வில்லவன்
வில்லவன்
சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் ஒரு தோழரோடு உரையாடுகையில் அவர் குறிப்பிட்டார் “இது செத்துக்கொண்டிருக்கும் நகரம், இங்கு செட்டில் ஆவது குறித்து சிந்திக்காதீர்கள்”. அவை ஏதோ விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அல்ல. பழைய தஞ்சாவூரை வேட்டையாட பல்வேறு பெருந்திட்டங்கள் காத்திருக்கின்றன.

நிலக்கரி, மீத்தேன், பாறை எரிவாயு, பெட்ரோல் என பல அகழ்வுத் தொழில்கள் முற்றுகையிடவிருக்கின்றன. மன்னார்குடி – முத்துப்பேட்டைக்கு இடையே உள்ள எங்கள் கிராமம் எப்போது வேண்டுமானாலும் நிலக்கரி அகழ்வுப் பணிகளுக்கு கைப்பற்றப்படலாம் (பத்திரப்பதிவின் போது அந்த எச்சரிக்கை தரப்படுகிறது). மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோல் வெயிட்டிங் லிஸ்ட் ஊர்கள் தனி.

தஞ்சை டெல்டா பன்னெடுங்காலமாக வளமான பூமிதான். ஆனால் அங்கிருந்த பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வறுமையில்தான் இருந்தார்கள். உழைப்பதைத்தவிர வேறெதையும் அறியாமல் வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள். முப்போகம் விளையும் காவிரி வடிநிலத்தில்தான் என் அப்பாவும் மற்றவர்களும் மார்கழி மாதத்தின் பசியை வெறும் முருங்கைக்கீரையைத் தின்று சமாளித்திருக்கிறார்கள். என் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சகோதரிகளும் பாதி இடிந்த வீட்டில் பல வருடகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு சன்ன அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை எந்த உறவுக்காரர்கள் வீட்டிலும் சாப்பிட்டதாக நினைவில்லை. ஐ.ஆர்.20 அரிசியே அப்போது அரசு வேலையில் இருப்போர் வீடுகளில்தான் இருக்கும். அதிகம் தண்ணீர் கலக்காத காபி டீ முதல் அழுது வடியாத குண்டு பல்புகள் வரையான அல்பமான தேவைகள்கூட கடந்த சில ஆண்டுகளில்தான் சாத்தியமானது.

தஞ்சாவூரின் வளமும் அந்த மக்களின் உழைப்பும் எல்லா காலத்திலும் மிக சொற்பமானவர்களை மட்டுமே வசதியோடு வைத்திருந்தது. சமீபகாலத்தில் பரவலாக கிடைத்திருக்கும் மிகச்சொற்ப வசதிகளும்கூட வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆட்களால் கிடைத்ததுதான். இன்னமும் விவசாயத்தை நம்பி வாழும் எங்கள் உறவுக்காரர்கள் வீடுகளில் தரித்திரம் மட்டும்தான் சவுகர்யமாக இருக்கிறது. வளைகுடா வேலைகளும் திருப்பூர் வேலைகளும் இல்லாவிட்டால் தஞ்சையில் பட்டினிச் சாவுகள்கூட தினசரி செய்தியாக இருந்திருக்கும். நேர்மையாக சொன்னால் விவசாயம் தஞ்சை மக்களை காப்பாற்றவில்லை மாறாக மக்கள்தான் வெளியே வேலைக்குப் போய் விவசாயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கஜா புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் தொலைக்காட்சிகளில் பேசிய விவசாயிகளில் பலரும் ஆயிரக்கணக்கில் செலவிட்டு உரம் போட்டதாக சொல்லித்தான் அழுதார்கள். அவ்வப்போது பசுமை விகடன் வாசிக்கும் மத்தியதர வர்க்கம் விவசாயம் ஒரு இலாபகரமான தொழில் என்பதாக கற்பனை செய்துகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அடுத்த வெள்ளாமைக்கான கடனை இப்போதே பலர் வாங்கியிருப்பார்கள். தஞ்சாவூரில் இத்தனை குடிசைகள் இருக்கும் செய்தி தஞ்சையில் வசிக்கும் பல நகரவாசிகளுக்கே இப்போதுதான் தெரிந்திருக்கும். உங்கள் கிராமங்களில் இருந்து பாலை கொண்டுவருகிறோம் எனும் பழைய ஆரோக்யா பால் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும், அதே கிராமங்கள்தான் இப்போது யாரேனும் தன்னார்வலர்கள் பால் கொண்டு வருகிறார்களா என காத்திருக்கிறார்கள்.

