டந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பி, உபரி நீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டுக் கடலில் கலந்து வருகிறது. காவிரியில் நீர் வராதா என ஏங்கிக் கொண்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளும் தமிழக மக்களும் இப்பொழுது பல்லாயிரம் கன அடி உபரி நீர் எவ்விதப் பலனும் இன்றிக் கடலில் கலப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் மேட்டூரிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆகஸ்டு மாத இறுதியிலோ மேட்டூரிலிருந்து நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மேட்டூருக்குக் கீழுள்ள முக்கொம்பு அணை, கல்லணை, கீழணை ஆகியவை ஆழி போல உருவெடுத்துவரும் இந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகள் அல்ல.

குறிப்பாக, கல்லணையிலிருந்து காவிரியில் ஒரு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,750 கன அடி நீர்தான் அதிகபட்சமாகத் திறக்க முடியும். இதற்கு அதிகமாக கல்லணைக்கு வரும் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகக் கடலுக்குச் சென்று விடும்.

வரைமுறையற்ற மணல்கொள்ளை மற்றும் அணைப் பராமரிப்பு பணிகளைக் கைவிட்டதன் காரணமாக உடைந்துபோன மேலணை.

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட அளவு கடலில் கலப்பது அவசியமே. எனினும், இன்று காவிரியில் நாம் காணும் காட்சி, கிரிமினல் குற்றத்திற்கு இணையானது.

ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்துகொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும் கூட இன்னும் வந்து சேரவில்லை.

கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடிக் கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்கின்றன.

காவிரியும் அதன் கிளை நதிகளும் மணல் கொள்ளை-யாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்களோ தூர் வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால்தான் ஜூலை 19 அன்று மிகத் தடபுடலாக மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கும் தருவாயிலும் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு நீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற வேண்டிய சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி நிற்கிறது.

நாகப்பட்டின மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மட்டுமின்றி, தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் பகுதிகளிலும்; கல்லணைக் கால்வாய் செல்லும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் உள்ள வாய்க்கால்களுக்கும் நீர் வந்து சேராததால், நட்ட நாற்றுகள் கருகிப் போகுமோ எனக் கலங்கி நிற்கிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.

கல்லணைக்கு அருகிலேயே காய்ந்துகிடக்கும் கட்டளைக் கால்வாயில் இறங்கி, காத்திருப்புப் போராட்டம் நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

காவிரியின் இயற்கையான வடிகாலான கொள்ளிடம் ஆறு 160 கி.மீ. தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. சமவெளிப் பகுதியில் இத்துணை தொலைவு ஓடும் கொள்ளிடம் ஆற்று நீரைத் தடுத்துத் தேக்கி வைப்பதற்கு கீழணையைத் தவிர, வேறு தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. குறிப்பாக, கீழணையைத் தாண்டினால், 60 கி.மீ. தொலைவுக்கு காவிரியின் உபரி நீர் எவ்விதத் தடையும் இன்றி ஓடிக் கடலில் மட்டுமே கலக்கும்.

இதனால் 2006-இல் 42.85 டி.எம்.சி., 2007-இல் 64.41 டி.எம்.சி., 2008-இல் 78.15 டி.எம்.சி., 2009-இல் 65.42 டி.எம்.சி. உபரி நீர் எவ்விதப் பயனும் இன்றி வீணாகக் கடலில் கலந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் கடலில் கலப்பதற்கு 10 டி.எம்.சி. நீரை ஒதுக்கியுள்ளன. அபரிமிதமான வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீர் இன்னுமொரு மடங்கு அதிகரிக்கலாம். ஆனால், அதனைவிடப் பல மடங்கு உபரி நீர் கடலில் கலப்பதைத் தமிழக அரசு எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அனுமதித்து வருவதை இப்புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

ஒரு டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்துவரும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இப்படி காவிரி நீரை வீணடிப்பதன் மூலமும் டெல்டா விவசாயிகள் மீது பெரும் பொருளாதார இழப்பு சுமத்தப்பட்டு வருகிறது.

***

காவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கக் கோரி 2014-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.

அதே ஆண்டில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கும் அளவிற்குக் கதவணை கட்டப்படும் எனச் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.

அ.தி.மு.க. அரசு அறிவித்த இத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே புதைந்து போய்விட்டன என்பது ஒருபுறமிருக்க, “தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால், அங்கு தடுப்பணைகளைக் கட்ட முடியாது” என்றொரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வாய்க்கால்களைப் பராமரிக்காமல் புறக்கணித்ததால், கரை உடைந்து வெள்ளக் காடான சீர்காழி – நாதல்படுகை.

