கங்களில் 12 சுரங்கங்களுக்கான ஏலத்தில் பங்கெடுத்துள்ளது.  ஆதித்யா பிர்லா குழுமமும் ஜெ எம் எஸ் மைனிங் என்ற நிறுவனமும் தலா ஐந்து ஏலங்களிலும் நவீன் ஜிந்தால் குழுமம் நான்கு ஏலங்களிலும் பங்கெடுத்துள்ளன.

இந்த ஏலங்கள் மூலம், இந்தியா ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு வணிக ரீதியாக நிலக்கரிச் சுரங்கத்தை தனியார் துறைக்குத் திறக்கிறது. இந்த துறை 1970-களில் தேசியமயமாக்கப்பட்டது. 1990-களில் கொள்கை மாற்றம் காரணமாக எஃகு, சிமெண்ட் மற்றும் தெர்மல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழில்துறை பிரிவுகளில் பயன்படுத்த நிலக்கரியை சுரங்கங்களில் இருந்து எடுக்க அனுமதித்தது. ஆனால் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்பட்டன எனக்கூறி சுரங்க ஒதுக்கீடுகள் 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.

2015-ம் ஆண்டில், இந்தியா நிலக்கரி சுரங்கங்களுக்கான போட்டி ஏலங்களை அறிமுகப்படுத்தியது; ஆனால் இறுதி பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அப்படியே இருந்தன: வெற்றியாளர்கள் தங்கள் தொழில்துறை பிரிவுகளில் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி வணிக ரீதியில் நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க அரசாங்கம் சட்டத்தை திருத்தியது – அதாவது, ஏலம் வென்றவர்கள் இப்போது எந்தவொரு தடையும் இன்றி உள்நாட்டிலும் உலக அளவிலும் நிலக்கரியை சுரங்கத்திலிருந்து எடுத்து விற்கவும் முடியும்.

ஒளிவுமறைவான ஏல முறைகள்

முதலில், நிலக்கரி அமைச்சகம் 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட திட்டமிட்டிருந்தது, ஆனால் அந்த பட்டியல் பின்னர் 38 ஆக குறைக்கப்பட்டது. தொழில்நுட்ப ஏலங்கள் (இதில் நிறுவனங்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதற்கான விவரங்களை அளிக்க வேண்டும் ) செப்டம்பர் 29 அன்று மூடப்பட்டது. ஆனால் அடுத்த நாளே, அமைச்சகம் 23 சுரங்கங்களுக்கான ஏலங்களை மட்டுமே பெற்றதாக அறிவித்தது.

பதினைந்து சுரங்கங்கள் ஒரு தொழில்நுட்ப ஏலத்தைக்கூட பெறவில்லை. நான்கு சுரங்கங்கள் தலா ஒரு முயற்சியைப் பெற்றன. இதன் காரணமாக 19 சுரங்கங்கள் ஏல செயல்பாட்டில் இருந்து வெளியேறின. ஒளிவுமறைவான ஏல முறைகள் குறித்து 38 சுரங்கங்களை தனது மாநிலத்தில் வைத்துள்ள ஜார்க்கண்ட் அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கவலை தெரிவித்திருந்தது. பெருந்தொற்று காலத்தில் ஏலம் வைத்திருப்பது பங்கேற்பை குறைத்து ஏல விலையையும் குறைக்கும் என அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தில் எரிசக்தி நிதி ஆய்வுகள் இயக்குனர் டிம் பக்லி, ஏலங்களில் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கிறார். நிலக்கரி மீதான பெருநிறுவன மற்றும் நிதி ஆர்வம் குறைந்து வருவதையும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வீழ்ச்சிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாகவும் சர்வதேச நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறியிருந்தார். அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே, ஒரேஒ ரு வெளிநாட்டு நிறுவனம்கூட இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.

அவர் கணித்தபடி, ஒரு வெளிநாட்டு நிறுவனம் கூட ஏலம் எடுக்கவில்லை.

உள்நாட்டு நிறுவனங்கள் கூட சுரங்கங்களுக்காக வரிசையில் நிற்க வாய்ப்பில்லை என்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பொருளாதாரம் சுருங்கிய இந்த நேரத்தில், நிலக்கரி தேவை வீழ்ச்சியடைந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். மேலும் சில நிறுவனங்களிடம் மட்டுமே முதலீடு செய்ய மூலதனம் உள்ளது எனவும் கூறுகின்றனர்.

பங்கேற்பின் மோசமான தரம்

வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு முதலீடு மற்றும் உலகளாவிய நிபுணத்துவத்தை கொண்டு வரலாம் எனவும்  இது இந்திய சுரங்கத் துறையை மாற்றும் எனவும் நிலக்கரி அமைச்சர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தார்.  ஆனால் ஏலத்தில் பங்கேற்கும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சுரங்க அனுபவமே இல்லை. ஏலதாரர்களின் பட்டியலில் பல பங்கு வர்த்தக நிறுவனங்கள், ஒரு கட்டுமான நிறுவனம், ஒரு மருந்து உற்பத்தியாளர், ஒரு குளிரூட்டல் எரிவாயு நிரப்பு நிறுவனம்கூட பங்கெடுத்துள்ளது.

