Wednesday, June 7, 2023
முகப்புசெய்திஇந்தியாநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா !

நகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா !

நகர்ப்புறத்தின் மேட்டுக்குடிகளுக்கான சேவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தையோ, பொது சுகாதாரத்தையோ உயர்த்த இந்த அரசு ஒரு முயற்சியும் எடுத்ததில்லை.

-

மும்பையில் நடத்தப்பட்ட இரத்த நிணநீர் சோதனை (Blood Serum Test) கணக்கெடுப்பின் படி மும்பையின் குறிப்பான சேரிப் பகுதிகளில் வாழும் சுமார் 57% மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று வந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இது நகர்ப்புற பகுதியில் வாழும் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிர்ஹான்மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் சார்பில் மும்பையின் மாதுங்கா, செம்பார், தஹிசார்  ஆகிய மூன்று பகுதிகளில் 6936 பேருக்கு கோவிட் – 19 நோய்த்தொற்றுக்குக் காரணமான சார்ஸ் – கோவ்-2 எனும் வைரசிற்கு எதிரான நோயெதிர்ப்புப் பொருள் (Antibody) இரத்தத்தில் உருவாகியுள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதிகளில் சராசரியாக சுமார் 40.5 % பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக இந்தப் பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன.

இந்த பரிசோதனைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டோரில், 61% பேர் சேரிப் பகுதியில் வாழ்பவர்கள், மீதமுள்ள 39% பேர் நகர்ப் பகுதியில் வசிப்பவர்கள். பெரியவர், சிறியவர், பெண்கள், ஆண்கள் என பரந்துபட்ட மக்கள்பிரிவினரிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில், சேரிப் பகுதியைச் சேர்ந்த 2,297 பெண்களில் 59.3% பேருக்கு கொரோனா நோய்த்தொற்று வந்து சென்றதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் (Antibody) இரத்தத்தில் உருவாகியிருந்திருக்கிறது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சேரிப் பகுதியைச் சேர்ந்த 1937 ஆண்களில் 53.2 % ஆண்களுக்கு கொரோனா நோய்த்தொற்று வந்து சென்றதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் இரத்தத்தில் உருவாகியிருந்திருக்கிறது. நகர்ப் பகுதிகளில் வாழும் பெண்களில் 16.8% பேருக்கும், ஆண்களில் 14.8 % பேருக்கும் கொரோனா நோயெதிர்ப்புப் பொருள் (Antibody) இரத்தத்தில் உருவாகியிருந்திருப்பது இந்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

படிக்க:
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
♦ அடாவடி நுண் கடன் செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிப்பு செய் !

நகர்ப்பகுதிகளில் வாழ்பவர்களை விட சேரிப் பகுதிகளில் வாழ்பவர்கள் சுமார் 3.5 மடங்கு அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். நெருக்கமான வாழ்நிலை மற்றும் பொதுக் கழிப்பறை, சமூக இடைவெளியை பின்பற்றாமை ஆகியவையே இதற்கான முக்கியக் காரணம் என்று அரசு தரப்பு குறிப்பிடுகிறது.

நகர்ப்புறத்தின் மேட்டுக்குடிகளுக்கான சேவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் விளிம்புநிலை மக்களின் நிரந்தரமற்ற வேலையை நிரந்தரமாக்கவோ, அவர்களது வருமானத்தை உயர்த்தவோ இந்த அரசு ஒரு முயற்சியும் எடுத்ததில்லை. இத்தகைய விளிம்பு நிலை மக்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவை தான் இந்த நகர்ப்புற சேரிகள். தங்களுக்குச் சேவை புரிவதற்காக அவர்களை உயிரோடு பராமரிக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக்வே அதையும் விட்டுவைத்திருக்கிறது ஆளும் வர்க்கம். அத்தகைய நெருக்கமான குடியிருப்பில் சமூக இடைவெளியை அம்மக்கள் எங்கிருந்து கடைபிடிப்பது ?

இந்தக் கணக்கெடுப்பு கொரோனாவினால் ஏற்படும் மரண விகிதம் குறைவு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. “இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக சேரிப் பகுதியில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறது இந்த கணக்கெடுப்பை நடத்திய அடிப்படை ஆய்வுக்கான டாட்டாவின் கல்வி நிறுவனம். (TIFR)

இந்த ஆய்விலிருந்து கிடைக்கப்பெற்ற மற்றொரு முக்கிய முடிவு, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் நோய் அறிகுறிகள் வெளிப்படாமல் இருந்திருக்கிறது. அல்லது நோயின் அறிகுறி வெகு குறைவாக வெளிப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சேரிப்பகுதிகளில் அதிக அளவிலானோருக்கு கொரோனா தொற்றுநோய்ப் பரவலும் அதற்கு எதிரான நோயெதிர்ப்புப் பொருட்கள் உருவாதலும் உடலில் நிகழ்ந்துள்ள நிலையில் இது கூட்டு நோயெதிர்ப்புத் திறன் (Herd Immunity) உருவாகுவதற்கான அடிப்படையா? என்ற கேள்வியும் இதன் ஊடாக எழுகிறது.

இது குறித்து மராட்டிய மாநில அரசு பெருந்தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் கூறுகையில், “வைரசிற்கு எதிரான நோயெதிர்ப்பு பொருட்கள் (Antibodies) சுரப்பதையே நோயெதிர்ப்புத் திறன் (immunity) என்று குறிப்பிடமுடியாது. உடல் அணுக்கள் அளவிலான நோயெதிர்ப்புத் திறனை உடல் உருவாக்கிக் கொள்வதுதான் நோயெதிர்ப்புத் திறன் எனப்படுகிறது. இயல்பாகவே சேரிப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பிற பகுதி குடிமக்களை விட  விரைவாக கூட்டு நோயெதிர்ப்புத் திறன்  (Herd Immunity) உருவாகும்” என்றார்.

இந்த பரிசோதனைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்க்கையில், ஒப்பீட்டளவில் பெண்கள் அதிகமான அளவு பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அரசு நடத்தும் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவில் ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவர் ககன்தீப் கங் கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொற்று ஏற்படுவதில் வேறுபாடுகள் ஏதும் இருக்காது என்றும் இந்தக் கணக்கெடுப்பை மட்டும் எடுத்துக் கொண்டு ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரத்தை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் கருப்பின மக்கள் குடியிருப்பு துவங்கி, இந்தியாவில் சேரிகள் வரை, உழைக்கும் மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. வரலாறு நெடுகிலும் தொற்று நோய்களுக்கு அதிகம் பலியாவது உழைக்கும் மக்களே. கொரோனா நோய்த்தொற்றும் அதற்கு விதிவிலக்கல்ல.


– நந்தன்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

  1. (Nitrogen dioxide:corona covid19) வஞ்சக வலை விரித்துள்ள கொரானா தொற்று அலைக்கற்றையில் இருப்பிடம் அமைக்கும் சிலந்திக்கு ஒப்பானது,அதை சர்வாதிகார முதலாளிகள் சீனாவில் தொற்றுவித்து அடக்கிவிட்ட நோக்கம் வேறு,மற்ற உலகிலுள்ள பல நாடுகளில் இதனை ஊட்டி வளர்க்கும் நோக்கம் வேறு…!!! இயல்பாகவே பிரபஞ்சத்தில் நடக்கும் அன்றாட இறப்புகள் யாவும் கொரானா கணக்கில் வரவு வைக்கப்படுகிறது…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க