பாஜக நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகமெங்கும் நடத்தப் போவதாக அறிவித்த வேல்யாத்திரைக்கு தடை கோரி போடப்பட்ட வழக்கில், அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மாட்டோம் என நேற்று (05-11-2020) நீதிமன்றத்தில் தெரிவித்தது தமிழக அரசு. இதனையொட்டி அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். மேலும் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை பாஜக நாடலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனையடுத்து அனுமதி கொடுக்க மாட்டோம் என்று கூறிய தமிழக அரசைக் கண்டித்த முருகன், தடையை மீறி வேல் யாத்திரையை நடத்துவோம் என்று அறிவித்தார்.

இன்று (06-11-2020) காலையில் திருத்தணி நோக்கிச் சென்ற பாஜக கும்பலை கோவிலுக்குச் செல்ல அனுமதித்துள்ளது தமிழக போலீசு. ஒருபுறத்தில் நீதிமன்றத்தில் இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர மாட்டோம் என்று கூறிவிட்டு, மறுபுறத்தில் போலீசு மூலம் அனுமதியளித்து தனது எஜமானர்களுக்கு  சேவகம் புரிந்துள்ளது அடிமை எடப்பாடி அரசு.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !

கொரோனா சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தவறிய மோடி அரசும், தமிழகத்தை ஆளும் அடிமைக் கும்பலும், தேர்தலில் வெற்றிபெறுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டுமென்றால் கூட அதற்கு மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டிய அவசியம் பாஜக-வுக்கும் அதிமுகவிற்கும் இருக்கிறது.

“இதர பிற்படுத்தப்பட்ட” மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என நீதிமன்றத்தில் தனது சுயரூபத்தை பாஜக காட்டிய நிலையில், பாஜகவின் நந்தகோபால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் கொடுக்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்தது அம்பலமானதை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. பாஜக-வின் இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஒத்து ஊதிக் கொண்டு அமைதி காத்த அடிமை அரசின் மீதும் கடுமையான அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவுகிறது.

வேலைவாய்ப்பு இழப்பு, சிறு தொழில் நசிவு, கேஸ் விலை – பெட்ரோல் விலை உயர்வு என பாஜகவின் மீது கடுங்கோபத்தில் மக்கள் இருக்கின்றனர். இதையெல்லாம் மறக்கச் செய்து மக்களை திசை திருப்புவதற்காகத்தான் , “இந்துக்களின்” உரிமையைக் காக்க தமிழகம் முழுவதும் “வேல் யாத்திரை”யை அறிவித்து பாஜக.

1990-களில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ர(த்)த யாத்திரை

தேர்தலில் ஜெயிக்க பாஜகவுக்கு தெரிந்தது இரண்டே பார்முலாதான். ஒன்று குதிரை பேரம் மற்றொன்று கலவரம். குதிரை பேரங்கள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன்தான் என்பதால், இப்போது கலவரங்களுக்கு வித்திடும் வகையிலேயே வேல் யாத்திரைக்கு அடிபோடுகிறது பாஜக.

செத்துப்போன ராமகோபாலனின் இந்து முன்னணி கும்பல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தின் போது முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் கலவரம் செய்து ஆங்காங்கே கட்சி அலுவலகம் கட்டி அமர்ந்துவிட்டது தான் வரலாறு. அதே போல, தற்போது பாஜக அறிவித்திருக்கும் வேல் யாத்திரை ஜாதி, மத ரீதியான மோதல்களை உருவாக்கி அதன் மூலம் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தும் நோக்கம் கொண்டதுதான் இந்த வேல் யாத்திரை.

தமிழகத்தில் காலுன்ற, “ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தியை” எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும், இங்கு பருப்பு வேகாது என்பதால், ‘தமிழ்க் கடவுள்’ முருகனை கையில் எடுத்துள்ளது இந்துத்துவக் கும்பல். குறிப்பாக கந்தசஷ்டி – கருப்பர் கூட்டம் விவகாரத்தில் இருந்து முருகனைக் கையில் எடுத்து தமிழக பக்தர்களின் கடைக்கண் பார்வையைப் பெற்றுவிட மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கிறது.

