“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருநைநதி என மேலிடும் ஆறு பல ஓடி திரு மேனி செழித்த தமிழ்நா(டு)”-டின்இன்றைய நிலை?

குறுவை சம்பா தாளடி என்ற முப்போக விளைச்சலை கண்டது தஞ்சை டெல்டா மாவட்ட பகுதி. காவிரியில் முறையாக தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலும் பருவ மழை காலநிலை தவறாமலும் கிடைத்தால் சொல்லி வைத்து களமாடுவார்கள் விவசாயிகள். ஆனால் கர்நாடகா அரசு மத்திய அரசு, நீதிமன்றங்கள் உதவி்யுடன் நமக்கு வரவேண்டிய நீரை மறுத்ததால் அகண்ட காவிரி வறண்ட காவிரியானது.

தற்போது கர்நாடகாவில் மழை அதிகம் பெய்த நிலையில் காவிரியில் வெள்ளம் வந்தாலும் அந்த நீர் விவசாயிகளுக்கு பயன்படாமல் விரயமாகிறது. காவிரியில் தண்ணீர் வருவதே கனவாக இருந்த இந்த நேரத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி கண்கொள்ளாக் காட்சியானது. பாலைவனத்தில் வாழ்பவர்கள் தண்ணீரை பரவசமாக பார்ப்பது போல், பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவை காண்பதற்கினிய காட்சியாக பார்ப்பது போல் ஆற்றில் ஓடும் தண்ணீரை ஆவலோடு பார்க்கும் மனநிலை மக்களுக்கு.

காவிரியில் தண்ணீர் வருமா? வராதா? என்ற பிரச்சனையில் கடந்த காலங்களின் நிலைதான் தொடரும் என்ற எண்ணத்தில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது இயற்கை தந்த பரிசுதான் காவிரி கரைபுரண்டோடும் காட்சி. கனவான காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் விவசாயிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்திருக்குமா?

பொங்கி வரும் காவிரியை பார்த்து சந்தோசப்பட வேண்டி விவசாயி கவலைப்படுகிறான். ஆனி மாதம் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் ஆடி மாதம் நடவு வேலைத் தொடங்கிவிடும். பருவம் பார்த்து தொடங்கப்படும் வேலை மழைக்கும் வெய்யிலுக்கும் தாக்குப்பிடித்து அதிக பாதிப்பு இல்லாமல் போட்ட முதலுக்கு மோசம் இல்லாமல் அறுவடை முடியும். ஆனால் காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.

தஞ்சையில் கல்லணைக் கால்வாய் ஆற்றின் கிளை பாசனக் கால்வாய்கள் பாயும் ஊர்களில் தூர் வாரப்படாத நிலையை பார்க்க நேர்ந்தது. வடிகால் ஊற்றுகள் ஏரி குளங்கள் உள்ள நீர் நிலைகளுமே பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்தன. கிளை ஆறுகள் ஓடும் பாலத்துக்கு மேல் ஒரு ஆள் மட்டம் அடர்த்தியாக வளர்ந்த நாணல் கோரைப் புற்கள் மண்டிக் கிடக்கின்றன.

ஆறு நிறைய தண்ணீர் ஓடுகிறது அருகில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாமலும் நிலங்கள் ஈரப்பசையற்றத் தரிசாகவும் கிடக்கிறது. சில இடங்களில் தூர் வாரப்படாதக் கால்வாயில் தண்ணீர் வரவும் செய்கிறது. வரும் தண்ணீர் பாசனத்துக்கான மதகு உடைபட்டு கிடப்பதால் வேறு திசைகளில் திரும்பித் தேவைப்படாத இடங்களுக்குப் பாய்கிறது. ஆற்று கரைகளில் ஏற்பட்டிருக்கும் மண் அரிப்பு எப்போது வேண்டுமானாலும் உடைப்பெடுக்கலாம் என்ற நிலையில் உள்ளது. அப்படி உடைப்பெடுத்தால் ஆள் துளைக் கிணற்றைக் கொண்டு செய்யப்பட்ட விவசாயம் அத்தனையும் அடியோடு சேதமாகிவிடும்.

This slideshow requires JavaScript.

குறுவைப்பருவ பயிறு வளர்ந்து நிற்க வேண்டிய காலகட்டத்தில் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டதே என்று இப்பொழுது சம்பா பருவத்து பயிர் செய்தால் ஐப்பசி கார்த்திகையில் அடைமழையில் அத்தனையும் அடியோடு சேதமாகிவிடும் என்று கவலைப் படுகின்றனர் விவசாயிகள்.

