முகப்புபுதிய ஜனநாயகம்தமிழகம்அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

-

குட்கா தனித்ததொரு பொருள் அல்ல. பாக்கு, புகையிலை, காசிக்கட்டி, மெழுகு, நீர்ச் சுண்ணாம்பு ஆகிய பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூட்டுப் பொருள்.

குட்கா தயாரிக்கப் பயன்படும் பொருட்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், அவை குறைவான தீமை கொண்டவை, தவிர்க்க வேண்டியவை, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை எனப் பல்வேறு விதமாக உள்ளன. ஆனால், அவையெல்லாம் ஒன்று சேர்ந்து குட்காவாக உருவெடுக்கும்போது, அபாயகரமான போதைப் பொருளாக மாறிவிடுகிறது.

தமிழகத்தின் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., போலீசு டி.ஜி.பி. ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரைத் தனித்தனியாக மதிப்பிடும்போது, ஒவ்வொருவரும் குட்காவின் மூலப்பொருட்களைப் போன்று தனித்தனியான குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

ஆளுநர் புரோகித் பெண் பித்தராக அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறாரே தவிர, அவர் மீது கைநீட்டிக் காசு வாங்கினார் என்ற ஊழல் குற்றச்சாட்டு இதுவரை வரவில்லை.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு அப்பால், வேறு அசிங்கமான குற்றச்சாட்டுக்கள் இதுவரை இல்லை.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இரத்தத்திலேயே ஆதிக்க மனோபாவம் ஊற்றெடுப்பதைக் காண முடிகிறது. நியாயமான ஊதியம் கேட்டுப் போராடிய இரக்கத்துக்குரிய அரசு செவிலியர்களை, ஊதியம் போதவில்லை என்றால், வேறு வேலைக்குச் செல்லுங்கள் என ஏகடியம் செய்த பண்பாளர் அவர்.

இந்தத் தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து தமிழகத்தை ஆளுவது தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

*****

ன்று தமிழகத்தை ஆண்டுவரும் அ.தி.மு.க. அரசு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகி நிற்கிறது. ஊழல், தமிழக மக்களின் நலன்களை கார்ப்பரேட் கும்பலுக்கும் இந்து மதவெறியர்களுக்கும் அடமானம் வைப்பது எனச் செயல்பட்டு, தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கும் இந்த அரசை இன்று தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிக் கொண்டிருப்பவை இரண்டு சக்திகள்தான்.

ஒன்று பிரதமர் மோடியும் அவரது அரசின் ஏஜெண்டாகத் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும். இரண்டாவது சென்னை உயர் நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும்.

அ.தி.மு.க. அரசு ஊழலற்ற அரசு என நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மறுபுறம், அ.தி.மு.க. அரசோ நிர்மலா தேவி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அம்ரேஷ் பூஜாரியை நியமித்து, மோடிக்கும் புரோகித்துக்கும் நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கிறது.

மேலும், ஆளுநரால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தானம் கமிசனின் சட்டப்பூர்வத் தகுதி குறித்து வாய்திறக்கவும் மறுக்கிறது.

சிவகாசி ஜெயலெட்சுமி விவகாரம் தமிழக போலீசுத் துறையின் ஆபாசங்களை அம்பலப்படுத்தியதென்றால், நிர்மலா தேவி விவகாரம் உயர்கல்வித் துறையில் காணப்படும் அசிங்கங்களையும் வக்கிரங்களையும் அம்பலப்படுத்துகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைச்செல்வன் தொடங்கி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவரின் தனிச் செயலர் ராஜகோபால் வரை பல பெரிய மனிதர்களின் பெயர்கள் நிர்மலா தேவி விவகாரத்தில் அடிபடுகின்றன.

ஆனால், இது தொடர்பாக விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி.யும், சந்தானம் விசாரணையும் உண்மைகளை வெளிக்கொண்டு வரப் போவதில்லை. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூன்று புரோக்கர்களையும் பலிகொடுத்துவிட்டு, வக்கிரம் பிடித்த பெரிய மனிதர்களைத் தப்பவைப்பதே அதன் நோக்கம் எனத் தெரிகிறது.

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் எனச் சொல்வது உண்டு. அ.தி.மு.க. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமோ நீதிமன்றமாக இருக்கிறது.

குட்கா வழக்கு, ஓ.பி.எஸ். உள்ளிட்டு 11 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரித் தொடரப்பட்ட வழக்கு, தமிழகச் சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட சொத்துக்குவிப்பு குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகிய மூன்றிலும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்புகள் ஒரு சட்டவிரோத சிறுபான்மை ஆட்சி தொடருவதை உத்திரவாதப்படுத்தியிருக்கின்றன.

*****

குட்கா வழக்கில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், குட்கா ஊழலை ஊத்தி மூடிவிட முயன்ற அ.தி.மு.க. அரசு மீதோ, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் மீதோ எந்தவொரு விமர்சனத்தையும் கண்டனத்தையும் அத்தீர்ப்பு பதிவு செய்யவில்லை. மாறாக, எடப்பாடி அரசிடம் நயந்துபோய் தன்னிலை விளக்கமளித்திருக்கிறது.

