ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!

ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

1

ரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்திலிருந்து தனது பாத யாத்திரையை நேற்று (ஜூலை 28) துவங்கினார். “என் மண் என் மக்கள்” என்று பெயரிடப்பட்ட இந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கிவைத்தார். நேற்று (ஜூலை 28) தொடக்க விழா நடைபெற்றது. இன்று (ஜூலை 29) முதல் யாத்திரை துவங்கப்பட்டது. இதன் முதல் கட்டம் ஆகஸ்ட் 22 வரை நடக்கவுள்ளது. முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.

இந்த யாத்திரை மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் நடைபெறும் என்றும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும் மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையாகவும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் அண்ணாமலை செல்லப்போகிறாராம். ஜனவரி 11-ஆம் தேதிக்குள் யாத்திரை முடிக்கப்படும் என்றும் யாத்திரையின் நிறைவு நாள் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

’என் மண், என் மக்கள்’ நடைப்பயண தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா “தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த நடைப்பயணம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணம். இந்த யாத்திரை வெறும் அரசியல் காரணத்திற்கானது அல்ல; தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவிக்கவே அண்ணாமலை யாத்திரை மேற்கொள்கிறார்” என்று கூறினார்.

ராமேஸ்வரம் கிளம்பும்முன் அமித்ஷா தமிழ்நாடு செல்ல உள்ளதாக தமிழில் டுவீட் வேறு பதிவிட்டுள்ளார். மோடி – அமித்ஷா காவிக் கும்பல் கொஞ்ச காலமாகவே தமிழ் மொழியைத் தூக்கிப்பிடிப்பதைப் போல் பாவனை செய்து வருகிறது. இது நமக்கான எச்சரிக்கை. மதவெறிப் பிரச்சாரம் எடுபடவில்லையெனில் காவிக் கும்பல் தமிழ் மொழியைக்கூட தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தும். ஏற்கனவே, திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி அபகரிக்க முயன்று வருகிறது.


படிக்க: முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!


அண்ணாமலையின் இந்த யாத்திரை ஊடகங்களால் பூதாகரமாக்கிக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையென்னவெனில் யாத்திரை செல்லும் இந்த பா.ஜ.க-வின் திட்டம் ஆரம்பத்திலேயே அந்தர் பல்டி அடித்து மண்ணைக் கவ்வியது.

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில் தமிழகத்தில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறித்துப் பேசியது அ.தி.மு.க-வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தார். எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில்தான் அமித்ஷா கலந்துகொண்டு துவக்கி வைக்கும் நிகழ்விற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் கூட வரவில்லை. ஆனால், அமித்ஷாவோ ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை நடைப்பயணம் செல்கிறார்” என்று பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் அமித்ஷாவே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க தன்னைக் கழற்றிவிட்டு விடுமோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் அரசியல் வியூகங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதைத்தான் இது காட்டுகிறது.


படிக்க: விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !


தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பா.ஜ.க தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிச் சேர்களே யாத்திரை தொடக்க விழாவை அலங்கரித்தன.

ஒருபுறம் பா.ஜ.க ”என் மண் என் மக்கள்” (#EnManEnMakkal) என்று சமூக வலைத்தளங்களில் டிரண்ட் செய்தால், மறுபுறம் அதற்கு எதிராக ”என் வீடியோ என் ஆடியோ” (#EnVideoEnAudio) என்று டிரண்ட் செய்யப்படுகிறது.

”நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க அரசுதான்” என்று அமித்ஷா பேசினால், அதற்கு எதிர்வினையாக ஆருத்ரா மோசடி குறித்தும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் அண்ணாமலை யாத்திரை செல்கிறாரா என்று கேட்கப்படுகிறது.

இதுமட்டுமல்ல ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் எல்.முருகன் மேற்கொண்ட வேல் யாத்திரை தமிழ்நாட்டு மக்களால் மண்ணைக் கவ்வவைக்கப்பட்டது. ஆனால், இந்த ”என் மண் என் மக்கள்” என்னும் அண்ணாமலையின் யாத்திரை தொடங்கப்படும் போதே மண்ணைக் கவ்விவிட்டது. தமிழ்நாடு தொடர்ந்து காவிக் கும்பலுக்கு சம்மட்டியடி கொடுத்து வருகிறது.

ஆயினும், இந்த காவிக் கும்பலை நாம் குறைத்தும் எடைபோட்டு விடக்கூடாது. நாடு முழுவதும் ஊர்வலங்கள், யாத்திரைகள் மூலம் இக்கும்பல் பல கலவரங்களை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டையும் மணிப்பூரைப் போல பற்றி எரிய வைக்க இவர்களை நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது.


பொம்மி

1 மறுமொழி

  1. All should be aware of this “PATHA YATHIRAI”
    They may arrange for ‘Bomb blast’ anytime after a month in the patha yathirai.
    Avoid going along with HIM.
    Burkha-Clad RSS Activist Caught Throwing Beef(bomb) At Temple(Patha yathirai)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க