கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள ஆரோக்கிய சேது என்ற செயலியை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனக் கூறி கடந்த மே மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று குறித்த விவரத்தை உடனடியாக காட்டும் எனவும் ரயில் மற்றும் விமான பயணம் செய்வோர் இந்த செயலியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுறுத்தலுக்கேற்ப இந்த செயலியை இதுவரை 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த செயலி வெளியானபோதே அதுகுறித்த நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது. இந்த செயலி மூலம் சேகரிகப்படும் தனிநபர் தரவுகள் எந்த துறைக்கு அனுப்பப்படுகிறது என இந்த செயலியில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தனிநபர் உரிமை விதிகளுக்கு மாறாக இது இருப்பதாகவும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுண்டேஷன் எனும் அமைப்பு கூறியது. இப்படி சேகரிக்கப்படும் தரவுகள் அரசால் வேறு காரணங்களுக்காக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.

பிரான்ஸை சேர்ந்த ஹேக்கரான எலியட் ஆண்டர்சன்,  செயலியை வைத்துள்ளவர்களின் தனிநபர் தகவல் கசியும் ஆபத்து உள்ளதாகக் கூறினார். பிரதமர் அலுவலகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு செயலியின் நம்பகத்தன்மையை போட்டு உடைத்தார்.

படிக்க :
♦ நகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

ஆனாலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள், பரிசோதனைக்கு சென்றவர்கள், வெளியிடங்களுக்கு பயணம் செய்தவர்கள் என அனைவரையும் ஆரோக்கிய சேது செயலி வைத்திருப்பதை கட்டாயப்படுத்தியது அரசு. இந்த நிலையில், தங்களிடம் ஆரோக்ய சேது செயலி உருவாக்கம் குறித்த தகவல் ஏதும் இல்லை என கைவிரித்துள்ளது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம்.

ஆரோக்யா சேது  செயலியை உருவாக்கிய செயல்முறை, அதன் உருவாக்கம் தொடர்பான கோப்புகள், செயலி உருவாக்கம் குறித்து உள்ளீடுகளை வழங்கியவர்கள் விவரம், தனிநபர் விவரங்கள் தவறாக பயன்படுத்துவதை சரிபார்க்கும் தணிக்கை முறை குறித்த விவரங்களை தேசிய தகவல் மையமும் (NIC), மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகமும் அளிக்கவில்லை.

சவுரவ் தாஸ் என்பவர் கேட்ட ஆர்.டி.ஐ தகவலில் செயலி உருவாக்கம் குறித்து தகவல் ஏதும் இல்லை என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால், செயலியில் அதை உருவாக்கியது தொடர்பான விவரத்தில் தேசிய தகவல் மையம் உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல, தேசிய மின்னணு ஆளுகை பிரிவு (NeGD) இது தொடர்பான விவரம் தன்னிடம் இல்லை என தெரிவித்துள்ளது.  ஒருபடி மேலே சென்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின்  தகவல் தொடர்பு அதிகாரி, செயலியின் உருவாக்கம் குறித்து நம்பகத்தகுந்த விளக்கம் அளிக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த செயலி எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்க முடியாது எனவும், அது எப்படி உருவானது என்பது குறித்து எந்த துப்பும் இல்லை எனவும் அமைச்சகம் கூறியுள்ளது. ஆரோக்ய சேது செயலி உருவாக்கத்தில் நிதி அயோக்கின் உள்ளீடுகள் இருந்தன என்கிற தகவலை மட்டுமே கூற முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கிய சேது செயலியின் இணையதளம்,  “ஆரோக்யா சேது  தேசிய தகவல் மையம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, வழங்கப்படுகிறது.” எனக் கூறுகிறது.

இந்த நிலையில் மத்திய தகவல் ஆணையம், மேற்கண்ட பதில்கள் ‘மிகவும் அபத்தமானது’ என்று கூறியதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 20-வது பிரிவின் கீழ் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என மத்திய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.  மத்திய தகவல் ஆணையம் ஒப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.  இதனால் அரசின் கண்காணிப்பு நோக்கத்துக்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது. கொரோனாவை பயன்படுத்தி பிஎம் கேர் நிதி முறைகேடு முதல் ஆரோக்கிய சேது செயலி மூலம் தகவல் திருட்டு வரை எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என்ற நோக்கில் மக்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.


கலைமதி
செய்தி ஆதாரம்:
ஹஃபிங்டன்போஸ்ட்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க