மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் – தமிழ்நாடே விழித்துக்கொள்!

ஆளுநர் ரவியின் இணையாட்சி, செய்தி- சமூக ஊடகங்களைக் கைப்பற்றுவது, இந்துசமய மாநாடு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்து, காலூன்ற எத்தனித்து வருகிறது காவி பாசிசக் கும்பல்.

ண்டைக்காடு கலவரம்’ தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கருப்புப்புள்ளி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் நன்கு அறியப்பட்ட இயக்கமாக அரசியல் செல்வாக்கு பெற்ற இயக்கமாக மாற இக்கலவரம்தான் காரணமாக அமைந்தது. இந்து மதவெறியர்கள் அதன் பலனை தற்போது வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1980வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மதக் கலவரங்கள் நடந்ததற்கான வரலாறு கிடையாது. இந்து மக்களும், கிறித்துவ மக்களும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்துக்கொண்டிருந்தனர். பல குடும்பங்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றும் குடும்ப உறுப்பினர்களை கொண்டிருந்தன. அத்தகைய மதநல்லிணக்கத்தை, இந்து மக்களிடையே மதவெறியூட்டி சிதைத்தது ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சுப்பாம்பு. அதன் உச்சநிலையே மண்டைக்காடு கலவரம். பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவில் கிறித்துவ இளைஞர்கள் இந்துப் பெண்களை கேலி செய்ததாக வதந்தியை பரப்பி கலவரத்தை நடத்தியது காவிக் கும்பல். இன்று மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது காவிக் கும்பல்.

படிக்க : நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடைவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, ஹைந்தவ சேவா சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அமைப்பு பக்தர்களிடம் நிதி வசூலித்து “இந்து சமய மாநாடு” என்ற பெயரில் மாநாடு நடத்துகிறது. இந்த மாநாடு 85 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் மதவெறி அரசியல் கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு தி.மு.க. அரசு, இந்து சமய அறநிலையத்துறையே மாநாட்டை நடத்துவதாக அறிவித்ததோடு, தனியார் அமைப்புகள் மாநாடு நடத்தத் தேவையில்லை என்று ஹைந்தவ சேவா சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்து சமய மாநாட்டை “ஆன்மீக மாநாடாக” நடத்துவதாக அறிவித்திருந்தது. இந்நடவடிக்கையை தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றனர். இந்துமதவெறி அமைப்புகள் பக்தி என்ற பெயரில் மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டுவதை தடைவிதிக்கின்ற வகையிலான தமிழ்நாட்டு அரசின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியதே என்றனர்.

ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியானவுடனேயே, இந்து மதவெறிக் குண்டர்கள், ஹைந்தவ சேவா சங்கத்திற்கு சமய மாநாட்டை நடத்த அனுமதியில்லை என்றால் கலவரம் வெடிக்கும் என அரசிற்கு பகிரங்கமாக மிரட்டல் விட்டனர்.

இந்து தர்ம வித்யாபீட தலைவரான சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் என்பவர், “மண்டைக்காட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகளும் அரசும் செயல்படக் கூடாது. மீண்டும் 1982 கலவர நிலைமைக்கு கொண்டு செல்லக்கூடாது” என்றும், பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ் “மண்டைக்காட்டை அயோத்தியாக்கி விடாதீர்கள்” என மிரட்டல் விடுத்தனர்.

மேலும், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கே மிரட்டல் விடுக்கும் தொனியில், பொன்.ராதாகிருஷ்ணன், “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் மனோ தங்கராஜை நம்பி முதல்வர் களத்தில் நின்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” எனப் பேசினார். மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு மதவெறிப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு கோயில் திருவிழாவை தடை செய்தததாகவும், அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தான் காரணம் என்று அவதூறுகளைப் பரப்பினர். அமைச்சர் மனோ தங்கராஜ் கிறித்துவர் என்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மதவெறியைத் தூண்டும் வகையில் போராட்டங்களை நடத்தினர்.

இந்து சமய மாநாடு என்ற பெயரில் மக்கள் மத்தியில் இந்துமதவெறியூட்டுவதற்கும், அம்மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க  அமைப்பை வலுப்படுத்துவதற்குமான ஒரு கருவியாக இம்மாநாட்டை பயன்படுத்துகிறது காவி பாசிசக் கும்பல். மேலும், இந்து மதப் பண்டிகைகளைப் பயன்படுத்தி மக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது.  இந்து சமய அறநிலையத்துறையின் தலைமையில் இம்மாநாடு நடந்தால் இவையெல்லாம் பாதிக்கப்படும் என்பதற்காகவே  இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது காவிக் கும்பல். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல இடங்களில் கோவில் வளாகங்களை கைப்பற்றிக் கொண்டு தங்கள் அரசியல் நோக்கத்திற்காக அடாவடித்தனமாக செயல்படுகிறது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து, கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கூப்பாடுபோடுவதும் இதற்காகதான்.

படிக்க : புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

தொடக்கத்தில் தமிழ்நாடு அரசே ஆன்மிக மாநாட்டை நடத்தும் என்று அறிவித்த தி.மு.க. அரசு, காவிக் குண்டர்களின் போராட்டங்களுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் சமரசம் செய்து கொண்டது. ஆர்.எஸ்.எஸ் கும்பலுகும், தி.மு.க அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இந்துசமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தலாம் என்றும், இந்துசமய அறநிலையத்துறை அச்சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. மார்ச் 5-ஆம் தேதி தொடங்கிய இந்துசமய மாநாட்டில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் உடனான தி.மு.க அரசின் இந்த சமரசப் போக்கை, தில்லை நடராஜர் கோயில் பிரச்சினையிலும், வயலூர் முருகன் கோயிலில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் பணி நீக்கப்பட்ட பிரச்சினையை கையாளும் அணுகுமுறையிலும் பார்க்க முடியும்.

ஆளுநர் ரவியின் இணையாட்சி, செய்தி- சமூக ஊடகங்களைக் கைப்பற்றுவது, இந்துசமய மாநாடு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்து, காலூன்ற எத்தனித்து வருகிறது காவி பாசிசக் கும்பல். இந்த பாசிச அபாய சூழலில், தமிழ்நாட்டு மக்களாகிய நாம் விழிப்புடன் இருந்து, நமது பார்ப்பனீய எதிர்ப்பு மரபை விடாது உயர்த்திப் பிடிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் எத்தனிப்புகளை முறியடிக்க வேண்டும்.

சிவராமன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க