privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமாற்று ஊடகத்திற்கான தேவை - வில்லவன்

மாற்று ஊடகத்திற்கான தேவை – வில்லவன்

-

என் பார்வையில் வினவு – 31 : வில்லவன்

மக்கு மிகவும் பரிச்சயமான பகுதியில் வசிக்கும் ஒருவரை வேறொரு இடத்தில் எதேச்சையாக சந்தித்ததைப் போலத்தான் வினவின் வேர்ட்பிரஸ் தளம் எனக்கு அறிமுகமானது. அப்போது நடந்த ஒரு பின்னூட்ட விவாதத்தில், ஒரே கருத்தை மாறிமாறி சொல்லிக் கொண்டே இருந்த ஒருவருக்கு வினவு சார்பாக வந்த பதில் இப்படியிருந்தது “கணினி மையத்தில் இருந்து பதில் சொல்லும் என்னால் இதற்குமேல் செலவு செய்து ஒரே விடயத்தை சொல்லிக்கொண்டிருக்க முடியாது” (நீண்ட காலத்துக்கு முன்னால் வாசித்ததென்பதால் அவ்வளவு தெளிவாக நினைவில்லை). அன்றைய தளத்துக்கும் இன்றைக்கிருக்கும் வினவின் வீச்சுக்கும் இடையேயான வளர்ச்சியை காணும்போது பெருமிதமாக இருக்கிறது.

சமூகப் பார்வை
மனிதனின் சமூகப் பார்வை

இந்த பதிவில் நான் பேச விரும்புவது வினவு தளத்தின் தேவை பற்றித்தான். ஒரு மனிதனின் சமூகப் பார்வை என்பது அவனுக்கு கிடைக்கும் செய்திகளை வைத்தே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைகிறது. இன்றைய ஊடகச்சூழல் செய்திகளை ஒரு முதலாளியின் பார்வையில் வாசகனுக்கு வழங்குகிறது. செய்தியை ஒரு விற்பனைச் சரக்காக கருதுகிறது.

இந்தியாவின் தேசிய ஊடகங்கள் அமிதாப் பச்சன் வீட்டு கல்யாணத்தில் தடியடி வாங்கி செய்தி சேகரித்தபோதுதான் ஒரு விசாரணைக் கைதி ஐம்பதாண்டு காலம் சிறையிலிருந்த சம்பவம் பெட்டிச் செய்தியாக வந்தது. சுகாஷ் எனும் கிரிமினலின் செயல்பாடுகள் பின்னால் தள்ளப்பட்டு அவனது காதலி லீனா மரியா பாலை மையமாக வைத்து மட்டும் செய்திகள் வருகின்றன. பெரும்பாலான சாமானிய மக்களின் இரக்கம், கோபம் ஆகிய உணர்ச்சிகளைக்கூட ஊடகங்கள் ஒன்று சேர்ந்து தீர்மானிக்கின்ற அபாயகரமான நிலைதான் இப்போது இருக்கிறது. லோக்பால் என்றால் என்னவென்றுகூட ஆராயாமல் அன்னா ஹசாரேவுக்கு மக்கள் மெழுகுவர்த்தி பிடித்ததும், அப்துல் கலாமே சொன்னதுக்கு பிறகும் அணுவுலை மேல சந்தேகமா என நீதிமன்றம் கடுப்படித்ததும் இந்த சூழலின் எச்சம்தான்.

மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை நேர்மையாக சொல்லும், செய்தியை பார்க்க வேண்டிய கோணத்தையும் சொல்லித்தரும் ஒரு மாற்று ஊடகத்துக்கான தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக இருக்கிறது. அந்த தேவையை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்திருப்பதுதான் வினவின் வெற்றி. சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லா ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த இசுலாமிய வெறுப்பை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் (இப்போதும் அது இருக்கிறது, கொஞ்சம் குறைவாக). அந்த ஊடகங்களின் செய்தியை மட்டும் எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனுக்கும் அந்த வெறுப்பு கற்றுத் தரப்பட்டது. எது சரி, எது தவறு என்பதை நாம் அறிந்த செய்திகளைக் கொண்டுதான் தீர்மானிக்கிறோம். இந்த எளிய சூத்திரத்தைக் கொண்டுதான் மோடி எனும் பச்சைப் படுகொலையாளனை இந்தியாவை காக்க வந்த சூப்பர்மேனாக சித்தரிக்க முடிகிறது. உண்மையான செய்தி சென்று சேரும் போதுதான் தன்னுடைய உண்மையான முகத்தை ஒருவரால் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் வினவை வாசிப்பதன் வாயிலாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட பலரை எனக்குத் தெரியும். அவ்வாறான பலர் தங்களது கருத்தை இப்போது வினவில் பதிவுசெய்தும் வருகிறார்கள்.