‘‘வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கும் எங்கள் தீர்ப்பு, மாநில போலீசு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இதுவரை நடத்திவந்த விசாரணையின் மீது எந்தக் கடுமையான குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அந்த விசாரணையில் மாநில அரசைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலையீடு செய்தார்கள் என்றும் கூறவில்லை.”

விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருப்பது மாநில அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகக் கருத இடமேயில்லை என்றவாறெல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்டு, எடப்பாடி அரசைக் குளிப்பாட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை

அ.தி.மு.க. அரசு குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை 2013 ஆண்டே தமிழ்நாட்டில் தடை செய்துவிட்ட நிலையில், 2015 ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை செங்குன்றம் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் சென்னை போலீசார் ரெய்டு நடத்தி பல கோடி ரூபாய் பெறுமான குட்கா பாக்கெட்டுகளையும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். எனினும், இவ்விவகாரத்தில் ரெய்டுக்கு அப்பால் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் போலீசு அதிகாரிகளின் தலையீட்டால், அந்த ரெய்டு அத்தோடு ஊத்தி மூடப்பட்டது.

இதன் பிறகுதான், 2016 ஆண்டு ஜூலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதே ஆலையில் சோதனை நடத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசு கமிசனர், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு யார் யாருக்கு எவ்வளவு மாதாந்திர மாமூல் கொடுக்கப்பட்டது எனக் குறித்து வைக்கப்பட்டிருந்த ஆவணத்தைக் கைப்பற்றியது.

மாதிரிப் படம்

இதன் அடிப்படையில் வருமான வரித்துறை சுகாதாரத் துறை அமைச்சர், முன்னாள் சென்னை போலீசு கமிசனர் இருவர் உள்ளிட்டுப் பல்வேறு நிலைகளில் 39.91 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்ட அறிக்கையை ஆதாரங்களுடன் அப்போது தலைமைச் செயலராக இருந்த ராம்மோகன ராவிடமும், போலீசு டி.ஜி.பி. அசோக்குமாரிடமும் அளித்தது.

ராம்மோகன ராவ் இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமுக்கிவிட, டி.ஜி.பி. அசோக்குமார் குட்கா இலஞ்சம் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து, அதனை முதலமைச்சர் ஜெயாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு, கிரிமினல் ஜெயா கும்பலால் அவர் மிரட்டப்பட்டுப் பதவி விலக வைக்கப்பட்டார். அசோக்குமாருடன் இணைந்து புலன் விசாரணை நடத்திவந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம், உப்பு சப்பில்லாத பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.

‘‘குட்கா முதலாளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்கினார்” என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையிலேயே, டி.கே.ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியதோடு, அவரை போலீசு தலைமை இயக்குநராகவும் அமர்த்தி அழகு பார்த்தது, எடப்பாடி அரசு.

ராம மோகன ராவ் – கிரிஜா வைத்தியநாதன்

இதனிடையே தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் அளித்தார்.

காணாமல் போனதாகக் கூறப்படும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மாநில இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இவ்விசாரணையின் கண்காணிப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்கொடியை நியமித்தது. எனினும், ஜெயக்கொடி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளே தூக்கியடிக்கப்பட்டார்.

இதேபோல, இவ்வழக்கில் கூடுதலாக அக்கறை செலுத்தி வந்த ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் மஞ்சுநாதாவும் அப்பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர், போலீசு கமிசனர் ஆகியோர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டு வருமான வரித்துறை அறிக்கை அளித்திருந்தபோதும், இலஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர் பெயரையோ, உயர் போலீசு அதிகாரிகள் பெயரையோ குறிப்பிடாமல் மொன்னையான முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்து நீதிமன்றத்திடம் அளித்திருக்கிறது. இந்த ஊழல் விவகாரம் அம்பலமாகி இரண்டு வருடங்கள் முடிந்த பிறகும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயாவும் கூட குட்கா ஊழல் வழக்கை ஊத்திமூடிவிடவே முயன்றார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பத்திரிகைகள் வாயிலாக அம்பலமாகிவிட்ட பிறகும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அ.தி.மு.க. அரசின் மீதோ, போலீசு துறையின் மீதோ எவ்விதமான கண்டனமும் செய்யாமல் நயந்து தீர்ப்பு அளித்திருப்பது இலஞ்சம் வாங்குவதைவிடக் கேவலமானது.

இத்தீர்ப்பு வந்தவுடனேயே கோவை நகரம் சூலூர் பகுதியில் இயங்கி வந்த குட்கா ஆலைக்குள் புகுந்து 15 மணி நேர சோதனையை நடத்தியது, கோவை போலீசு. குட்கா ஊழல் தொடர்பான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழிப்பதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பத்திரிகைகளும் அம்பலப்படுத்துகின்றன.