அதானி குழுமம் ஏன் ஏலத்தில் ஆர்வம் கொள்கிறது?

ஆகஸ்ட் மாதத்தில், அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறிய நிலையில், இந்தக் குழுமம் 12 ஏலங்களை கோரியுள்ளது.

ஆயினும், இந்த குழுமம் 12 சுரங்கங்களுக்கான ஏலங்களை வழங்கியது: குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஏழு ஏலங்கள், துணை நிறுவனமான ஸ்ட்ராடடெக் மினரல் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் மூன்று ஏலங்கள், துணை நிறுவனங்களான அதானி பவர் ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் செண்டிபாடா கோலியரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தலா ஒரு ஏலத்தை கோரியுள்ளன..

அதானி நிறுவனம் ஏற்கெனவே நிலக்கரி சுரங்கத்தில் கணிசமான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இது தற்போது மூன்று இந்திய மாநிலங்களில் ஒன்பது நிலக்கரி சுரங்கங்களை சுரங்க உருவாக்குனராகவும், செயல்படுத்துனராகவும் உள்ளது, அதாவது சுரங்க உரிமங்களை வைத்திருக்கும் அரசு நிறுவனங்கள் உண்மையான சுரங்க நடவடிக்கைகளை அதானிக்கு துணை ஒப்பந்தம் செய்துள்ளன.

தனியார் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய வெப்ப மின் உற்பத்தியாளராகவும் இது உள்ளது. தற்போதுள்ள நான்கு வெப்ப மின் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் மூன்று திட்டங்கள் உள்ளன. தற்போது, ​​அதானி பவர் தனது நிலக்கரி தேவைகளை அரசாங்கத்தால் நடத்தப்படும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு கொள்முதல் மற்றும் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.

ஏலங்களை வெல்வது அதானி குழுமத்திற்கு நிலக்கரி இருப்புக்களை நேரடியாக எடுத்து, தனது வெப்ப மின் நிலையங்களில் பயன்படுத்தலாம். நிலக்கரி சுரங்கங்கள் அதானியின் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் சொத்துக்களின் பட்டியலிலும் சேர்க்கும். இது உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அதிக மூலதனத்தை திரட்ட உதவும்.

படிக்க :
♦ பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

சமீபத்திய ஆண்டுகளில் வருமான இழப்பை சந்தித்துள்ள பிற உள்கட்டமைப்பு நிறுவனங்களைப் போலல்லாமல், அதானி குழுமம் பாரிய விரிவாக்கத்தைக் கண்டது. பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு ஆண்டுகளில் அதானி குழுமம், தனது வணிகங்களை விரிவுபடுத்தி, பன்முகப்படுத்தியதால், மின் உற்பத்தி, எரிவாயு விநியோகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வேளாண் பொருட்கள் என இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில்  ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடைந்துள்ளது.

அதானி நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் குழுமம் வளர்ச்சியை ஆதரிக்க போதுமான பணத்தை உருவாக்கவில்லை என்றாலும்கூட அரசியல் அதிகாரத்திற்கு அருகாமையில் இருப்பது, மூலதனத்திற்கான அணுகல் மற்றும் உள்கட்டமைப்பில் போட்டி நிறுவனங்களின் வாய்ப்புகளை குறைத்தல் போன்ற பிறவழிகளின் மூலம் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

இந்த பின்னனியில்தான் நிலக்கரி சுரங்க ஏலங்களில் அதானி குழுமத்தின் ஆக்கிரோஷமாக பங்கேற்பு இருக்கிறது. ஒரு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மலிவான விலையில் கனிம சொத்துக்களை மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொள்ள அதானி குழுமம் நினைக்கிறது. ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் அது மிக எளிதாகவே கைக்கூடும். நவம்பர் 11-ம் தேதி ஏல முடிவுகள் வெளியாக உள்ளன.

ஏலம் எடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களே ஆர்வம் காட்டாத நிலையில், இதனால் கிடைக்கக்கூடும் என மோடி அரசு சொல்லிக்கொண்ட பொருளாதார பயன்கள் வெற்று அறிவிப்புகளாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறைந்த விலைக்கு வளங்கள் விற்கப்படுவது சுரங்கங்கள் உள்ள மாநிலங்களை பாதிக்கும் எனவும் ஆனால் மோடி அரசு அதன் பெருநிறுவன கூட்டாளிகளுக்கு அனைத்தையும் எழுதி கொடுத்துவிட்டு எனக்கென்ன என அமர்ந்திருக்கும் எனவும் விமர்சிக்கின்றனர்.

நன்றி : ஸ்க்ரால்
கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க