நாகை மாவட்டம், சீர்காழியில் கொள்ளிடக் கரையோர கிராமங்களான நாதல்படுகை, சந்தப்படுகை,  காட்டூர், முதலிமேடுதிட்டு, ஆணைக்காரன் சத்திரம் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து அப்பகுதி மக்கள்  சுமார் 5,000 பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்டுச்சொல்லும்படியான தொழிற்சாலைகள் எதுவுமற்ற இப்பகுதி முழுமையும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். காவிரியில் தண்ணீரின்றி இருக்கும் காலங்களில் இரும்புத்துகள்கள் கலந்து வரும் நிலத்தடி நீரையும், மேலும் இப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள எண்ணைய் நிறுவனங்களின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதன்விளைவாக எண்ணெய் படலம் படிந்த குடிநீரையுமே காய்ச்சி குடித்து வந்தனர். இப்பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் துருவேறியும் எண்ணெய்ப்பிசுக்குடனே இருப்பதே, இதற்குச் சாட்சி.

இப்பகுதியில், போதுமான அளவிற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைக்காததால், துரு கலந்த நிலத்தடி நீரைக்கூட முறையாக விநியோகிப்பதில்லை. காவிரி கரையோர பகுதியிலேயே, குடிக்கத் தண்ணீரின்றி காசு கொடுத்து கேன் தண்ணீரை வாங்கிக் குடிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? குடிக்க நீரின்றி, முறையான கழிவுநீர் வெளியேற்றும் வசதிகளின்றி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகாமைப் பகுதியில் இன்றி என அடிப்படை வசதிகள் ஏதுமற்ற சூழலில்தான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பிவிடப்படுவதன் காரணமாக கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் இப்பகுதி மக்களின் குடியிருப்புகளுக்குள்ளும் வயல்களுக்குள்ளும் புகுந்து வெள்ளக் காடாக்கியிருக்கிறது. இம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.

ஏரி, குளங்களை முறையாகத் தூர்வாராததும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தாதுமே இப்பாதிப்பிற்கான காரணம் என்கின்றனர் இப்பகுதி மக்கள். கொள்ளிடம் ஆற்றில் வரைமுறையின்றி மணல் அள்ளப்படுவதாலும், முறையான வடிகால் வசதியின்மையாலும் ஊரிலுள்ள ஏரி, குளங்களுக்கு நீர் செல்லாமல் குடியிருப்புகளுக்குப் புகுந்து வீணாக கடலில் கலப்பதாகவும் கூறுகின்றனர்.

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு தண்ணீரைத் திறந்துவிடுவதன்மூலம் இந்த வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்பதோடு, கடைமடை பகுதிக்கும் காவிரி நீர் செல்லும்; விவசாயத்திற்குப் பயன்படும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தபோதும், ”கடைமடைக்கு நீர்திறக்க முடியாது இப்போது வரும் தண்ணீர் முறைப்படி வரும் தண்ணீர் அல்ல; வெள்ள நீர் தான் வருகிறது.” என்று திமிராகப் பதிலளித்திருக்கிறார், அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.இவ்வுண்மைகளை அம்பலப்படுத்தியும், ”கரைபுரண்டு ஓடினாலும் கடைமடையைத் தொடாத காவிரி… தடுப்பது யார்?” என்று கேள்வியெழுப்பியும் இப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவியைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது, எடப்பாடி போலீசு.

”இது இயற்கையால் வந்த அழிவு அல்ல.. கையாலாகாத ஆட்சியாளர்களால் வந்த அழிவு. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்க மக்களே அதிகாரத்தை கைப்பற்ற வீதியில் இறங்கி போராட வேண்டும்.” என்று மக்களிடையே அறைகூவல் விடுத்திருக்கிறது, மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம், சீர்காழி, கடலூர் மண்டலம்.

தொடர்புக்கு: தோழர்  ரவி: 98434 80587, ; தோழர் பாலு: 8110815963 .

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க