தமிழகப் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் வீரப்பனும், நடராஜனும் கல்லணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட கொள்ளிடம் வடிநிலப் பகுதியில் ஏழு தடுப்பணைகளைக் கட்டி 10.5 டி.எம்.சி. அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

கீழணைக்குக் கீழே மூன்று தடுப்பணைகள் கட்ட வாய்ப்பிருப்பதாக அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். இக்கூற்றுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் “சேக்கிழார் புகழ் அறிவாளி” எடப்பாடியோ காவிரியில் தடுப்பணைகளே கட்ட முடியாது என்று உளறுகிறார்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முழுப் பெருமையும் தமக்கே உரியது என உரிமைப் பாராட்டிக் கொள்வதில் எவ்வித அசூயையும் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை முறையாகப் பராமரிக்கவோ, அதனை நடுவர் மன்றம் அளித்திருந்த வழிகாட்டுதல்படி நவீனப்படுத்தவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான வரைவு பத்தாண்டுகளுக்கு முன்பே, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டாலும், அத்திட்டம் இதுநாள் வரையிலும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது. 5,166 கோடி ரூபாய் பெறுமான இத்திட்டத்திற்கு மட்டுமின்றி, காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கும் ஒரு நயா பைசாகூட ஒதுக்க முடியாது என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக அரசிடம் தெரிவித்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.

நிதி ஆதாரமில்லை என்ற நொண்டிச்சாக்கை இதற்குக் காரணமாகக் கூறியிருக்கிறது, மைய அரசு. (தி இந்து, 12.08.2018) ஆனால், எட்டு வழிச்சாலைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே சொடுக்கில் ஒதுக்கப்படுகிறது.

காவிரி நதிப் படுகையில் நடந்த மணற்கொள்ளையில் சேகர்ரெட்டி, படிக்காசு கிரிமினல் கும்பலும், அவர்களது எஜமானர்களான ஜெயா ஓ.பி.எஸ். ஆகியோரும் அடித்த பல்லாயிரம் கோடி ரூபாயோடு ஒப்பிடும்பொழுது, இத்திட்டத்திற்கான நிதி ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனினும், மைய அரசு போலவே அ.தி.மு.க. அரசும் கடந்த ஏழு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது.

ஆளுயர ஆழத்திற்கு வரைமுறையின்றிச் சூறையாடப்படும் ஆற்றுமணல். பசுமாட்டின் மடியை அறுத்தெறிவதற்கு இணையான கிரிமினல் குற்றம்.

இத்திட்டம் முழுமையாக நிறைவேறியிருந்தால், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 3.37 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மைய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததன் மூலம் தமிழக மக்களுக்குக் கொடூரமான அநீதியை இழைத்திருக்கின்றன.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து மணிமுத்தாறு, அய்யாறை இணைக்கும் 6,800 கோடி ரூபாய் பெறுமான திட்டம், கீழ் வெண்ணாறு ஆற்றுப் படுகையில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் 1,560 கோடி ரூபாய் திட்டம், 14,000 கோடி ரூபாய் பெறுமான காவிரிப் பாசன வழித்தடங்களை நவீனப்படுத்தும் திட்டம், ஒகேனக்கல் – தொப்பூர் கால்வாய், மேட்டூர் கால்வாய், ஏற்காடு அடிவாரக் கால்வாய் பட்டணம் இணைப்புத் திட்டங்கள், வீராணம் ஏரியின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரியைத் தூர்வாரி சீரமைக்கும் திட்டம், கொள்ளிடத்து நீரை சுத்தமல்லி ஏரி, பொன்னேரிக்குக் கால்வாய் வழியாகக் கொண்டுபோகும் திட்டம் என இவையாவுமே காகிதத் திட்டங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன.

காவிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற நதி ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் கிடப்பில்தான் உள்ளன. குறிப்பாக, அமராவதி அணையின் பின் பகுதியில் உள்ள கூட்டாறு எனுமிடத்தில் மேல் அமராவதி அணையைக் கட்டி 2 டி.எம்.சி. நீரைச் சேமிக்கும் திட்டம், மோயாற்றுடன் பல சிற்றாறுகளை இணைத்துப் பவானி சாகர் அணைக்குக் கூடுதல் நீரை எடுத்துவருவதோடு, மோயாற்று நீரை காவிரியின் கடைமடை பகுதி வரை கொண்டு வரும் திட்டம், பரம்பிக்குளம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை ஆகிய இரண்டு அணைகளை கேரள அரசின் மூலம் நிறைவேற்றுவது, தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது ஆகிய அனைத்துமே பல ஆண்டுகளாகப் பேசப்பட்டாலும், அவை அனைத்துமே காகிதத் திட்டங்களாகவே உள்ளன.