படிக்க:
மாற்று ஊடகத்திற்கான தேவை – வில்லவன்
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் எதற்கு தென்னை விவசாயம் என அதி புத்திசாலித்தனமான கேள்விகளையும் ஆங்காங்கே கேட்க நேர்கிறது. எதை விதைப்பது என்பதை விவசாயிகள் தெரிவு செய்யும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. பட்டுக்கோட்டையை தாண்டி காவிரித் தண்ணீர் பாய்வதெல்லாம் அதிசயமாக நடக்கும் சம்பவம். அதனை நம்பி நெல்லோ கரும்போ நடுவது தற்கொலை முயற்சி. தண்ணீர் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளும் பயிர்களை நோக்கி மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பெரும்பான்மை மாற்றுப் பயிர்களை அரசுதான் பரிந்துரை செய்கிறது (காவிரி நீரை பெற்றுத்தர முடியாத கையாலாகாத்தனத்தை மறைக்க). பாமாயில் உற்பத்திக்காக எண்ணைப் பனை விளைவிக்கச்சொல்லி அரசு ஊக்குவித்தது. நம்பி பலரும் நட்டார்கள், பிறகு அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. நட்டவர்கள் நட்டாற்றில் நின்றார்கள் (மரங்களை அப்புறப்படுத்தி பிறகு அதே வயலில் சிறு பயிர்களை நட நீங்கள் மீண்டும் கணிசமாக செலவிட வேண்டியிருக்கும், பிறகு ஓரளவு விளைச்சலைக் காண நீங்கள் இரண்டொரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்).

வெளியே வேலை பார்த்து எதற்கு அவர்கள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்?

தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது (மேலும் சில காரணிகளும் இருக்கலாம்). நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு முதல் காரணம். அதுதான் அவர்களை நிலத்தை சும்மா போட்டுவைக்க விடாமல் தடுக்கிறது. திருப்பூரில் குடியேறிய என் நண்பரின் மனைவி, வீட்டில் சில காய்கறிச் செடிகளை விளைவித்தார். கத்திரியில் பூச்சி அடித்துவிட்டது. உடனே பூச்சி மருந்து வாங்கி வரச்சொல்லி நண்பரை நச்சரித்தார். இந்த நாலு கத்திரியில் என்ன கிடைக்குமென்று இப்படி மெனக்கெடுகிறீர்கள் எனக் கேட்டேன். அவருக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது, அவரால் தன் பயிர்கள் நாசமாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதன் பலன்களுக்கும் செலவுக்கும் ஒத்துப்போகுமா என்பதைக்கூட அவர் கணக்கிட முயலவில்லை. அவருக்கு அவர் செடிகள் வீணாகிவிடக்கூடாது அவ்வளவே. மழை பொய்த்து, ஆறு வறண்ட காலங்களில் லாரியில் தண்ணீர் வாங்கி நெல்லுக்கு பாய்ச்சிய விவசாயிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வெறுமனே இலாப நட்டக் கணக்குப் பார்த்தால் முக்கால்வாசி விவசாயிகள் பயிர்தொழிலைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்க வேண்டும்.

இந்த பிணைப்பை ஓரளவுக்கு அர்த்தமுடையதாக்க பல விவசாயிகள் வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து, அந்தப் பணத்தை தென்னை போன்ற நீண்டகால பணப்பயிர்களில் முதலீடு செய்கிறார்கள். பத்து வருடங்கள் பெரிய வருவாய் இருக்காது என்றாலும்கூட வேலை செய்ய முடியாமல் ஓய்ந்துபோய் ஊருக்கு வரும்போது தம் வயலில் (தோப்பில்) கொஞ்சம் உழைத்து ஓரளவுவேனும் சம்பாதிக்கலாம் எனும் நம்பிக்கையில் அப்படி செய்தவர்கள் ஏராளம். பணப்பயிர்கள் முதலில் பயிரிடுவோருக்கு ஓரளவு இலாபம் கொடுக்கும். அதை நம்பி தென்னை பயிரிட்டவர்கள் ஏராளம். பாதுகாப்பற்ற எதிர்காலம், வங்கி முதலீட்டில் இலாபமின்மை மற்றும் பெரிய முதலீடுகளை செய்ய இயலாமை ஆகிய களச்சூழல் வெளியே வேலைக்குப் போன விவசாயிகளையும் வயலை நோக்கி தள்ளுகிறது.