கையாளாகாத அடிமை எடப்பாடியோடு கள்ளக் கூட்டுச் சேர்ந்து கொண்டு தற்போது வேல் யாத்திரையைத் தொடங்கியுள்ளது பாஜக. இந்த “யாத்திரையை” தடுத்து நிறுத்தினாலோ, அல்லது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது கண்டுகொள்ளாமல் விட்டாலும் கூட வலிந்து சென்று கலவரம் நடத்தி இந்து ஓட்டுக்களை கவர்ந்து விடலாம் என்பது பாஜகவின் கணக்கு.

பாஜக கும்பலின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் பாதிப்படைந்தவர்கள் இந்த நாட்டின் பெரும்பாலான இந்துக்கள் தான். கடந்த ஆறாண்டுகளில் வேலையின்றி , தொழில் நசிந்து, விவசாயத்திற்கு விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் இந்துக்கள் தான். கொரோனா சூழலில் பாஜகவால் பறிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுப் பலன்களை இழந்தவர்களும் இந்துக்கள்தான்.

படிக்க :
♦ தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்

இப்படி இந்துக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு, இந்துக்களைக் “காக்க” வேல் யாத்திரை நடத்துவதாகச் சொல்லும் பாஜக கும்பலிடம் பார்த்த இடத்திலெல்லாம் நிறுத்தி கேள்வி கேட்பது பக்தர்களின் அடிப்படைக் கடமையாகிறது.

வேல் யாத்திரை என வரும் கயவர்களிடம், மோடி சொன்ன 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது ? என்று கேட்போம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 50% இட ஒதுக்கீட்டை ஏன் மறுத்தாய்? எனக் கேட்போம் ! அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை ஏன் தடுக்க முயற்சித்தாய்? எனக் கேட்போம். எரிவாயு உருளை மானியத்தை ஏன் ஒழித்தாய்? எனக் கேட்போம் ! நீட் தேர்வு, வேளாண் சட்ட திருத்தங்கள், மின்சாரச் சட்ட திருத்தம் என பாஜகவைக் கேட்பதற்கு இன்னும் நூறு கேள்விகள் இருக்கின்றன. அத்தனையையும் கேட்போம்.

இதுபோன்ற கேள்விகளை மட்டும் கேளுங்கள்! “முருகனுக்கு” வேல் யாத்திரை செல்பவர்கள் முருக பக்தர்களாகிய பெரும்பான்மை இந்துக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுச் செல்கிறார்களா ? அல்லது தங்களது சுயரூபத்தைக் காட்டுகிறார்களா என்பது அங்கு தெரியும். 1990-ல் ராமனை கையில் எடுத்து இந்தியா முழுவதும் ர(த்)த யாத்திரை நடத்திய கும்பல்தான் தற்போது தமிழகத்தில் முருகனைக் கையில் எடுத்துள்ளது என்பதை நினைவில் கொள்வோம். அன்றாடம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், சாதி ஆணவப் படுகொலைகளும், மதக் கலவரங்களும் நடந்து கொண்டிருக்கும் வட இந்தியாவின் நிலைமை தமிழகத்திற்கும் வர வேண்டுமா ?

முருக பக்தர்களே, சிந்தியுங்கள். தமிழகத்தையும், முருகனையும், பாஜக – சங்கபரிவாரக் கும்பலிடமிருந்து காப்பது முற்போக்கு – ஜனநாயக அமைப்புகளின் கைகளில் மட்டுமல்ல – முருக பக்தர்களாகிய உங்களது கைகளிலும் உள்ளது ! வாருங்கள்!  கேள்வி கேட்போம் ! ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்றால் ஒரு கை பார்ப்போம் !!

இந்த வேல் யாத்திரை சங்க பரிவாரக் கும்பலுக்கு ஒரு “பாடமாக” அமையட்டும்.

கர்ணன்

 

1 மறுமொழி

  1. வேல்! வேல்!
    இதை அப்படியே பிரசுரமாக அடித்து தெருவெங்கும் கொடுப்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க