இது உண்மையாகவும் இருக்கக்கூடும். அதேசமயம், இந்த ஊழல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படாமல் சி.பி.ஐ. கைக்குக் கிடைத்திருந்தால்கூட, ஒன்றும் குடிமுழுகிப் போயிருக்காது. ஏனென்றால், இன்று சி.பி.ஐ., மோடி கும்பலின் கூண்டுக்கிளியாகத்தான் செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிடப் போவதில்லை. மாறாக, எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசையும், அ.தி.மு.க. என்ற கிரிமினல் கூட்டத்தையும் தனது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுவரும் மோடி கும்பலுக்கு இந்த ஊழல் வழக்கு இன்னுமொரு துருப்புச் சீட்டாகவே பயன்படும்.

*****

தமிழகச் சட்டமன்றத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் ஜெயாவின் படத்தை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ‘‘சட்டமன்றத்தினுள் யாருடைய படத்தை வைப்பது எனத் தீர்மானிக்கும் சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் தலையிட விரும்பவில்லை என்று மட்டும் கூறி தள்ளுபடி செய்யவில்லை.”

ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் படத்தை வைப்பதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லாததால், நாங்கள் சபாநாயகருக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் தர முடியாது என்றும் கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது, இந்திரா பானர்ஜி அமர்வு. சட்டம் இல்லை என்பதொரு நொண்டிச்சாக்கு.

குட்கா உழல் விவகாரம் குறித்த பத்திரிக்கை செய்திகளை காண்பித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் திமுக-வினர்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் சட்டத்தை மீறி அனைத்துவிதமான சலுகைகளையும் பார்ப்பன ஜெயாவிற்கு வாரி வழங்கியவர்கள்தான் மாண்புமிகு நீதிபதிகள். குறிப்பாக, ஜெயா இறக்கும் வரையிலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்காமல் ஜெயாவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி வந்த உச்ச நீதிமன்றம், அவர் இறந்துபோனதையே காரணமாகக் கூறி, சொத்துக்குவிப்பு குற்றத்திலிருந்தே அவரை விடுதலை செய்துவிட்டது.

2017, பிப்ரவரியில் நடந்த எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்த சபாநாயகர் தனபாலின் உத்தரவை ரத்து செய்யக் கோரும் வழக்கு.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யக் கோரும் வழக்கு, எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரும் வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது மட்டுமல்ல, இன்று தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள எடப்பாடி அரசின் தலையெழுத்தையே தீர்மானிக்கக்கூடியவை.

இவற்றுள் ஓ.பி.எஸ். அணி தொடர்பான வழக்கில் மட்டும் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிட்டு, மற்ற வழக்குகளை ஊறப் போட்டு வைத்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த பாரபட்சம் மற்றும் தாமதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தவுடனேயே, நாங்கள் மனசாட்சிப்படி தீர்ப்பளித்திருப்பதாக சென்டிமென்ட் வசனத்தை எடுத்துவிட்டார், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

ஊழல் பேர்வழிகளின் சட்டவிரோத ஆட்சி தொடருவதை உத்திரவாதப்படுத்தியிருக்கும் இந்த மனசாட்சி, குட்காவைவிட அபாயகரமானது அல்லவா!

தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை, அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தவுடனேயே பறித்த சபாநாயகர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை மன்னித்திருப்பது பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது.

இந்த உண்மையைப் பார்க்க மறுத்திருக்கும் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸின் மனசாட்சி, சபாநாயகர் முடிவெடுக்காத விடயங்களில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது என்ற சந்துக்குள் புகுந்துகொண்டு, இந்தச் சட்டவிரோத சிறுபான்மை அரசைக் காப்பாற்றிவிட்டது.

உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசின் கேடயமாகச் செயல்படுகிறது. எடப்பாடியோ ஊழல் குற்றஞ்சுமத்தப்பட்ட டி.ஜி.பி.யையும் அமைச்சரையும் பதவியிலிருந்து நீக்காமல் காப்பாற்றுகிறார். டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் செயல்படும் போலீசு படையோ மக்களின் போராட்டங்களை ஒடுக்கி, அவர்களின் ஆத்திரத்திலிருந்து இந்த அரசைக் காப்பாற்றுகிறது.

எடப்பாடி அரசிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர். எடப்பாடி அரசோ ஆளுநரின் களிவெறியாட்ட லீலைகள் அம்பலமாகிவிடாமல் காப்பாற்றுகிறது. இந்த பாண்டவர்களைக் காப்பாற்றும் கிருஷ்ணா பரமாத்மா பாத்திரத்தை மோடி அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, காவிரி உரிமையை மறுப்பது, டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவது, தமிழகத்தை இராணுவமயமாக்குவது உள்ளிட்ட இந்து மதவெறி, கார்ப்பரேட் சார்பு திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணிப்பதற்கு எடப்பாடி அரசைக் காப்பாற்றித் தொடரச் செய்வது மோடி கும்பலுக்கு அவசியமாக இருக்கிறது.

அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் கைத்தடியாகச் செயல்படுகிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

-திப்பு

-புதிய ஜனநாயகம், மே 2018

  1. In Summery, Tamil Nadu is a ‘slave land’! and its subjects are second class citizens!! all the human right violation are boldly executed in Tamil Nadu. civil rights are ignored. The center wants to destroy Tamil Nadu! people, awake from your slumber with your narrow mindedness in manifesting your cast creed and religion. People of Tamil Nadu are the most stoid people in the world. some one has to think for them!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க