கர்நாடகத்தில் தண்ணீர் தர மறுப்பு. விவசாயிகள் போராட்டம். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு போராட்டம் என கடந்த கால அனுபவம் எதுவுமே ஆற்றில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு காவிரி கனவாகவே இருந்தது. விவசாயிகள் எப்படி ஆற்றில் தண்ணீர் வரும் என்று நம்பவில்லையோ அதேபோல் அரசும் நம்பவில்லை. அதனால் தான் ஊழலுக்கு பெயர் போன பொதுப்பணித் துறை பாசனக் கால்வாய்களை தூர் வாரும் எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது.ஒரு ஊரில் ஒரு கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடந்துள்ளது. அதன் முன்னும் பின்னும் மண் சரிந்து செடி கொடிகள் மண்டியுள்ளன. ஏன் இப்படி உள்ளது என்று கேட்டால் இந்த அளவு மட்டும் தான் டெண்டர் எடுத்ததாகவும் தூர் வாரப்படாத மற்ற பகுதிகள் அடுத்த ஊர் எல்லையை சேர்ந்தது என்றனர். இப்படியான அவல நிலையில் நீர் நிலைகளை வைத்துக்கொண்டு ஜோடிப் புறாவாக நின்று வெட்கமே இல்லாமல் அணைக்கட்டை திறந்து வைத்து மலர் தூவி மகிழ்கிறார்கள் ஓ.பி.எஸ்.-சும், இ.பி.எஸ்.-சும்.விவசாயத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது “தூர் வாரும் பணி மாவட்டம், வட்டம் என ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்படும். இதற்கான செலவுத் தொகை பொதுப்பணித் துறையால் ஒதுக்கப்படும். மேலிருந்து கீழ் வரை அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை 40 சதவீதம் வரை போய்விடும். மீதமுள்ள 60 சதவீதத்தில் செய்யப்படும் வேலை முழுமையாகவும் தரமாகவும் இருக்க வாய்ப்பில்லை.” என்றார்.முதன்மை ஆற்றை விட அடுத்தடுத்த பாசனக் கால்வாய்கள் தாழ்வான நிலையில் இருக்கும். முதன்மை பாசன கால்வாய்களில் இருந்து பிரித்து விடப்படும் கிளைக் கால்வாய் தூர் வாரப்படாமல் இருந்தால் நீரோட்டம் எப்படி சீரான முறையில் இருக்கும். இரண்டு மீட்டர் தூரம் தூர் வாரப்பட்டும் இரண்டு மீட்டர் தூரம் தூர் வாரப்படாமலும் இருந்தால் சமமான நிலையில் தண்ணீர் விவசாயத்துக்குப் போய் சேருமா? தூர் வாரப்பட்ட பள்ளமான பகுதியில் இருந்து மேட்டுப் பகுதியான பயிர் செய்த வயல்களுக்கு எப்படி தண்ணீர் பாயும்?பயிர் செய்யும் வயல் வரை பொதுப்பணித்துறையை நாம் இழுக்க வேண்டாம். முதன்மை ஆற்றையும் கிளை கால்வாய்களையும் தூர் வாரியிருந்தால் பாசனக் கால்வாய்களை சரிசெய்து பயிர் செய்யும் வயல்களுக்கு தண்ணீர் வரும் வழித்தடத்தை விவசாயிகளே சீர்செய்து கொள்வார்கள்.காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத காலகட்டத்தில் முப்போகம், இருபோகம் என விவசாயம் செய்யப்படும். அப்படி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏரி குளங்களைக் கொண்டு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொள்வார்கள். தண்ணீரின் அளவுக்கேற்ப விவசாய பயிர் வகைகளை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இன்று ஏரி குளமாகவும், குளம் குட்டையாகவும் இருந்த இடம் தெரியாமல் மாறி விட்டது. தஞ்சை சமுத்திரம் ஏரியும் வடுவூர் ஏரியும் நிலப்பரப்புபோல் மாறி வருவதை பார்க்கும் ஒவ்வொரு விவசாயி மனதும் ரத்தம் சிந்தத்தான் செய்கிறது.ஏரி குளம் போன்ற நீர்ப்பாசன நிர்வாகம் நீர் வினியோகம் என்பது ஆங்கிலேயர் காலத்துக்கு முன் கிராமப் பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகள் என்ற பெயரில் கிராம வாசிகளே செய்துள்ளனர். நீர் நிலைகளின் பராமரிப்புக்காக விளைச்சலின் ஒரு குறிப்பிட்ட அளவையும், மீன்பிடிப்பு குத்தகைப் பணத்தையும் ஒதுக்கியுள்ளனர். நிலம் குறைவாக உள்ளவர்களுக்கு முன்னுரிமையும், அதிகம் உள்ளவர்களுக்கு வரம்புக்குட்பட்டும் தண்ணீர் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. நீர் வினியோகம் செய்யும் ஆட்களும் அவர்களுக்கு சம்பளமாக மானிய நிலமும் கொடுத்துள்ளனர்.எப்பொழுது ஏரி குளம் பொதுப்பணித் துறைக்கு போனதோ அப்போது முதல் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பும், பராமரிப்பும் இல்லாமல் கைவிப்பட்டவையாக மாறிவிட்டது. விவசாயிகளே நீர் நிலைகளை பொதுச் சொத்தாக பாதுகாத்து தேவையைப் பூர்த்தி செய்து தன்னளவில் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இந்நிலையில் காவிரியும் கைவிரிக்க இருக்கப்பட்டவர்கள் ஆள்துளை கிணறு அதிக விவசாயம் என்ற தன்னலம் மேலோங்கத் தொடங்கியது. பாசன வசதியற்ற சிறு விசாயிகள் கூலி விவசாயிகள் நகரத்தை நோக்கி வரவேண்டிய கட்டாயம் உருவானது.

காவிரியில் தண்ணீர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியோடு விவசாயிகள் விவசாய வேலையை ஆர்வத்தோடு தொடங்கவில்லை. தண்ணீர் வந்து விட்டது என இப்பொழுதே வேலையை தொடங்கினால் ஏற்படும் இழப்பு பயம் கொள்ளச் செய்கிறது. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை, காவிரியில் வரும் வெள்ளப்பெருக்கு தூர் வாரப்படாத பாசனக் கால்வாய்கள் அடுத்து வரும் அடைமழை காலம் அனைத்துமே பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனையை தீர்க்கும் ஒரே வழி நீர் நிலைகளின் சீரிய பராமரிப்பு மட்டுமே.

– வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க