இடதுசாரி பின்புலத்தில் வளர்ந்த அல்லது வசித்த நபர்கள், வாழ்வியல் தேவைகளுக்காக வேறிடத்துக்கு புலம்பெயர்கையில் கருத்தியல் ரீதியாக தனித்து விடப்படுகிறார்கள் (அவ்வாறு உணர்கிறார்கள் என்பதே சரி). அந்த எண்ணத்தில் இருந்து மீளவும் தனது சமூக அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் ஒரு தளம் தேவைப்படுகிறது. நானறிந்த வகையில் அந்த இடத்தை வினவுதான் நிரப்புகிறது. பயன்பாட்டில் இல்லாத பழக்கம் மறந்து போகும் என்பது உளவியலின் ஒரு விதி. இயக்க நடவடிக்கையில் இருந்து விலகிய பிறகு சுற்றத்துக்கான சமரசம் எனும் பெயரில் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்து பிள்ளையார் படத்தை மேசையில் வைத்து கடைசியாக இரண்டு நிறத்தில் நெற்றிப் பொட்டு வைக்கும் அளவுக்கு தனது சுயத்தை இழந்த ஒரு தோழரை எனக்கு தெரியும். அழகி படத்தை பார்த்துவிட்டு வந்த சமயத்தில் அப்படம் பற்றிய எனது கருத்து வேறு. பு.கவில் அதன் விமர்சனம் படித்த பிறகு எனக்கு கிடைத்த தெளிவு நான் கொண்டிருந்த கருத்துக்கு நேரெதிரானது. அது இன்னொரு படத்தை எப்படி அணுகுவது எனும் பாடத்தை எனக்கு கற்றுத்தந்தது. ஆகவே சரியான சமூகப்பார்வையை கொண்டிருக்கும் நபரும் தனது பார்வையை இழந்து விடாதிருக்க ஒரு துணை தேவைப்படுகிறது. அந்த வகையிலும் வினவின் இருப்பு அவசியமாகிறது.

எழுதப்படும் பதிவுகள் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதில் வினவு தோழர்களுக்கு இருக்கும் முனைப்பை ஒரு கட்டுரையாளனாக நான் அறிவேன் (ஒரு அடையாளத்துக்காக சொல்கிறேன்.. உண்மையில் கட்டுரையாளன் என சொல்லிக்கொள்ள இன்னும் தகுதியடையவில்லை). அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தொடர்பாக எழுதப்பட்ட எனது பதிவு வினவால் நிராகரிக்கப்பட்டது. அஃப்சல் தூக்கு பற்றிய விரிவான கட்டுரை தயாரிப்பில் இருப்பதால் உங்களது பதிவை வெளியிட இயலவில்லை என பதிலளித்திருந்தார்கள். ஆகவே இங்கே பதிவேற்றப்படும் எதுவும் வெறும் கணக்கிற்காக எழுதப்படுவதில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் விலைவாசி கடுமையாக உயர்ந்த ஒரு தருணத்தில் (அப்போது பூண்டு கிலோ முந்நூறு ரூபாயாக இருந்தது) நண்பரொருவர் கடுப்பாக சொன்னார் “இந்த கம்யூனிஸ்டுங்கள்ளாம் என்னதான்யா பண்றாங்க?”. கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாதென்றாலும் சாமானிய மக்களின் பிரச்சனைக்காக போராடுவதுதான் ஒரு கம்யூனிஸ்டின் வேலை என்பது ஒரு சாதாரண குடிமகனின் புத்தியில் படிந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில், வினவு மேலும் பலரது பங்கேற்போடு இன்னும் வலுவான ஒரு ஊடகமாக வளர வேண்டியது அவசியமாகிறது. அந்த நிலையை தோழர்களது உழைப்பு சாத்தியமாக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

– வில்லவன்