தென்னையும் உத்திரவாதமான முதலீடல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னால் விலை வீழ்ச்சி மற்றும் வண்டு தாக்குதல் ஆகியவை அவ்விவசாயிகளை மரணத்தை நோக்கி விரட்டியது (பலர் எண்ணிக்கொண்டிருப்பதைப் போல தென்னையை நட்டுவிட்டு வானத்தைப் பார்த்து காயை எண்ண முடியாது. உரம் போட, மருந்து தெளிக்கவெல்லாம் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் அழ வேண்டும்). ஆகவே பெரும் பணம் சம்பாதிக்காத டெல்டாவில் வயல் உள்ள ஒரு குடிமகன் தமது ஓய்வுகால முதலீட்டை தம் நிலத்தில்தான் போட்டாகவேண்டும். அதுமட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

படிக்க:
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல். சூனியமாகவிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கொஞ்சம் முன்கூட்டியே வர வைத்திருக்கிறது இப்புயல். வீடு கட்டுவது என்பது சாதாரண மனிதனின் வாழ்நாள் கனவு. இப்போது வீடிழந்த மக்கள் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகவே இருக்கப்போகிறது. இழந்த தோப்புக்களும் படகுகளும் அவர்களுக்கு கடைசியாக இருந்த மூலதனம். அதனை கஜா நசுக்கி வீசியிருக்கிறது. அவர்கள் எல்லோரும் தம் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் தினசரி வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவு மிக்கதாக இருக்கிறது. பத்து நாள் ஆகியும் இன்றுவரை உணவுக்கு கையேந்துகிறது டெல்டா.

இரக்கம் சில காலம் மட்டுமே வாழக்கூடிய உணர்வு. டெல்டாவின் தேவையில் ஓரிரு சதவிகிதத்தைகூட அதனால் பூர்த்தி செய்ய இயலாது. பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஜீவித்திருக்க தேவையானவற்றின் பட்டியல் மிக பிரம்மாண்டமானது.

கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்த நிலையில், மழையில் நனைந்த நெல் முளைத்தது.

♦ விளை பொருளுக்கான நியாயமான விலை (அரசு நெல் கொள்முதல் மையங்கள் சாக்குப் பைகள் இல்லை எனும் காரணத்தால் நெல்லை வாங்க மறுக்கும் கதைகள்கூட இங்கே சாதாரணம்)

♦ உத்திரவாதமான தண்ணீர் பாசனம் (காவிரி நீரை பெறுவது மட்டும் பிரச்சினை அல்ல. பெங்களூர் முதல் திருச்சி – தஞ்சை வரையுள்ள பல பெரு நகரங்களின் சாக்கடை சங்கமிக்கும் இடம் காவிரி. திருப்பூர் ஈரோடு சாயக்கழிவுகளின் புகலிடமும் காவிரிதான்),

♦ சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரிக்கின்றன, அவற்றை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் (அனேக கிராமங்களில் மக்களை தங்கவைக்க போதுமான அவசரகால இடங்கள்கூட இல்லை)

♦ இனி அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும் புயல்களை எதிர்கொள்ளத்தக்க கான்கிரீட் வீடுகள், மக்களின் பெருமளவு பணத்தை விழுங்கும் கல்வியை இலவசமாக்குதல் (புயலால் பாதிக்கப்பட்ட பலரும் எப்படிப் பிள்ளையை படிக்க வைப்பேன் என்றே அழுதார்கள். கடந்த கால் நூற்றாண்டில் தஞ்சை பகுதியில் ஓரளவு வசதியான வாழ்வை பெற்றவர்கள் படித்து வேலைக்கு சென்றவர் மட்டும்தான். ஆகவே எப்படியாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் எனும் பெருவிருப்பம் மாவட்டமெங்கும் மக்களிடையே வியாபித்திருக்கிறது. கல்வியும் மருத்துவமும்தான் மக்களின் பெருமளவு சேமிப்பைத் தின்கின்றன)

சம்பா பயிர் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சை ஆலக்குடியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம். (கோப்புப் படம்)

♦ விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்திரவாதம் (அடுத்த சில மாதங்களுக்கு விவசாய வேலை என்பது இங்கே சாத்தியம் இல்லை).

♦ மக்கள் மீதும் சூழல் மீதும் கொஞ்சமும் இரக்கம் காட்டாத பெருந்திட்டங்களை நிராகரிக்கும் உரிமை.

இவையெல்லாம் நம்மில் பலருக்கு நகைப்புக்குரிய கோரிக்கையாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை முழுமையாக செய்யாவிட்டால் இந்த மண் சோமாலியாவைப்போல மாறுவதைத் தடுக்கவே முடியாது. மக்களை ஒருவேளை சோற்றுக்கு சாலையில் ஓடவிட்டதில் மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது. அந்த மண்ணின் மீது அக்கறையிருப்பவர்கள் இவை எல்லாவற்றுக்காவும் பேசியாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் நிரந்தர நிவாரண முகாம்களை அமைத்து கொடையாளர்களை தேடி அலைய வேண்டியிருக்கும்.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க