காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்!  திருச்சி  முக்கொம்பு பகுதியில் காவிரியின் நீரை பல ஆறுகளுக்கு திருப்பி விடுவதற்காக கரிகால் சோழனால் இரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்டது கல்லணை! இது அந்தக்கால பொறியியல் அதிசயம் என்று வியந்தார் ஆங்கிலேய பொறியாளர் ஆர்தர் காட்டன். அதே போன்று காவிரி வெள்ள நீரை  கொள்ளிடத்தில் திருப்பி விடுவதற்காக 1836-ஆம் ஆண்டில் அவர் கட்டியதுதான் மேலணை! 182 ஆண்டுகள் பழமையான இந்த அணை தற்போது உடைந்திருக்கிறது.

மதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் சொல்லப்படும் அவலம்.

ஒருவேளை கரிகால் சோழனோ, இல்லை ஆர்தர் காட்டனோ பின்னொரு நாள் தமிழகத்தை ஒரு கமிஷன் அரசு ஆளும் என்பது தெரிந்திருந்தால் இந்த அணையை உடையாமல், பராமரிப்பின்றி காப்பாற்றும் வழிமுறைகளையும் சேர்த்து செய்திருப்பார்களோ தெரியவில்லை!

கமிஷன் அடிப்படையில் செயல்படும் எடப்பாடி அரசு தமிழகத்தின் நீர்தேக்க கட்டுமானங்களை எப்படி பராமரிக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று! இந்த அணையை எளமனூருக்கும் வாத்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் நடுவில் அமைந்த தீவுப்பகுதியான முக்கொம்பில் கட்டினார் ஆர்தர் காட்டன். இந்த அணையின் கட்டுமானம் சுமார் 12 ஆண்டுகள் நடந்தது. காவிரியில் 42, கொள்ளிடத்தில் 45, வடக்கு பிரிவில் 10 என மொத்தம் 55 மதகுகள் கொள்ளிடத்தில் மட்டும் 55 மதகுகள் உள்ளன. ஒவ்வொரு மதகும் 12 மீட்டம் நீளமுடையவை. அணையில் ரெகுலேட்டர் நீளம் 630 மீட்டர்.

கரிகால் சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி இந்த அணையை கட்டி வெள்ள நீரை விரயமாக்காமல் தடுத்தார் ஆர்தர் காட்டன். அதனாலேயே அவரை தென்னிந்தியாவின் நீர்ப்பாசன தந்தை என்று அழைக்கிறார்கள். இந்த அணையின் மேலே கார், இரு சக்கர வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்ப்ட்டு வந்த்து.

தற்போது முக்கொம்பு மேலணையில் எட்டு மதகுகள் புதன்கிழமை இரவு (22.08.2018) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அடுத்தநாள் வியாழன் காலை 14-ஆம் எண் மதகு வீழ்ந்தது. இதனால் வெள்ள நீர் அனைத்தும் சென்று விரயமாகிவிடும். தண்ணீரை சேமிக்க முடியாத இந்த இழப்பால் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்கொம்பு மேலணை ஆகஸ்டு 20 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்.

முன்னெச்செரிக்கையாக செயல்படுவதில் வரலாறே இல்லாத தமிழக அரசு தற்போது மதகுகள் வீழ்ந்த பிறகு அங்கே மின்சாரம் துண்டிப்பு, முக்கொம்பு சுற்றுலா மையத்தை மூடுவது, சாலையில் தடுப்பு என்று செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியரும் இரவு தங்கி உடைப்பை சீரமைப்பது குறித்து  ஆலோசித்தாராம். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், விமானம் மூலம் திருச்சி வந்து நேரில் பார்த்தாராம். மதகு உடைந்த பகுதியில் தற்காலிக தடுப்பு போடும் பணி துவங்கியிருக்கிறதாம். நான்கு நாட்களில் முடியுமாம்.  இதன் பிறகு புதிய கதவணைகள் சுமார் 325 கோடி ரூபாயில் கட்டுவார்களாம். காலம் 15 மாதங்கள்.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் வந்து அங்கே அமைச்சர் பெருமக்களெல்லாம் கைலியை மடித்துக் கொண்டு வேலை செய்வதைப் பார்த்த எடப்பாடி “மினிஸ்டர் காட்டன்” வெள்ளைக்கு சேதாரம் இல்லாமல் பாதுகாப்பாக பார்வையிடுவதையும், அவை புகைப்படங்களாக வருவதையும் விரும்பியிருப்பார். ஒரு வேளை கேரளா போல முழு தமிழகமும் வெள்ளம் வந்து சிக்கினால் என்ன செய்வோம்? வெள்ளம் கூட பிரச்சினை அல்ல, நமது கமிஷன் அரசின் செயல்பாடுகளை நினைத்தால்தான் அனைவரும் திகிலடைவர்.

இது குறித்து பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அதன் வாழ்நாளில் ஏராளமான வெள்ளப்பெருக்குகளை எதிர்கொண்ட மேலணை, இப்போது கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே உடைந்தது என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மேலணை போன்ற கட்டமைப்புகள் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ சேதமடைந்து உடையும் அளவுக்கு மிக மோசமான கட்டமைப்பு இல்லை. ஒருவேளை அணை பழுதடைந்திருந்தால் அதுகுறித்து பொதுப்பணித்துறையின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி எந்தப் பதிவும் இல்லை. இத்தகைய சூழலில் மேலணையின் மதகுகளும், பாலமும் உடைந்ததற்கு அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கண்மூடித்தனமான மணல் கொள்ளைதான் என வெளிப்படையாகவே நான் குற்றஞ்சாற்றுகிறேன்.

பாதிப்புகளை ‘பார்வையிடும்’ திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி.

மேலணைக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூர், கரியமாணிக்கம் பகுதியில் பல ஆண்டுகளாகவே மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அதேபோல், மண்ணச்சநல்லூருக்கு அருகிலுள்ள திருவாசி, கிளியநல்லூர் ஆகிய இடங்களிலும் மணல் குவாரிகள் உள்ளன. இவை தவிர பல இடங்களில் சட்ட விரோத மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் 30 முதல் 40 அடி ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டதால்தான் மதகுகளின் கீழ் அரிப்பு ஏற்பட்டு அவை உடைந்துள்ளன. இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும் என்று பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.”

மணல் கொள்ளையால் ஆறுகள் கொண்டு வரும் வெள்ள நீர் மிகுந்த சேதாராத்தையும் சேர்த்தே கொண்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுமானங்களை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இனிமேல் கமிஷன் கொடுக்க மாட்டோம் எனக் கூறியிருக்கிறார்கள். தி.மு.க.விற்கு 3, ஜெயலலிதா காலத்தில் 5 என இருந்த கமிஷன் தற்போது 10 என ஆகியிருப்பதால் கட்டுமானங்களின் தரம் கேள்விக்குறியாகிவிட்டது என்கிறார்கள் அச்சங்கத்தினர்.

இந்நிலையில் முக்கொம்பு மதகு மீண்டும் கட்டப்படுவது குறித்து நாம் மகிழ முடியுமா?

  • வினவு செய்திப் பிரிவு