நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!

இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.

டந்த ஆண்டு செப்டம்பர் 28 – ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.முரளிதர் அவர்களை நியமிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றமே அப்பரிந்துரையை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

இந்திய  தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம் ஜோசப், எம்.ஆர்.ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய கொலீஜியம், 28.09.2022 – அன்று ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ். முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு அதை அமல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பல முறை அழுத்தம் கொடுத்தும் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகக்கூட எண்ணாமல் தட்டிக்கழித்து வந்தது.

உச்ச நீதிமன்ற கொலிஜியம் பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு சென்னை உயர் நிதிமன்ற நீதிபதியாக முரளிதரை நியமிக்க மறுத்து வந்தது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

கடந்த 2020 – ஆம் ஆண்டு மோடி அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தால் டெல்லியில் வன்முறை ஏற்பட்டது. அப்பொது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய முரளிதர் தலைமையிலான அமர்வு 26.02.2020 அன்று  பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகளான  கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பிரவேஷ் வர்மா ஆகியோர் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதனால்தான் வன்முறை ஏற்பட்டது என்று கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, டெல்லி வன்முறை தொடர்பாக வெளியாகியுள்ள காணொளிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வாத் சிங் தலைமையிலான அமர்வு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

உத்தரவிட்ட அந்நாள் இரவே,  அதாவது 26.02.2020 – அன்று இரவே நீதிபதி முரளிதர் மத்திய அரசால் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இன்றுவரை குற்றம் சாட்டப்பட்ட அந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யபடவில்லை. அதில் அனுராக் தாக்கூர் தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சராக உள்ளார்.


படிக்க: பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !


இந்நிலையில், நீதிபதி முரளிதர் ஆகஸ்ட் 7 – ஆம் தேதி, அதாவது இன்னும் நான்கு மாதங்களுக்குள், ஓய்வு பெறப்போகிறார் என்றும், ஆறு மாதங்களுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றதிற்கு நிரந்தர தலைமை நீதிபதி இல்லை என்றும் கொலீஜியம் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்றத்தில் நிரந்தர தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும் என காரணம் கூறி நீதிபதி முரளிதரை நியமிப்பதற்கான பரிந்துரையை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாவை நியமிக்க பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பாசிஸ்டுகளோடு மோத முடியாது என்று பின்வாங்கி விட்டது. இதுதான் நீதித்துறையின் வரம்பு. பாசிஸ்டுகள் வைக்கும் வரம்புக்குள்ளே தான் நீதித்துறையும் செயல்பட வேண்டியுள்ளது.

முன்னதாக, கே. எம். ஜோசப் அர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சித்தாந்தத்திற்கு எதிராக பேசியிருந்ததாலும் மத்திய அரசுக்கு எதிராக உத்தரகாண்ட் வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் அவர்   கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு நீண்ட நாட்களாக  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கபடவில்லை.

அதேபோல, அமித்ஷா பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா டிசம்பர் 1, 2014 அன்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சவுரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நியமங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதே கதிதான் இன்று நீதிபதி முரளிதரனுக்கும் ஏற்பட்டுள்ளது.


படிக்க: பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !


இதற்கு மேலுமொரு துலக்கமான சான்று வழக்குரைஞர் நாகேந்திர ராமச்சந்திர நாயக் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிகழ்வு. நாயக் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் 03.10.2019 – அன்று பரிந்துரைக்கப்பட்டார். அது அரசால் நிராகரிக்கப்படவே 02.03.2021, 01.09.2021 மற்றும் 10.01.2023 என 3 மூன்று முறை மறுபரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அரசு செவிமடுக்கவில்லை.

இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.

ஆர்.எஸ்.எஸ்‌ – பா.ஜ.க கும்பல் தன்னை விமர்சிப்பவர்களையும் அம்பலப்படுத்துபவர்களையும்  நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க விடாமல் தன் சித்தாந்தம் கொண்டவர்களை நியமித்து நீதித்துறை முழுவதையும் சங்கிகள் மற்றும் பாசிஸ்டுகளின் கூடாரமாக்கி வருகிறது.

ஆனால் இன்று  கே.எம் ஜோசப், முரளிதர், டி.ஒய்.சந்திரசூட் போன்ற நீதிபதிகள் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள்; இவர்கள் பாசிஸ்டுகளை எதிர்க்கும் வல்லமை கொண்டவர்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்புகளின் ஊடாகவே பாசிசத்தை வீழ்த்திவிடலாம்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பாசிச கட்டமைப்புகளில் இருந்துகொண்டு அவர்களை எதிர்த்துகொண்டிருந்தால் ஒரு நாளும் நம்மால் வெல்ல முடியாது என்பதைதான் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன. நீதிபதிகள் நிச்சயம் பாசிஸ்டுகளிடம் சரண் அடைந்தே தீர வேண்டும்; இல்லையெனில் புறக்கணிக்கப்படுவார்கள், சில சமயங்களில் கொலை கூட செய்யப்படுவார்கள் நீதிபதி லோயாவைப் போல.

இனியும் இந்த போலி ஜனநாயக கட்டமைப்பிலிருந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை  வீழ்த்திவிடலாம் என்று இருப்பது நம்க்கு நாமே சவக்குழி தோண்டிக்கொள்வது ஆகும். இந்த பாசிச கும்பலை வீழ்த்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைப்பு கட்டுவதே ஒரு தீர்வாகும்.

இன்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க