***

ரு பன்னாட்டு நிறுவனமோ, இந்தியத் தரகு முதலாளியோ தொழிற்சாலை தொடங்க அடிக்கல்லை நடுவதற்கு முன்னரே, அவர்களுக்குத் தேவையான நிலம், நீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்கும், தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை மிக அலட்சியமாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

அதிவிரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புல்லட் ரயில்கள் என்பவையெல்லாம் தொழிற்துறை வளர்ச்சிக்கு அவசியமானவை என நமக்குப் பாடமெடுத்துவரும் ஆட்சியாளர்கள், உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயப் பொருள் உற்பத்திக்கும் அவசியமான நீர்ப் பாசனத் திட்டங்களை அடிக்கட்டுமானத் திட்டங்களாக ஏற்க மறுக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காகிதத் திட்டமாகவே முடங்கிக் கிடக்கிறது, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.

எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை ஒதுக்கியிருந்தாலே கொள்ளிடத்தில் ஏழிலிருந்து பத்து தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும். குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் விட்டிருந்தால், இந்நேரம் டெல்டா மாவட்டங்களிலுள்ள குளங்களும், ஏரிகளும் நிரம்பியிருக்கும் என்பதோடு, அ.தி.மு.க. அட்டைகள் அடித்த 4,735 கோடி ரூபாய் கொள்ளையும் (தமிழ் இந்து, 19.08.2018) தடுக்கப்பட்டிருக்கும்.

காவிரியிலும் கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்ட முடியாது என எடப்பாடி வாதிடுவதற்குப் பின்னுள்ள காரணம் மணற் கொள்ளை மட்டுமல்ல. டெல்டா மாவட்டங்களைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற சதியும் அதனுள்ளே மறைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் – கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை. இங்குதான் பல கச்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்குக் கசடாகிக் குடிக்கவோ, பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘‘மன நிலையை” உருவாக்கி வருகிறார்கள்.

இது போன்று நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், அப்பகுதி விவசாயிகள்.

இன்று காவிரியில் நாம் காணும் காட்சி கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்து கொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப் பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும்கூட இன்னும் வந்து சேரவில்லை.

இந்தச் சதிகளெல்லாம் ஒருபுறமிக்க, ‘‘இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதைத் தடுக்க முடியாது” என்பதைக் கொள்கைப் பிரகடனமாகவே அறிவிக்கும் தனியார்மய ஆதரவாளர்கள், இதன் வழியாகத்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என வாதிடுகிறார்கள் (பார்க்க: புதிய ஜனநாயகம், ஜூலை 2017). கொஞ்சம் விவசாயிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களையெல்லாம், விவசாயத்தை விட்டு வெளியேற்றி, அவர்களைத் தொழிற்துறை முதலாளிகளின் இலாபத்திற்காக, அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் தனியார்மயம் – தாராளமயத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தைப் படிப்படியாக ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் விவசாய மானியங்களை வெட்டுகிறார்கள். விவசாய விளைபொருட்களுக்குச் சந்தையில் உரிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மறுக்கிறார்கள். வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் விவசாய நிலங்களையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.

இந்தக் கொள்கை தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மறுப்பது, ஏற்கெனவே இருந்துவரும் நீர்நிலை ஆதாரங்களைப் புறக்கணித்து அழிப்பது என்ற பேரழிவையும் ஏந்தி வருகிறது.

உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில் போராடும்பொழுது மட்டுமே, காவிரியை மட்டுமல்ல, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

– குப்பன்

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

1 மறுமொழி

  1. இப்படியான ஆபத்தை தமிழகம் எதிர் கொள்ளவேண்டி வரும் என யேர்மனியிலிரந்து வெளியாகும் அகரம் என்ற புலம் பெயர் தமிழர்களினால் பிரசுரிக்கப் பட்ட 2013 மார்ச் மாத இதழில் 7ம் பக்கத்தில் வேதாந்தா நிறுவனம் ஈழத் தமிழின அழிப்பில் ஆற்றிய பங்கு குறித்தும் தமிழகம் நிலவாயு வளத்தினால்எதிர் கொள்ளப்போகும் ஆபத்து குறித்தும் எழுதி உள்ளது.

    கீழே உள்ள இணைய தளத்தில் எவரும் படித்து தெரிந்து கொள்ள முடியும்.
    https://issuu.com/akaram/docs/magazine_march_web/6

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க