தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !

டெல்டா மாவட்ட விவசாயத்தின் மீது இன்னொரு பேரிடியாக இறங்கியிருக்கிறது, முக்கொம்பு மேலணை உடைப்பு.

காவிரியின் கடைமடை பகுதி விவசாயிகள் மட்டுமல்ல, கல்லணைக்கு அருகிலுள்ள தலைமடைப் பகுதியான செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கும்கூடத் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் முக்கொம்பு மேலணை உடைந்திருப்பது, சம்பா சாகுபடியைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கைக்குக் கிடைத்தவர்களுக்கும் வாய்க்குக் கிடைக்காத ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

mukkombujpg
உடைந்து போன முக்கொம்பு அணையின் மதகுகளைப் பார்வையிடும் “தமிழகத்தின் எதிரி எடப்பாடி”

மேலணையின் 9 மதகுகள் உடைந்து போனதை இயற்கையானதாகக் காட்டித் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முயல்கிறது, தமிழக அரசு. அவ்வணை 182 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் மனிதர்கள் திடீரென நோய்வாய்ப்படுவது போல அணை திடீரென இடிந்துவிட்டது என்றும் அலட்சியமாகப் பதில் அளித்து, அணையை முறையாகப் பராமரிக்கத் தவறிய தமது குற்றங்களையெல்லாம் மூடிமறைக்கிறது அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டம்.

மேலணை உடைந்து போனதை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் அலட்சியம், இலஞ்சம், ஊழல் ஆகியவற்றோடு மட்டும் முடிச்சுப்போட்டுச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இந்த அணை உடைந்துபோகும்படி கைவிடப்பட்டிருக்கிறது என்பதற்கும், அதன் பின்னே மணல் மாஃபியாக்கள், டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் புகுந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன், அதற்கு மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் ஆதரவு ஆகியவை இருப்பதற்கு வலுவான சாட்சியங்கள் இருக்கின்றன.

காவிரி ஆறு, முக்கொம்பு பகுதியில்தான் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு இயற்கையாகவே காவிரியை விட ஏறத்தாழ ஆறு அடி தாழ்வாக இருக்கிறது.

எனவே, தண்ணீர் கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குச் செல்வதைத் தடுத்து, அதனை காவிரியின் வழியாகப் பாசனத்திற்குத் திருப்பிவிடும் நோக்கத்தில்தான் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் காலனிய அதிகாரியால் 1836-இல் 55 மதகுகளைக் கொண்ட மேலணை முக்கொம்பில் கட்டப்பட்டது. முக்கொம்பில் மேலணையும், அதனைத் தொடர்ந்து அணைக்கரையில் கீழணையும் கட்டப்பட்ட பிறகுதான் டெல்டா பகுதியில் பாசனப் பரப்பு அதிகரித்தது என்பதோடு, நீர்ப்பாசன முறையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

தற்பொழுது மேலணையில் உடைந்து போயிருக்கும் ஒன்பது மதகுகளும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்தவை. இதனால் காவிரி ஆற்றின் வழியாகப் பாசனத்திற்குச் செல்ல வேண்டிய நீரின் பெரும்பகுதி இப்பொழுது கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குச் சென்றுவிடும் அவலமான நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிய அணை கட்டி முடிக்கும் வரையிலும் இந்த அவல நிலை தொடரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் அதிகபட்சமாக இரண்டு இலட்சம் கன அடி நீர் வெளியேறியதென்றும், அதனை இந்தப் பழமையான கட்டுமானத்தால் தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தினால் உடைந்து போய்விட்டதென்றும் ஒரு கதையை உருவாக்கி உலவவிட்டிருக்கிறது, எடப்பாடி அரசு.

2005-ஆம் ஆண்டில் மூன்று இலட்சம் கன அடி நீர் வெளியேறியபோது அதனைத் தாக்குப் பிடித்த அணை, வெறும் 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நாளில் உடைந்தது ஏன்? கொள்ளிடத்து மதகுகள் மட்டுமே உடைந்தது எப்படி?

மேலணையைப் போலவே, கோதாவரியின் குறுக்கே ஆர்தர் காட்டனால் கட்டப்பட்ட பழமையான தவளேஸ்வரம் அணைக்கட்டு, காவிரியைவிட அதிக வெள்ளத்தை வெளியேற்றிக்கொண்டு இன்னமும் பலமாக இருந்துவரும்போது, மேலணை திடீரென உடைந்தது எப்படி? – இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எடப்பாடி கூறும் கதையில் பதில் இல்லை.

மேலணைக்கு அருகிலேயே அனுமதிக்கப்பட்ட மணல் கொள்ளையும் மேலணையைப் பராமரிப்பது என்ற பெயரில் நடந்த ஊழலும்தான் அவ்வணையின் மதகுகள்
உடைந்துபோனதற்கு முதன்மையான காரணம்.

காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தமிழக அரசின் நீர்வளத் துறை ஆலோசகராகவும் இருந்த மோகனகிருஷ்ணன் 2002 –ஆம் ஆண்டே மேலணையின் 16 நீர் வழிப் போக்கிகளும், கீழணையில் 14 நீர்வழிப் போக்கிகளும் பலவீனமாக உள்ளன எனக் குறிப்பிட்டு, இந்த அணைகளில் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்திருக்கிறார்.

ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்த அணைகளைப் பலப்படுத்தி முறையாகப் பாரமரிப்பதற்குப் பதிலாக, அவ்வணைகளை மேலும் பலவீனப்படுத்தும் சதிகள்தான் ஒன்றன் பின் ஒன்றாக நடந்திருக்கின்றன.

மேலணைக்கு அருகிலேயே அனுமதிக்கப்பட்ட மணல் கொள்ளையும் மேலணையைப் பராமரிப்பது என்ற பெயரில் நடந்த ஊழலும்தான் அவ்வணையின் மதகுகள் உடைந்து போனதற்கு முதன்மையான காரணம். கடந்த ஏழு ஆண்டுகளாக அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தினர்தான் மணல் மாஃபியா கும்பலின் தளபதிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அணை உடைந்து போனதற்கு இந்த அரசைத்தான் முதன்மைக் குற்றவாளியாக அடையாளப்படுத்த வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக மட்டும் 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் காவிரியின் தலைமடை பகுதிக்குக்கூடத் தண்ணீர் வரவில்லை.

காவிரி உள்ளிட்ட ஆறு ஆறுகளைத் தூய்மைப்படுத்துவதற்காக 885 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கு எழுதியிருக்கிறது, தமிழக அரசு. அதன் பிறகும் டெல்டாவில் ஓடும் காவிரியின் கிளை நதிகள் நீர் ஓட வழியின்றிப் புதர் மண்டிக் கிடக்கின்றன.

அதே நேரத்தில் 100 டி.எம்.சி.க்கும் கூடுதலான காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை அனுமதித்துவிட்டு, அது குறித்து கொஞ்சங்கூடக் குற்ற உணர்வோ, அச்சமோ இல்லாமல் எடப்பாடி முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரும் திமிர்த்தனமாகப் பேசி வருகின்றனர்.

2012 –ஆம் ஆண்டில் தமிழகத்திலுள்ள அணைகளைப் பராமரிப்பதற்கு உலக வங்கியிடமிருந்து 745 கோடி ரூபாயை பெற்ற அ.தி.மு.க. அரசு, 2018 -ஆம் ஆண்டுக்குள் இப்பராமரிப்புப் பணிகளை முடித்துவிடுவதாக உத்தரவாதம் அளித்திருந்தது. இது போக மேலணையைப் பராமரிப்பதற்கு என 2015 –ஆம் ஆண்டில் 10 கோடியும், 2016 –ஆம் ஆண்டில் மூன்று கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் மேலணை உடைந்து போயுள்ளது என்றால், இத்துணை கோடி ரூபாயும் எங்கே மாயமானது?

அ.தி.மு.க என்பது வெறும் கள்வர் கூட்டமல்ல. அது நெஞ்சில் சிறிதளவும் ஈரமோ இரக்கமோ இல்லாத கொடியதொரு கிரிமினல் கூட்டம். இப்படி ஒரு கூட்டத்திடம் தமிழகம் சிக்கிக்கொண்டதன் விளைவுகளைத்தான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

4,000 கோடி ரூபாய் பெறுமான நெடுஞ்சாலைத் துறை ஊழலில் தொடர்புடைய எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வர்; வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களை குவித்த வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் ஓ.பி.எஸ்., துணை முதல்வர்; குட்கா வழக்கில் தொடர்புடைய விஜய பாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர்; அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு வழக்கில் தொடர்புடைய பழனியப்பன் உயர்கல்வித் துறை அமைச்சர்; அனைத்திற்கும் மேலாக, நிர்மலா தேவி விவகாரத்தின் மையப் புள்ளியென அம்பலப்பட்டுப் போன பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் கவர்னர்.

இவர்களுடைய வழிகாட்டிகளாகவும் கூட்டாளிகளாகவும் திகழும் அதிகார வர்க்கத்தினர் – மோடியின் ஆசியோடு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கிரிமினல் கும்பல் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக எத்தகைய தீமையையும் செய்யத் தயங்காது.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காகவும் மணல் கொள்ளையைத் தொடர்வதற்காகவும் டெல்டாவைச் சிறுகச்சிறுகப் பாலைவனமாக்கி வரும் இக்கும்பல், தற்போது மேலணை உடைந்திருப்பதை, தங்களுடைய தீய உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாகவே கருதும்.

புதிய ஜனநாயகம்,  செப்டம்பர் 2018

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க